Saturday, October 10, 2009

பண்டிகைக் கால பயணங்கள்!!!!

எந்த ஒரு பண்டிகையாக இருந்தாலும் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்.... எந்த வித பார பட்சமும் இல்லாமல் மகிழ்ச்சியை தேடி காத்திருக்கும் தருணம் அது... இப்படியான நாட்களில் வெளியூரில் இருந்து, தங்கள் சொந்த ஊருக்கு பயணிக்கும் மக்கள் எப்படி தயார் ஆகிறார்கள் என்பதை இந்த பதிவில் சுவாசிப்போம்...

இடம்: ஒரு படுக்கை அறை கொண்ட வீடு.
கதாபாத்திரங்கள்: 5 பிரம்மச்சாரி நண்பர்கள்.
நேரம்: பண்டிகை நாளுக்கு சுமார் 3 நாட்களுக்கு முன்னால்.


நபர் 1: நண்பா என்னப்பா ஊருக்கு போக டிக்கெட் எடுத்தாச்சா?
நபர் 2: இல்லப்பா எல்லா டிக்கட்டையும் அடிச்சி நவுத்திடானுங்கடா. ஒரு பஸ்ல கூட டிக்கட்டே இல்லடா.
நபர் 3: அது என்னடா மாப்ள, ட்ரய்ன் டிக்கட்ல regret இன்னு வருது?
நபர் 4: அடேய் மொக்க பய்யா, இனிமேல் நீ அங்க டிக்கெட் எடுத்து ஆணியே புடுங்க வேணாம்னு சொல்றாங்கப்பா....
நபர் 5: என்னடா இப்படி சொல்லிட்ட, அதெல்லாம் நம்பிதாண்டா பஸ் டிக்கெட்ட கூட விட்றா விட்றான்னு வந்துட்டேன்!
நபர் 1: விதி வலியது!!!

நபர் 5: டேய் அப்பா திட்டுவாங்கடா! ஊருக்கு போய் நெறைய நாள் ஆச்சு...அப்படியெல்லாம் சொல்லப்டாது...
நபர் 2: விடுங்கப்பா எப்படியும் ஒரு ஸ்பெசல் பஸ் விடுவாங்கப்பா.... சரி கிளம்புவோமா? போய் பாத்துட்டு வரலாம்.
நபர் 1: டேய் இப்போ போனா திறந்தே இருக்க மாட்டனுங்க. புது படம் டிவிடி வாங்கிட்டு வந்தேன். அத பாத்துட்டு சாப்டுட்டு போவோம்.
நபர் 3: சரி விடுங்க, லாரி பிடிச்சிதான் போகணும்னு தலையில எழுதியிருந்தா அத யாரால மாத்த முடியும்.

அப்படியே தூங்கிட்டாங்களா, எழுந்து 2 நண்பர்கள் மட்டும் பறந்தடித்து ஓடிப் போய் பார்த்து விட்டு ஏமாற்றத்தில் உச்சத்தில் மறுபடியும் அதே அறைக்கு திரும்பி வர, மற்ற நண்பர்கள் என்னடா மாப்ள டிக்கெட் எடுத்துடீங்களா? ஒரு கால் கூட பண்ணிக் கேக்காம இருந்துட்டீங்க என்று இவர்கள் உள்ளத்தில் எரியும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்ற இப்படியாக, மீதம் இருந்த 2 நாட்களும் ஓடிப் போகும்.

பிறகு என்ன செய்ய, அடித்து பிடித்து, பிராண வாயு இவர்களுக்குள் ஒடுகிறதா என்று சந்தேகத்தின் உச்சத்தில் ஆழ்த்தும் படியான ஒரு பேருந்தில் ஏறி சென்றடைவார்கள். சென்றடைவோம் இல்லையா? இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக நம் அனைவரின் வாழ்க்கையிலும் நடந்திருக்க கூடிய சாத்திய கூறுகள் உண்டல்லவா...

