Monday, September 28, 2009

குழந்தையும் நீங்களும் - இளம் தந்தையர்களுக்காக!!!
இந்த வாழ்க்கையில் எத்தனை எத்தனை கனவுகள் கண்டிருக்கிறோம், காணுவோம். பல பேருக்கு பல ஆசைகள் உண்டு. வாழ்வில் நல்ல நிலைக்கு வர வேண்டும், பணம், புகழ், பதவி இப்படியாக பல விடயங்கள் அதில் முன்னணி வகிக்கின்றது. என்ன கனவுகள் கண்டாலும், ஒரு குழந்தை என்ற விடயம் அப்பப்பா, என்ன ஒரு ஆச்சர்யம். ஒரு குழந்தையின் சிரிப்பில் விழாதவர் எவரேனும் உண்டோ இந்த அகண்ட பிரம்மாண்டத்தில்!


குழந்தைகள் புதிதாய் இந்த உலகத்தில் பிறப்பெடுக்கும் போது, அந்த குழந்தைக்கு தெரிந்ததெல்லாம் அவன் அல்லது அவளுடைய அம்மா மட்டுமே! இது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். ஆனால் அப்பாவிடம் எப்படி அந்த குழந்தைக்கு அறிமுகம் கிடைக்கும். அம்மா அந்த படலத்தை நிகழ்த்தி வைப்பார். ஆனால் அதை தக்க வைத்து கொள்வது இளம் தந்தையர்களின் முக்கியமான ஒரு மாற்றம் அவர்களது வாழ்க்கையில். ஏன் என்றால் குழந்தை பிறக்கும் முன்னர் வரை, வாழ்க்கை வேறு மாதிரி நிகழ்ந்திருக்கும். இரவு நேரம் தாழ்த்தி வந்திருப்போம், நண்பர்களுடன் நன்றாக பொழுது கழிந்திருக்கும். வீட்டில் செலவழித்த நேரம் குறைவாக இருந்திருக்கலாம்.

ஆனால் இப்போது மூன்றாவது நபர் ஒருவர் வந்து விட்டார். இந்த நபரிடம் நீங்கள் பார்த்து நடந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் இவரின் நன் மதிப்பை (அன்பை!) நீங்கள் பெற முடியும். அவர்களின் நன் மதிப்பை பெறுவது மிகவும் சுலபம் தான் ஆனாலும் சற்று கவனிக்காமல் இருந்தால் அதுதான் மிக சிரமமான விடயமென்று நினைக்க வைப்பதும் அதுவேதான்!


முதன் முதலில் என் குழந்தையை நான் கையில் ஏந்திய பொழுது அந்த ஆனந்தம் இன்று வரை வேறு எந்த விடயதிற்கும் அப்படி ஒரு ஆனந்தம் இருந்ததில்லை. மருத்துவர் என்னை கூப்பிட்டு பாருங்கள் உங்கள் பெண்ணை, உங்களை பார்த்தவுடன் தான் அவளுக்கு சிரிப்பே வந்திருக்கிறது என்றார். அது உண்மைதான். அப்படி ஒரு புன்னகை.

என்னை பார்த்துதான் சிரித்தாள் என் மகள் என்று மெல்ல மெல்ல உண்மை புரிய புரிய தனி உலகத்தில் பறக்க ஆரம்பித்து விட்டேன். அதன் பிறகு நடந்தவை நடக்கின்றவை எல்லாமே புதிய புதிய அனுபவங்களை எனக்கு கொடுத்து கொண்டிருக்கின்றது!


குழந்தை எப்பொழுதுமே தாயின் அரவணைப்பில் இருப்பதால், அவர்கள் அவ்வளவு எளிதாக தந்தையிடம் பழக சிரமப்படுவார்கள். அதற்கு தந்தையர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நேரம் அதிகமாக செலவு செய்ய வேண்டியதுதான். ஒரு ஒரு அடி எடுத்து வைப்பதும் நீங்கள் புதியதாக ஒரு பாதையில் பயணப்படுவீர்கள். குழந்தையின் ஒவ்வொரு செயலிலும், ஒரு தந்தை செதுக்கப்படுகிறான், 'அபியும் நானும்' திரைப்படத்தில் ப்ரகாஷ் ராஜ் சொல்வது போல, அது உண்மை என்பது போக போகப் புலப்படும்.

எனக்கும் அப்படிதான் மெல்ல மெல்ல புரிதல் தொடங்கி இருக்கிறது. முன்பெல்லாம் வீட்டில் வேலை செய்வது மிகவும் சிரமமான விடயம். முக்கியமாக என் மனைவி வேலைக்கு செல்பவர். அப்போதும் கொஞ்சம் யோசித்தது உண்டு. இப்போது, சின்ன சின்ன வேளைகள் செய்ய துவங்கி உள்ளேன். அதில் மிகவும் பெரிய விடயமாக என் மனைவி நினைப்பது எங்கள் குழந்தையை நான் உறங்க வைப்பது.


இந்த செயலின் மூலம், நானும் என் குழந்தையும் இன்னும் நெருக்கமானோம். துயிலச் செய்வதில் எப்படி இது சாத்தியம் என்று கேட்டாலும், நான் இதை வெகுவாக உணர்ந்துள்ளேன். குழந்தையிடம் ஏதாவது பேசி, பாடி, சிரிப்பு காட்டி அவளைத் தூங்க செய்வேன். என் குழந்தைக்கு இப்பொழுது 1 வருடம் 2 மாதங்கள் வயது ஆகிறது.

அது என்னவோ, என் குரல் அவளுக்கு பிடிக்கவில்லை அதனால்தான் தூங்கிப் போகிறாள் என்ற என் நண்பர்களின் கேலிக் கிண்டல்களைத் தாண்டி, என் குழந்தைக்கும் எனக்குமான, பந்தம் இன்னும் மேம்பட்டு இருக்கிறது. முன்பெல்லாம் வேலை முடித்து வீடு திரும்பும்போது, குழந்தை அவள் தாயாரிடம் இருப்பாள். இப்பொதெல்லாம் என்னிடம் வந்து ஒட்டி கொள்கிறாள்.


இன்னும் அவள் அம்மாவிடம் தான் ஒட்டி இருக்கிறாள் என்றாலும், என்னிடம் அவளின் குறும்பும் அன்பும் அதிகமாகி உள்ளது. முதலில் சிரமமாக தான் இருந்தது. அவள் ஓடிக் கொண்டே இருப்பாள். ஒரு தொலைக்காட்சி நிகழ்வைக் காண முடியாது. துரு துருவென்று இருக்கிறாள் என்று என் மனைவி ஆனந்தப் படுவாள். அது எனக்கு இப்போது நன்றாக புரிந்து விட்டது. நான் விழித்து கொண்டேன்.

வீட்டில் இருக்கும் நேரத்தை வெகுவாக என் மகளுடனே செலவிடுகிறேன். இப்பொழுது கூட என் மகள் வந்து என்னிடம் ஒரு விளையாடுப் பொருள் கொடுத்து விட்டு போகிறாள். அதை வாங்கி ' நல்ல இருக்கேப்ப, என்னது இது' போன்ற சின்ன சின்ன கேள்விகள் போதும், அவர்களும் அதையே எதிர்பார்க்கிறார்கள். நீங்களும் இதையெல்லாம் எண்ணி பாருங்கள். இந்த நேரம் போனால் மீண்டும் வராது. மீட்டு கொண்டு வருவது சாத்தியமும் இல்லை. நானும் நிறைய அதற்காக மாற்றிக் கொண்டேன் என்னை.


அவங்க அம்மா பாத்துப்பா குழந்தையை என்று இனி மேலும் சொல்லிப் பழகாதீர்கள்! நீங்கள் பல சின்ன சின்ன மகிழ்ச்சித் தருணங்களை இழந்து விடுவீர்கள். கொஞ்சம் மாறுதல்கள் வந்தால் ஒன்றும் தவறு இல்லையே. கொஞ்சம் கொஞ்சமாய் மாறலாம். அவரவர் குழந்தையின் சிரிப்புக்கு காரணமாய் நாம் இருப்பதற்கு!!!


