Friday, August 29, 2008

சரவணா என்றொரு நண்பன்,...

இன்னொரு விடுதலை

காலாற நடந்து காற்று வாக்கில் கால்நடைகளை பரிகாசம் செய்து
வீடு வந்து சேர்ந்த அனுபவம் உண்டா உங்களுக்கு,
எனக்குமுண்டு அது போன்ற அனுபவம்,
பசுமை கொஞ்சி விளையாட தாத்தா பாட்டியின்
அன்பின் அரவணைப்பில் பழைய வீடானாலும்
புதுமையான அன்பின் அரிச்சுவடி தேடி பார்த்த நினைவுகள் உண்டா,
காசு பார்க்க விதவிதமாய் கணினியிடம் வேண்டுகோள் விடுத்து
காலை கதிரவனை மறந்து போய் மாலை நிலவை யாரென்று கேட்டு
மறுபடி காலை அலைபேசியை எழுப்பி விட பணித்து விட்டு
காலையில் அதனையே திட்டும் முக்கால்வாசி எந்திரமான
ஒருவனின் பசுமை தேடும் அழைப்பிதழ் இது.

வந்து விடுங்கள் மறக்காமல் எல்லோரும் செல்வோம்
நம் கவலை மறக்க செய்யும் ஊருக்கு....

கணினி மறந்து கோடிங் மறந்து இனிமையாய் வாழும்
மண்ணின் மைந்தர்களை பார்க்க,
அவர்களோடு வாழ்ந்து பார்க்க....

புகைப்படம்

நிகழ்வுகளை பதிவு செய்யும் படம் இது
பண்பான நிகழ்வுகளையும் பதிவு செய்யும் படம் இது,
புகையாய் மேகத்தில் கலக்கும் உடல்கள்,
என்பதால் தானோ என்னவோ,
வகையாய் அதை பதிவு செய்து
புகைப்படம் என்பார்கள்,

ஓவியனின் கலைநுட்பம், திறமையின்
திறவுகோளாய் அவன் ஓவியத்தில்,
நினைவுகளின் சங்கமம் மறக்க முடியாத
பதிவுகளாய் இந்த புகைபடத்தில்,

தாயின் அன்பு அளக்க கருவியின் உதவி
நாடினால் அவன் பைத்தியக்காரன்,
பல மைல்கள் தாண்டி மகன் வாழ்ந்தாலும்
பேரனை பதிவு செய்து காட்டியதால் இந்த புகைப்பட
நண்பன் ஒரு வித்தைக்காரன்,
ஆயிரம் வார்த்தைகள் பேசி கொண்டால்
அது ஒலியின் ஊடகம்,
ஒரு புகைப்படம் பல்லாயிரம் வார்த்தைகள் பேசுமே,
என்னவளின் புகைப்படம் பல்லாயிரம் வார்த்தைகள் பேசுமே
அது ஒரு காதலின் மௌன விவாதம்,
புகைப்பட நண்பனே நீ வந்ததும் என் நேர்காணல்கள்
மறந்து போக வில்லை,
மாறாக நீ வந்ததும் என் நேர்காணல்கள் பதியம் போடப்பட்டன,
நினைவின் மரமாய் வாழ வளர...

ஜூலை 16 - கருப்பு தினம்

அந்த தெருவை எத்தனை முறை கடந்திருக்கும்
என் கால்கள்,
அத்தனை முறையும் பிஞ்சு குழந்தைகளின் கொஞ்சும் மழலை
என்னை ஆர்பரிக்க செய்திருக்கின்றன,
இப்பொழுதும் எங்கள் ஊருக்கு பயணப்பட்டால் ஒரு முறையேனும்
அந்த தெருவின் வழி செல்கிறேன்,

