Thursday, December 31, 2009

2009 இல் பிடித்தவை (பாகம் ஒன்று - கிரிக்கெட்)

அனைவரும் புத்தாண்டு மற்றும் அதற்கு முன்னும் பின்னும் வருகின்ற விடுப்பு நாட்களை மகிழ்ச்சியாய் கழித்து கொண்டிருப்பீர்கள். நானும் அதைதான் செய்து கொண்டிருக்கிறேன். சரி இரண்டு வாரங்களாய் வலை உலகிற்கு வரவில்லையே என்று எட்டி பார்த்தால் அணைத்து பதிவர்களும் பிரித்து எடுத்து கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நம்மையும் மதித்து ஒரு பதிவராக அடையாளம் காட்டிய பதிவுலகத்திற்கு நம்மால் முடிந்ததை எழுதுவோம் என்று , எனக்கு 2009இல் பிடித்தவைகளை பற்றி ஒரு தொடராக எழுத இருக்கிறேன்.

இந்த இடுகையில் 2009 ஆம் ஆண்டில் எனக்கு பிடித்த சில டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பற்றி விவரிக்கிறேன்.கீழ் வரும் போட்டிகள் எந்த ஒரு வரிசையிலும் தொகுக்க படவில்லை!

1 .
விஸ்டன் டிராபி -
இங்கிலாந்து (எதிர்) மேற்கிந்திய தீவுகள், இடம் - சபீனா பார்க் மைதானம், கிங்க்ஸ்டன், ஜமைகா .

பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்த ஆட்டம் சற்றும் எதிர்பாராத வகையில் நான்கு நாட்களுக்குள் முடிவடைந்தது. 1990 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்தே, கிரிக்கெட் உலகில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த மே.இந்திய தீவு அணிக்கு இறங்கு முகம் தான். என்னதான் லாரா தன் ஆட்டத்தால் மற்ற அணிகளை ஆட்டம் காண வைத்து கொண்டிருந்தாலும், மொத்தமாக ஒரு அணியாக திறம்பட செயல் பட முடியவில்லை. வேட்டை ஆடி வந்து கொண்டிருந்த இந்த அணி வெட்டியாக ஆகி விட்டதென்றே சொல்லலாம். ஆனாலும் அவ்வவப்போது இந்த அணியும் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து கொண்டுதான் இருந்தது.

இங்கிலாந்து அணி மே. இந்திய தீவுகள் அணியை இங்கிலாந்தில் நடந்த விஸ்டன் தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் 2007 ஆம் ஆண்டில் தோற்கடித்திருந்தது. இடையில் நியூசீலாந்தை இரண்டுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் சொந்த மண்ணில் புதைத்து விட்டு, பின்னர் இந்தியாவில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் தோற்று விட்டும் இந்த தொடருக்கு வந்திருந்தது.

இவங்க தானே என்று கொஞ்சம் ஒய்யாரமாக, ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் நாணய சுழற்சியில் வெல்ல, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கெவின் பீட்டர்சனின் 97 ஓட்டங்கள் மற்றும் கீப்பர் மொட்டை மாட்டின் 64 ஓட்டங்களை கொண்டும் முதல் இன்னிங்க்சில் 318 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது. மே. இந்திய தீவு அணிக்கு டைலர் 3 விக்கட்டுகளையும் நெடுவென வளர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் சல்லிமேன் பென் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

மே.இந்திய தீவு அணியினர் கொஞ்சம் தெம்பாகவே ஆரம்பித்தனர். அணித் தலைவர் க்றிஸ் கெய்லும், துணை தலைவர் சர்வானும் சதங்கள் விளாசினார். ஆனால் மற்ற ஆட்டக்காரர்கள் அதிகம் அலட்டி கொள்ளாததால் மே.இந்திய தீவு அணியினர் 392 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர். இங்கிலாந்தை விட 74 ஓட்டங்கள் அதிகம் பெற்று முதல் இன்னிங்க்சில் முன்னணியில் இருந்தனர். இங்கிலாந்திற்கு வேக பந்து வீச்சாளர் பிராட் 5 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார். சரி எப்படியும் இதற்கே இவருக்கு ஆட்ட நாயகன் விருந்து கிடைக்கும் என்று அனைவரும் களத்தில் விழி வைத்து காத்திருந்த நிலையில் இறங்கியது இடி இங்கிலாந்திற்கு!!!

