Monday, April 17, 2017

கொலைகள்..

வாரக்கொலைகள் செய்தே புறப்படுவோம் 
அடுத்த வாரத்திற்கு,
மீண்டும் ஒரு வாரம், 
மீண்டும் ஒரு கொலை, 
மீண்டும் ஓர் சுழற்சி,
மீளும் நாள் என்றோ 
அன்று மீண்டும் ஒரு மௌனம்
மீண்டும் ஓர் அலறல்......

- காவிரிக்கரையோன் MJV 

Thursday, November 5, 2015

அண்டை வீடு


வந்து விட்டது தீபாவளி பரபரத்து செல்கின்றார்கள் என் அண்டை 
வீட்டின் சிறார்கள்,

காற்று பாழ் சுற்றம் பாழ் வீதியும் பாழ் காதுகள் பாழ் என்று 
துண்டு சீட்டுகளோடு,

சீட்டுகள் பெற்றினி எதுவும் செய்வதில்லை எதற்கு பட்டாசு என்ற 
எண்ணங்களோடு எழுந்து வெளிப்பட்ட நேரம்,

குப்பைகள் சாளரம் தாண்டி விழுந்தன, பெரிய மகிழுந்து புகை கக்கி 
சென்றது, இன்னும் பெரிய மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன,

ஒரு நாள் ஆட்டத்திற்கு துண்டு சீட்டு விற்றாகி விட்டாயிற்று 
பல நாள் மறந்து தொலைக்கும் விடயங்களுக்கு எங்கே 
சீட்டுகள்?

கேட்ட கேள்வி அவர்களின் பெற்றோரின் காதுகள் பிளந்தனவோ 
என்னவோ, என் முகத்தில் அறைந்தது போல் தாழிடப்பட்டது 
அதே அண்டை வீட்டின் கதவு...

- காவிரிக்கரையோன் MJV 

Wednesday, May 14, 2014

கூந்தல் கருப்பு!

கூந்தல் கருப்பு என்பதும் குங்குமம் சிவப்பு என்பதும்
காதலாய் தெரிந்த காலங்கள் அவை,

குடும்பமும் குழந்தையும் வந்த போது அவை
காதலாய் தெரிய வாய்ப்புகள் மறுதலிக்க பட்டன,

இருப்பினும் கோபங்கள் கடந்து, தான் என்ற 
அகந்தை கோடுகள் கடந்து சொல்கிறேன் 

அலைகளால் காதல் கண்ட மதிப்பு தான் அதிகம் 
அது போல் உன்னால் நான் மதிக்க பட்டது தான் 
அதிகம்,

ஒரு வாய்ப்பு கொடு கோபங்கள் குறைத்து 
தோள் கொடுக்கிறேன்,
இருப்பினும் ஓரிரு முறைகள் மறந்து போவேன்
மறந்து விடு அவற்றை!

- காவிரிக்கரையோன் MJV

Tuesday, November 26, 2013

முரண்

அன்பின் வழியில் ஆயுதங்கள் முரண்
அறிவின் வழியில் இறைவன் முரண்
வாலிப வயதில் பெற்றோர்கள் முரண்
வயோதிக வயதில் வாலிபமே முரண்
காதலின் பொழுதில் காலம் முரண்
திருமணத்தின் பின் பொழுதில் வார்த்தைகள் முரண்
வல்லினம் பேசுகையில் மெல்லினம் முரண்
கோபமாய் பேசுகையில் நம்பிக்கை முரண்
உண்ணும் உணவில் உழைப்பு முரண்
உடுத்தும் உடையில் பணம் முரண்
சாலை வீடென சொல்லுகையில் நீ எனக்கு முரண்
என்னிடம் ஏதுமில்லை சொல்லுகையில் நானே தான் எனக்கு முரண்...

- காவிரிக்கரையோன் MJV

Friday, October 4, 2013

என் அம்மா அவள்

தட்டில் சோறு வைத்து ஊட்டுவாள்,
துண்டில் தலை துவட்டி சிரிப்பாள்,
ஏன் இவ்வளவு கோபம் என்று விம்முவாள்,
நான் உறங்க நீ எங்கே என்பாள் ,
தொலைக்காட்சி சண்டைகளில் என்னை
வெல்ல விடுவாள்,
வீட்டிற்கு வரவும் சாப்பிடுவதும் சரியாக
இல்லை என்பாள்
என் அம்மாவிடம்,
தலை ஆட்டி கேட்க வைப்பாள்,
என் அம்மா அவள்...

- காவிரிக்கரையோன் MJV

Tuesday, October 1, 2013

ஆரூடப்பூனை

அன்பைப் பகிர அட்டவணை,
ஆரூடம் சொல்லிடப் பூனை,
இன்பம் பெருக்கிய நட்சத்திரங்கள்,
ஈன்ற குழந்தைக்கும் சோதிட ஆவணங்கள்,
உண்மை உண்மை என்பவையான சொல்லாடல்கள்,
ஊமையாய் மாறிப் போன தன்னம்பிக்கை,
என்றும் கூடியிருக்கும் எண் கணிதம்,
ஏய்த்து பிழைக்கும் பல கூட்டம்,
ஐம்பதைக் கடந்தும் கட்டங்கள் கணக்குகள்,
ஒன்றோடொன்று பிணைந்து நிற்கும் கிரகங்கள்,
இன்றும் கூட குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து
திரிகிறது அந்த ஆரூடப்பூனை...

 
- காவிரிக்கரையோன் MJV

Wednesday, March 20, 2013

குறுங்கவிதைகள்!

என் கன்னத்து மீசை!
 
கால் நகங்கள் வெட்டப்பட்ட சுவடுகள்
தேடிக் கொண்டிருந்த மகளின் கன்னங்களிலிருந்து
ஒரு முத்தம் களவாட ஆயத்தங்கள்
செய்து கொண்டிருந்தேன்,
சட்டென நகர்ந்தவள் என் ஏமாற்றத்தை
புரிந்து மெலிதாய் என் கன்னத்தில் இதழ் பதித்து சொன்னாள்
" உன் மீசை குத்துதுப்பா ".
 
வேண்டும் இங்கே
கள்ளி பாலில் தொலைந்த கிழவியும் இல்லை,
அல்லி மலர் தொடுத்து அதை உடுத்தும் அழகியும் இன்று இல்லை ,
மெல்ல அடி எடுத்து வளரும் காதலின் அன்பு எங்கே,
வேகமாய் சண்டித்தனம் செய்யும் சிறுபிள்ளை கோபங்கள் எங்கே,
காதல் வர வேணும் இங்கே,
அதற்கு தான் கவிதை போல் ஒன்றை
தந்தேன் இங்கே,
வல்லினக்காதலாய் இருந்தாலும் சரி உன் போல் மெல்லினக்காதலாய்
இருந்தாலும் சரி....
இங்கே வேண்டும் இப்பொழுது தீண்ட!!!
- காவிரிக்கரையோன் MJV