பின் குறிப்பு - இப்படியெல்லாம், அடிப்பட்டு தானே புத்தி வருது, அடுத்து வரும் கதாபாத்திரங்கள் போல இல்லை என்றாலும், திருந்திட்டோம் என்றும் சொல்லும் அளவுக்கு, சிறிது நாட்களுக்கு முன்னரே பயணச்சீட்டு வாங்கி விடும் பழக்கம் வந்திருக்கும் என்றே நினைக்கத் தோன்றுகிறது!

இடம்: மேலே குறிப்பிடப்பட்ட இடம் போலவே ஒரு வீடு என்று வைத்து கொள்வோமே!
கதாபாத்திரங்கள்: கணவன், மனைவி.
நேரம்: பண்டிகை நாளுக்கு மூன்று மாதங்கள் முன்னர் (இப்பொழுதெல்லாம் 3 மாதம் முன்னரே தொடர் வண்டி பயணச்சீட்டு பதிவு செய்ய முடியும்:-) அதனால் தான் 3 மாதங்கள் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்)

மனைவி: இன்னைக்கு என்ன தேதின்னு தெரியுமா? நீங்க பாட்டுக்கு பேப்பர் படிச்சிட்டு உக்காந்திருக்கீங்க?
கணவன்: ஏம்மா? என்ன தேதி? (நம்மாளுக்கு என்னடா இது? மனைவியோட பிறந்த நாள மறந்துட்டோமா அப்படின்னு நம்மாளுக்கு ஒரு பயம்!)
மனைவி: எத தான் நீங்க நியாபகம் வெச்சிருக்கீங்க? சரி ஊருக்கு போகணும் டிக்கெட்ட மறந்துட்டீங்களா?
கணவன்: எப்போ போகறதுக்கும்மா? அடுத்த மாசம் போகறத்துக்கா?
மனைவி: (இந்த மனுஷன கட்டிக்கிட்டு #*#@)@) அது இல்லீங்க, அந்த பண்டிகைக்கு ஊருக்கு போகணும்ல மறந்தாச்சா?
கணவன்: சரி சரி சரி, (வேகம் மிகுதியில் கணிணியைத் தட்டுகிறார்) என்னம்மா? அந்த வெப்சைட் ஓபன் ஆக மாட்டேங்குது!
மனைவி: அந்த வெப்சைட்டையே குறை சொல்லிக்கிட்டு இருக்காம, சீக்கரமா புக் பண்ணுங்கப்பா....

ஒரு வழியாக போராடி அந்த கணவன் பயணச்சீட்டை முன்பதிவு செய்து முடித்து இருப்பார்!

மேலே கூறிய அனைத்து கதப்பாத்திரங்களும் உண்மையே! யோசித்து பார்த்தால், ஒவ்வொருவரும் பண்டிகை நாளுக்கு எப்படியாவது எல்லோருடனும் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதையே நினைத்து தயாராகி கொண்டிருப்போம். அனைவரும் வருகின்ற பண்டிகை நாட்களுக்கு முன்னதாகவே பயணச்சீட்டு வாங்கியிருப்பீர்கள். அனைவருக்கும் பண்டிகை கால வாழ்த்துக்கள்.

மறுபடியும் ஒரு பின் குறிப்பு: இப்போது பிரம்மச்சாரி நண்பர்கள் தான் முதலில் முன்பதிவு செய்வதாக கேள்விப்பட்டேன். உடம்பு ரணகளம் ஆகிடுதில்லப்பா.... எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது!

- MJV

2 comments:

vennirairavugal said...

நண்பரே நான் போன வருடம் வரை கடைசி நேரத்தில் கோயம்பேடு வந்து அடித்து பிடித்து செல்வேன் இந்த வருடம் முன் பதிவு செய்து விட்டேன்

MJV said...

@ vennirairavugal - வருகைக்கு நன்றி....நண்பரே திருமணம் நிகழ்ந்து விட்டதா இந்த வருடம்? இல்லை 'எவ்வளவோ நாளுக்குதான் உடம்பு ரணகளம் ஆகறதுன்னு' மாறிட்டீங்களா:-)