Tuesday, October 27, 2009

எல்லோரும் முதலில் எல்(போர்ட்) தானே!!!

குழந்தை பருவத்தில் எவ்வளவோ ஆசைகள், ஏக்கங்கள். இப்பொழுது நினைத்து பார்த்தால் சில பேருக்கு அந்த ஆசைகள் பூர்த்தி ஆகியிருக்கும். சில பேருக்கு பூர்த்தி ஆகாமல் இருக்கும். ஆசைகளைப் பொருத்த வரை அது பாகுபாடு அறியாது. நம்மால் தான் அதை பிரித்து பார்க்க முடியும். இப்படியாக எனக்கு இருந்த ஆசைகளில் ஒன்று நான்கு சக்கர வாகனம் (யெப்பா மகிழுது இல்லன்னா கார்னு சொல்லலாம்) ஓட்ட வேண்டும். எனக்கு சின்னதா இருக்கும்னு நானே நெனச்சிக்கிட்டு போட்ட கால் டிரவுசர் காலம் அது! அப்போ இருந்த எண்ணமெல்லாம், யாராவது கார் வெச்சிருக்காங்க பாத்தீங்களா, அவங்கள பார்க்கும் போது மட்டும் பொங்கி வரும் எண்ணம் அது....

அது ஏன்னா கார் வெச்சிருக்கவங்க சில பேர் அலம்பல் வேற தாங்க முடியதுட சாமி. அது ஒன்றும் இல்ல, இந்த சைடா வந்தேன். அதான் அப்படியே உங்கள பாத்துட்டு போலாம்னு அப்படியே வந்தேன். கார வேற செர்விசுக்கு கொடுத்திருந்தேன். என்னமா போகுது வண்டி, நீங்களும் ஒன்னு வாங்கிட வேண்டியதுதானே, இப்படி பல ஆடம்பரங்களைப் பார்த்ததாலேயே, கண்டிப்பா ஒரு கார் வாங்கி வீட்டில ஒரு முறை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் அப்பொழுதே தோன்றி விட்டது. மேலும் அந்த கார் என்ற விந்தை விடயத்தை நோக்கி என் பயணம் அப்போதே தொடங்கி விட்டது...

இதில் இடையில் ஒரு நாள் என் மாமா பையன், வண்டி ஒன்று வாங்கியிருந்தார். பழைய ஃபியட் கார் அது. வீட்டிற்கு எடுத்து வந்திருந்தாங்க. அதை அப்படியே பார்த்து கொண்டிருந்தேன். எனக்கு ஒரே ஆச்சர்யம்பா. ஏன்னா அவங்க வண்டிய நிறுத்தி சாவி எடுக்காமலே வீட்டுக்குள் அப்பா அம்மாவிடம் பேசிக்கிட்டு இருந்தாங்க. தேவை இல்லாமல் வாழைப்பழத்தைப் பார்த்து விட்ட குரங்கு போல, எனக்கு ஒரே பதட்டமா, இருந்தது. சரி ஒரு பொறுப்பான பையனா, அந்த வண்டி சாவிய எடுத்துட்டேன், வண்டியும் நின்னுடிச்சி! ( அப்போ கார் முன்னாடி ஓடிக்கிட்டா இருந்திச்சின்னு மொக்க கேள்வி எனக்கே கேக்கணும்னு தோணுது.... ஆனா வேணாம் வேணாம்!!!)

நான் கார நிறுத்திட்டேன் அப்படின்னு, 'யுரேகா, யுரேகானு' கத்தாத குறையா வீட்டுக்குள்ள வந்து அப்பா, அப்பா கார நிறுத்திட்டேன்னு, சொல்றதுக்கு முன்னாடியே, சூழ்நிலை அறிந்து, மகனை காக்கும் பொருட்டு அம்மா, சரி சரி இங்க வாப்பா, 'புள்ள தெரியாம நிறுத்திட்டான்' என்று கூற, எனக்கோ கோபம் சுல்லென்று தலைக்கு ஏறியது. பின்ன இருக்காதா, வாழ்க்கையில முதல் முறையா, கார்ல கைய வெச்சிருக்கோம், நமக்கு ஒன்னும் தெரியலன்னு அது எப்படி அம்மா சொல்லலாம்னு, அப்போவே உள்ள பதுங்கியிருந்த சாத்தான் பூதம் ( ஒரு பொருட்பன்மொழி மாதிரி வெச்சிப்போம் )விளக்கைத் தேய்க்காமலே வெட்ட வெளியில் உலவத் தொடங்கி விட்டது.