- MJV

Sunday, September 27, 2009

புது புகைப் புகு விழா - புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கண்டிப்பாக தீங்கானது!!!நாமலும் நம்ம நண்பர்களும் எப்படியெல்லாம் விளக்கங்கள் சொல்லியும், காரணங்கள் சொல்லியும் புகைப்பழக்கத்தை கற்று கொள்கிறோம் என்பதை பார்ப்போம். நாங்களும் கடந்த 9 வருடங்களாக இதுக்குள்ள இருக்கோம்ல. பன்னி மேய்க்கரதுல என்ன பெருமை வேண்டி கெடக்கு?(பன்னியோட புகழை எந்த விதத்திலும் சேதப்படுத்தாமல்!)


கல்லூரியில் இந்த பழக்கத்தை எப்படி கற்று கொள்கிறோம் என்பதை மட்டுமே இங்கே பார்க்க போகிறோம்.


சில பேர் எப்டின்னா பத்த வெச்ச உடனே பத்திப்பாங்க. ஆமா ஆமா அவங்களுக்கெல்லாம் கற்பூற புத்தி! யோசிக்கறதெல்லாம் கிடையாது! வந்த உடனே ஒரே வாரம் தான். அவங்களுக்கென்ற நட்பு வட்டம் கூடி விடும். அந்த பேக்கரி வாசலில் உக்காந்து அப்டி என்னதான் வந்த ஒரு வாரத்துல பேசுவாங்கன்னே தெரியாது. இந்த நண்பர்கள் பாடெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான். கல்லூரியில எப்பவுமே ஜாலி பண்றவங்க இவங்கதான் வந்த கொஞ்ச நாளையிளேயே.


இன்னும் கொஞ்ச பேர் இருப்பாங்க, 'என்னடா மாப்ள உனக்கு விஷயம் தெரியுமா நம்ம பக்கத்து ரூம்ல ஒருத்தவன் இருக்கானேடா', 'ஆமா அந்த ஊர்லேந்து வந்திருக்கானே அவந்தான?', 'ஆமாடா மாப்ள அந்த பய புள்ள என்னமா இழுத்து இழுத்து புகை விடுதுங்கற', ' நீ எங்கடா பாத்த?', ' எல்லாம் நம்ம பழைய லேபுக்கு பக்கத்துலதான்.', ' அவ்ளோ ஆசை இருந்தா நீ அடிக்க வேண்டியதுதானே வாங்கி', 'போடா அப்பாக்கெல்லாம் தெரிஞ்சா தோல உறிச்சிடுவாங்க. அந்த விஷயமெல்லாம் நமக்கு எப்பவுமே ஒத்து வராதுடா தம்பி. ஒரு வாட்டி கூட வாழ்க்கையில நான் தம் அடிக்க மாட்டேண்டா'.


கொஞ்ச நாள் கழிச்சி அதே நண்பர்கள், 'மச்சான் அந்த தம்ம எட்ரா!', 'எது எட்ராவா? எப்படா அடிக்க ஆரம்பிச்ச?', 'அது இப்போதாண்டா ஒரு வாரமா', ' ஏண்டா கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு மானஸ்தன் என் ரூம் மேட்டா இருந்தானேடா எங்கப்பா அவன்', கண்ணுக்கு தெரிந்த வரை இருந்த கான்க்ரீட் வானத்தை தலை தூக்கி மேலே பார்த்து விட்டு, ஆழமாய் இழுத்து ஒரு முறை புகையை வெளியே விட்டு விட்டு, 'மச்சான் அந்த மானஸ்தன் செத்துடாண்டா செத்துட்டான்' என்று சொல்லும் போது சில நண்பர்கள் இந்த பழக்கத்திற்குள் காலடி வைக்கிறார்கள்.


இப்படியாக இந்த பழக்கம் தொடங்கி சில நாட்களில், இந்த பழக்கத்தில் தேர்ச்சி பெற்ற ஒருத்தவரு அந்த பக்கமா வந்து இதே நண்பர்கள் ரூம எட்டி பாத்துட்டு, சரி இவனுங்கள உசுப்பேத்தி பாப்போம்னு சொல்லி,' என்னடா தம் அடிக்கறீங்க பெருசா பேசர, எங்க ஏரியால பொண்ணுங்களே உங்கள விட நல்லா அடிக்கறாங்க.(அடப்பாவி என்னதாண்டா சொல்ல வர???), எல்லாப் புகையும் போய் உள்ள உக்காரணும், வெளியில வரக் கூடாதுடா!!!' என்று சொல்லி ஒரு இழுப்பு இழுத்து பேசி புகை வெளியே விடாமல் வித்தை காண்பிப்பார்! ஏதோ தத்தக்கா புத்தக்கான்னு தம் அடிச்சிட்டு இருந்த நம்ம நண்பர் இப்போ வெறியெடுத்து கத்துப்பார்!


இன்னும் சில பேர், இந்த பரீட்சைக்கு படிக்கும் நாட்களில் சிக்குவார்கள். எப்படின்னு பாப்போம். 'மச்சான் செமையா தூக்கம் வருதுடா', 'சரி நீ தூங்கு நான் போய் ஒரு தம் போடுட்டு வரேன்', உடனே இந்த நண்பனுக்குள்ள இவ்ளோ நாள் தூங்கின சாத்தான் முழிச்சிப்பாரு,'டேய் நானும் ஒரு பஃப் அடிக்கறேண்டா, ரொம்ப தூக்கம் வருது ஒன்னுமே படிக்கலடா (இப்போதான் இதெல்லாமே வேற நினைவுக்கு வரும்)', 'டேய் மாப்ள வேணாண்டா, இப்படி தான் ஆரம்பிக்கும், அப்புறம் சுத்தமா விடவே முடியாது','டேய் *** *** சில காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை முடிந்த பிறகு, நான் ஒன்னும் உன்ன மாதிரி கெடையாது. மூடிக்கிட்டு தம்ம கொடு', 'சரி உன்ன காப்பாத்த யாராலும் முடியாது, போய் தொல இந்தா'.


இப்போ இன்னும் சில பேர் இருப்பாங்க. தம் பக்கமே தலை வைத்தும் படுக்க மாட்டாங்க. 'தயவு செய்து வெளில போய் தம் அடிங்கப்பா' என்று சொல்லும் அளவுக்கு இந்த புகை அவர்களுக்கு ஒத்து கொள்ளாமல் இருக்கும். திடீர்னு ஒரு நாள் இந்த நண்பனும் கையில் வெண்குழல் வத்தியோடு அமர்ந்திருப்பான். 'என்னடா ராஜா என்னப்பா எப்போலேந்து இந்த ஃப்ரெண்ட் வந்தாரு?', 'டேய் காமெடி பண்ணாதீங்கடா, அவ என்ன மறந்துட்டா மாப்ள, முடியலடா' என்று ஒன்றுமே தெரியாத அந்த இருட்டில் எதையோ தேடிய வண்ணம் புகை இழுத்து வெளியே அனுப்பி கொண்டிருப்பான். இவங்கெல்லாம் இப்படி சிக்குவாங்க!


இதுக்கெல்லாம் தப்பி வெளியில வந்துட்டாங்கன்னா அவங்கள்ள ஒரு 90 விழுக்காடு நண்பர்கள் கண்டிப்பா இந்த பழக்கத்துக்கு அடிமை ஆகறது இல்ல. அதுல பாத்துக்கிடீங்கன்னா இதுக்கு அப்புறமா தம்ம விட்ரேன் விட்ரேன் சொல்லி நிறைய பேர் சொல்லுவாங்க அதுல நானும் ஒருத்தன். மன்னிக்கவும், இவ்ளோ எழுதிட்டு மன சாட்சியே இல்லாம வேஷம் போட முடியல. இப்போ ஒரு ஒன்றரை மாதமாக நிறுத்தி இருக்கிறேன். இது எத்தனவாது முறை என்று கேட்டு அசிங்கப் படுத்தக் கூடாது சரியா??? முடிஞ்சா நிறுத்த பாருங்கப்பா!!!


