Thursday, June 18, 2009

பாம்பு படம் எடுக்குதுன்னு ஏன்யா சொல்றோம்???

இந்த பதிவு நகைச்சுவைக்கும், இது போன்ற பல விஷயங்கள் நம்மை சுற்றி நடக்கும், ஆனாலும் ஏனென்று தெரியாதல்லவா? அவற்றை நினைவூட்டவும் தான்!

'பாம்பு படம் எடுக்கும்' என்று சொல்லுவது ஏன் என்று விந்தையான கேள்வி என் மனதில் உதித்த நாள் - 17.06.2009, உதித்த நேரம் - சுமார் மதியம் 3 மணி இருக்கும்.....

என்னுடைய நண்பர்கள் பலரிடமும் கேட்டு தெரிந்து கொண்ட விஷயங்கள்... இதில் பல தடைகள் தாண்டி, சில ஏச்சு பேச்சுகளையும் தாண்டி தேர்ந்து எடுக்கப்பட்ட சில பதில்கள்......

நான் - பப்பு 'பாம்பு படம் எடுக்குதுன்னு ஏங்க சொல்றாங்க?'
நண்பர் வெங்கட் (பப்பு) - அதாவதுங்க, அது ஏன் அப்டி சொல்றாங்கன்னா, பாம்புக்கு நல்ல நியாபக சக்தி உண்டுன்னு ஒரு நம்பிக்க உண்டு.... அது தலைய தூக்கி நிக்கும் போது, அது யாரெல்லாம் தன்ன சீண்டராங்கன்னு நியாபகம் வெச்சிக்குமாம் , அதனால அது எல்லாரையும் படம் எடுத்து வெச்சிக்குதுன்னு சொல்லி சொல்லி, அதுவே மருகி 'பாம்பு படம் எடுக்குதுன்னு வழக்கத்துக்கு வந்துடுச்சி!!!!

நான் - நரசி 'பாம்பு படம் எடுக்குதுன்னு ஏன்டா சொல்றாங்க?'
நண்பன் நரசி - ஏன்டா இம்மி அளவு கூட உனக்கு வேலையே கிடையாதா?
நான் - மாப்பி நாமெல்லாம் எப்பவும் Parallel processing தானேடா.... அதெல்லாம் இருக்கட்டும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு மச்சான்!
நண்பன் நரசி - ஏன்டா நானே காலைலேந்து ஒரு IF condition பிரச்சனை பண்ணுதுன்னு கடில இருக்கேன்.... ஓடி போயிரு....
நான் - அமைதி குடிகொண்டது!!!! சிந்தனை செய்த என் மனம்.....
நண்பன் நரசி - சரி விடு, அதாவது நண்பா இந்த பசங்கல்லாம் 'overa scene' போடதன்னு சொல்லுவனுங்கள்ள..... அது போல அந்த பாம்பு சீன் போடுதா, அது அப்டியே சொல்லி சொல்லி, படம் எடுக்குதுன்னு சொல்லிட்டானுங்க.... ஓடி போய்டு இதோட..... கைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது....

நான் - ராகவ் 'பாம்பு படம் எடுக்குதுன்னு ஏங்க சொல்றாங்க?'
நண்பர் ராகவ் - அடேய் ஏன்டா இந்த மாதிரி? முடியலடா....
நான் - சும்மா சொல்லுங்க ராகவ்.
நண்பர் ராகவ் - அதாவது தம்பி, கொஞ்ச காலத்துக்கு முன்னாடில்லாம், புகைப்படம் எடுக்கும்போது, Flash light க்கு பெரிய அகலமான ஒரு டப்பா மாதிரி வெச்சிருப்பாங்க.... அது மாதிரி பாம்பு குடைய விரிச்ச மாதிரி தலைய தூக்குதா அதனால தான் இப்படி பேர் வந்துச்சி..... ( பேசி முடித்து 5 நிமிடம் ஆகியும் மூச்சு வாங்குவது நிறுத்த வில்லை. ஒரு வேலை பாம்பு படம் எடுக்கின்ற போது இப்படி செய்யும் என்று காண்பித்தார் என்று நினைப்பதற்கு முன்..... விளையாடி விட்டு வந்தோம் என்று எங்கோ இருந்து ஒரு குரல் ஓங்கி ஒலிக்கிறது!).