பிஞ்சி குழந்தைகளின் உயிரும் உணர்வும் அங்கே இருந்து
என்னை கேட்கின்றன,
அண்ணா இவ்வளவு அன்புக்கும் நாங்கள் தகுதி இல்லையா?
எங்களை மட்டும் ஏன் சீக்கரமாய் வழி அனுப்பிவிட்டீர்கள்,
தர்மத்தின் வாழ்வை சூது கவ்வும் என்று சொல்லி கொடுத்தீர்கள்,
இன்று தர்மமே இந்த தீயின் வாயிலில் வெந்து விட்ட வேதனையை
எங்கே போய் சொல்லுவது?
சில மனிதர்கள் செய்த தவறுக்கு தீயும் உடந்தை ஆனது
இந்த திரு குடந்தையில்,
சுற்றி சுற்றி இழுத்து சுட்டது எங்களை...

பஞ்ச பூதமும் கடவுள் என்றதெல்லாம் பொய்தானே?
எங்களை பூத உடலாக்கியதும் இந்த பஞ்ச பூதத்தில் ஒன்றுதானே...
மன்னிக்கவேண்டும், மனிதர்களின் மரமான நெஞ்சிக்குள் எங்களுக்கும்
இடம் உண்டாம்.....
யாருக்கு வேண்டும் அந்த இறுதி மரியாதை....
இனியும் நாங்களே இங்கே மீண்டும் பிறப்போம்,
அப்போதாவது எங்களை வாழ விடுங்கள்....
வசந்தங்கள் வரும் இங்கே கண்டிப்பாய் நாங்களும்
வருவோம்....
என்றது அந்த பிஞ்சி மழலையின் ஆன்மா....

வளையல்

வாழ்வு தொடங்கும்போது அர்ச்சிக்கப்பட்டு வாழ்வு
முடியும்போது தெருவின் ஓரத்தில் தூக்கி எறியப்படும்
நீயும், இங்கே தீர்ப்புகளில் தீயாய் எரியும் அரசு பேருந்தும் ஒன்றுதான்,

உயிர் மலரும்போது உன்னை வைத்து விழா எடுப்போம்
உயிர் விலகும்போது உனக்கு மரண தண்டனை கொடுப்போம்
என் வழக்குக்கு மட்டும் விசாரணை இல்லாத தண்டனையா
அலறும் உன்னை மிதித்து தாண்டி மார் தட்டுகிறது ஒரு கூட்டம்,

மழலைகள் தாயிடம் பேச ஊடகம் கொடுத்த நீயும்
ஒரு ஐன்ஸ்டீன் தான்,
பல கண்டுபிடிப்புகள் வருமுன்னே வந்த அறிவியல் விந்தையே,

உன் மரணதண்டனைகளை இந்த சமூகம் மறக்கட்டும்,
உன்னால் பெண்மைக்கு பெருமையா இல்லை பெண்ணால்
உனக்கு பெருமையா?

தெரியவில்லை எனக்கு,
என்று உன் மரணதண்டனைகள் மறுதலிக்க படுகின்றனவோ
அன்று நான் இசைப்பேன் உனக்கான தேசியகீதம்.

மனைவி

எத்தனை முறை என்னிடம் தோற்றாலும் என் வெற்றியில்
களிப்புறும் நீதான் என் வாழ்க்கை மாற்றி கொடுத்த சிற்பி…
உலகம் நாடக மேடை என்றால் அதில் உனக்குத்தான் எத்தனை
வேடங்கள் அது எல்லாமே நான் படிக்கும் வேதங்கள்.
காதலில் விழுந்த போது கண்ணிமைகளில் என்னை சிறை எடுத்தாய்,
கண்ணியமாய் பெற்றோருடன் கலந்து ஆய்ந்தால் தான் திருமணமும்
மணக்கும் என்றாய்,
இனிய நாளில் கை பிடித்தோம், இனிமையாய் காலம் கடந்தது,
நீயோ நெடுந்தூர முக மலர்ச்சியில் என் நாளை புதுப்பித்தாய்.