அதுக்கு அப்புறமாதான் எனக்கு தெரிய வந்தது, அந்த வண்டிய நிறுத்திட்டா, தள்ளி விட்டுதான் மறுபடியும் ஸ்டார்ட் பண்ண முடியும்னு!!! அப்புறம் என்ன எல்லாருமா சேர்ந்து தள்ள ஆரம்பித்தோம். இதுல வேற, சாலையோட போன ஒருத்தர்(ன்) என்ன சார், வண்டி இன்னும் ஸ்டார்ட் ஆகலையா? என்று நக்கல் விட, அப்பா அந்த வண்டியை தள்ளி அனுப்பி விட்டு, அவங்க துரத்த நான் ஓட, நான் ஓட அவங்க துரத்த, இரவு இனிப்பு பலகாரம் கெடச்சிது... எப்பொழுதெல்லாம் இப்படி நானும் எங்க அப்பாவும் துரத்தி விளையாடினால் கண்டிப்பாக இனிப்பு பலகாரம் உண்டு...

அன்று ஃபியட் என்ற அந்த மிகப் பெரிய நிறுவனம், ஒரு வாடிக்கையாளரை இழந்தது இன்று வரை அவர்களுக்கு தெரியாது. அந்த வண்டி மீது ஒரு வெறுப்பு!!! இருக்காதா பின்ன....

அப்புறம் படித்து முடித்து கல்லூரியில் சேர்ந்து படித்து (உண்மையிலேயே), சரி அப்போதாவது கண்டிப்பாக கத்துக்கணும்னு நினைத்து பார்க்கிறதுக்குள்ள, கல்லூரியும் முடிஞ்சே போச்சு. மிகப் பெரிய விடயமாக கார் ஓட்டுவது என் முன் பெரிதாகிக் கொண்டே சென்ற காலம் அது. அப்போ, நண்பர்களைப் பார்க்க சென்ற போது, சில நீர் ஆகாரங்கள் சப்பிட்டு கொண்டே (குடித்து கொண்டே) இருக்கும் போது, நண்பன் ஒருவன் சொன்னான், மச்சான் பேசாம, ஒரு ட்ரைவிங் ஸ்கூலா பாத்து சேந்துடு மச்சான் என்று, ஒரு தட்டு தட்டியதன் பலன், அடுத்த வாரமே அந்த ஸ்கூலில் சேர்ந்து ஆகி விட்டது. மறுபடியும் ஸ்கூலுக்கா என்பதை நியாபக படுத்தும்படியா, ஒரு கரும்பலகை வேற வெச்சிருந்தாங்க. அட என்னடா இதுன்னு நினைத்து கொண்டே, உள்ளே போய், சில பல காகிதங்களை கொடுத்து விட்டு, வாரம் இரு நாட்கள், சனிக் கிழமையும், ஞாயிற்று கிழமையும் வருகிறேன் என்று சொல்லி விட்டு வந்தேன். ஆரம்பிக்கிறப்பவே சனிக் கிழமையா என்று என் பகுத்தறிவு என்னை பதம் பார்த்தது!!!

விடுங்கப்பா விடுங்கப்பா, அப்படினு நினைத்துக் கொண்டே, நன்றாக கார் ஓட்டத்தெரிந்த ஒரு நண்பனை அலையில் அழைத்து, மச்சான், இந்த மாதிரி கார் கத்துக்க போறேண்டான்னு சொன்னவுடனே, 'டேய் இன்னும் கத்துக்கலையாட மச்சான்' என்ற எகத்தால பேச்சையும் தாண்டி, அவனிடம் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு, தெம்பாய் கிளம்பினேன் அடுத்த நாள் போருக்கு புறப்பட்டேன். என் மனைவியிடம் வாழ்த்தெல்லாம் பெற்றுக் கொண்டு!!!