நான் - முருகன் அண்ணா 'பாம்பு படம் எடுக்குதுன்னு ஏங்க சொல்றாங்க?'
நண்பர் முருகன் அண்ணா - முறைத்து வெறித்து கொலை வெறியில் கண்கள் சிவக்க பார்க்கிறார்....
நான் - அண்ணா எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.... தீர்த்துட்டு பேச வேணாம்னு சொல்லி முடிப்பதற்குள், புரிந்து போனது, இனியும் கேட்டால் நான் புலம் பெயர்ந்திடுவேன் என்று..... எடுத்தேன் ஓட்டம்!

நான் - மன்னிக்கவும் (Andy - இதை தமிழ் தட்டச்சில் தட்டினால் ஆண்டி என வருகிறது)! அதனால் Andy 'பாம்பு படம் எடுக்குதுன்னு ஏங்க சொல்றாங்க?'
நண்பர் Andy - அதாவதுங்க, அதாவது, (சொல்லுங்கப்பா சொல்ல வரத!),என்ன சொல்றோம்னா , பாம்ப ஒரு object ன்னு எடுத்துக்கிட்டா (ஊ, ஆ இது OOPS concept!), ஒரு ஒரு முறையும் அது எடுக்கும் நிலை ஒவ்வொன்றும் ஒரு instance. இதை தான் நம்மாளுங்க Instantiation அப்டின்னு சொல்றான்.... அப்போது ஒரு ஒரு முறை அது தன் விஷத்தை தயார் நிலையில் வைத்து கொண்ட தாக்க ஆயத்தமாகிறது..... ஒரு ஒரு முறையும், அதன் முதுகு தண்டு வடம்(அதற்கு இல்லை என்றாலும் இருக்கு என்று வைத்து கொள்வோமே - படம் எடுக்கும்னு சொன்னா சரியாம் இதுக்கு என்னங்க....) நேராக வந்து இப்டி பல முறை instance create செய்வதால் அதற்கு பாம்பு படம் எடுக்குதுன்னு வந்திருக்கலாம்....
நான் - மனதுக்குள் அடங்கப்பா சாமீ !......

நான் - அனு 'பாம்பு படம் எடுக்குதுன்னு ஏன்பா சொல்றாங்க?'
என் மனைவி - ஏன்டா இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரில.... சீக்கரமா வீட்டுக்கு வந்து சேர்ற வழிய பாரு....
நான் - அதெல்லாம் சரிங்க ஆபீசர், ஏன் அப்படி?
என் மனைவி - சரி சரி, அது டிசைனா ஒரு உருவம் எடுப்பதால் அதை படம் எடுக்குதுன்னு சொல்றாங்க.....
நான் - இதுக்கு மேல கேட்டா எனக்கு படம் காட்டிடுவாங்கலோன்னு பயந்து ஓடினேன்......

நான் - தாமு 'பாம்பு படம் எடுக்குதுன்னு ஏங்க சொல்றாங்க?'
நண்பர் தாமு - ஏன்டா டேய் என்னடா இதெல்லாம்? எனக்கு தெரியாதுன்னு ஜகா (ஜகானு ஏன் சொல்றாங்க? - மூளை குழம்பியது மதி மங்கியது) வாங்க பார்க்கிறார்....
நான் - பரவால்ல தாமு சும்மா சொல்லுங்க...
நண்பர் தாமு - அதாவது சீறும் அப்டின்னு சொல்லுவாங்க.... யோசித்து விட்டு படம் எடுக்கும்னு சொல்லுவாங்க (இதை சொல்ல வைத்த நண்பர்கள் Andy மற்றும் பப்புவிற்கு நன்றிகள்)... அங்கே மாட்டினார் தாமு. அது என்னன்னா சென்னை வழக்கில் Scene போடறதுன்னு சொல்லுவாங்கல்ல அது அப்டியே படம் எடுக்குதுன்னு ஆகிடுச்சி......
நான் - சரி விடுங்க மேலும் சில கேள்விகளுடன் வருவேன்னு சொல்லிட்டு கெளம்பிட்டேன்......