உன்னை என்னவளாக்கிய பின் மறந்தே போனேன் காதலை,
கேட்டால் என் கடிகார முட்களில் நேரம் அதிகம் இல்லையே என்றேன்,
நான் பார்க்கும் மட்டை பந்தாட்டம் என்னை மரகட்டை ஆக்கிய
மர்மம் எனக்கு புலன்படவில்லை,
உன் விழியோர பார்வையின் ஏங்குதல் மறந்தேன்,
உன் கை பற்றி நடக்கும் பாதைகள் மறந்தேன்,

இப்போது எனக்கு புலப்பட்டது உன் விழியோர ஈரம்,
அதில் நீ எனக்கு சொன்னது என் மனதில் ஏறும்.
யோசித்து பார்த்தால் நீ என் உலகத்தின் ஆணி வேர்.
புரிந்து போனது என்னவளே நான் ஒரு ஈர சருகல்ல,
நீ தாங்கி நிற்க உன்னால் செழிப்படைந்த அரசமரம் ,
ஆதலால் வா நாம் களிப்புற்ற நாட்களுக்கு மீண்டும்
பயணப்படுவோம்,
நீ எனக்கானவள் நான் உனக்கானவன் என்ற விஷயத்தை மீண்டும்
ஒரு முறை என் மனதில் உரக்க சொன்னவளே வா இப்போதே
புறப்படுவோம் நம் காதலின் இரண்டாவது அத்தியாயம் எழுத....

கல்லூரி காதல் (கல்லூரியிடம்)

கனவுகளின் கர்ப்பகிரகமாய் உன்னில் நங்கள் எல்லோரும்
பிரவேசித்தோம்,
கனவு, நட்பு, காதல், கோபம், கல்வி என்று எத்தனை பாடங்கள்
எடுத்த ஆசிரியர் நீ,
உன்னிடம் மட்டும்தான் மதிப்பெண்களை அள்ளி அள்ளி எடுத்துகொண்டோம்,
நீயும் அசராமல் மதிபெண்களை அள்ளி தந்தாய்.

கல்லூரி செல்லாமல் இருக்க எப்படி இவர்களால் முடிகிறது என்று
யோசித்து யோசித்து உன்னை காதல் செய்தோம்,
உனக்குதான் எத்தனை காதலர்கள் பொறாமை பட்டது
காதல்.
உன் கடைக்கண் பார்வையில் உலகம் அறிந்தோர் எத்தனை பேர்,
உன்னை கட்டிக்கொண்டு பாடல் புனைந்தோர் எத்தனை பேர்,
நீ கற்று கொடுத்த பாடத்தால் உயர்ந்து உன்னை மறக்கமுடியாமல்
அலைந்தவர் எத்தனை பேர்.
பட்டியலும் நீள்கிறது அதனால் பட்டயங்களும் நீள்கிறது,
இந்த கல்லூரி காதலிக்கு மட்டும்தான் எத்தனை காதலர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்,
தட்டி கேட்க யாரும் இல்லை, தகுதி என்று எவருக்கும் இல்லை,

உன்னை பிரிந்து தத்தளிக்கும் பல ஆயிரம் பேரில் நானும் ஒரு
துரதிஷ்டசாலி,
இன்று உன்னை காண வந்தாலும் அதே இனிய புலாங்கிதத்துடன் என்னை வரவேற்பாய்,

என் இனிய கல்லூரி காதலியே உனக்கும் எனக்கும் உள்ள காதல்
மட்டும் என்னில் மரணமடைய மறுக்கிறது,
காலம் எல்லாவற்றிற்கும் இனிய மருந்தாம், உன்னில் நானும் என்னில்
நீயும் கலந்து கிடந்த நாட்கள் மறந்தால்,
இந்த கல்லூரி காதலனின் மரண ஓலை எழுதபட்டிருக்கும்,
அது வரை இல்லை எங்கள் காதலுக்கு மறுப்போ இல்லை மரணமோ....