- MJV

Monday, September 21, 2009

க மற்றும் கி போன்ற எழுத்துக்கள் நம் வாழ்வில் வகிக்கும் பங்கு - நகைக்க!!!பொதுவாக பேச்சு வழக்கில் தமிழ் எவ்வளவு பாழாகிக் கிடந்தாலும் இந்த பதிவில் நாம் பேசப் போகும் விஷயம் கொஞ்சம் புரியாத புதிராகவே இருக்கின்றது. தமிழ் அன்னை சொல்ல முடியாத அளவுக்கு பல மாறுதல்களை கடந்து இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள். அதில் ஒரு பக்கத்தைப் படித்துப் பார்ப்போம்.


ஆசிரியர் : தம்பி இன்றைக்கு தேர்வு வைப்பதாக சொல்லியிருந்தேனே எல்லோரும் தயாராய் இருக்கின்றீர்களா?
மாணவர்கள் : இந்த வாத்தியார் எப்பவும் இப்டி தான் டெஸ்ட் கிஸ்டுன்னு வெச்சி நம்ம உயிர வாங்குவாரு!!!


வழிபோக்கர் : யெப்பா இந்த வெலாசத்த கொஞ்சம் எங்க இருக்குன்னு சொல்றீங்களா?
வழி சொல்பவர் : நேரா போங்க, அங்க ஒரு கோவில் வரும். அப்புறமா அங்கேந்து வலது கை பக்கம் திரும்பி போய்கிட்டே இருங்க. அங்க ஒரு பெரிய தண்ணி டாங்க் இருக்கும். அதுக்கிட்ட தான் இந்த இடம் இருக்கு. வழிபோக்கர் : ரொம்ப நன்றிப்பா.
வழி சொல்பவர் : பெரியவரே நான் சொன்ன மாதிரியே போங்க. வழி கிழி மாறி போய்டாதீங்க!!!


வீட்டுகாரம்மா : பால்காரரே இன்னிக்கி கொஞ்சம் விருந்தாளிங்க வந்திருக்காங்க. கூட ஒரு 1 லிட்டர் பால் சேத்து கொடுங்க.
பால்காரர் : யெம்மா இன்னிக்கி பால் கீல் எஃஸ்டிரா கேக்காதம்மா. பால் கரெக்டா இருக்கு இன்னிக்கி!!!


வங்கி ஊழியர் : இந்த காசோலையில உங்க கையெழுத்தே இல்லாம கொடுத்துருக்கீங்க சார், போட்டு கொடுங்க. ம்ம்ம் அடுத்த ஆள் வாங்க சார்.
காசோலை கொடுக்க வந்தவர் : சார் இப்போவே போடு கொடுத்திடறேன். பேனா கீனா இருந்தா கொடுங்க சார்!!!


நண்பன் : மச்சான் அவசரமா ஒரு 100 ரூவா தேவப்படுதுடா. கொஞ்சம் இருந்தா கொடுடா. அடுத்த வாரம் கொடுத்திடறேன்.
இன்னொரு நண்பன் : போன வாரம் கொடுத்த காசே இன்னும் திரும்பி வரல. பணம் கிணம்னு எங்கிட்ட எதுவும் கேக்காத. ஓடிப் போய்டு!!!


பையன் : அம்மா நாளைக்கி நான் டூர் போரேம்மா பாண்டிசேரிக்கு. கொஞ்சம் பணம் கொடுங்கம்மா.
அம்மா : (பணம் கொடுத்து விட்டு) சரிப்பா ஒழுங்கா போய்ட்டு வரணும். அங்க கடல் ல கிடல் ல குளிக்கக் கூடாது சரியா!!!


விருந்தாளி :(வீட்டுக்குள் நுழைந்து கொண்டே) என்னப்பா எல்லாரும் சௌக்கியமா?
வீட்டில் உள்ளவர் : வாங்க வாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?
அவரின் மனைவி : வாங்க வாங்க, என்னங்க வந்தவரை வாசலிலேயே நிக்க வெச்சி பேசிட்டு இருக்கீங்க? ஒரு சேர் கீர் எடுத்து போட்டு உக்கார சொல்லுங்க!!!


அம்மா : சீக்கரமா ரெடி ஆகும்மா மாப்பிள்ளை வீட்லிருந்து வந்துட போறாங்க.
பெண் : இதோ ரெடி ஆகிட்டே இருக்கேன்மா. வந்துடறேன்.
அம்மா : நல்லா ஒரு பொட்டு கிட்ட வெசிக்கிட்டு சீக்கிரம் ரெடி ஆகும்மா!!!


கணவர் : என்னம்மா பண்ற நான் வந்துட்டேன். எங்க இருக்க?
மனைவி : இதோ வந்துட்டேங்க. எப்டி போச்சு இன்னிக்கி வேலையெல்லாம்?கணவர் : ஏம்மா ஒரு காபி கீபி போட்டு கொடுத்துட்டு கேக்க கூடாதா இதெல்லாம்!!!


இப்படி பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன அர்த்தம் யார் ஆரம்பிச்சான்னு யோசிச்சா மட்டும் தெரிஞ்சுடுமா எப்படி உருவாச்சுன்னு, விடுங்க பாஸ். சரி சரி அப்டியே ஒட்டு கீட்டு போட்டு, அப்றம் கமென்ட் கிமென்ட் போட்டு ஆதரவு கொடுங்கப்பா!!!


- MJV

அம்மா என்ற ஆனந்தம்!அகர வரிசையில் முதலிடம் பிடித்த பெண் என்பதால்
எந்த குழந்தைக்கும் நீங்கள் தான் முதல் பாடம்,

அவ்வைக்கும் இந்த மேன்மை புரிந்ததால் தான்
உங்களையே கருத்தில் கொண்டு கடவுளாய் வைத்தார்,


எதைத்தான் நீங்கள் இழக்கவில்லை எங்களுக்காக
உங்களின் பசியிடமும் தூக்கத்திடமும் நிரந்தர பகைமை பாராட்டினீகள்,

தன் மேல் முள் தைத்தும் சிரிக்கும் ரோஜா மலர் போல்
துன்பங்கள் தூக்கியெறிந்து எங்களுக்காய் சிரித்து பார்த்தீர்கள்,

மழை வேண்டி நிற்கும் நிலத்துக்கு மாரி போல்
எங்கள் வாழ்வின் வற்றாத அன்பு சிரபுஞ்சியாய் வாழ்கிறீர்கள்,

தரணி ஆண்டாலும் கோடி பரிசு கொற்றவனாய் இருந்து கொட்டி கொடுத்தாலும்
உங்கள் அன்பு என்னும் அஸ்திரத்துக்கு முன்னால் அவை தூளே யாவும் பாழே,

முரண்பாட்டு மொழி அதிகம் பேசியே பழக்கப்பட்ட நாங்கள்
அம்மா உங்களிடம் வஞ்ச புகழ்ச்சியில் பேசியிருக்கலாம்,
ஆனால் உளமார சொல்கிறேன் அதெல்லாம் உணர்வு வழி உருவெடுத்தவை அல்ல, உடம்பு வழி உருவெடுத்தவை,

இப்பொழுதும் எப்பொழுதும் அனைவருக்கும் இறைவா
அம்மா என்ற ஆனந்ததை மட்டும் நிறைவாக கொடுத்து விடு!

- MJV
(நண்பன் விஜய் ஆனந்துக்காக, மற்றும் இவ்வளவு நாள் அம்மாவை பற்றி எழுதாமல் விட்ட எனக்காகவும்!!!)

Sunday, September 20, 2009

மொட்டை தலைக்கும் முழங்காலுக்குமான முடிச்சி!!!
2050 ஆம் ஆண்டில் இந்த உலகத்தின் மொத்த மக்கள் தொகை 9 பில்லியனுக்கு எகிறிப் போகும் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. உலகத்தில் நடக்கின்ற மாற்றங்கள், அதாவது தட்ப வெப்ப நிலை, சுற்று சூழல் மாறுதல்கள் இப்படி நிறையா நடக்குது, மாறுது. இதற்காக மரத்த நடுங்கப்பான்னு, மரத்த வேரருக்காதீங்கன்னு எவ்வளவோ பேர் கதறினாலும், கேட்காமல் காங்க்ரீட் காடுகள் தான் நம்மை சுற்றி காற்றின் வேகத்தை விட வேகமாக எழுந்து கொண்டு இருக்கிறது.