குரு என்ற நண்பர் இன்னும் யோசித்து கொண்டிருக்கிறார்..... அடுத்த பதிவில் அது என்ன என்பதை பார்க்கலாம்.....
ஆக பாம்பு படம் எடுக்குதோ இல்லை நெடுந்தொடர் (Mega serial) எடுக்குதோ தெரிய வில்லை.... ஆனால் நம்மில் அனைவருக்குமே கற்பனை வளம் மிகுந்து காணப்படுகின்றது என்ற உண்மையோடு இந்த பதிவை முடிக்கிறேன். மீண்டும் சந்திப்போம்.....

- MJV

Friday, June 12, 2009

எம்.ஆர். ராதா - காவிய நாயகன் (என்ன ஒரு வில்லத்தனம்)

நம்முடைய வாழ்க்கை பயணத்தில் எவ்வளவு திரைப்படங்களை பார்த்திருப்போம், எவ்வளவு திரைப்படங்களை பற்றி கேள்வி பட்டிருப்போம். பார்க்காமல் விட்டு போனவை எத்தனை இருந்திருக்கும்..... இந்த பதிவில் என் மனம் கவர்ந்த ஒரு திரைப்படத்தை பற்றி ஒரு திரைக்கதை சொல்ல போகிறேன்.... இது திரைப்படங்கள் பாழாய் போன ஒரு ஊடகம் என்றோ
அல்லது திரைப்படங்கள் பார்க்கும் அளவுக்கு நேரம் இல்லை என்றோ சொல்ல கூடிய நண்பர்களுக்கான பதிவு அல்ல.... அப்படி பட்டவர்கள் உடனே இந்த பதிவை படிப்பதை தவிர்க்கவும்......

இனி நமக்கான கதைக்குள்ளே நுழைவோம்.....

கண்ணீர் என்று சொன்னாலே அந்த காலத்தில் எல்லாம் நம் பெற்றோர்களின் நினைவுக்கு வந்து அவர்களை பாடாய் படுத்திய ஒரு கதாபாத்திரம் தான், என்னை பொருத்த வரை இந்த கதையின் நாயகன்! இன்னும் நினைவுக்கு வரவில்லையா? ஆம், அந்த படம் 'இரத்த கண்ணீர்' என்ற கலை ஒவியம்!

இந்த படத்தை அழியாத காவியமாய் ஆக்கியவரகளில் சிலர்!
மோகனசுந்தரம் என்னும் மோகன்! - மறக்க முடியுமா! மதிப்பிற்குரிய எம். ஆர் ராதா அவர்கள்!
பாலு - மதிப்பிற்குரிய எஸ்.எஸ்.ஆர் அவர்கள்!


காந்தா - மதிப்பிற்குரிய எம்.என்.ராஜம் அவர்கள்!


மாமா - மதிப்பிற்குரிய சந்திரபாபு அவர்கள்!


மோகனுடைய தாய் மற்றும் பலர்!!!!


இந்த கதை உருவான விதம், இப்படிதான் அயல் நாட்டிலிருந்து வரும் மனிதனின் மனம் மாறும், நடை மாறும், உடை மாறும் என்ற கால கண்ணோட்டத்தின் பேரில் எடுக்கப்பட்டதா? இல்லை வருங்காலத்தில் இப்படிதான் இருப்பார்கள் என்ற விதத்திலே இருந்ததா என்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் பெருகி வருகின்றது..... எது எப்படியாக இருந்தாலும் ஒரு வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் கதாநாயகன் அளவுக்கோ இல்லை அவரை தாண்டியோ பேச பட முடியும், அந்த படத்தின் வெற்றிக்கு வித்திட முடியும் என்பதை நிரூபித்து காட்டிய படம்.... அதுவும் 1954 ஆம் ஆண்டிலேயே நடந்த ஒரு விஷயம் இது... நெகடிவ் ரோல் என்று இன்று பேசி கொண்டிருக்கின்ற அந்த பாத்திரம் - அது ஒரு அட்சய பாத்திரம் என்று தெரிந்து தமிழ் சினிமாவிற்கு எடுத்து கொடுத்த பெருமைக்கு உரியவர் எம்.ஆர். ராதா அவர்கள்!