முதல் நாள் பள்ளியில்லையா, ஓட்டுனர் ஆசிரியரிடம் அறிமுகப் படலமெல்லாம் முடிந்து அவர் கேட்டார், ' சார் சொல்லுங்க எந்த லெவலுக்கு தெரியும் கார் ஓட்ட' என்று கேட்டு வைக்க, என்னிக்கு தான் தெரியாதுன்னு ஒத்துக்க முடிஞ்சது. கொஞ்சம் ஓட்டிருக்கேன் என்று நன்றாக அவரிடம் ட்ரைன் ஓட்டிய பிறகு, அந்த நிமிடம் வந்தது, காரின் திசைத்திருப்பி சக்கரத்தை (ஸ்டியரிங் வீல்!!!) பிடித்தவுடன் நீண்ட நாள் கனவு நனவனாது. ஆனால் அதற்கு பிறகுதான் ஆப்பு நல்லாவே தயார் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. முதல் 3 வகுப்புகள் நமக்கு வெறும் திசைத்திருப்பி சக்கரம் மட்டும்தான் நம்ம பொறுப்புல கொடுக்கப்படும். அதுக்கே கார் சீட் நனஞ்சி போச்சு( யெப்பா வியர்வையால). அப்புறமா வந்தது முக்கியமான தருணம்.

வீட்டிலிருந்து கிளம்பும்போதே ஒரே டன்சன்... ஏன்னா அன்னிக்கி ஒரு படி மேல போய், அன்னிக்கி வேகசெலுத்தியை (ஆஃஸிலரேடர்:-)) என் வசம் கொடுக்கப்போவதாக ஆசிரியர் தெரிவித்து இருந்தார் அதற்கு முந்தைய வகுப்பில்... அதே படபடப்பில் வந்து காரை எடுத்து மெதுவாக அழுத்தி நகர்த்துங்கள் என்று சொல்லும்போதே, விறுட்டென்று தீபாவளி ராக்கெட் போல சீறி பாய்ந்தது கார். சார் சார் பொறுமையா பொறுமையா என்று என் பதடத்தை கொஞ்சம் அதிகப்படுத்தினார். சரி சரி நமக்கும் கார் ஓட்ட வந்துடுச்சின்னு நினைச்சி ஒரு 20 கிலோமீட்டர் மணிக்கு ஓட்டுவதிலிருந்து எனக்கு பதவி உயர்வு கொடுத்து, நீங்க 30 கிலோமீட்டர்ல ஓட்டுங்க அப்டின்னு சொன்னவுடனே, என்னமோ F1 ஓட்டுகிற மாதிரி ஒரு உணர்வு வரும் பாருங்க, ஓகோ.... ஆனால் அப்படி ஓட்டிக் கொண்டிருக்கும்போது, நெறைய மக்கள் நம்மைத் தாண்டி போகும்போது (சைக்கிளில்), அந்த வகுப்பின் ஆசிரியர் சொல்லுவார், ' சார் இப்போ நமக்கு பாலன்ஸ்தான் சார் முக்கியம் அப்புறமா வேகமா போலாம்' என்பார். கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.

இப்படியே 8 வகுப்புகள் முடிந்து விட்டன. இத்தனை வகுப்புகளில், நீங்கள் வண்டியின் எல்லா பாகங்கள் பற்றியும் அறிந்து கொண்டிருப்பீர்கள். ஆஃஸிலரேடர், ப்ரேக், க்லட்ச், கியர், வைபர், இண்டிகேடர் என்று சகலமும் அத்துப்படி ஆகி விடும்... 9 ஆவது வகுப்பில், வண்டியை பின்னால் எடுப்பது மற்றும் மேடான பகுதியில் செல்லும் போது வண்டி பின்னால் வராமல் எப்படி எடுப்பது போன்ற பாடங்கள் அன்று நடந்தேறப்போவதாய் சொல்லியிருந்தார். பின்னால் எடுப்பதெல்லாம் நன்றாக செய்தேன். இந்த குழுவிலேயே நீங்க தான் சார், டக்கு டக்குன்னு சொல்றத புரிஞ்சிக்கிட்டு செய்யறீங்கனு வேற சொல்லிட்டார். நமக்கா முடியல. சரி அடுத்ததா, மேட்டில் நிறுத்தி பாருங்க சார், கரைக்டா க்லட்ச விட்டு எடுங்க பாப்போம் அப்படின்னு சொன்னதுதான் தாமதம். வண்டி பிச்சிக்கிட்டு போச்சு பாருங்க, பின்னால எறங்கிடுத்து. என்ன பண்றது? 2 3 4 5 10 முறை எடுத்து பாத்தாச்சு. வண்டி மேல போகவே இல்ல. அவரும் பொறுத்து பொறுத்து பாத்துட்டு விடுங்க சார், இன்னொரு முறை கத்துக்கலாம்னு விட்டுட்டாரு. நான் முடிவு பண்ணியாச்சு, இது கஷ்டம்தான்னு....