கரியமில வாயுவும் அவரின் குடும்ப உறுப்பினர்களும் கூடி கும்மி அடித்து கோள வெதும்பலுக்கு காரணமாக அமைந்து விட்டன. அவங்களையெல்லாம் கிட்டக்க சேத்துக்காதீங்க, ரொம்ப வண்டி ஒட்டாதீங்க, மகிழுந்து கூட்டணி அமைத்து கொள்ளுங்கள் என்று சுற்று சூழல் நல விரும்கள் சத்தம் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் என்ன பண்றது கஷ்ட்டப்பட்டு அவங்க கத்துவாங்க, நாம இந்த பக்கம் கண்டுக்காம மரத்த வெட்டுவோங்க! இப்படி நடக்கிற நேரத்தில் ஒரு சுவர்சியமான செய்தி வந்துள்ளது!


அந்த செய்தி என்னான்னு தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி, இந்த பதிவின் முதல் வரிக்கும், அப்புறம் வந்த வரிகளுக்கும் தொடர்பு இல்லாமல் இருக்கின்ற இந்த நிலையில், தொடர்பு படுத்தி பார்க்க வேண்டிய செய்தி என்னவென்றால், கில்மாவகவும், சில்பான்சாகவும் இருக்கலாம். ஆனால் உண்மை என்ற வகையில் அதை பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்." கருத்தடை சாதனம் கோள வெதும்பலை தடுக்க உதவுகிறது" என்பது தான் அந்த செய்தி. தம்பி என்னடா சொல்ல வர்ற? என்று ஆர்வம் மிகுதியாலும், மிகைபடுத்த பட்டதாலும், வேறு எதுவும் விவகாரமாக யோசிக்க வேண்டாம்.


ஓர் ஆண்டில் 250 மில்லியன் பெண்களுக்கு உலக அளவில், தேவைப்பட்ட நேரத்தில், கருத்தடை சாதனங்கள் கிடைக்க வில்லை என்று ப்ரிடிஷ் மருத்துவ இதழ் லான்செட் குறிப்பிட்டு உள்ளது. (அது என்ன பெண்களுக்கு மட்டும்னு கணக்கு போட்டிருக்கு என்று பேச வேண்டாம், ஆண்கள் தான் மிகவும் சோம்பேறிகள் என்று எங்கோ எப்போதோ படித்தது நினைவுக்கு வருகிறது:-)) இதனால் ஒவ்வொரு ஆண்டும் 76 மில்லியன் பெண்கள் தேவை என்று அவர்கள் நினைக்காத போது கருவுற்று இருக்கிறார்கள். இதனால் தோன்றும் பெண் சிசு கொலை போன்ற கொடுமைகள் ஒரு புறம் பெருகிக் கொண்டே இருக்க, மறு புறம், கருத்தடை சாதனம் அல்லது கருவுறாமல் இருக்கும் முறைகள் இந்த சூழ் நிலையில் உள்ள பெண்களுக்கு கிடைக்கப் பெற்றால், மக்கள் தொகை பெருக்கத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும், இந்த சுற்றுப்புற பாதிப்புகளும் குறைவாக இருக்கும் என்பது அந்த மருத்துவ நாளேடின் கருத்தாகும்.


மக்கள் தொகை இயக்கவியல், பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகள், தட்ப வெட்ப மாற்றம் இவை மூன்றுக்குமான, நெருக்கமான தொடர்பு குறித்த ஆய்வுகளும் கருத்தும் வேகமாக தலை எடுக்க துவங்கி உள்ளன. வளர்ந்த நாடுகளில் இருந்து மட்டும், அந்த 9 பில்லியன் மக்கள் தொகைக்கான் பங்களிப்பு, அதில் 90 சத விகிதம் இருக்கும் என்றும் அந்த நாளேடு தெரிவித்துள்ளது. எந்தெந்த நாடுகளில், இந்த கருத்தடை சாதனம் மற்றும் இதர கருவுறாமல் இருக்கும் முறைகள் நடைமுறையில் இருக்கின்றனவோ அந்த நாடுகளில் எல்லாம் சராசரி குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை வெகுவாக ஒரு தலைமுறைக்குள்ளாகவே குறைந்து உள்ளதாக கூறப்படுகின்றது.


இதற்கு முன்னர் வரை, ஏழை நாடுகளில், அமெரிக்காவின் நிதி உதவியுடன் AIDSஐ ஒழிக்க நடைபெற்ற ஆரோக்கிய முகாம்களில் கூட கருத்தடை சாதனத்தையோ அல்லது கருவுறாமல் இருக்கும் முறைகள் பற்றியோ பெரிய அளவில் அக்கறை காண்பிக்கவில்லை. ஆனால் இன்று நிலை மாறி விட்டது . கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுன்னு சொல்லுவாங்க. அது உண்மதான்!!! மேட்டர்ன்னு பாத்த சின்ன விஷயம்தான். ஆனால் எவ்வளவு பெரிய மாற்றங்கள் வர காரணமாய் இருக்கின்றது!


அதனால நமக்கும், சீனாவுக்கும் மிக தேவையான செய்தி இது!!! இந்த பதிவை முடிக்கும் போது, ஒரு தந்தையர் தினத்திற்கு, கருத்தடை சாதன நிறுவனம் ஒன்றால் ஒரு விளம்பரம் கொடுக்க பட்டிருந்தது. ' எங்கள் போட்டியாளர்களின் பொருட்களை உபயோகித்த அனைவருக்கும் எங்களின் உளங்கனிந்த தந்தையர் தின வாழ்த்துக்கள்":-)


- MJV

Saturday, September 19, 2009

ஏன்யா இப்படி? - இப்பவே கண்ண கட்டுதே!!!
வீட்டுக்கு வந்தவுடனே நம்மாளுங்க 90% பேர் பாக்குறது என்னான்னு யோசிச்சு பாத்தோம்னா அது டிவி ரிமோட். அதுக்குள்ள தான் எவ்வளவோ விஷயங்கள். அந்த காலத்துல நிறைய டிவிக்கள் வருவதற்கு முன்னாடி, எல்லாரும் என்ன வேலை இருந்தாலும் உக்காந்து 'ஒலியும் ஒளியும்' பாப்பாங்க. அப்புறமா ராமயணம், மஹபாரதம் இதெல்லாம் பாத்தோம். ஆனா காலம் போக போக நிறைய சானல்கள் வந்தன. அதனொடு சேர்த்து கொடுத்திருக்காங்க, ஒரு ஒரு விஷயத்தையும் ஒரு ஒரு சானலும்!


ஒரு சானல் பாத்தா உங்களுக்கு, சிரிப்பு வராத விஷயதுக்கும் எப்படி சிரிக்கணும்னு சொல்லி தருவாங்க. இன்னொரு சானல் பாத்தா ஆட தெரியலைனாலும் எப்படியெல்லாம் சமாலிக்களாம்னு சொல்லி தருவாங்க. இன்னொரு சானல் பாத்தா அறிவு பூர்வமாவே பேசுரது எப்படின்னு சொல்லி கொடுப்பாங்க. இப்படி சொல்லிட்டே போகலாம்.


உயிர கொடுத்து ஒரு ஆள் ஆடிருப்பான். இன்னொரு ஆள் நம்ம உயிர் போற அளவுக்கு ஆடிருப்பான். இதுக்கு நடுவர்கள், என்ன சொல்லுவாங்க தெரியுமா?, இந்த மாதிரி ஒரு ஆட்டத்த இது வரைக்கும் யாருமே பாத்திருக்க மாட்டாங்கன்னு ஒரு பதில் சொல்லுவார்கள். அட அந்த கருமத்த சரியில்லனா சரியில்லன்னு சொல்லுங்களேன். அத அந்த டிவி ஆட்கள் அனுமதிச்சிதான் தொலைங்களேன்யா. எவ்ளோ நாளுக்குதான் இப்படியே சொல்லுவீங்கப்பா? எப்போ யார் எப்படி ஆடினாலும், ' உங்களோட அந்த பாடி லாங்குவெஜ் இருக்கு பாத்தீங்களா பிரமாதம்' அப்டி இப்டின்னு சொல்லி உசுப்பேத்தி உசுப்பேத்தி நம்மள ரணகளப்படுத்தரதயே வேலயா வெச்சிருக்கவங்க பல பேர் உலாவுகிறார்கள். மக்களே உஷாரு! மீறி பாத்தா அடங்கப்ப சாமி நாங்க என்ன பண்ணுவோம், தலைவர் கௌண்டமணி சொல்ற மாதிரி, "நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா' அப்டின்னு அடுத்த சானலை மாத்துவோம்.


இன்னொரு சானல் வரும் பாருங்க, கதற கதற அடிப்பானுங்க, இன்னொரு சானல் எந்த செய்தி சொல்லுதோ, அதுக்கு எதிர் மாறாவேதான் செய்தி சொல்லுவாங்க. இவங்களுக்கு மட்டும் இது ரொம்ப ஈசி. இவங்களுக்கான எதிரி சானல் என்ன சொன்னாலும் இல்ல சாமி போட்ட இவங்க பொழுது ஒடிடும். நாம வேற என்ன பண்ணுவோம், மறுபடியும் முதலெந்து சியர்ஸ் சொல்லணும். அடுத்த சானலுக்கு போவோமா ரெடியா?


அடுத்த சானல் மாத்தினா, அங்க ஒரு ரகளை விட்ராங்க பாருங்க, 'நான் வேற நாடு போகறது தடை பட்டுகிட்டே இருக்குங்க என்று கவலையோடு ஒருவர் சொல்ல, கவலைப்படாதீங்க உங்க பேர் சொல்லுங்க, அம்மா எல்லாத்தையும் சரி பண்ணுன்வாங்க என்று சொல்லி, ஒரு முதிர்ந்த மேடம் பக்கம் திரும்ப, அவங்க உடனே அந்த பக்கம் இருக்கிற கரும்பலகை பக்கம் திரும்பி, வேகமா ' உங்க பேர் சொல்லுங்க சார்' அப்படி சொன்ன உடனே, இவர் , ' என் பேர் ராஜசேகர் மேடம்' என்று பய பக்தியோடு கூற, மறுபடியும் அவர், 'உங்க பிறந்த தேதி சொல்லுங்க' என்றவுடன், இவரும் சொல்லி முடிக்க, ஏதாவது தெளிவா சொல்லுவார்னு நாமலும் சலைக்காம பாத்துட்டு இருப்போம்.


அப்போ ஒரு விளம்பர இடைவேளை. நம்ம பய புள்ளைங்க எவன் கேக்கறான், அதெல்லாம் வேணாம்டா, ஆப்பு ரெடி ஆகுதுடான்னு சொன்னா? அதற்குள் விளம்பர இடைவேளை முடிய, அந்த மேடம், வேகம் வேகமாக சில கூட்டல் கழித்தல் அந்த கரும்பலகையில் நிகழ்த்தி இருப்பாங்கனு நினைக்கும் படியாக நிறைந்திருக்கும். அவங்க தொண்டையை கனைத்து கொண்டே, ' மிஸ்டர் ராஜசேகர், உங்க ராசி எண் படி, உங்க பேரில் ஒரு அழுத்தம் இல்லை பாருங்க. அந்த ஆ சப்தம் தான் மூலாதாரம். அது இல்லைன்னா வாழ்க்கை நரகமாகதான் இருக்கும், அதனால இன்னுமொரு ஆங்கில எழுத்து A சேர்த்துகோங்க. எங்கயோ பொய்டுவீங்க. அதுக்கு அப்புறம் பாருங்க, உடனே வெளி நாடு போய்டுவீங்க'. அப்டின்னு சொன்னவுடன், அகில உலகத்தின் ஒரே எண் கணித மேதை அப்டின்னு போட்டு, நிகழ்ச்சி முடியும்!


அவன் அவன் பாஸ்போர்ட், விசான்னு எல்லாத்தையும் எடுத்து வெசிக்கிட்டு, கதறிக்கிட்டு இருக்கான். போக முடியலை. இது ஒரு எடுத்துக்காடுதான். இது போல பல நிகழ்ச்சிகள், வாஸ்து கலாமணி, எண் கணித மேதைகள் எவ்வளவோ பேர் உலவுகிரார்கள். இதன் மூலம் உழைப்பை மறக்க செய்யும் சானல்கள்.


இப்படி அடுக்கி கொண்டே போகலாம். இப்படியெல்லாம் நிகழ்ச்சி காட்டிகிட்டே இருந்தா, நான் அழுதுடுவேன். வேணாம் வலிக்குது!ஒரு பக்கம் பாத்தா சூடான மோதல்கள், கருத்து பரிமாற்றம், நகைச்சுவை நிகழ்ச்சிகளால் அலங்கரித்தாலும் அந்த மீடியா என்ற மகுடத்தில், மத்த விஷயங்கள் எல்லாமே கவரிங்காவே கறுத்து போகுது!


ஏங்க அந்த துறையில உள்ள ஆட்கள் ஏதாவது பாத்து பண்ணுங்கப்பா. வெள்ளி திரை இல்லன்னா சின்ன திரை பாதி இல்லாம போய்டும் நிலைதான் இருக்கு. பாத்துக்கங்கப்பா, இப்போவே கண்ண கட்டுது!!!

- MJV

Sunday, September 13, 2009

பிரம்மச்சாரிகளின் திருவிளையாடல் பதில்கள் - கொஞ்சம் நகைக்க!!!சேர்ந்தே இருப்பது - பாட்டிலும் பாக்கெட்டும்!


சேரக்கூடாதது - அப்பாவின் வருகையும், வாடகை கேட்க வரும் வாடகை வீட்டு சொந்தக்காரரும்!


தவிர்க்க வேண்டியது - மாத கடைசி ட்ரீட்களை (கொடுக்கும் போது)!


தவிர்க்க கூடாதது - நண்பர்கள் கூப்பிடும் ட்ரீட்களை!


எப்போதும் இருப்பது - அழுக்கு சட்டைகளும், கறை படிந்த சமையலறையும்!எப்போதும் இல்லாதது - சேர்ந்தார் போல் பாக்கெட்டில் 100 ரூபாய் நோட்டுகள்!


செலவு என்பது - எப்போதுமே இருப்பது!


சிக்கனம் என்பது - ஊறுகாய் வாங்குவது! (முதல் வரியில் சொன்ன பாட்டில் காலி ஆகும் போது)


ஆடம்பரம் என்பது - சிக்கன் 65 வாங்குவது! (மேலே சொன்ன பாட்டிலை பாரில் அமர்ந்து ஆர்டர் செய்யும்போது)


கோபம் என்பது - வெள்ளம் போல் வருவது!


காதல் என்பது - அவரவரை பொறுத்தது!


வேலை எனபது - போராட்டம் முடிந்த பின்னர் வருவது!


தூக்கம் என்பது - போராட்டமே இல்லாமல் வருவது!


மாத ஆரம்பம் என்றால் - தியேட்டரில் படம்!


மாத கடைசி என்றால் - கணிணியில் படம்!


கவலை என்பது - பாட்டிலுக்காக வருவது!


கண்ணீர் என்பது - பாட்டிலால் வருவது!


அன்புக்கு - அக்கௌண்ட்டில் எழுதிக்கொண்டு டீ கொடுக்கும் டீ கடை அண்ணன்!


அறிவுக்கு - அவ்வப்போது அறைக்கு வந்து பீட்டர் விடும் நண்பன்!


ஆப்புக்கு - வேலை கொடுத்த ப்ராஜெக்ட் மேனேஜர்!


பொறுமைக்கு - பாட்டில் பழக்கம் இல்லாத ஒரு நண்பன்!


ரகளைக்கு - எப்போதும் தயாராய் இருக்கும் நண்பர்கள்!


அதை முடிவுக்கு கொண்டு வர - தயாராய் இருக்கும் அந்த பொறுமையான நண்பன்!


இதற்கு மேலும் இதை முடிக்க வில்லை என்றால் என்னை தேடிப் பிடித்து அடிக்கும் அளவுக்கு பல பேர் தயார் ஆவதால் இத்துடன் முடித்து கொள்கிறேன்!!!


- MJV


Saturday, September 12, 2009

இந்திய வாடிகையாளர்களுக்கான லீவைஸ் ஜீன்ஸ் நிறுவனத்தாரின் கடன் திட்டம்!!!
அமெரிக்காவின் ஜீன்ஸ் உற்பத்தியாளர்களான லீவைஸ் நிறுவனத்தார் இந்திய வாடிக்கையாளர்களுக்காக முதன் முறையாக கடனில் ஜீன்ஸ் கொடுக்கும் திட்டத்தை பெங்களூரில் அறிமுகப் படுத்தியுள்ளனர் என்று லீவைஸ் ஸ்ட்ராஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ஷுமோன் சாடர்ஜீ தெரிவுத்துள்ளார். அமெரிக்க டாலர்கள் 30க்கு 3 தவணைகளாக அவர்களின் ஜீன்ஸை வாங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர்.லீவைஸ் நிறுவனத்தார் ஐசி ஐசி ஐ வங்கியின் கடன் அட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு திட்டத்தை உபயோகிக்க முடியும் என்ற சலுகையை அறிவித்துள்ளனர்.


இதற்காக இவர்கள் 3 விதிமுறைகள் மட்டும் விதித்துள்ளனர்.


ஒன்று நீங்கள் வாங்கும் ஜீன்ஸின் மதிப்பு 1500 ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும்.


இரண்டு அவர்கள் அதை ஐசி ஐசி ஐ வங்கியின் கடன் அட்டை கொண்டே வாங்க வேண்டும்.


மூன்று 1500 மற்றும் அதற்கு மேலான தொகையை அவர்கள் மூன்று மாத சந்தாவாக செலுத்த வேண்டும்.


பெங்களூரில் உள்ள லீவைஸ் நிறுவனத்தின் ஃப்ரான்ச்சைசின் நிறுவனர் ஆரோன் சொல்கையில் இந்த திட்டத்தை அமல் படுத்திய பின்னர் அவர்கள் வருவாய் 10 முதல் 15 விழுக்காடுகள் அதிகமாக வர தொடங்கி இருப்பதாக கூறுகிறார். இதற்கான காரணமாக அவர் சொல்வது சில வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் பெயருக்காக ஆடைகள் வாங்குவார்கள் என்றும், அவர்களை நிரந்தர வாடிக்கையளர்களாக ஆக்கவே இந்த முயற்சி என்றும் தெரிவிக்கிறார்.


ஆக நம்மால் ஒரே தவணையாக வாங்க முடியாது அல்லது யோசிப்பவர்கள் இருப்பதை அறிந்து கொண்டு நம்மை இழுக்க பார்க்கும் ஒரு தந்திரத்தை இந்த நிறுவனம் மிக நேர்த்தியாக செய்து முடித்துள்ளது. திடீரென இப்படி ஒரு வியாபார தந்திரம் ஏன் அவர்களுக்கு தோன்றியது?


அதற்கான காரணம் என்ன?அட சாமிகளா அதுக்கும் நாம் தான் காரணம்:-) ஏனென்றால் ஒரு மாதத்தில் 500 ரூபாய் கொடுப்பது சுலபம் தானே??? ஒரு நல்ல காரியத்திற்கு கொடுக்க தான் 100 முறை யோசிப்போம். இதெற்கெல்லாம் ஒரு வினாடி கூட யோசிக்க கூடிய நிலைமையில் இல்லாததால் தான் இப்படி பட்ட திட்டங்கள் வெளி வந்து அற்புதமாக வியாபாரம் நடந்து உள்ளது.


அதற்காக என்னடா இவன் காச மாசா மாசம் குடுத்தோமா ஜீன்ஸ வாங்கினோமான்னு இல்லாமா இவ்வளவு பேசுரான்னு யோசிக்கதீங்க. முடிந்த வரை கடன் அட்டையில் வாங்குவதை தவிர்க்கவும். கையில் காசு இருந்தால் வாங்கி போட்டுக்குங்க. இல்லன்னா இன்னுமொரு மாதத்தில் வாங்கி உடுத்திக்களாம். சட்டைக்கும் சாப்பாடுக்கும் யோசிக்க கூடாதுன்னு நினைக்கற ஒரு சராசரி மனுஷந்தான் நானும். ஆனாலும் இந்த கடன் அட்டையில வாங்கி வாங்கி ஒரு கால கட்டத்தில் கடன் அட்டை ராஜியமா தான் இருக்கும்.


எதுக்கு தான் அதை உபயோக படுத்தனும்னு இல்லாத நிலமை ஆகிடுச்சி.அதனால் நிதானமாக யோசித்து பார்ப்போம். இன்றைக்கு முக்கால் வாசி மக்கள் கடங்காரர்கள் தான். மற்றவரிடம் கடன் வாங்கி அல்ல. கடன் அட்டையின் என்ற அட்டை பூச்சியின் அடிமைகளாய் நாம். இப்படியெல்லாம் யோசிக்கின்ற போது எனக்கு விஜய் தொலைக்காட்சியின் 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' என்ற நிகழ்ச்சியில் ஒரு பங்கேற்பாளர் சொன்ன கவிதை தான் நினைவுக்கு வருகிறது. 'நம்மை உறிஞ்சும் வங்கியெல்லாம் பணக்காரர், கடன் அட்டை வைத்திருக்கும் நாமோ கல்லறை வரை கடன் காரர்'....


- MJV

Monday, September 7, 2009

மனதைப் படிக்கும் மூளை துளை - டாக்டர். ஜான் ஸ்பார்ட்லீயின் அரிய கண்டுப்பிடிப்பு!!!மூளை சொல்ல நாம் செய்து கொண்டிருக்கும் வேலைகள் தான் எல்லாமே இல்லையா? மூளையிலிருந்து புறப்படும் எண்ண அலைகள் தான் நம்முடைய எல்ல செயல்களுக்கும் காரணம் என்பது நமக்கு தெரிந்த உண்மையே! மூளை என்னதான் கட்டளை அனுப்பினாலும் அதை உள் வாங்கி செயல்படுத்த நம்முடைய மற்ற உறுப்புகள் ஒத்துழைத்தால் தான் எல்லா வேலைகளும் சரியான முறையிலே நடை பெறும். ஒரு வேலை அப்படி அந்த கட்டளைகளை செயல் படுத்த கூடிய உறுப்புகள் செயல் இழந்து விட்டால்???


இந்த கேள்வி குறிக்கான விடை தான் இந்த அரிய அறிவியல் சாதனை - பன் தொடர்பு மூளை துளை. பக்கவாதம் வந்தோர், கழுத்துக்கு கீழே செயல் இழந்தவர்கள் இவர்களுக்கு உதவியாக இந்த சாதனம் கண்டுபிடிக்க பட்டுள்ளது. இது இன்னும் சோதனை நிலைமையில் தான் உள்ளது. என்னதான் பண்ணுவான் ஒரு மனுஷன் இந்த மாதிரி ஆயிடுச்சேன்னு புலம்ப தேவை இல்லை. இந்த கருவியின் உதவியுடன் அப்படி பாதிக்கப்பட்ட மக்கள் நம்மை போல எல்லவற்றையும் செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்கள் வல்லுனர்கள்.


ஏன், எப்படி இது சாத்தியம் என்று வந்து குவியும் கேள்விகளுக்கான பதில் இதோ!!!


உடல் உறுப்புகள் கழுத்துக்கு கீழே செயல் இழந்து விட்டாலும், மூளை உறுப்பகளுக்கு கட்டளைகளை அனுப்புவதை நிறுத்துவதில்லை. ஆனாலும் கை கால்கள் வேலை செய்வதில்லை. அப்படியே அந்த கட்டளைகள் நின்று விடும், அதனால் கை கால்கள் வேலை செய்வதில்லை. உலகத்தில் இருக்கின்ற பல சோதனை குழுக்கள் இந்த மூளை கட்டளைகளை வைத்து இப்படி கை கால் வேலை செய்யாதவர்களுக்கு உதவியாக ஏதாவது ஒரு சாதனத்தை உருவாக முயற்சி செய்து வருகின்ற வேலையில் தான் டாக்டர்.ஜான் ஸ்பார்ட்லீயின் கருவி உதவியாய் இருக்கும் என்று அனைவரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.


முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில் டாக்டர்.ஜான் ஸ்பார்ட்லீ ஈடுப்பட்டிருந்த தருணத்தில் தான் அவர் பன் தொடர்பு மூளை துளைக்கான அச்சு அசலான ஒரு கருவியை உருவாகி உள்ளார். இதை மூளையில் எந்த இடத்தில் கட்டளைகள் பிறக்கின்றனவோ அந்த இடத்தில் ஊசி மூலமாக செலுத்தலாம் என்று கண்டுப்பிடித்துள்ளார். இவர் இதை பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் கண்டுப்பிடித்துள்ளார்.


நரம்பு அமைப்பு வழியாக தண்டுவடத்துக்கு செல்லும் இந்த கட்டளைகளை மூளை திசுக்கள் வழி எடுத்து அதை வைத்து கொண்டு உடல் தசைகளை இயக்க எத்தனித்து உள்ளனர். இந்த உணர்வீ யை மூளையில் ஊசி வழி செலுத்தி விட்ட பிறகு அதன் 50 சிறிய கூர்முனை ஈட்டிகள் நரம்பணுக்களுடன் சேர்க்கப் பட்டு விடுகின்றன. அதற்குப் பிறகு 4 சிRஇய கம்பிகள் அந்த வழியே ஏதேனும் அலைகள் வருகின்றனவா என்று பார்த்து, அப்படி வந்தால், அவற்றை கம்பியில்லா முறையில், மூளையில் ஊசி வழி ஏற்படுத்திய தடய நிலையத்துக்கு அனுப்பி வைக்கின்றன.


பின்னர் அவை வெளியில் இருக்கின்ற நிலையத்துக்கு அனுப்பி வைக்க பட்டு பல இயந்திரங்களை இயக்க முடியும் என்பது ஜானின் எண்ணம்.


இந்த முயற்சியை அவர் மனிதர்கள் மீது இன்னமும் செய்து பார்க்க வில்லையாம். மூளை திசுக்களை மட்டும் வைத்து செய்து இருக்கின்றார். மனிதர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் செய்யப் பட்டிருக்கும் இந்த சோதனையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட இணையத்தள முகவரியை சொடுக்கவும்:- MJV

Saturday, September 5, 2009

கந்தசாமி - என் கண்ணோட்டத்தில் மட்டும்!!!சியான் விக்ரம், ஷ்ரேயா சரன், ஆசிஷ் வித்யார்தி, ஒய்.ஜீ.மகேந்திரன், வடிவேலு, இளைய திலகம் பிரபு மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் சுசி கணேசன் இயக்கத்தில் கலை புலி தாணு அவர்களின் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் அன்று வெளிவந்தது. ஏகப்பட்ட எதிர்ப்பார்புகளோடு வெளி வந்த இந்த படத்தை திரை அரங்கம் சென்று பார்க்க வேண்டாம் என்று பல நண்பர்கள் தடுத்தனர். எல்லோரும் சொன்ன ஒரே காரணம் நீண்டு செல்லும் படம். (மொத்தம் 194 நிமிடங்கள் நீண்டது இந்த திரைப்படம்).


இப்படி சொன்ன பல படங்கள் அற்புதமாக இருந்திருக்கும் காரணத்தினால் இந்த படத்தையும் அரங்கம் சென்று பார்க்கலாம் என்று முடிவு செய்து சென்றோம் (நானும் என் மனைவியும்). அது ஒரு வியாழக்கிழமை. இருந்தாலும் சியான் படத்திற்கு நல்ல கூட்டம் வேலை நாட்களிலும் இருக்கும் என்ற யோசனை சட்டென்று கலைக்கப்பட்டது இதை கேட்டு ' எந்த சீட்ல வேணும்னாலும் உட்காருங்க சார்' என்றதை கேட்டவுடன்.

வழக்கமான விளம்பரங்களை தாண்டி படம் துவங்கியது. ஆர்வம் மேலோங்க படத்தில் கலந்தேன். முதல் காட்சியில் இருந்தே வழக்கமான அந்த சஸ்பென்ஸ் இல்லாமல் கந்தசாமிதான் உதவ போகிறார் என்று தெரிந்து விட்டது. எப்படி என்று பார்க்கும் போதுதான் மன்சூர் அலிகானை வாங்கோ வாங்கென்று வாங்குகிறார் கந்தசாமி. சூப்பர் ஹீரோ படம் என்று சொல்ல பட்டதால் அந்த சண்டை காட்சிகள் ஏற்று கொள்ள படும்படியாக இருக்கின்றது. எதுவும் கேள்வி கேட்க முடியாத நிலைக்கு செல்கிறோம்.

அப்போது ஒரு பாடல். இப்படியாக படம் துவங்கி நகர்கின்றது. இதற்கு பிறகு தான் கதா நாயகன் மற்றும் கதா நாயகி அறிமுக படலம் துவங்குகிறது. ஆடம்பரம் இல்லாத அறிமுகம் விக்ரமுக்கு. மிடுக்காக இருக்கிறார் படம் முழுக்க விக்ரம். சற்று உடல் இளைத்து வித விதமான ஆடைகள் அணிந்து வலம் வருகிறார். ஒரு தொலைகாட்சி பேட்டியில் குறிப்பிட்டு இருந்த ஒரு செய்தி நிஜமாகி இருக்கிறது. தான் வித விதமான உடைகள் போட்டு நடிக்கவில்லை என்ற ஆதங்கம் தீர்ந்து போனது இந்த படத்தில் என்று குறிப்பிட்டு இருந்தார்.

சி.பி.ஐ அதிகாரியாக விக்ரம். அவருக்கென்று ஒரு நட்பு வட்டம். ஆசிஷ் வித்யார்தி வீட்டை சோதனை செய்ய செல்லும் போது அவருக்கு உதவி செய்வதாய் காட்டி விட்டு பின்னர் அவரும் உதவி செய்வது பொல் காண்பித்தது நல்ல துவக்கம். ஆசிஷ் வித்யார்தி வீட்டில் இருந்து பெரும்பகுதி பணத்தையும் பறிமுதல் செய்து கொண்டு வரும் போது கதா நாயகியின் புகைப்படத்தையும் பார்க்கிறார். அதற்கு முன்னர் விக்ரமை உள்ளே விடாத வாட்ச்மேனை அடிக்கும் வித்யர்தியிடம் அதை நீங்கள் அடிக்காமலே சொல்லி இருக்கலாம் என்று விக்ரம் சொல்லி விட்டு வருவது நல்ல காட்சி.

அப்புறம் விக்ரமின் அலுவலகத்திற்கு வந்து ஸ்ரேயா சரண் ரகளை செய்கிறார். அதற்கு பதில் அளிக்கும் விக்ரம், நீளமாக கேள்விகள் கேட்கும் போது எப்போது முடிப்பார் என்ற சலிப்பு தட்டி போகிறது. பின்னர் அவருக்கும் வித்யார்திக்கும் நடக்கும் காட்சிகள் நீண்ட பயணம். இதற்க்கு இடையில் சூப்பர் ஹீரோ படமாக இருந்தாலும் எப்படி விக்ரம் பறக்கிறார் எப்படி அந்த சத்தம் வருகிறது போன்ற விஷயங்களை விளக்கியது பலம். (எவ்வளவு ஆங்கில படங்கள் பார்த்தாலும், தமிழ் படங்களில் பறக்கும் காட்சியோ இல்லை வேறு சில சாகசங்களோ வந்தால் 'அது எப்படிப்பா இப்படி பறக்கறாய்ங்க என்று சொல்லும் நம் ஆட்களை அமைதி படுத்தி இருக்கிறார் சுசி கணேசன்)

கோவில் மரத்தில் காகிதத்தில் போடப்படும் வேண்டுதல்களை, கந்தசாமி கடவுளே நிறை வேற்றி வைப்பதாக நம்பும் மக்கள் ஒரு புறம், அப்படி இல்லை அது ஒரு ஆசாமியின் வேலை என்று அதை ஆராயும் குற்றவியல் பிரிவு காவல் அதிகாரி பிரபு என்று கதை களம் நீண்டு ஓடுகிறது. விக்ரம் மற்றும் அவரது பள்ளி கூட நண்பர்கள் என அனைவரும் இந்திய அரசு பணியில் இருந்து கொண்டு, கொட்டி கிடக்கும் கருப்பு பணத்தை எடுத்து கஷ்டம் என்று கந்தசாமி கோவிலில் கதறும் மக்களுக்கு அள்ளி கொடுக்கிறார்கள்.

இப்படி ஓடி கொண்டிருக்கும் திரைக்கதையில் கொஞ்சமும் ஒட்டாமல் ஷ்ரேயா மற்றும் வடிவேலு அவர்கள்.பாடல்கள் அற்புதமாய் வந்திருக்கிறது. இனி கொஞ்ச நாட்களுக்கு இசைத்தொலைகாட்சிகளுக்கும் டீ கடை அண்ணாச்சிகளுக்கும் கவலை இல்லை என்றே சொல்ல வேண்டும். இதனால் அவர் பல பேரிடம் பகைமை வளர்த்து கடைசியில் எப்படி எல்லா முக திரையும் கிழிக்கப்பட்டு விடும் என்று தெரிந்திருக்கும் நமக்கும். இவர் மீது தொடரப்படும் வழக்கு தள்ளுபடி ஆகிறது. கடைசியில் கந்தசாமி வெற்றி பெறுகிறார் மக்களின் அறியாமையை கொண்டு.

இன்னமும் சில பேர் சென்று படம் பார்க்க வேண்டும் என்பதற்காக இன்னும் சில விஷயங்களை விட்டு வைக்கிறேன்.


படத்தின் பலம் : தேடி பார்த்தால் கிடைக்கிறது விக்ரமின் மிடுக்கான நடிப்பு மற்றும் முணுமுணுக்க செய்யும் பாடல்கள் (தேவி ஸ்ரீ ப்ரசாத் கலக்குகிறார்)

படத்தில் ஒட்டாதவை : வடிவேலுவின் கதாபாத்திரம் மற்றும் அவரின் நகைச்சுவை, ஷ்ரேயா, இழுத்தடிக்க பட்டிருக்கும் திரைக்கதை.இந்த படத்தை பற்றிய என்னுடைய கருத்துக்கள் என்னுடையது மட்டுமே!!!!! மொதத்தில் ஒரு சூப்பர் ஹீரோ கதைக்கு பதில் சிவாஜி மற்றும் அன்னியன் படங்களின் கலவையாக தெரிகிறது!!!

கந்தசாமி - வரம் தரவே இல்லை (இப்படி தான் முடிக்கணுமாமே:-))

50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை காப்பாற்ற சச்சினின் யுக்திகள்!

இருபது இருபது ஆட்டத்திடம் இருந்து 50 ஓவர்கள் ஒரு நாள் சர்வதேச போட்டிகளை காப்பாற்றுவதற்கான யுக்தியை பிரபல இந்திய கிரிக்கெட் வீரர், 20 ஆண்டுகள் கிரிக்கெட் களத்தில் இருந்தாலும் இன்றும், நம்பிக்கை நட்சத்திரமாக ஒளி வீசி கொண்டிருக்கும் சச்சின் டெண்டுல்கர் தனது யோசனையை தெரிவித்து இருக்கிறார்.

50 ஓவர்கள் போட்டிக்கு ஏன் இந்த நிலைமை?

பல வருடங்களுக்கு முன்னர் நடந்து கொண்டிருந்த டெஸ்ட் போட்டிகளினால் கிரிக்கெட்டின் சுவாரசியத்தை அதிகப்படுத்தும் வகையில் இந்த போட்டிகள் துவங்கப்பட்டன. அதற்கு பிறகு, இந்த போட்டிகள் உலக கோப்பை போட்டிகளாகவும் மற்றும் உலக கிரிக்கெட் சங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு மத்தியிலும் கிரிக்கெட் போட்டி தொடர்களாக நடை பெற துவங்கின. இப்படி பல வருடங்களாக நடந்து வந்து இந்த போட்டிக்கு, சக்காளத்தி சண்டையாக உருவெடுத்ததுதான் இந்த இருபது இருபது ஆட்டம்.

ஓரு நாள் முழுக்க அமர்ந்து வெயிலில் கிடந்து வெந்து தான் 50 ஓவர் ஆட்டங்களை பார்க்க முடிந்தது. வருடங்கள் உருண்டு செல்ல செல்ல ரசிகர்களின் எதிர்பார்ப்பு மாற துவங்கியது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முதன் முதலில் இந்த வகையான போட்டிகளை துவங்கி வைத்தது. ஆதன் பிறகு மெல்ல மெல்ல இந்த ஆட்டம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. சுறுசுறுப்பாக விளையாடப்படும் கால் பந்து போட்டிக்கு இணையாக இந்த போட்டி அமைந்தது. தாறுமாறாக பாட்ஸ்மென் பந்தை ஆறிற்கும் நான்கிற்குமாக விளாச ரசிகர்களுக்கு அப்படி ஒரு கொண்டாட்டம். மொத்தமாக 3 மணி நேரத்தில் அற்புதமான பொழுது போக்கு அம்சமாக இந்த ஆட்டம் மாறியது.

இப்பொழுது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்களின் கவனத்தை அந்த அளவுக்கு ஈர்க்க வில்லை என்றும் 50 ஓவர் போட்டிகளுக்கும் அதே நிலைமை என்று அகில உலக கிரிக்கெட் சங்கம் கவலை கொண்டுள்ள நிலையில், வெகு நாளாக கிரிக்கெட் பார்து கொண்டுள்ளவர்கள், இன்றும் டெஸ்ட் போட்டிகளே உண்மையான திறமை வெளிப்படும் ஆட்டம் என்றும், இருபது இருபது போட்டிகள் வேகமாய் முடிக்கபட்டும், ஆடுபவரின் திறமை முழுதாக தெரியாத போது அதை எப்படி முழு நேரம் அதை ஆடுவது என்ற கேள்வி எழுப்பியும் உள்ளனர்.

இப்படிபட்ட நிலைமையில் அகில உலக கிரிக்கெட் சங்கம், கிரிக்கெட் ஆடாத நாடுகளுக்கு கிரிக்கெட்டை எடுத்து செல்லும் ஒரு கருவியாகவும் இந்த இருபது இருபது கிரிக்கெட்டை பயன் படுத்தி வருகின்றனர்.இந்த சமயத்தில் தான் சச்சின் டெண்டுல்கர் சில புதிய யுக்திகளை கையாண்டால் 50 ஓவர் போட்டிகளையும் காப்பற்றி விட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். அவருடைய கருத்துக்கள் அப்படியே: பின்வரும் இணைய தள முகவரியை சொடுக்கவும்.

http://cricketnext.in.com/news/tendulkars-formula-to-revive-oneday-cricket/43702-13.html

இத்தகைய உக்திகள் கையாளப்பட்டு யாருக்கு தெரியும், மறுபடியும் உற்சாகம் பிறக்கும் என்று நினைப்போம். எது எப்படி இருந்தா என்னப்பா? நாம இந்தியா ஜெயித்தாலும் தோத்தாலும் இப்படி பேசி பேசி மற்ற விளையாட்டுக்களை பற்றியும் அடுத்த தலைமுறைக்கு மறக்காமல் சொல்லனும்னு ஒரு சபதம் எடுத்துப்போம்....

- MJV