இன்னொரு பெண்

பெண்மையின் மேன்மை பேசும் போது உண்மையில்
உண்மைகள் சில நேரங்களில் அஸ்தமனம் ஆகின்றன,

வாழ்வின் பொருள் அர்த்தம் விளங்க வைத்த பெண்
என் அம்மா,
வாழ்வில் என்னுடைய வல்லமை ஆளுமை காதல் உணரவைத்த பெண்
என் மனைவி,

இப்படி ஆதிக்க ஆடல்களில் தான் நானும்
திளைத்து வந்திருக்கிறேன் இவ்வளவு காலம்,
இன்று என் மனைவிக்கு கண்மணிகளில் ருத்ரதாண்டவம் கண்டேன்,
கேட்டால் காரணம் நான் இன்னொரு பெண்ணை கூர்ந்து
நோக்கி அவளை மறந்து விட்டேனாம்,

மறப்பதும் மறக்கபடுவதும் தான் இனிமேல் புதிய விதி
அதை எந்நாளும் உன் மனதில் வைத்து படி என்றேன்,
நெருப்பு நீராய் மாறி பார்த்துண்டா,
நான் கண்டேன் என்னவளின் கண்களின் நெருப்பு கண்ணீராய்
அவள் தாடைகளில்,

நான் சொன்னேன் அடி பைத்தியக்காரி இந்த நீர் நெருப்பு விளையாடல்
வேண்டாம்,
நான் கூர்ந்து நோக்கியது நம் தேவதையை, நம் மழலையை என்றேன்,
உடனே இன்னொரு ரசாயன மாற்றம் என்னவளிடம்,
எத்தனை முறை என்னை ஏமற்றியிருப்பாய் என்னை,
உனக்கு நானும் நம் மழலையும் கொடுத்த
சுகமான சுமை தான் இது என்றாள்,

அதை கேட்டு என்னை பார்த்து ஆர்பரித்து சிரித்தாள் அந்த
இன்னொரு பெண் எங்களுடைய செல்ல மகள்.

மகள்!!!

எத்தனை முறை நானும் என்னவளும் எங்கள் கனவுகளில் வண்ண தூரிகை கொண்டு வரைந்திருப்போம்,
அத்தனை முறையும் உன் முகம் வரையும்போது மட்டும் அந்த பாழாய்ப்போன கைப்பேசி அதிகாலை அழைத்து கெடுத்துவிடும்,ஒவ்வொரு வரம் கடக்கும் போதும் கண்டு கேட்டு மகிழ்ந்த என்னவள் எனக்கு சொல்லி கொடுத்த கதைகள் பற்பல,

அதில் நாங்கள் கூட்டு முயற்சியாய் கேட்ட வரங்கள்நட்சத்திர பட்டாளத்தையே எண்ணிக்கையில் மிஞ்சி இறுமாப்பு காட்டும்,
எப்பொழுதெல்லாம் மற்றவர்கள் மழலை பிறந்த செய்தி சொல்லும்போதும் கற்பனை குதிரைகள் புதிய கால்கள் முளைத்து ஓடும்,

நாள்காட்டியில் வேகம் குறைந்தும் எங்கள் இதய துடிப்பில் வேகம் அதிகரித்தும் பயணித்த நாட்கள் அவை,
அந்த நாளும் வந்தது திரைப்பட தாக்கம் அதிகம் இருந்த எனக்குஎன்னவள் இருந்த அறைக்கு வெளியில் காத்திருந்த இரவில் என் கண்ணிமைகள் போராட்டம் நடத்தி தூக்கத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிதிருந்தன கண்டிப்பான கண்ணிமைகள்,

ஐம்புலன்கள் என்று சொல்ல கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால்அவை அனைத்தும் உன் வரவை ஒருமித்து எதிர்நோக்கிய அதிசயம் கண்டு நயாகரா போல் வீழ்ந்து எழுச்சி கொண்டேன்,
மருத்துவர் அழைத்து என்னிடம் காட்டியது எங்கள் செல்ல மகளை மட்டும் அல்ல,எங்கள் வாழ்வின் பன்முக ஒருமைப்பாடையும் தான்...