அட என்னடா இது இப்படி ஒரு நடிப்பு என்று எல்லோராலும் போற்றுதலுக்கும், பெரும் சாபத்திற்கும் ஆளான நடிகர் எம்.ஆர். ராதா அவர்கள்! சாபம் என்று சொன்னதும், என்னமோ ஏதோ என்று என்னை கேள்வி கேட்க தயாராக வேண்டாம்... ஏனென்றால் அது தான் அவரின் நடிப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றி....

இவர் பெற்ற சாபம் என்ன தெரியுமா?
அதாவது நம்பியார் அவர்கள், அசோகன் அவர்கள், அவருடைய மகன் ராதா ரவி அவர்கள் இப்படி பலரும் எந்த சாபத்தை பெற்றார்களோ, அதே சாபம்! ஆம் அதெல்லாம் அவர்களின் நடிப்பிற்கு கிடைத்த வெற்றி.....


படம் பார்த்து விட்டு, 'இப்டியா ஒரு மனுஷன் இருப்பான் மனசாட்சியே இல்லாம' என்று பொருமும் மக்கள்.... அதுதான் அவர்களின் வெற்றியும் வலியும்!!! அதைதான் சாபம் என்று சொன்னேன்..... எந்த அளவுக்கு மக்கள் ஏசுகிரார்களோ அந்த அளவுக்கு எம்.ஆர். ராதா அவர்கள் நடிப்பின் உச்சத்தை தொட்டிருக்கிறார் என்பதே இந்த படம் எனக்கு சொன்ன பாடம்...


படத்தில் எனக்கு பிடித்த விஷயங்கள்:

முதல் காட்சியில் எம்.ஆர்.ராதா வெளி நாட்டிலிருந்து இந்தியா வந்திருப்பார்... அப்போது தொழிற்சாலையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருப்பார்கள்..... அதில் அவர் பேசும் வார்த்தைகள்! அப்பப்பா ஒரு ஆணவம், ஒரு அகங்காரம், இப்பொழுதெல்லாம் சொல்லுகிறோமே 'செம attida அவன்' என்ற விஷயங்கள் புலப்படும்..... இப்படி தான் இருக்க வேண்டும் என்றோ இல்லை இது நல்லது என்றோ இந்த பதிவில் நான் சொல்லவில்லை.... எம்.ஆர்.ராதா என்ற கலைஞரின் நடிப்பை போற்ற கூடிய ஒரு பதிவு இது!


ஒரு மனிதன் நன்றாக வாழும்போது இருக்கும் ஆணவம் அவன் வாழ்ந்து வீழ்ந்து போகும்போது இருக்காது என்ற ஒரு விஷயத்தையும் தாண்டி வீழ்ந்து, அதாவது தொழுநோய் தொற்றி, பார்வை இல்லாத நேரத்திலும்,ஒரு வீட்டில் பிச்சை எடுத்து கொண்டிருப்பார்.... அப்போது வரும் வசனங்கள், அவருடைய மாமா நல்ல நாள் பார்த்து தான் மாப்ள சாந்தி முகூர்த்தம் வைக்கணும் என்று சொல்லுவார்..... அப்போது மாமா சொல்லுவார் ராகுவும் கேதுவும் சந்திக்கற சந்தர்ப்பம் இருக்கு..... அதற்கு இவர் சொல்லுவார், ' Who are Raaghu and Kedhu? Avan kita naan sonenu sollu po, Oh Planets Planets!
இப்படி பல இடங்களில் நம்மை அசர வைத்திருக்கும் அசாத்திய நடிப்பு...... இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.....

இந்த பதிவை படித்து ஒருவரேனும் இந்த படத்தை பற்றிய தங்கள் நினைப்பை மாற்றி கொண்டு இந்த படத்தை பார்த்து நெகிழ்ந்தால் அதுவே என்னால் இந்த படத்திற்கு தேடி கொடுக்கப்பட்ட மிக பெரும் பெருமை!!!!

- MJV