Saturday, October 31, 2009

சன்னலோரமாய்!!!

சன்னலோரமாய்!!!
உன் சன்னலோர தரிசனம் நித்தம்
வேண்டும் என்றாலும்,
பொறாமை பிடித்தவர்கள்
உன்னை பார்த்து
அடுத்த முறை
சந்திராயனை
சன்னல் கம்பிக்கு பின் செலுத்தி விட்டால்?

வீடு
பல வருடங்கள் வாழ்ந்த வீட்டை
இடித்த போது, விழுந்து சிதறிய செங்கல்லில்
விழாமல் இருந்த அவனும் அவனது
உறவுகளும் சேர்ந்தே சிதறி போயின...

ஆடை
இலையில் துவங்கி இலையை விட
சிறிதாய் சுருங்கிப் போன
நாகரிக சின்னம்!

ஒரு வழி பாதை
நீ நடந்த பாதையெங்கும்
மலர்கள் ஆக்கிரமித்ததால்
அந்த வழியின் இப்போதைய பெயர்!

- காவிரிக்கரையோன் MJV
P.S:
மேலே இடம்பெற்றுள்ள கவிதை யூத்ஃபுல் விகடன் இணைய தளத்தின் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. அதை காண கீழ்கண்ட இணைய தள முகவரியை சொடுக்கவும்.

http://youthful.vikatan.com
http://youthful.vikatan.com/youth/Nyouth/kavirikaraiyon30102009.asp

Tuesday, October 27, 2009

எல்லோரும் முதலில் எல்(போர்ட்) தானே!!!

குழந்தை பருவத்தில் எவ்வளவோ ஆசைகள், ஏக்கங்கள். இப்பொழுது நினைத்து பார்த்தால் சில பேருக்கு அந்த ஆசைகள் பூர்த்தி ஆகியிருக்கும். சில பேருக்கு பூர்த்தி ஆகாமல் இருக்கும். ஆசைகளைப் பொருத்த வரை அது பாகுபாடு அறியாது. நம்மால் தான் அதை பிரித்து பார்க்க முடியும். இப்படியாக எனக்கு இருந்த ஆசைகளில் ஒன்று நான்கு சக்கர வாகனம் (யெப்பா மகிழுது இல்லன்னா கார்னு சொல்லலாம்) ஓட்ட வேண்டும். எனக்கு சின்னதா இருக்கும்னு நானே நெனச்சிக்கிட்டு போட்ட கால் டிரவுசர் காலம் அது! அப்போ இருந்த எண்ணமெல்லாம், யாராவது கார் வெச்சிருக்காங்க பாத்தீங்களா, அவங்கள பார்க்கும் போது மட்டும் பொங்கி வரும் எண்ணம் அது....

அது ஏன்னா கார் வெச்சிருக்கவங்க சில பேர் அலம்பல் வேற தாங்க முடியதுட சாமி. அது ஒன்றும் இல்ல, இந்த சைடா வந்தேன். அதான் அப்படியே உங்கள பாத்துட்டு போலாம்னு அப்படியே வந்தேன். கார வேற செர்விசுக்கு கொடுத்திருந்தேன். என்னமா போகுது வண்டி, நீங்களும் ஒன்னு வாங்கிட வேண்டியதுதானே, இப்படி பல ஆடம்பரங்களைப் பார்த்ததாலேயே, கண்டிப்பா ஒரு கார் வாங்கி வீட்டில ஒரு முறை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் அப்பொழுதே தோன்றி விட்டது. மேலும் அந்த கார் என்ற விந்தை விடயத்தை நோக்கி என் பயணம் அப்போதே தொடங்கி விட்டது...

இதில் இடையில் ஒரு நாள் என் மாமா பையன், வண்டி ஒன்று வாங்கியிருந்தார். பழைய ஃபியட் கார் அது. வீட்டிற்கு எடுத்து வந்திருந்தாங்க. அதை அப்படியே பார்த்து கொண்டிருந்தேன். எனக்கு ஒரே ஆச்சர்யம்பா. ஏன்னா அவங்க வண்டிய நிறுத்தி சாவி எடுக்காமலே வீட்டுக்குள் அப்பா அம்மாவிடம் பேசிக்கிட்டு இருந்தாங்க. தேவை இல்லாமல் வாழைப்பழத்தைப் பார்த்து விட்ட குரங்கு போல, எனக்கு ஒரே பதட்டமா, இருந்தது. சரி ஒரு பொறுப்பான பையனா, அந்த வண்டி சாவிய எடுத்துட்டேன், வண்டியும் நின்னுடிச்சி! ( அப்போ கார் முன்னாடி ஓடிக்கிட்டா இருந்திச்சின்னு மொக்க கேள்வி எனக்கே கேக்கணும்னு தோணுது.... ஆனா வேணாம் வேணாம்!!!)

நான் கார நிறுத்திட்டேன் அப்படின்னு, 'யுரேகா, யுரேகானு' கத்தாத குறையா வீட்டுக்குள்ள வந்து அப்பா, அப்பா கார நிறுத்திட்டேன்னு, சொல்றதுக்கு முன்னாடியே, சூழ்நிலை அறிந்து, மகனை காக்கும் பொருட்டு அம்மா, சரி சரி இங்க வாப்பா, 'புள்ள தெரியாம நிறுத்திட்டான்' என்று கூற, எனக்கோ கோபம் சுல்லென்று தலைக்கு ஏறியது. பின்ன இருக்காதா, வாழ்க்கையில முதல் முறையா, கார்ல கைய வெச்சிருக்கோம், நமக்கு ஒன்னும் தெரியலன்னு அது எப்படி அம்மா சொல்லலாம்னு, அப்போவே உள்ள பதுங்கியிருந்த சாத்தான் பூதம் ( ஒரு பொருட்பன்மொழி மாதிரி வெச்சிப்போம் )விளக்கைத் தேய்க்காமலே வெட்ட வெளியில் உலவத் தொடங்கி விட்டது.