கவிப்பேரரசு

உன்னை கவிதை கடவுள் என்று சொல்லி
ஒரு கோவிலில் பூட்டி வைக்க என் மனம்
விரும்பவில்லை,

எங்களை ஏளனம் செய்வதற்காகவே தமிழ் தந்த
கவிதை களஞ்சியமே,
எதைத்தான் நீ படைக்கவில்லை எதைத்தான் உன்
கவிதையில் நீ படிக்கவில்லை,

நயகராவை நீரின் எழுச்சி என்றாய்,
சொல்லின் அர்த்தம் ஏறாத எங்களுக்கு
புதிய அர்த்த அகராதி சொல்லி கொடுத்தாய்,
தோழிமார் கதையில் எங்களை இலவச கிராம
சுற்றுலா அழைத்து சென்றாய்,
மரங்களுக்கு உயிர் கொடுத்து எங்களை
மனிதனாக மாற்றினாய்,

பூகோல எல்லைகளை கடத்தி சென்று
பூக்களால் அர்ச்சனை செய்தாய்,
திரைச்சீலை மறைத்த காதலின்
புனிதத்தை தரையில் இருந்த எங்களுக்கும் தெளிவக்கினாய்,

ஏறுவோர் ஏறுக என் சிறகில் என்று கதை சொல்லி,
எங்களின் கிறுக்கான வாழ்க்கைக்கு கடிவாளம் பூட்டினாய்,

ஏடுகளில் ஏறாத வாழ்க்கை தத்துவத்தை உன் எழுத்துக்கள்
எங்களுக்கு கற்று கொடுத்தது,
கவியரசே காலங்கள் கடக்கும் உன் கவிதை,
தமிழ் வேண்டி நிற்கும் தமிழுக்கு வேண்டும் உன் சிந்தை செதுக்கும் கவிதை,

நீ என்ன கவிதையால் உயர்ந்து எங்களுக்கு நிழல் அளிக்கும்
அரசமரமா,
இல்லை உன்னால் உயர்ந்து நிற்கும் தமிழால் தமிழ்
உணர்வுக்கு சாகா வரம் கொடுக்க வந்த பாற்கடல் அமுதமா?

உயிரை உருக்கி தமிழுக்கு கொடுத்து பின்னர் உணர்வோடு
கணித்து பேசுவீர்களே இது என்ன இன்னொரு இடியா?
எது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் உங்கள் கவிதை
கேட்டு வளர்ந்த எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் உங்கள் எழுதுகோல் முனையாக வாய்க்க....

அப்பா

என்னை வாசித்து சுவாசித்து உங்கள் பிராண வாயுவாய்என்னை ஆட்கொண்டீர்கள்,

நான் நடை பழக உங்கள் நடை தளர்த்தி கொண்டீர்கள்,ஏனென்றால் உங்கள் வேகத்தில் என் நடை தளரக்கூடாதென்று,

எப்பொழுதெல்லாம் நான் வீழ்ந்தேனோ அப்போதெல்லாம் நீங்கள் எழுந்து என்னை எழுச்சிக்கு இட்டு சென்றீர்கள்,

யாரேனும் தங்கள் தோல்வியில் ஆனந்த கீதம் இசைத்து பார்த்திருக்கிறீர்களா?

நான் பார்த்திருக்கிறேன் என் வெற்றியில் ஆனந்த பட்ட இரண்டாவது பிறவி நீங்கள்,

உங்கள் கோபங்கள் எல்லாம் அம்மாவின் சேலை தலைப்பில் தொலைந்து போகும் அங்கே என் முகம் கண்ட பின்!!!