இரண்டாவது இன்னிங்க்சில் முன்னிலை வகிக்க வேண்டிய முனைப்பில் ஆடும் என்று எதிர் நோக்கி காத்திருந்த அனைவருக்கும் தக்க வைத்து கொள்ள முடியாத படிக்கான சன்மானம் கொடுத்தனர் மே.இந்திய தீவு அணியினர். விளைவு இரண்டாவது இன்னிங்க்சில் 51 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டம் இழந்தது. சல்லிமேன் பென் - 4 விக்கெட்டுகள், டெய்லர் - 5 விக்கெட்டுகள்.

ஆண்டி பிளவரை விவரமாய் பத்திரிக்கையாளர்களை எதிர்கொள்ள அனுப்பி தப்பித்தார் ஸ்ட்ராஸ். போர் தந்திரம் அது!.

ஆட்ட நாயகன் விருது - டெய்லர்.
தொடர் வெற்றியாளர் - மே.இந்திய தீவுகள் (1 - 0).


2. நியூசீலாந்து (எதிர்) இந்தியா, இடம் - செடன் பார்க் மைதானம், ஹாமில்டன், நியூசீலாந்து.

மார்ச் 18 ஆம் தேதியிலிருந்து 22 ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்த போட்டியும் 4 நாட்களில் முடிவுக்கு வந்தது. இந்தியா இங்கிலாந்தையும் பாகிஸ்தானையும் ஒன்றுக்கு பூஜியம் என்ற கணக்கில் தோற்கடித்து விட்டு, ஆஸ்த்ரேலிய அணியை வெகுவாக ஆட்டம் காண வைத்து விட்டு, நியூசீலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தது. ஆனால் இந்திய அணிக்கு வெளி நாட்டில் போட்டிகள் என்றால் முதல் ஆட்டம் எப்படியும் எப்படியாவது சுதப்பி விடும். அது மட்டும் இல்லாமல் இந்தியா நியூசீலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியை வென்றது கிரிக்கெட்டின் திரேதா யுகத்தில் அதாவது 33 மூன்று ஆண்டுகளுக்கு முன்னால். அந்த எண்ணங்கள் வேறு இந்திய வீரர்களை ஆட்டி படைத்திருக்கும். திராவிடும் லெக்ஸ்மணனும் தான் அணிக்கு தோள் கொடுக்க வேண்டிய சூழல். ஏனெனில் சச்சினை பொருத்த வரை நியூசீலாந்தில் இந்த தொடருக்கு முன்பு வரை அவர் சரியாக சோபித்ததில்லை.

என்னதான் இங்கிலாந்திடம் மாறி மாறி ஆப்பு வாங்கியிருந்தாலும், நியூசீலாந்துக்கு இந்தியாவிடம் மோதுவது என்றால் அதுவும் தங்கள் நாட்டில் மோதுவது என்றால் அரை கிலோ அல்வாவை அப்படியே சாப்பிடுவது போல இருக்கும். அப்படி நம்மை விரட்டி விரட்டி அடித்திருக்கிறார்கள் முந்தைய தொடர்களில். அணி தலைவர் வெட்டரிவாள் வெட்டோரி அனைத்திலும் கை தேர்ந்த வித்தகர். சமீப காலங்களில் நன்றாக மட்டை ஆட்டதிலும் சிறந்து விளங்க தொடங்கி விட்டார். என் எண்ணத்தில் ஸ்டீவ் வாகின் பொறுமையும் ரனத்துங்காவின் விவேகமும் (வேகமும் கூடதான்!) இருக்கும் இவரது ஆட்டத்தில். மொத்ததில் இவர் ஒரு சத்தம் போடாத கொலையாளி.

ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி தலைவர் சரவெடி தோனி அசராமல் நியூசீலாந்தை முதலில் மட்டையாட அழைத்தார். அனைவருக்கும் பெருத்த ஆச்சர்யம். இப்படி ஒரு நல்ல ஆடு களத்தில் போய் யாராவது ஃபீல்டிங்க் எடுப்பார்களா என்று. தங்கள் அணித்தலைவர் எடுத்த முடிவு சரி என்பதைப் போல சூறாவளி தனமாய் பந்து வீசினர் இந்திய பந்து வீச்சாளர்கள். 60 ஒட்டங்களை எடுத்து முடிப்பதற்குள் 6 நியூசீலாந்து மட்டையாளர்கள் உள்ளே சென்று விட்டனர். முதல் 6 விக்கெட்டுகளில் 3 இஷாந்தும், 2 சாகீரும், 1 முனாபும் எடுத்திருந்தனர். அப்போதுதான், சைமண்ட்சின் நியூசீலாந்து வாரிசான ஜெசி ரைடரும் வெட்டோரியும் களத்தில் சேர்ந்தனர். அவர்களின் அபார சதங்களால் முதல் இன்னிங்க்சில் நியூசீலாந்து அணி 279 ஓட்டங்களை எடுத்தது. கிடைத்த நல்ல வைப்பை கோட்டை விட்டார்கள் இந்திய அணியினர் என்று அனைத்து தரப்பிலிருந்தும் குரல்கள் எழத்துவங்கின. இந்திய அணிக்கு இஷாந்த் 4 விக்கெட்டுகளையும் பட்டேல் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

முதல் இன்னிங்க்சில் 37 ஒட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அதிரடி மட்டையாளர் சேவாகின் விக்கெட்டை பறி கொடுத்தது இந்திய அணி. அதற்கு பிறகு, சற்று நிதானித்து ஆடத் துவங்கியது இந்திய அணி. கம்பீரின் 72 ஓட்டங்களும், திராவிடின் 66 ஓட்டங்களும், சாகீரின் அதிரடியான 51 ஓட்டங்களும், சச்சினின் அசத்தலான 160 ஓட்டங்களும், இந்திய அணி முதல் இன்னிங்க்சில் 520 ஓட்டங்கள் குவித்தது. நியூசீலாந்து தரப்பில், மார்டின் 3 விக்கெட்டுகளையும், ப்ரையன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய முதல் இன்னிங்க்சில் 241 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

அடுத்த இன்னிங்க்ஸ் ஆட வந்த நியூசீலந்து அணியினர் குறைந்த இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வண்ணம் இருந்தனர். அந்த அணியின் கீப்பர் மெக்குல்லம் 84 ஓட்டங்களையும், ஃப்லின் 67 ஓட்டங்களை எடுக்க அவர்களின் ஆட்டம் மீண்டும் 279 ஓட்டங்களில் முடிவுக்கு வந்தது. இந்த இன்னிங்க்ஸில் நியூசீலாந்தை நாசப்படுத்தியிருந்தார் பஜ்ஜி. இந்த இன்னிங்க்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அவர். இரண்டாவது இன்னிங்க்ஸில் 38 ஓட்டங்கள் மட்டுமே அதிகம் பெற்றிருந்த நியூசீலாந்து அணியினர் பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர்.

கிரிக்கெட்டின் கலியுகத்தில் இந்தியா நியூசீலாந்தை வெற்றி கொண்டது அவர்களது சொந்த மண்ணில்.

ஆட்ட நாயகன் விருது - சச்சின் டெண்டுல்கர்.
தொடர் வெற்றியாளர் - இந்தியா (1 - 0)

3 . ஸ்ரீலங்கா (எதிர்) பாகிஸ்தான் , இடம் - காலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், ஸ்ரீலங்கா

சூலை 4 ஆம் தேதியிலிருந்து 8 ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்த போட்டியும் அகால மரணத்தை 4 நாட்களிலேயே தழுவியது. பாகிஸ்தான் அணி வெகு நாட்களாக டெஸ்ட் போட்டிகள் விளையாடாமல் இருந்து போது, ஸ்ரீலங்கா அங்கே சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கோரமான தீவிரவாத செயல் நடந்து அந்த சுற்றுப்பயணம் நிறுத்தப்பட்டது நினைவிருக்கலாம். அதில் பூஜ்ஜியத்திற்கு பூஜ்சியம் என்ற நிலையில் இரு அணியும் தொடரை சமன் செய்தன. ஸ்ரீலங்கா இதற்கு வங்காளதேசத்தை 2-0 என்ற கணக்கில் வெளுத்து விட்டு இந்த தொடருக்கு வந்திருந்தது.

ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தானின் அணித் தலைவர் யூனிஸ் கான் ஸ்ரீலங்கா அணியை மட்டையாடும் படி பணித்தார். அன்று பாகிஸ்தான் அணியில் மூன்று புது முகங்கள் அறிமுகம் பெற்றனர். முகமது ஆமீர் என்ற இடது கை வேக பந்து வீச்சாளர், சயத் அஜ்மல் என்ற சுழற் பந்து வீச்சாளர் மற்றும் அப்துர் ராப் என்ற இன்னுமொரு சுழற்பந்து வீச்சாளர் இவர்கள் அனைவரும் முதன் முறை களம் இறங்கினர். இந்த நிலையில் ஸ்ரீலங்கா அணிக்காக வார்னப்பூராவும், பரானவித்தானாவும் களம் இறங்கினர். 3 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் வார்னாபூரா, புதுமுகம் அமீரின் அதிரடி பந்து வீச்சில் ஆட்டம் இழக்கவே குதூகலம் நிறைந்தது யூனிஸ் கான் முகத்தில். அதை தக்க வைத்து கொள்ளும் விதத்தில் சங்கக்காராவும் ஆட்டமிழக்க , பாகிஸ்தான் வலுவான நிலையில் இருந்தது.

அடுத்து வந்த ஜெயவர்தநேவுடன் ஜோடி சேர்ந்த பரானவித்தானா 75 ஓட்டங்கள் சேர்த்திருந்த நிலையில் ஜெயவர்தனே ஆட்டம் இழந்தனர். பிறகு எந்த ஒரு ஆட்டக்காரர்களும் வெகு நேரம் நிலைத்து ஆடாததால் 292 ஓட்டங்களுக்கு ஸ்ரீலங்கா ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக பரானவித்தானா 72 ஓட்டங்கள் எடுத்திருந்தார். ஆமீர் 3 விக்கெட்டுகளையும், யூனிஸ் கான், அப்துர் ராப் மற்றும் அஜ்மல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சொற்ப ஓட்டங்களுக்கு (நாம் கிரிக்கெட்டின் கலியுகத்தில் இருப்பதால் இந்த ஓட்டங்கள் கூட வெற்றி வாய்க்கும் ஓட்டங்கள் இல்லை என்பது பரவலான கருத்தாக உள்ளது!!!) ஸ்ரீலங்காவை பந்து பிடிக்க அனுப்பியதால் பாகிஸ்தான் வீரர்கள் சற்று தெம்புடனே களம் இறங்கினர்.

ஒரு ஓட்டம் எடுத்திருந்த நிலையில் சல்மான் பட் ஆட்டமிழக்க பரிதாபமாக துவங்கியது பாகிஸ்தானின் முதல் இன்னிங்க்ஸ். யூசூபின் சதம் மற்றும் மிஸ்பாவின் அரை சதம் மட்டும் கை கொடுக்க, பாகிஸ்தான் மிரட்டலாக 50 ஓட்டங்கள் முதல் இன்னிங்க்சில் முன்னிலை பெற்றது. குலசேகரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், துஷாரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்க்சில் 50 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் ஸ்ரீலங்காவை துவைத்து கொடியில் காய வைத்தது பாகிஸ்தான் அணி. மறுபடியும் பரானவித்தானாவின் 49 ஓட்டங்கள் கை கொடுக்க, மேலும் சில சொற்ப பங்களிப்புகளோடு 217 ஓட்டங்களோடு ஸ்ரீலங்கா இரண்டாவது இன்னிங்க்சை முடித்து கொண்டது. மறுபடியும் ஆமீர் மற்றும் அஜ்மல் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். யூனிஸ் கான் மேலும் 2 விக்கெட்டுகளை கை பற்றினார். பாகிஸ்தானுக்கு சொற்பமான 167 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அழகாக அதை அடித்து பாகிஸ்தான் வெற்றி பெரும் என்று எண்ணியவர்களின் எண்ணத்தில் தூவினார் ஹெராத். அதி வேகத்தில் 4 விக்கெட்டுகளை கை பற்றினார். சட்டென்று பாகிஸ்தான் அணி சுருண்டது 117 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது. 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஸ்ரீலங்கா அணி.