அதுக்கு அப்புறமாதான் எனக்கு தெரிய வந்தது, அந்த வண்டிய நிறுத்திட்டா, தள்ளி விட்டுதான் மறுபடியும் ஸ்டார்ட் பண்ண முடியும்னு!!! அப்புறம் என்ன எல்லாருமா சேர்ந்து தள்ள ஆரம்பித்தோம். இதுல வேற, சாலையோட போன ஒருத்தர்(ன்) என்ன சார், வண்டி இன்னும் ஸ்டார்ட் ஆகலையா? என்று நக்கல் விட, அப்பா அந்த வண்டியை தள்ளி அனுப்பி விட்டு, அவங்க துரத்த நான் ஓட, நான் ஓட அவங்க துரத்த, இரவு இனிப்பு பலகாரம் கெடச்சிது... எப்பொழுதெல்லாம் இப்படி நானும் எங்க அப்பாவும் துரத்தி விளையாடினால் கண்டிப்பாக இனிப்பு பலகாரம் உண்டு...

அன்று ஃபியட் என்ற அந்த மிகப் பெரிய நிறுவனம், ஒரு வாடிக்கையாளரை இழந்தது இன்று வரை அவர்களுக்கு தெரியாது. அந்த வண்டி மீது ஒரு வெறுப்பு!!! இருக்காதா பின்ன....

அப்புறம் படித்து முடித்து கல்லூரியில் சேர்ந்து படித்து (உண்மையிலேயே), சரி அப்போதாவது கண்டிப்பாக கத்துக்கணும்னு நினைத்து பார்க்கிறதுக்குள்ள, கல்லூரியும் முடிஞ்சே போச்சு. மிகப் பெரிய விடயமாக கார் ஓட்டுவது என் முன் பெரிதாகிக் கொண்டே சென்ற காலம் அது. அப்போ, நண்பர்களைப் பார்க்க சென்ற போது, சில நீர் ஆகாரங்கள் சப்பிட்டு கொண்டே (குடித்து கொண்டே) இருக்கும் போது, நண்பன் ஒருவன் சொன்னான், மச்சான் பேசாம, ஒரு ட்ரைவிங் ஸ்கூலா பாத்து சேந்துடு மச்சான் என்று, ஒரு தட்டு தட்டியதன் பலன், அடுத்த வாரமே அந்த ஸ்கூலில் சேர்ந்து ஆகி விட்டது. மறுபடியும் ஸ்கூலுக்கா என்பதை நியாபக படுத்தும்படியா, ஒரு கரும்பலகை வேற வெச்சிருந்தாங்க. அட என்னடா இதுன்னு நினைத்து கொண்டே, உள்ளே போய், சில பல காகிதங்களை கொடுத்து விட்டு, வாரம் இரு நாட்கள், சனிக் கிழமையும், ஞாயிற்று கிழமையும் வருகிறேன் என்று சொல்லி விட்டு வந்தேன். ஆரம்பிக்கிறப்பவே சனிக் கிழமையா என்று என் பகுத்தறிவு என்னை பதம் பார்த்தது!!!

விடுங்கப்பா விடுங்கப்பா, அப்படினு நினைத்துக் கொண்டே, நன்றாக கார் ஓட்டத்தெரிந்த ஒரு நண்பனை அலையில் அழைத்து, மச்சான், இந்த மாதிரி கார் கத்துக்க போறேண்டான்னு சொன்னவுடனே, 'டேய் இன்னும் கத்துக்கலையாட மச்சான்' என்ற எகத்தால பேச்சையும் தாண்டி, அவனிடம் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு, தெம்பாய் கிளம்பினேன் அடுத்த நாள் போருக்கு புறப்பட்டேன். என் மனைவியிடம் வாழ்த்தெல்லாம் பெற்றுக் கொண்டு!!!

முதல் நாள் பள்ளியில்லையா, ஓட்டுனர் ஆசிரியரிடம் அறிமுகப் படலமெல்லாம் முடிந்து அவர் கேட்டார், ' சார் சொல்லுங்க எந்த லெவலுக்கு தெரியும் கார் ஓட்ட' என்று கேட்டு வைக்க, என்னிக்கு தான் தெரியாதுன்னு ஒத்துக்க முடிஞ்சது. கொஞ்சம் ஓட்டிருக்கேன் என்று நன்றாக அவரிடம் ட்ரைன் ஓட்டிய பிறகு, அந்த நிமிடம் வந்தது, காரின் திசைத்திருப்பி சக்கரத்தை (ஸ்டியரிங் வீல்!!!) பிடித்தவுடன் நீண்ட நாள் கனவு நனவனாது. ஆனால் அதற்கு பிறகுதான் ஆப்பு நல்லாவே தயார் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. முதல் 3 வகுப்புகள் நமக்கு வெறும் திசைத்திருப்பி சக்கரம் மட்டும்தான் நம்ம பொறுப்புல கொடுக்கப்படும். அதுக்கே கார் சீட் நனஞ்சி போச்சு( யெப்பா வியர்வையால). அப்புறமா வந்தது முக்கியமான தருணம்.