நினைவிருக்கிறதா ஒரு முறை என் குறும்பை பொறுக்காமல் ஒரு அடி அடித்து விட்டீர்கள்,அழுகை என்னும் அசுரன் பிடியில் இருந்த என்னை வேலைக்கு செல்லாமல் திரும்பி வந்து காப்பாற்றினீர்கள்,

அன்று எனக்கு தெரிந்ததெல்லாம் நீங்கள் கொண்டு வந்து இனிப்பு பலகாரம் நன்றாக இனித்ததுதான்,

இன்று யோசித்தால் உங்கள் உள்ள காகிதம் எப்படி கிழிந்து போயிருக்கும் என்ற பலமான சிந்தனைக்கு நான் சொந்தக்காரன் ஆகின்றேன்,

மறுஜென்மம் என்றெல்லாம் பெரிய நம்பிக்கை இல்லை எனக்கு,ஆனால் அப்படி ஏதும் இருந்தால் நீங்கள் என் மகனாய் பிறக்க வேண்டும்,

அப்போது உங்களை சீரும் சிறப்புமாய் நான் கூட்டிச்செல்ல வேண்டும் வாழ்க்கை பயணத்தில்,இருப்பதை வைத்தே பழக்கப்பட்ட எனக்கு ஏனோ பறப்பதின் மேல் ஆசை,

அது போகட்டும் இப்போது உங்கள் இரண்டாம் குழந்தை பருவத்தில் உங்களை கையில் வைத்து தாங்க காத்திருக்கும் உங்கள் அன்பு மகன்....

கருக்(கொ)கலைப்பு

கள்ளங்கபடம் இல்லாத உலகமா இது என்ற தூர் எடுக்கும் கேள்விகள் வெகு காலமாக புறக்கணிக்க பட்டு வருகின்றன,

என் நலன், என் மக்கள், என் உறவினர் என்ற சுயநல வட்டத்தில்தான் அனைவரின் ஆயுட்காலமும் சிக்கி செதிலாகின்றன,

அப்படியாவது ஒரு சுயநல வட்டத்தில் என்னை சேர்த்து என்மரணதண்டனைக்கு மறுப்பு கூற மாட்டீர்களா?
கதறி அழுகின்றது, கார் மேகம் சூழ்ந்த மாலையில் இருவர்இன்புற்று கழித்த தருணங்களின் பதிவான அந்த குற்றமற்ற கரு,
கரு என்ற சொன்ன என்னை கழுவில் கூட ஏற்றலாம்,

அகண்ட இந்த பூமி பிரமாண்டத்தில் அனுமதி மறுக்கப்படும் ஒரு குழந்தையின் கதறல்,
உலக உயிரழப்புகள் கண்ணுக்கு தெரிந்ததால் அதற்கு குரல் கொடுக்கிறோம்,
உலக அனுமதி மறுக்கப்படும் இந்த பிஞ்சிகளின் கொலைக்குஏதேனும் தண்டனை உண்டா?

இருந்தால் சொல்லி தாருங்கள் உயிருக்கு உயிர் என்ற கொலைகள் நடந்தேறட்டும்,
அப்போதாவது இந்த உயிர் கொல்லிகளின் வெறியாட்டம் கட்டுக்குள் இருக்குமா என்று பார்ப்போம்,
இந்த கொலை செய்ய துணியும்போது இனி எங்கேயும் பஞ்ச பூதங்கள் உயிர் பெறட்டும்,
அறைக்குள் மட்டும் ஒரு சுனாமி பிரசவிக்கட்டும்,
கண்டங்கள் தாண்டி பூமி தட்டுகள் பிளந்து இவர்களை உள்வாங்கட்டும்,

இதை படித்து யாரேனும் ஒருவர் மனம் மாறினால் அப்போதுதான் இந்த கொலைகளின் முற்று புள்ளிக்கு எழுது கோல் முனைகள் தயாராவதாய் எண்ணி கொள்வோம்....