ஆட்ட நாயகன் விருது - ஹெராத்
தொடர் வெற்றியாளர் - ஸ்ரீலங்கா (2 - 0)

4.
இங்கிலாந்து (எதிர்) ஆஸ்த்ரேலியா
, இடம் - சோஃபியா கார்டன்ஸ், கார்டிஃப், இங்கிலாந்து.

சூலை 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது இந்த போட்டி. இதற்கு முன்னர் நடந்த ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்தை துவைத்து எடுத்திருந்தது ஆஸ்த்ரேலிய அணி. 5-0 என்ற கணக்கில் சென்ற ஆஷஷை கைப்பற்றியிருந்தது ஆஸ்த்ரேலிய அணி. ஆனால் அதே பலத்துடன் இந்த ஆஸ்த்ரேலிய அணி இல்லை என்பதாலும், ஆஸ்த்ரேலிய அணியை கூட, அதன் குகையில் வைத்தே வெற்றி காண முடியும் என்பதை தென் ஆப்பிரிக்க அணி மற்றும் இந்திய அணிகள் காண்பித்ததால் சற்று தெம்புடனே காணப்பட்டது இங்கிலாந்து அணி. இந்த முரை சற்று வார்த்தை ஜாலங்களில் விளையாட ஆரம்பித்து விடும் ஆஸ்த்ரேலிய அணியும் சற்றே அடக்கி வாசித்தது. பரப்பரபான தொன்மை வாய்ந்த இந்த ஆஷஸ் போட்டி துவங்கியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அதன் அணி தலைவர் வழி நடத்த முதலில் மட்டையாட களம் இறங்கியது. முதல் 3 விக்கெட்டுகளை 90 ஓட்டங்களுக்கு பறி கொடுத்த இங்கிலாந்து அணி பின்னர் நிதானித்து ஆட துவங்கியது. காலிங்க்வுட்டும், பீடர்சனும் சேர்ந்து 138 ஓட்டங்கள் எடுத்தனர். பின்னர் பீடர்சன் பரிதாபமாக, ஆஃப் திசையில் இருந்த பந்தை மடக்கி அடிக்க முற்படு ஆட்டம் இழந்தார். காலிங்க்வுட், பீடர்சன், மொட்டை மாட் மற்றும் ஸ்வானின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்க்சில் 435 ஓட்டங்கள் குவித்தது. இதுவே அவர்களுக்கு பெரிய தெம்பாக அமைந்தது. ஆஸ்த்ரேலிய அணிக்கு ஜான்சன் மற்றும் ஹௌரிட்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹில்பென் ஹாஸ் மற்றும் சிட்டல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய ஆஸ்த்ரேலிய அணி, நாங்களும் ஒன்றும் சலைத்தவர்கள் அல்ல என்பது போல அணித்தலைவர் பான்டிங்கின் 150 ஓட்டங்கள் மற்றும் மேலும் காடிச், நார்த் மற்றும் ஹாடின் ஆகியோரின் அபார சதங்களில் 674 ஓட்டங்கள் குவித்தது. முதல் இன்னிங்க்சில் ஆஸ்த்ரேலிய அணி 239 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அதிகமாக தலைவலி இருந்த நிலையில் 9 விக்கெட்டுகளையும் 6 ஓட்டங்கள் இங்கிலந்து பின் தங்கிய நிலையில் இங்கிலந்தின் 9 விக்கெட்டுகளையும் சுருட்டிய ஆஸ்த்ரேலியா வெற்றி கனி பறிக்கவில்லை என்று சொன்னால் ஆச்சர்யமாகதான் இருக்கும். பனீசரும், ஆண்டர்சன்னும் சேர்ந்து 10 ஓவர்களை சமாளித்தனர். ஹில்பென் ஹாசும் ஹௌரிட்ஸும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பான்டிங்கிற்கு கடுமையான கோபம், இங்கிலாந்து அணியினர் நேரம் கடத்த பல யுக்திகளை கையாண்டனர் என்று.