வீட்டிலிருந்து கிளம்பும்போதே ஒரே டன்சன்... ஏன்னா அன்னிக்கி ஒரு படி மேல போய், அன்னிக்கி வேகசெலுத்தியை (ஆஃஸிலரேடர்:-)) என் வசம் கொடுக்கப்போவதாக ஆசிரியர் தெரிவித்து இருந்தார் அதற்கு முந்தைய வகுப்பில்... அதே படபடப்பில் வந்து காரை எடுத்து மெதுவாக அழுத்தி நகர்த்துங்கள் என்று சொல்லும்போதே, விறுட்டென்று தீபாவளி ராக்கெட் போல சீறி பாய்ந்தது கார். சார் சார் பொறுமையா பொறுமையா என்று என் பதடத்தை கொஞ்சம் அதிகப்படுத்தினார். சரி சரி நமக்கும் கார் ஓட்ட வந்துடுச்சின்னு நினைச்சி ஒரு 20 கிலோமீட்டர் மணிக்கு ஓட்டுவதிலிருந்து எனக்கு பதவி உயர்வு கொடுத்து, நீங்க 30 கிலோமீட்டர்ல ஓட்டுங்க அப்டின்னு சொன்னவுடனே, என்னமோ F1 ஓட்டுகிற மாதிரி ஒரு உணர்வு வரும் பாருங்க, ஓகோ.... ஆனால் அப்படி ஓட்டிக் கொண்டிருக்கும்போது, நெறைய மக்கள் நம்மைத் தாண்டி போகும்போது (சைக்கிளில்), அந்த வகுப்பின் ஆசிரியர் சொல்லுவார், ' சார் இப்போ நமக்கு பாலன்ஸ்தான் சார் முக்கியம் அப்புறமா வேகமா போலாம்' என்பார். கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.

இப்படியே 8 வகுப்புகள் முடிந்து விட்டன. இத்தனை வகுப்புகளில், நீங்கள் வண்டியின் எல்லா பாகங்கள் பற்றியும் அறிந்து கொண்டிருப்பீர்கள். ஆஃஸிலரேடர், ப்ரேக், க்லட்ச், கியர், வைபர், இண்டிகேடர் என்று சகலமும் அத்துப்படி ஆகி விடும்... 9 ஆவது வகுப்பில், வண்டியை பின்னால் எடுப்பது மற்றும் மேடான பகுதியில் செல்லும் போது வண்டி பின்னால் வராமல் எப்படி எடுப்பது போன்ற பாடங்கள் அன்று நடந்தேறப்போவதாய் சொல்லியிருந்தார். பின்னால் எடுப்பதெல்லாம் நன்றாக செய்தேன். இந்த குழுவிலேயே நீங்க தான் சார், டக்கு டக்குன்னு சொல்றத புரிஞ்சிக்கிட்டு செய்யறீங்கனு வேற சொல்லிட்டார். நமக்கா முடியல. சரி அடுத்ததா, மேட்டில் நிறுத்தி பாருங்க சார், கரைக்டா க்லட்ச விட்டு எடுங்க பாப்போம் அப்படின்னு சொன்னதுதான் தாமதம். வண்டி பிச்சிக்கிட்டு போச்சு பாருங்க, பின்னால எறங்கிடுத்து. என்ன பண்றது? 2 3 4 5 10 முறை எடுத்து பாத்தாச்சு. வண்டி மேல போகவே இல்ல. அவரும் பொறுத்து பொறுத்து பாத்துட்டு விடுங்க சார், இன்னொரு முறை கத்துக்கலாம்னு விட்டுட்டாரு. நான் முடிவு பண்ணியாச்சு, இது கஷ்டம்தான்னு....

இதெல்லாம் நடக்கறதுக்கு முன்னாலயே கற்றுக் கொள்வோரின் உரிமம் எடுத்து முடிச்சிட்டுதான் ஓட்டவே கொடுத்தாங்க கார!இந்த வகுப்பும் முடிந்து, ஓட்டுனர் உரிமம் எடுக்கும்போது ஒரு அள்ளு கெளப்புவானுங்க பாருங்க. அன்றைக்கு காலையில், நன்றாக உடையெல்லாம் உடுத்தி அந்த இடத்திற்கு சென்றாகி விட்டது (நேர்முகத் தேர்விற்கு கூட இப்படி கிளம்பியதில்லை). அதிகாரி வந்து விட்டார் என்று ஒருவர் கூடத்தில் சொல்ல, எல்லோர் முகத்திலும் ஒரு பரபரப்பு. நாம் கத்து கொண்ட காரையே எடுத்துட்டு வரணும். ஏன் இவ்ளோ நேரம் ஆக்குறாங்க, அந்த அதிகாரி ரொம்ப கண்டிப்பானவர், இந்த தெருவில் அப்படியே பின்னால போக சொல்லி வண்டிய நிறுத்திடுவாங்க. இப்படி பல விடயங்கள் பேசி கொண்டிருந்தார்கள்!!!