இதெல்லாம் நடக்கறதுக்கு முன்னாலயே கற்றுக் கொள்வோரின் உரிமம் எடுத்து முடிச்சிட்டுதான் ஓட்டவே கொடுத்தாங்க கார!இந்த வகுப்பும் முடிந்து, ஓட்டுனர் உரிமம் எடுக்கும்போது ஒரு அள்ளு கெளப்புவானுங்க பாருங்க. அன்றைக்கு காலையில், நன்றாக உடையெல்லாம் உடுத்தி அந்த இடத்திற்கு சென்றாகி விட்டது (நேர்முகத் தேர்விற்கு கூட இப்படி கிளம்பியதில்லை). அதிகாரி வந்து விட்டார் என்று ஒருவர் கூடத்தில் சொல்ல, எல்லோர் முகத்திலும் ஒரு பரபரப்பு. நாம் கத்து கொண்ட காரையே எடுத்துட்டு வரணும். ஏன் இவ்ளோ நேரம் ஆக்குறாங்க, அந்த அதிகாரி ரொம்ப கண்டிப்பானவர், இந்த தெருவில் அப்படியே பின்னால போக சொல்லி வண்டிய நிறுத்திடுவாங்க. இப்படி பல விடயங்கள் பேசி கொண்டிருந்தார்கள்!!!

சரி என்று காத்திருந்து என்னை கூப்பிட்ட போது ஒரு 2 மணி நேரங்களை தின்றிருந்தேன். போனவுடன், எனக்கு முன்னால் இருந்தவருக்கு முதல் கியர் போட்டு சற்று நகர்த்தி நிறுத்துங்கன்னு சொல்லிட்டு அந்த ஆப்பீசர் போய் விட்டார். அடுத்த அதிகாரி வந்து, சார் வண்டில ஏறுங்கன்னு சொல்ல, நானும் அந்த முதல் கியர் நப்பாசையில் பார்க்க, சார் அப்படியே நெரே போய் அந்த சாலையைத் தாண்டி ஒரு சுத்து சுத்தி இங்க வந்துருங்க என்றார். எனக்கு தலையெல்லாம் சுத்திடுச்சி. ஒரு வழியா சுத்தி முடிச்சி, வண்டிய நிறுத்திட்டு எறங்கினேன். தாங்க் யு சார் என்று சொல்லி விட்டு நகர்ந்தேன். அங்கே இருந்த ஒரு நோட்டில் கையெழுத்து இட செய்தார்கள். அப்படி என்றால் ஆத்தா எனக்கு லைசன்ஸ் கெடச்சிடுச்சின்னு அர்த்தமாம்!!!

ஆக இதையெல்லாம் தாண்டி இப்போ 2 வருடங்களாய் மாருதி நிறுவனத்தின் ஸ்விவ்ஃப்ட்
ஓட்டி கொண்டிருக்கிறேன். ரொம்ப நல்லாவே ஓட்ட பழகியாச்சி. முக்கியாமா, மேட்டில் நிறுத்தி எடுக்கும் வித்தையெல்லாம் இப்போ ஜுஜுபீ!!! அதனால் இன்னும் கார் கற்று கொள்ள வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்கள் ஒன்னும் யோசிக்காதீங்க. நம்பிக்கையோட பாதுகாப்பா ஓட்டுங்கப்பா... ஆனால் இந்த பம்மல், அள்ளு எல்லாம் கொஞ்சம் நல்ல ஓட்டுகிற வரையில்தான். அப்புறம் பறக்க வேண்டும் என்று எனக்கும் எல்லோருக்கும் தோன்றும். நான் அப்படி பறந்ததெல்லாம் உண்டு. அதனால் கற்றுக் கொண்டு பிரகு ஓட்டுங்கள், ஒரு நிமிடம் நின்று சென்றாலும், போகும் இடத்திற்கு பத்திரமாய் சென்றடைவதுதான்பா முக்கியம்....

- காவிரிக்கரையோன் MJV

No comments: