Sunday, September 27, 2009

புது புகைப் புகு விழா - புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கண்டிப்பாக தீங்கானது!!!நாமலும் நம்ம நண்பர்களும் எப்படியெல்லாம் விளக்கங்கள் சொல்லியும், காரணங்கள் சொல்லியும் புகைப்பழக்கத்தை கற்று கொள்கிறோம் என்பதை பார்ப்போம். நாங்களும் கடந்த 9 வருடங்களாக இதுக்குள்ள இருக்கோம்ல. பன்னி மேய்க்கரதுல என்ன பெருமை வேண்டி கெடக்கு?(பன்னியோட புகழை எந்த விதத்திலும் சேதப்படுத்தாமல்!)


கல்லூரியில் இந்த பழக்கத்தை எப்படி கற்று கொள்கிறோம் என்பதை மட்டுமே இங்கே பார்க்க போகிறோம்.


சில பேர் எப்டின்னா பத்த வெச்ச உடனே பத்திப்பாங்க. ஆமா ஆமா அவங்களுக்கெல்லாம் கற்பூற புத்தி! யோசிக்கறதெல்லாம் கிடையாது! வந்த உடனே ஒரே வாரம் தான். அவங்களுக்கென்ற நட்பு வட்டம் கூடி விடும். அந்த பேக்கரி வாசலில் உக்காந்து அப்டி என்னதான் வந்த ஒரு வாரத்துல பேசுவாங்கன்னே தெரியாது. இந்த நண்பர்கள் பாடெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான். கல்லூரியில எப்பவுமே ஜாலி பண்றவங்க இவங்கதான் வந்த கொஞ்ச நாளையிளேயே.


இன்னும் கொஞ்ச பேர் இருப்பாங்க, 'என்னடா மாப்ள உனக்கு விஷயம் தெரியுமா நம்ம பக்கத்து ரூம்ல ஒருத்தவன் இருக்கானேடா', 'ஆமா அந்த ஊர்லேந்து வந்திருக்கானே அவந்தான?', 'ஆமாடா மாப்ள அந்த பய புள்ள என்னமா இழுத்து இழுத்து புகை விடுதுங்கற', ' நீ எங்கடா பாத்த?', ' எல்லாம் நம்ம பழைய லேபுக்கு பக்கத்துலதான்.', ' அவ்ளோ ஆசை இருந்தா நீ அடிக்க வேண்டியதுதானே வாங்கி', 'போடா அப்பாக்கெல்லாம் தெரிஞ்சா தோல உறிச்சிடுவாங்க. அந்த விஷயமெல்லாம் நமக்கு எப்பவுமே ஒத்து வராதுடா தம்பி. ஒரு வாட்டி கூட வாழ்க்கையில நான் தம் அடிக்க மாட்டேண்டா'.


கொஞ்ச நாள் கழிச்சி அதே நண்பர்கள், 'மச்சான் அந்த தம்ம எட்ரா!', 'எது எட்ராவா? எப்படா அடிக்க ஆரம்பிச்ச?', 'அது இப்போதாண்டா ஒரு வாரமா', ' ஏண்டா கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு மானஸ்தன் என் ரூம் மேட்டா இருந்தானேடா எங்கப்பா அவன்', கண்ணுக்கு தெரிந்த வரை இருந்த கான்க்ரீட் வானத்தை தலை தூக்கி மேலே பார்த்து விட்டு, ஆழமாய் இழுத்து ஒரு முறை புகையை வெளியே விட்டு விட்டு, 'மச்சான் அந்த மானஸ்தன் செத்துடாண்டா செத்துட்டான்' என்று சொல்லும் போது சில நண்பர்கள் இந்த பழக்கத்திற்குள் காலடி வைக்கிறார்கள்.


இப்படியாக இந்த பழக்கம் தொடங்கி சில நாட்களில், இந்த பழக்கத்தில் தேர்ச்சி பெற்ற ஒருத்தவரு அந்த பக்கமா வந்து இதே நண்பர்கள் ரூம எட்டி பாத்துட்டு, சரி இவனுங்கள உசுப்பேத்தி பாப்போம்னு சொல்லி,' என்னடா தம் அடிக்கறீங்க பெருசா பேசர, எங்க ஏரியால பொண்ணுங்களே உங்கள விட நல்லா அடிக்கறாங்க.(அடப்பாவி என்னதாண்டா சொல்ல வர???), எல்லாப் புகையும் போய் உள்ள உக்காரணும், வெளியில வரக் கூடாதுடா!!!' என்று சொல்லி ஒரு இழுப்பு இழுத்து பேசி புகை வெளியே விடாமல் வித்தை காண்பிப்பார்! ஏதோ தத்தக்கா புத்தக்கான்னு தம் அடிச்சிட்டு இருந்த நம்ம நண்பர் இப்போ வெறியெடுத்து கத்துப்பார்!