எப்படி எதை பற்றி பிதற்றினாலும் இங்கிலாந்து மயிரழையில் தப்பித்தது.
ஆட்ட நாயகன் விருது - பான்டிங்க்.


தொடர் வெற்றியாளர் - இங்கிலாந்து (2 - 1)


5. இங்கிலாந்து (எதிர்) ஆஸ்த்ரேலியா, இடம் - லார்ட்ஸ் மைதானம், லண்டன், இங்கிலாந்து.

சூலை மாதம் 16 ஆம் தேதி துவங்கி 20 ஆம் தேதி முடிவடைந்த இந்த போட்டி வெகு சுவாரசியமானது. முதல் போட்டியில் மயிரழையில் தோல்வியை சமாலித்த இங்கிலாந்து அணி அதையே வெற்றியாக பாவித்து மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டது. ஆனால் ஆஸ்த்ரேலியா அடிப் பட்ட புலி சீறிப் பாயும் என்றும் அவர்களுக்கு தெரியும். மிகுந்த பரப்பரப்புடன் இந்த போட்டி உலகின் மிக பழமையான லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது.

நாணய சுழற்சியில் வென்று மீண்டு தன் அணி முதல் இன்னிங்க்சில் மட்டை ஆடும் என்று அறிவித்த அணி தலைவர் ஆன்ட்ரூ ஸ்ராஸ் களமிறங்கி 160 ஓட்டங்கள் விளாசினார். இவருடன் ஜோடி சேர்ந்த குக்கும் இவரும் சேர்ந்து 196 ஓட்டங்கள் குவித்தனர். வேறு யாரும் சரியாக ஆடத நிலையில் இங்கிலாந்து அணி, 425 ஓட்டங்கள் எடுத்து முதல் இன்னிங்க்சில் ஆட்டம் இழந்தது. ஆன்ட்ரூ ஸ்ராஸ் 160 ஓட்டங்களும், குக் 95 ஓட்டங்களும் எடுத்திருந்தனர். ஹில்பென் ஹாஸ் அதிகப்பட்ச அளவில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்ததாக களமிறங்கிய ஆஸ்த்ரேலிய அணி ஆண்டர்சனின் புயல் வேக பந்து வீச்சிற்கு ஈடு கொடுக்க முடியாமல் 215 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது. ஹுஸ்ஸீ மட்டும் அதிகப்பட்சமாக 51 ஓட்டங்கள் எடுத்தார். ஒரு விக்கெட் மட்டுமே எடுத்திருந்தாலும் ஃப்லின்டாஃபின் அனல் பறக்கும் பந்து வீச்சும் இவர்கலின் சரிவிற்கு காரணம். 210 ஓட்டங்கள் முன்னிலை வகித்த இங்கிலாந்து அணி 2 ஆவது இன்னிங்க்சில் விரைவாக ஆடி 311 ஓட்டங்களுக்கு டிக்லார் செய்தது. ஆஸ்த்ரேலிய அணிக்கு இலக்கு 522 ஆக நிர்ணையிக்கப்படது.

இந்த இன்னிங்க்சில் சற்று நிதானித்து ஆடிய ஆஸ்த்ரேலிய அணி, அதன் துணைத் தலைவர் க்லார்கின் சதத்தினாலும், ஹாடினின் அரை சதத்தாலும் 406 ஓட்டங்கள் குவித்தது. இருந்தாலும் இங்கிலாந்து வெகு நாட்களுக்கு பிறகு ஆஸ்த்ரேலிய மண்ணில் 115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. முதல் இன்னிங்க்சில் தவற விட்ட விக்கெட்டுகளை இரண்டாவது இன்னிங்க்சில் எடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியவர் காயங்கள் நிறைந்த கிரிக்கெட் வாழ்க்கை கொண்ட ஃப்லின்டாஃப். இந்த இன்னிங்க்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, லார்ட்ஸில் தன் பெயரைப் பதித்து கொண்டார். இவரின் இறுதி தொடர் என்பதால் இன்னும் சிறப்பு ஊட்டியது இந்த ஆட்டம்.

