Saturday, September 5, 2009

கந்தசாமி - என் கண்ணோட்டத்தில் மட்டும்!!!சியான் விக்ரம், ஷ்ரேயா சரன், ஆசிஷ் வித்யார்தி, ஒய்.ஜீ.மகேந்திரன், வடிவேலு, இளைய திலகம் பிரபு மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் சுசி கணேசன் இயக்கத்தில் கலை புலி தாணு அவர்களின் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் அன்று வெளிவந்தது. ஏகப்பட்ட எதிர்ப்பார்புகளோடு வெளி வந்த இந்த படத்தை திரை அரங்கம் சென்று பார்க்க வேண்டாம் என்று பல நண்பர்கள் தடுத்தனர். எல்லோரும் சொன்ன ஒரே காரணம் நீண்டு செல்லும் படம். (மொத்தம் 194 நிமிடங்கள் நீண்டது இந்த திரைப்படம்).


இப்படி சொன்ன பல படங்கள் அற்புதமாக இருந்திருக்கும் காரணத்தினால் இந்த படத்தையும் அரங்கம் சென்று பார்க்கலாம் என்று முடிவு செய்து சென்றோம் (நானும் என் மனைவியும்). அது ஒரு வியாழக்கிழமை. இருந்தாலும் சியான் படத்திற்கு நல்ல கூட்டம் வேலை நாட்களிலும் இருக்கும் என்ற யோசனை சட்டென்று கலைக்கப்பட்டது இதை கேட்டு ' எந்த சீட்ல வேணும்னாலும் உட்காருங்க சார்' என்றதை கேட்டவுடன்.

வழக்கமான விளம்பரங்களை தாண்டி படம் துவங்கியது. ஆர்வம் மேலோங்க படத்தில் கலந்தேன். முதல் காட்சியில் இருந்தே வழக்கமான அந்த சஸ்பென்ஸ் இல்லாமல் கந்தசாமிதான் உதவ போகிறார் என்று தெரிந்து விட்டது. எப்படி என்று பார்க்கும் போதுதான் மன்சூர் அலிகானை வாங்கோ வாங்கென்று வாங்குகிறார் கந்தசாமி. சூப்பர் ஹீரோ படம் என்று சொல்ல பட்டதால் அந்த சண்டை காட்சிகள் ஏற்று கொள்ள படும்படியாக இருக்கின்றது. எதுவும் கேள்வி கேட்க முடியாத நிலைக்கு செல்கிறோம்.

அப்போது ஒரு பாடல். இப்படியாக படம் துவங்கி நகர்கின்றது. இதற்கு பிறகு தான் கதா நாயகன் மற்றும் கதா நாயகி அறிமுக படலம் துவங்குகிறது. ஆடம்பரம் இல்லாத அறிமுகம் விக்ரமுக்கு. மிடுக்காக இருக்கிறார் படம் முழுக்க விக்ரம். சற்று உடல் இளைத்து வித விதமான ஆடைகள் அணிந்து வலம் வருகிறார். ஒரு தொலைகாட்சி பேட்டியில் குறிப்பிட்டு இருந்த ஒரு செய்தி நிஜமாகி இருக்கிறது. தான் வித விதமான உடைகள் போட்டு நடிக்கவில்லை என்ற ஆதங்கம் தீர்ந்து போனது இந்த படத்தில் என்று குறிப்பிட்டு இருந்தார்.

சி.பி.ஐ அதிகாரியாக விக்ரம். அவருக்கென்று ஒரு நட்பு வட்டம். ஆசிஷ் வித்யார்தி வீட்டை சோதனை செய்ய செல்லும் போது அவருக்கு உதவி செய்வதாய் காட்டி விட்டு பின்னர் அவரும் உதவி செய்வது பொல் காண்பித்தது நல்ல துவக்கம். ஆசிஷ் வித்யார்தி வீட்டில் இருந்து பெரும்பகுதி பணத்தையும் பறிமுதல் செய்து கொண்டு வரும் போது கதா நாயகியின் புகைப்படத்தையும் பார்க்கிறார். அதற்கு முன்னர் விக்ரமை உள்ளே விடாத வாட்ச்மேனை அடிக்கும் வித்யர்தியிடம் அதை நீங்கள் அடிக்காமலே சொல்லி இருக்கலாம் என்று விக்ரம் சொல்லி விட்டு வருவது நல்ல காட்சி.

அப்புறம் விக்ரமின் அலுவலகத்திற்கு வந்து ஸ்ரேயா சரண் ரகளை செய்கிறார். அதற்கு பதில் அளிக்கும் விக்ரம், நீளமாக கேள்விகள் கேட்கும் போது எப்போது முடிப்பார் என்ற சலிப்பு தட்டி போகிறது. பின்னர் அவருக்கும் வித்யார்திக்கும் நடக்கும் காட்சிகள் நீண்ட பயணம். இதற்க்கு இடையில் சூப்பர் ஹீரோ படமாக இருந்தாலும் எப்படி விக்ரம் பறக்கிறார் எப்படி அந்த சத்தம் வருகிறது போன்ற விஷயங்களை விளக்கியது பலம். (எவ்வளவு ஆங்கில படங்கள் பார்த்தாலும், தமிழ் படங்களில் பறக்கும் காட்சியோ இல்லை வேறு சில சாகசங்களோ வந்தால் 'அது எப்படிப்பா இப்படி பறக்கறாய்ங்க என்று சொல்லும் நம் ஆட்களை அமைதி படுத்தி இருக்கிறார் சுசி கணேசன்)

கோவில் மரத்தில் காகிதத்தில் போடப்படும் வேண்டுதல்களை, கந்தசாமி கடவுளே நிறை வேற்றி வைப்பதாக நம்பும் மக்கள் ஒரு புறம், அப்படி இல்லை அது ஒரு ஆசாமியின் வேலை என்று அதை ஆராயும் குற்றவியல் பிரிவு காவல் அதிகாரி பிரபு என்று கதை களம் நீண்டு ஓடுகிறது. விக்ரம் மற்றும் அவரது பள்ளி கூட நண்பர்கள் என அனைவரும் இந்திய அரசு பணியில் இருந்து கொண்டு, கொட்டி கிடக்கும் கருப்பு பணத்தை எடுத்து கஷ்டம் என்று கந்தசாமி கோவிலில் கதறும் மக்களுக்கு அள்ளி கொடுக்கிறார்கள்.

இப்படி ஓடி கொண்டிருக்கும் திரைக்கதையில் கொஞ்சமும் ஒட்டாமல் ஷ்ரேயா மற்றும் வடிவேலு அவர்கள்.பாடல்கள் அற்புதமாய் வந்திருக்கிறது. இனி கொஞ்ச நாட்களுக்கு இசைத்தொலைகாட்சிகளுக்கும் டீ கடை அண்ணாச்சிகளுக்கும் கவலை இல்லை என்றே சொல்ல வேண்டும். இதனால் அவர் பல பேரிடம் பகைமை வளர்த்து கடைசியில் எப்படி எல்லா முக திரையும் கிழிக்கப்பட்டு விடும் என்று தெரிந்திருக்கும் நமக்கும். இவர் மீது தொடரப்படும் வழக்கு தள்ளுபடி ஆகிறது. கடைசியில் கந்தசாமி வெற்றி பெறுகிறார் மக்களின் அறியாமையை கொண்டு.

இன்னமும் சில பேர் சென்று படம் பார்க்க வேண்டும் என்பதற்காக இன்னும் சில விஷயங்களை விட்டு வைக்கிறேன்.


படத்தின் பலம் : தேடி பார்த்தால் கிடைக்கிறது விக்ரமின் மிடுக்கான நடிப்பு மற்றும் முணுமுணுக்க செய்யும் பாடல்கள் (தேவி ஸ்ரீ ப்ரசாத் கலக்குகிறார்)

படத்தில் ஒட்டாதவை : வடிவேலுவின் கதாபாத்திரம் மற்றும் அவரின் நகைச்சுவை, ஷ்ரேயா, இழுத்தடிக்க பட்டிருக்கும் திரைக்கதை.இந்த படத்தை பற்றிய என்னுடைய கருத்துக்கள் என்னுடையது மட்டுமே!!!!! மொதத்தில் ஒரு சூப்பர் ஹீரோ கதைக்கு பதில் சிவாஜி மற்றும் அன்னியன் படங்களின் கலவையாக தெரிகிறது!!!

கந்தசாமி - வரம் தரவே இல்லை (இப்படி தான் முடிக்கணுமாமே:-))

4 comments:

Kolipaiyan said...

Nice. summa natchunu irukku.

MJV said...

@ Kolipaiyan - நன்றி நண்பரே !!!

sara said...

vaaram oru round-upnu thodarndu ezhuthavum.

MJV said...

@Sara - கண்டிப்பாக நிறைய எழுதுகிறேன். நீங்களும் எழுதவும்!!!