இன்னும் சில பேர், இந்த பரீட்சைக்கு படிக்கும் நாட்களில் சிக்குவார்கள். எப்படின்னு பாப்போம். 'மச்சான் செமையா தூக்கம் வருதுடா', 'சரி நீ தூங்கு நான் போய் ஒரு தம் போடுட்டு வரேன்', உடனே இந்த நண்பனுக்குள்ள இவ்ளோ நாள் தூங்கின சாத்தான் முழிச்சிப்பாரு,'டேய் நானும் ஒரு பஃப் அடிக்கறேண்டா, ரொம்ப தூக்கம் வருது ஒன்னுமே படிக்கலடா (இப்போதான் இதெல்லாமே வேற நினைவுக்கு வரும்)', 'டேய் மாப்ள வேணாண்டா, இப்படி தான் ஆரம்பிக்கும், அப்புறம் சுத்தமா விடவே முடியாது','டேய் *** *** சில காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை முடிந்த பிறகு, நான் ஒன்னும் உன்ன மாதிரி கெடையாது. மூடிக்கிட்டு தம்ம கொடு', 'சரி உன்ன காப்பாத்த யாராலும் முடியாது, போய் தொல இந்தா'.


இப்போ இன்னும் சில பேர் இருப்பாங்க. தம் பக்கமே தலை வைத்தும் படுக்க மாட்டாங்க. 'தயவு செய்து வெளில போய் தம் அடிங்கப்பா' என்று சொல்லும் அளவுக்கு இந்த புகை அவர்களுக்கு ஒத்து கொள்ளாமல் இருக்கும். திடீர்னு ஒரு நாள் இந்த நண்பனும் கையில் வெண்குழல் வத்தியோடு அமர்ந்திருப்பான். 'என்னடா ராஜா என்னப்பா எப்போலேந்து இந்த ஃப்ரெண்ட் வந்தாரு?', 'டேய் காமெடி பண்ணாதீங்கடா, அவ என்ன மறந்துட்டா மாப்ள, முடியலடா' என்று ஒன்றுமே தெரியாத அந்த இருட்டில் எதையோ தேடிய வண்ணம் புகை இழுத்து வெளியே அனுப்பி கொண்டிருப்பான். இவங்கெல்லாம் இப்படி சிக்குவாங்க!


இதுக்கெல்லாம் தப்பி வெளியில வந்துட்டாங்கன்னா அவங்கள்ள ஒரு 90 விழுக்காடு நண்பர்கள் கண்டிப்பா இந்த பழக்கத்துக்கு அடிமை ஆகறது இல்ல. அதுல பாத்துக்கிடீங்கன்னா இதுக்கு அப்புறமா தம்ம விட்ரேன் விட்ரேன் சொல்லி நிறைய பேர் சொல்லுவாங்க அதுல நானும் ஒருத்தன். மன்னிக்கவும், இவ்ளோ எழுதிட்டு மன சாட்சியே இல்லாம வேஷம் போட முடியல. இப்போ ஒரு ஒன்றரை மாதமாக நிறுத்தி இருக்கிறேன். இது எத்தனவாது முறை என்று கேட்டு அசிங்கப் படுத்தக் கூடாது சரியா??? முடிஞ்சா நிறுத்த பாருங்கப்பா!!!


- MJV

2 comments:

SK said...

புகை மேலும் அப்பா இது இரண்டும் சம்பந்தமான பதிவு ஒன்று.. :-)

http://pirathipalippu.blogspot.com/2008/11/blog-post_10.html

முடிஞ்ச வரை முழுசா நிறுத்த வாழ்த்துக்கள்.

அப்படியே கூட தம் அடிக்கற நண்பர்களையும் நிறுத்த சொல்லுங்க :-)

MJV said...

@ SK - என்னை விடவும் என் தாய் தந்தையர், என் மனைவியை விடவும் அந்த பழக்கத்தை நிறுத்த என் மகள் தான் முக்கிய காரணம். மற்றுமொரு பதிவையும் படித்தேன். மிக நல்ல பதிவு புகை பிடிக்க நிறுத்த முயற்சி செய்பவர்களுக்கானது!