சரி என்று காத்திருந்து என்னை கூப்பிட்ட போது ஒரு 2 மணி நேரங்களை தின்றிருந்தேன். போனவுடன், எனக்கு முன்னால் இருந்தவருக்கு முதல் கியர் போட்டு சற்று நகர்த்தி நிறுத்துங்கன்னு சொல்லிட்டு அந்த ஆப்பீசர் போய் விட்டார். அடுத்த அதிகாரி வந்து, சார் வண்டில ஏறுங்கன்னு சொல்ல, நானும் அந்த முதல் கியர் நப்பாசையில் பார்க்க, சார் அப்படியே நெரே போய் அந்த சாலையைத் தாண்டி ஒரு சுத்து சுத்தி இங்க வந்துருங்க என்றார். எனக்கு தலையெல்லாம் சுத்திடுச்சி. ஒரு வழியா சுத்தி முடிச்சி, வண்டிய நிறுத்திட்டு எறங்கினேன். தாங்க் யு சார் என்று சொல்லி விட்டு நகர்ந்தேன். அங்கே இருந்த ஒரு நோட்டில் கையெழுத்து இட செய்தார்கள். அப்படி என்றால் ஆத்தா எனக்கு லைசன்ஸ் கெடச்சிடுச்சின்னு அர்த்தமாம்!!!

ஆக இதையெல்லாம் தாண்டி இப்போ 2 வருடங்களாய் மாருதி நிறுவனத்தின் ஸ்விவ்ஃப்ட்
ஓட்டி கொண்டிருக்கிறேன். ரொம்ப நல்லாவே ஓட்ட பழகியாச்சி. முக்கியாமா, மேட்டில் நிறுத்தி எடுக்கும் வித்தையெல்லாம் இப்போ ஜுஜுபீ!!! அதனால் இன்னும் கார் கற்று கொள்ள வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்கள் ஒன்னும் யோசிக்காதீங்க. நம்பிக்கையோட பாதுகாப்பா ஓட்டுங்கப்பா... ஆனால் இந்த பம்மல், அள்ளு எல்லாம் கொஞ்சம் நல்ல ஓட்டுகிற வரையில்தான். அப்புறம் பறக்க வேண்டும் என்று எனக்கும் எல்லோருக்கும் தோன்றும். நான் அப்படி பறந்ததெல்லாம் உண்டு. அதனால் கற்றுக் கொண்டு பிரகு ஓட்டுங்கள், ஒரு நிமிடம் நின்று சென்றாலும், போகும் இடத்திற்கு பத்திரமாய் சென்றடைவதுதான்பா முக்கியம்....

- காவிரிக்கரையோன் MJV

Sunday, October 25, 2009

கண்ணீர் துளி...அன்று என்னவோ தெரியவில்லை கரண்ட் அதிசயமா, ஒரு முழு நாள் முழுசுமா போகல. டேய் கண்ணா, ' இன்னிக்கி உக்காந்து எல்லாத்தையும் படிச்சிடு, அப்புறமா கரண்ட் மறுபடி போய்டும்'. 'சரிம்மா சரிம்மா படிச்சிட்டே இருக்கேன்மா' பதில் தன் மகன் ராஜூவிடமிருந்து வந்தவுடன் கலகலப்பானாள் கண்ணம்மா. பாத்திரங்களை தேய்த்துக் கொண்டே யோசித்து கொண்டிருந்தாள்.

எப்படியும் இந்த வருடம், ராஜூ படிப்பு முடிஞ்சிடும். அப்புறமா கீதாவோட திருமணத்தை பற்றி ஒரு முடிவு செய்யணும். பாவம் இந்த புள்ள வேலைக்கு போய் இந்த குடும்பத்த காப்பாத்திக்கிட்டு கெடக்கா. அவளுக்கு ஒரு விடிவு காலம் வரணும். கண்ணம்மாவின் இந்த பொருமலில் இன்னும் அதிகமாக எரிந்தது அவங்க வீட்டு அடுப்பு.

கீதா கண்ணம்மாவின் மூத்த மகள். ராஜூ கடைசி மகன். 15 வருடத்திற்கு முன்னால் இறந்த கணவருக்கு பின், இந்த குடும்பத்தை எப்படி காப்பாற்ற போகிறோம் என்ற கண்ணம்மாவின் கவலையை சீக்கிரமாய் போக்கியவள் கீதா. 12 ஆவது வரை படித்து விட்டு, சட்டென்று, கொஞ்சம் அது என்னமோ சொல்றாங்களே, பியோ, சியோ அதெல்லாம் படிச்சிட்டு, இப்போ ஒரு 7, 8 வருஷமா வேலை பார்த்து வருகிறாள் கீதா. எப்பொழுது தன் மகளைப் பற்றி நினைத்தாலும் தன்னை அறியாமலேயே இரு கண்ணீர்த்துளிகள் தாடையை வந்தடைவது உண்டு. அதை யாரும் அறியாமல் அவள் துடைத்து விடுவதும் உண்டு.

'அம்மா, அம்மா' என்ற ராஜூவின் அழைப்பு காதில் விழுந்து, கண்ணம்மாவின் எண்ணங்களை கலைத்து, நிகழ் காலத்திற்கு அவளைக் கொண்டு வந்தது. 'என்னடா கண்ணா' என்று அந்த பாத்திரங்களை கவிழ்த்து வைத்து விட்டு எழுந்து வந்தாள் கண்ணம்மா.