ஆட்ட நாயகன் விருது - ஆன்ட்ரூ ஃப்லின்டாஃப்
தொடர் வெற்றியாளர் - இங்கிலாந்து ( 2 - 1)

6. பேசில் டீ-ஒலிவியெரா டிராஃபி, தெனாப்பிரிக்கா (எதிர்) இங்கிலாந்து, இடம் - கிங்க்ஸ்மீட், டர்பன், தெனாப்பிரிக்கா.

டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி ஆரம்பித்து 30 ஆம் தேதி வரை நடந்தது இந்த போட்டி. இதற்கு முந்தைய போட்டியில் மீண்டும் இரண்டாவது இன்னிங்க்சில் 9 விக்கெட்டுகள் இழந்து பின்னர் தோல்வியின் விளிம்பில் இருந்து தப்பித்த இங்கிலாந்து அணி தெம்பாக இருந்தது. இந்த முறை எப்படியும் வெற்றி வாகை சூடுவோம் என்ற நம்பிக்கையில் களம் இறங்கியது. ஏனெனில் இப்படி முதல் போட்டியில் தோற்று பின்னர் அந்த தொடரை கைப்பற்றி இருக்கிறது இங்கிலாந்து அணி. தெனாப்ரிக்கா அணிக்கு இது மிக பெரிய சவால். இந்த போட்டியில் வெற்றி சூடியே ஆக வேண்டும் என்ற நிலை.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அணித்தலைவர் ஸ்மித் தன் அணியை மட்டையாட களமிறக்கினார். ஸ்மித், டீ வில்லியர்ஸ் மற்றும் காலீசின் அரை சதத்தில் தெனாப்ரிக்க அணி 343 ஓட்டங்கள் எடுத்தது. ஸ்வான் 4 விக்கெடுகளை வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி பெல் (140 ஓட்டங்கள் ), குக் (118 ஓட்டங்கள்), காலிங்க்வுட் (91 ஓட்டங்கள்) மற்றும் அணி தலைவர் ஸ்ட்ராஸின் (51 ஓட்டங்கள்) அபார ஆட்டத்தினால் 574 ஓட்டங்கள் குவித்தனர். இதனால் 231 ஓட்டங்கள் முன்னிலை பெற்றனர். இந்த இன்னிங்க்சில் மார்க்கெலும், டூமினியும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அடுத்து ஆடிய தெனாப்ரிக்க அணி யாரும் எதிர்பாராத வகையில் 133 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது. ஸ்வான் 5 விக்கெட்டுகளையும், ப்ராட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ் இந்த வெற்றி இங்கிலாந்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக குறிப்பிடுகிறார். பெல் தன் சதம் தன் கிரிக்கெட் வாழ்வில் திருப்புமுனையாக இருந்தது என்றும் தெரிவித்தனர்.

ஆட்ட நாயகன் விருது - ஸ்வான்

தொடர் வெற்றியாளர் - இன்னும் நிர்ணையிக்கப்படவில்லை.

மேலும்
பல நல்ல போட்டிகள் நடந்துள்ளன. அதில் இந்தியாவிற்கும் ஸ்ரீலங்காவிற்கும் இடையில் நடந்து சமனில் முடிவடைந்த ஆட்டமும் என்னை கவர்ந்த ஒன்றாகும். மேலும் நியூசீலாந்து அணியினர் பாகிஸ்தானுக்கு எதிரான 3 ஆவது போட்டியும் சு
வா
ரசியங்கள் நிறைந்தது.


இந்த வருடத்தில் இந்தியா நியூசீலந்தில் கம்பீரின் சதத்தின் உதவியுடன் சமன் செய்த போட்டியும் மிகவும் சுவரசியம். மீண்டும் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். வேறு ஒரு தொடரில் மீண்டும் சந்திப்போம்!!!


- காவிரிக்கரையோன் MJV