'அம்மா, உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்மா', என்றான் ராஜூ. எப்பொழுதுமே, தயங்கி பேசாத பிள்ளை என்ன இன்னைக்கு இப்படி தயங்குகிறான் என்று நினைத்து கொண்டே 'சொல்லுப்பா' என்றாள் கண்ணம்மா. 'ஒரு நல்ல வரன் வந்திருக்கும்மா, நீங்க என்னம்மா சொல்றீங்க? இதுதான் சரியான டைம் கல்யாணம் பண்ணன்னு நினைக்கிறேன்', 'நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்மா. அப்போதான் உனக்கும் கொஞ்சம் பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கும்' . நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்தது கண்ணம்மாவுக்கு. 'அம்மா அக்காக்கிட்டயும் சொல்லிடேன்மா, அவளும் சரின்னு சொல்லிட்டா'. ' நீங்க சரின்னு சொன்னா அடுத்த மாசமே பண்ணிடலாம்மா' ராஜூவின் வேகம் கண்ணம்மாவின் நெஞ்சை படப் படக்க செய்தது.

என்னடா ஒரு அக்கா இருக்கா, அவளப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம, ஏன் இப்படி கல் நெஞ்சக்காரனா இருக்கான். ' இததான் பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லுனு' சொல்லுவாங்களா? இவன பிள்ளையா பெத்ததுக்கு, அய்யோ அய்யோ என்று உள்ளம் முழுக்க குமுறிக் கொண்டிருந்தாள் கண்ணம்மா. இந்த நேரத்தில் கீதா வீட்டுக்குள் நுழைந்து கொண்டே, 'அம்மா, அம்மா இன்னிக்கி என்ன நடந்தது தெரியுமா உனக்கு?

'திடீரென்று, கண்ணம்மா கதறி கதறி அழத் தொடங்கினாள். 'அம்மா ஏன்மா என்ன ஆச்சு உனக்கு? நான் ஒரு நல்ல செய்தி சொல்லலாம்னு வந்தா, என்னம்மா ஆச்சு?', ராஜூ இங்க வாடா என்னடா ஆச்சு அம்மாவுக்கு?

இதோ வந்துட்டேன் அக்கா, ' அக்கா உனக்கு அந்த வரன் பாத்ததா சொன்னேனே, அத பத்தி அம்மா கிட்ட சொல்லிட்டே இருந்தேன். அதுக்குள்ள நீயே வந்துட்ட'. ஒன்றுமே புரியாத பதட்டத்தில், கண்ணம்மா ராஜூவை கேள்விக்குறியோடு நோக்க, ராஜூ அம்மாவை ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி ஏமாற்றி விட்ட மகிழ்ச்சியில், அக்காவிடம் விஷயத்தை சொல்ல, கண்ணம்மாவின் தாடையில் இரண்டு கண்ணீர்த்துளிகள் வழிந்தோடின. மகன் மேல் இருந்த கோபம், பறந்து போனதற்கு சாட்சியாய்!!!

அப்புறம் என்ன, கீதாவை பெண் பார்க்க, உண்மையாகவே மாப்பிள்ளை வீட்டாரை வர வைத்து, ஆறு மாதம் கழித்து அக்கா திருமணத்தை தடபுடலாய் அரங்கேற்றினான் ராஜூ....

- காவிரிக்கரையோன் MJV

Saturday, October 24, 2009

ஹார்லிக்சும் பொட்டுக்கடலையும்!!!இப்போதுதான் தீபாவளி முடிந்து என்னுடைய சொந்த ஊரிலிருந்து திரும்பி வந்தாச்சு... இப்பொழுது மெதுவாய் சின்ன சின்ன விடயங்களை, என்னுடைய சின்ன வயதில் நடந்த (தின்ற!!!) சிலவற்றை ருசி பார்க்க ஆசை எழுந்தது. அப்பொழுதெல்லாம், தின்பண்டம் அப்பா வாங்கிட்டு வருவாங்க. அப்போதைக்கு கொஞ்சமாக எடுத்து சாப்பிட்டு விட்டு, உள்ளே எடுத்து வைக்க செல்லும் அம்மாவைப் படுத்தி எடுத்து இருப்போம். அது என்னமோ தெரியலையப்பா, அந்த தின்பண்டம் யார் வாங்கிட்டு வந்திருந்தாலும், வந்தவங்க எப்போடா வந்த வழி போவாங்கன்னு பாத்துட்டு, உடனே ஓடிப் போய் அத எடுத்துட்டு வந்து, வீட்ல அக்கா, தங்கையோ இல்லை அண்ணா, தம்பியோ இருந்தாங்கன்னா அவங்களோட, சண்டை போட்டு சாப்பிடுவோம். சில சமயம் வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் இருக்கும்போதே, சமையல் அறைக்கு போய் வேட்டையாடவும் விளையாடவும் அரம்பித்து விடுவோம்!


இப்படியாக சாப்பிடுகிற தின் பண்டங்கள் தீர்ந்து போகின்ற பொழுதுதான் நம்முடைய மூளை வேலை செய்ய ஆரம்பிக்கும். அம்மா திங்கறதுக்கு ஒன்னும் இல்லயாமா? என்று சோகமாக முகத்தை வைத்து கொண்டு கேட்டுப் பார்த்தவுடன், அம்மா உருகி சரி இருப்பா, ஏதாவது செய்து தருகிறேன் என்று தன்னால் முடிந்த அளவுக்கு துரிதமாக, உதாரணத்திற்கு, பக்கோடா செய்து கொடுப்பாங்க! சரி இது முடிந்தவுடன் என்ன பண்றது? அம்மா கிட்ட மறுபடியும் கேட்டால், அடி விழும், அதனால், கப்பல் புயலில் மாட்டி கொண்டு தத்தளிக்கும் போது கப்பல் மாலுமியின் நிலையில், அமர்ந்து யோசித்து யோசித்து ஹையா, அந்த ஹார்லிக்ஸ் பாட்டில் இருக்கே!


இப்படி ஒரு சிந்தனை உதித்ததும், தேவையான பொருட்கள் என்று மனம் ஒரு சிறிய பட்டியல் தயாரிக்கும்.
தேவையான பொருட்கள்:
1. ஒரு நாற்காலி (அப்போல்லாம் உயரம் கொஞ்சம் கம்மிப்பா)
2. ஒரு பழைய துணி (இறுக்கமாக மூடியிருந்தால் - ஏயப்பா பெரிய புத்திசாலிதான்!)
3. ஒரு சின்ன கரண்டி (இதற்காகவே அம்மா கரண்டி போடாமல் வைச்சிருப்பாங்க)

அம்மா கிட்ட கேட்டா எடுத்து கொடுப்பாங்க ஆனாலும், நிறைய அடிக்கடி எடுத்து சாப்பிட முடியாது. அதனால் அந்த நாற்காலியை போட்டு ஏறி அந்த பாடிலை எடுத்து, அடடா அதிலிருந்து ஒரு கரண்டி அள்ளி போட்டு அத ருசி பாத்துட்டு யாருக்கும் தெரியாம மறுபடி அதே இடத்தில் எடுத்து வைத்து விட்டு எல்லா பொருட்களையும் எடுத்த இடத்தில் வைத்து விட்டு நகரும் போது, தங்கை ஒரு சத்தம் போடுவா பாருங்க, ' அம்மா அவன் ஹார்லிக்ச சாப்பிட்டுட்டு இருக்கான்மா' என்ற சத்தம் வந்தவுடன் அந்த இடத்தில் இருந்து எடு ஓட்டம்.....

அடுத்தது இதே வரிசையில், பொட்டு கடலையும், சக்கரையும் சேர்த்து மாவாக்கி சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்!!! இதுவும் அம்மாவிடம் கேட்டால், அருமையாக அதை மிக்சியில் அரைத்து மாவாக்கி தருவார்கள். ஆனால் இதுவும் அடிக்கடி கிடைக்காதே....

இதற்கு தேவையான பொருட்கள்:
சின்ன அம்மி கல்லும் குழவியும்! - ஏன்னா மிக்சி போட்டால் சத்தம் கேட்குமே!!! (அபார அறிவு புள்ளைக்கு)
சிறிது சக்கரை - இது தான் இங்க பெரிய விடயம்!!!
தேவையான அளவுக்கு பொட்டு கடலை!

இதில் திறமை எங்கே இருக்கிறது என்றால், சப்தமே வரமால் அந்த பொட்டு கடலையை இடித்து, அதை சக்கரையோட கலந்து சாப்பிட்டால் ஆகா என்று இருக்கும். இதில் தவறு எங்கே நடக்கும் என்றால் உண்மையிலேயே வயிற்று வலி வந்து வீட்டில் மாட்டிப்போம். இல்லை என்றால், நமக்கு ஆப்பு வைக்கறதுக்கு என்றே, இந்த எறும்புகளுக்கு சக்கரை மேல் உள்ள அன்பு அப்போதுதான் வெளிப்பட்டு அம்மாவுக்கு விடயங்களைத் தெரியப்படுத்தும்....

அடுத்து இந்த வரிசையில், என்ன என்று யோசித்தவுடன் எண்ணத்திற்கு வருவது புளி.... எதுவுமே கிடைக்கலை என்றால், இது தான் இது தான், இதுல இருக்கிற அந்த ருசி, எதுவுமே இல்லாத பொழுது, புளியை சாப்பிடும் போது, அடடா.... ஒரு அவசரத்தில், அந்த புளி டப்பாவைப் போட்டு உடைத்து, என் முதுகு உடைந்து நொறுங்கிய நேரங்கள் உண்டு...
சரி இந்த பட்டியலில் நிறைய உண்டு.... அதையெல்லாம் சொல்லி கொண்டே போகலாம்... முந்திரி பருப்பு, உருண்டை வெல்லம், மாங்காய் வற்றல் அடப்பாவிகளா அடப்பாவிகளா, ரொம்ப நல்லா இருக்குமே!!! ம்ம்ம்ம்ம் நாங்கள்ளாம் அந்த காலத்திலே பெரிய கண்டுபிடிப்பாளன்பா!!! இப்பொழுது சென்ற போது கூட இதெல்லாம் பண்ணி பார்த்தேன், ருசித்தேன்.... வித்தியாசம் அந்த சிறிய வயசில் இருந்த ஒரு விறுவிறுப்பு இப்போ இல்லை.... யாரும் எதுவும் சொல்லலை.....


- MJV

Sunday, October 11, 2009

மகிழுந்தும் நானே விமானமும் நானே!!!
உலக வரலாற்றில் பல பல பிரமாண்ட வளர்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் இந்த மனித சமுதாயம் கண்டு முதலில் ஆற்றாமையில் வெறுத்தும் பின்னர் வியந்தும் தான் ஏற்று கொண்டிருக்கிறது. விமானம் கண்டு பிடித்த ரைட் சகோதரர்களும் சரி, மகிழுந்தை நமக்கு கொடுத்த ஹென்றி போர்ட் ஆக இருந்தாலும் இதே நிலை தான்...
முதலில் வெறுத்து ஒதுக்கிய அதே சமுதாயம் மெல்ல மெல்ல அவர்களை அங்கீகரித்து அவர்களது கண்டுபிடிப்பை ஒத்து கொண்டது!

நல்லா வேலை இந்த நிலை TERRAFUGIA நிறுவனத்துக்கு வரவில்லை. வெற்றிகரமாக தங்கள் முதல் கட்ட சோதனையை செய்து முடித்துள்ளனர்.... எதை பற்றி பேசி கொண்டு இருக்கிறோம்? இந்த நிறுவனம் 2006 ஆம் ஆண்டு மசாசுசெட்ஸ் பல்கலைகழகத்தில் பயிற்சி பெற்ற விமான பொறியாளர்கள் மற்றும் வர்த்தக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்ற சில நண்பர்கள் கூடி இந்த நிறுவனத்தை துவக்கி வைத்தனர்..... இவர்கள் செய்து முடித்து இருக்கின்ற சோதனை முயற்சி, தரையிலும் வானத்திலும் ஓடக்கூடிய ஒரு விமானம் மற்றும் மகிழுந்து...

இதை இயக்க மேலும் 20 மணி நேரம் இவர்கள் விமானம் ஓட்டும் முறையை பயிற்று விக்கின்றனர். முன்பே விமானம் ஓட்ட தெரிந்திருந்தால் இந்த வண்டியை வாங்கும் பொழுது இதற்கான பயிற்சியை மட்டும் அளிக்கின்றனர்.... மேலும் இந்த வண்டியின் தொழில்நுட்ப விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தள முகவரியை சொடுக்கவும்!

இந்த வண்டியின் விலையை தான் தீபாவளி வானவேடிக்கை போல் தலை நிமிர்ந்து பார்க்க வேண்டியதாய் இருக்கிறது..... ம்ம்ம்ம் அறிமுக விலை ஒரு லட்சத்தி தொண்ணூற்று நான்காயிரம் அமெரிக்க டாலர்களாம்!!!

யோசித்து பார்த்தால் இந்த வண்டி அதிகமாய் புழக்கத்திற்கு வந்து விட்டால், 'சரக்கனு கதவ துறந்துட்டு போய் வானத்துல இருக்கறப்ப, 'ஏன்டா கண்ண எங்க வெச்சிக்கிட்டு ஓட்டற' அப்டின்னு ஏக வசனம்லாம் பேச முடியாது'.... கொஞ்சம் போக்கு வரத்து நெரிசல் தரயில குறையலாம்..... கொஞ்சம் வானத்துல அதிகம் ஆகலாம்.... மேலே பறக்கும் காவல் படை போட்டு கண்காணிக்கலாம்..... தரையில கார்னு சொல்லி ஓட்டுனர் உரிமம் கேக்கும் போது, இறக்கையை விரித்து பறந்து கொஞ்சம் ஜகா வாங்கலாம்.... சரி சரி இப்படி நிறைய விடயங்கள் யோசித்து பார்க்கலாம்..... இத்துடன் இந்த பதிவை முடித்தும் கொள்ள(ல்ல)லாம்!!!

- MJV

Saturday, October 10, 2009

பண்டிகைக் கால பயணங்கள்!!!!

எந்த ஒரு பண்டிகையாக இருந்தாலும் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்.... எந்த வித பார பட்சமும் இல்லாமல் மகிழ்ச்சியை தேடி காத்திருக்கும் தருணம் அது... இப்படியான நாட்களில் வெளியூரில் இருந்து, தங்கள் சொந்த ஊருக்கு பயணிக்கும் மக்கள் எப்படி தயார் ஆகிறார்கள் என்பதை இந்த பதிவில் சுவாசிப்போம்...

இடம்: ஒரு படுக்கை அறை கொண்ட வீடு.
கதாபாத்திரங்கள்: 5 பிரம்மச்சாரி நண்பர்கள்.
நேரம்: பண்டிகை நாளுக்கு சுமார் 3 நாட்களுக்கு முன்னால்.


நபர் 1: நண்பா என்னப்பா ஊருக்கு போக டிக்கெட் எடுத்தாச்சா?
நபர் 2: இல்லப்பா எல்லா டிக்கட்டையும் அடிச்சி நவுத்திடானுங்கடா. ஒரு பஸ்ல கூட டிக்கட்டே இல்லடா.
நபர் 3: அது என்னடா மாப்ள, ட்ரய்ன் டிக்கட்ல regret இன்னு வருது?
நபர் 4: அடேய் மொக்க பய்யா, இனிமேல் நீ அங்க டிக்கெட் எடுத்து ஆணியே புடுங்க வேணாம்னு சொல்றாங்கப்பா....
நபர் 5: என்னடா இப்படி சொல்லிட்ட, அதெல்லாம் நம்பிதாண்டா பஸ் டிக்கெட்ட கூட விட்றா விட்றான்னு வந்துட்டேன்!
நபர் 1: விதி வலியது!!!

நபர் 5: டேய் அப்பா திட்டுவாங்கடா! ஊருக்கு போய் நெறைய நாள் ஆச்சு...அப்படியெல்லாம் சொல்லப்டாது...
நபர் 2: விடுங்கப்பா எப்படியும் ஒரு ஸ்பெசல் பஸ் விடுவாங்கப்பா.... சரி கிளம்புவோமா? போய் பாத்துட்டு வரலாம்.
நபர் 1: டேய் இப்போ போனா திறந்தே இருக்க மாட்டனுங்க. புது படம் டிவிடி வாங்கிட்டு வந்தேன். அத பாத்துட்டு சாப்டுட்டு போவோம்.
நபர் 3: சரி விடுங்க, லாரி பிடிச்சிதான் போகணும்னு தலையில எழுதியிருந்தா அத யாரால மாத்த முடியும்.

அப்படியே தூங்கிட்டாங்களா, எழுந்து 2 நண்பர்கள் மட்டும் பறந்தடித்து ஓடிப் போய் பார்த்து விட்டு ஏமாற்றத்தில் உச்சத்தில் மறுபடியும் அதே அறைக்கு திரும்பி வர, மற்ற நண்பர்கள் என்னடா மாப்ள டிக்கெட் எடுத்துடீங்களா? ஒரு கால் கூட பண்ணிக் கேக்காம இருந்துட்டீங்க என்று இவர்கள் உள்ளத்தில் எரியும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்ற இப்படியாக, மீதம் இருந்த 2 நாட்களும் ஓடிப் போகும்.

பிறகு என்ன செய்ய, அடித்து பிடித்து, பிராண வாயு இவர்களுக்குள் ஒடுகிறதா என்று சந்தேகத்தின் உச்சத்தில் ஆழ்த்தும் படியான ஒரு பேருந்தில் ஏறி சென்றடைவார்கள். சென்றடைவோம் இல்லையா? இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக நம் அனைவரின் வாழ்க்கையிலும் நடந்திருக்க கூடிய சாத்திய கூறுகள் உண்டல்லவா...

பின் குறிப்பு - இப்படியெல்லாம், அடிப்பட்டு தானே புத்தி வருது, அடுத்து வரும் கதாபாத்திரங்கள் போல இல்லை என்றாலும், திருந்திட்டோம் என்றும் சொல்லும் அளவுக்கு, சிறிது நாட்களுக்கு முன்னரே பயணச்சீட்டு வாங்கி விடும் பழக்கம் வந்திருக்கும் என்றே நினைக்கத் தோன்றுகிறது!

இடம்: மேலே குறிப்பிடப்பட்ட இடம் போலவே ஒரு வீடு என்று வைத்து கொள்வோமே!
கதாபாத்திரங்கள்: கணவன், மனைவி.
நேரம்: பண்டிகை நாளுக்கு மூன்று மாதங்கள் முன்னர் (இப்பொழுதெல்லாம் 3 மாதம் முன்னரே தொடர் வண்டி பயணச்சீட்டு பதிவு செய்ய முடியும்:-) அதனால் தான் 3 மாதங்கள் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்)

மனைவி: இன்னைக்கு என்ன தேதின்னு தெரியுமா? நீங்க பாட்டுக்கு பேப்பர் படிச்சிட்டு உக்காந்திருக்கீங்க?
கணவன்: ஏம்மா? என்ன தேதி? (நம்மாளுக்கு என்னடா இது? மனைவியோட பிறந்த நாள மறந்துட்டோமா அப்படின்னு நம்மாளுக்கு ஒரு பயம்!)
மனைவி: எத தான் நீங்க நியாபகம் வெச்சிருக்கீங்க? சரி ஊருக்கு போகணும் டிக்கெட்ட மறந்துட்டீங்களா?
கணவன்: எப்போ போகறதுக்கும்மா? அடுத்த மாசம் போகறத்துக்கா?
மனைவி: (இந்த மனுஷன கட்டிக்கிட்டு #*#@)@) அது இல்லீங்க, அந்த பண்டிகைக்கு ஊருக்கு போகணும்ல மறந்தாச்சா?
கணவன்: சரி சரி சரி, (வேகம் மிகுதியில் கணிணியைத் தட்டுகிறார்) என்னம்மா? அந்த வெப்சைட் ஓபன் ஆக மாட்டேங்குது!
மனைவி: அந்த வெப்சைட்டையே குறை சொல்லிக்கிட்டு இருக்காம, சீக்கரமா புக் பண்ணுங்கப்பா....

ஒரு வழியாக போராடி அந்த கணவன் பயணச்சீட்டை முன்பதிவு செய்து முடித்து இருப்பார்!

மேலே கூறிய அனைத்து கதப்பாத்திரங்களும் உண்மையே! யோசித்து பார்த்தால், ஒவ்வொருவரும் பண்டிகை நாளுக்கு எப்படியாவது எல்லோருடனும் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதையே நினைத்து தயாராகி கொண்டிருப்போம். அனைவரும் வருகின்ற பண்டிகை நாட்களுக்கு முன்னதாகவே பயணச்சீட்டு வாங்கியிருப்பீர்கள். அனைவருக்கும் பண்டிகை கால வாழ்த்துக்கள்.

மறுபடியும் ஒரு பின் குறிப்பு: இப்போது பிரம்மச்சாரி நண்பர்கள் தான் முதலில் முன்பதிவு செய்வதாக கேள்விப்பட்டேன். உடம்பு ரணகளம் ஆகிடுதில்லப்பா.... எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது!

- MJV