Saturday, November 28, 2009

எழுநூற்றி பதினொன்று புள்ளி ஒன்பது.....

ஒரு நண்பனின் திருமணத்திற்கு தவிர்க்க முடியாத காரணத்தால் போக முடியவில்லை. ஆனால் அவனது வரவேற்பு நிகழ்வுக்கு போகலாம்னு முடிவெடுத்து, என்னுடைய காரில் 4 நண்பர்கள் கல்பாகத்திற்கு சென்றோம். அதில் அனைவருமே என் கல்லூரி நண்பர்கள் தான். அதில் 2 நண்பர்களை சந்தித்து சிறிது நாட்கள் ஆனதால் அவர்களோடு நிறைய பேசிக் கொண்டே சென்றோம். அதில் நடந்த சில சுவாரசியங்களை ஆனந்த விகடன் பாணியில் ஹிட்டு, குட்டு மற்றும் ஷொட்டு என்கிற வகையில் கொடுக்கிறேன்.


ஹிட்டு

காலையில் சுமார் 5.15 மணிக்கு பெங்களூரில் கிளம்பி, கிருஷ்ணகிரிக்கு கொஞ்சம் முன்னரே வந்து விடும் அந்த உணவகத்துக்காக தான் எல்லோரும் காத்துக்கொண்டிருந்தோம். நான் தான் கார் ஓட்டிக் கொண்டிருந்தேன். அந்த உணவகத்தில் பொங்கல் மிகவும் அற்புதமாக இருக்கும். நிறைய முறை அங்கே உணவு உண்டிருக்கிறோம். அந்த பொங்கலுக்காகவே நிறைய கூட்டம் வருவதுண்டு. மேலும் அந்த தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகங்களில் இந்த உணவகம் கொஞ்சம் அசத்தல். 2 நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் சொன்னதை நம்பி அந்த உணவகம் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்ற நப்பாசையில்!, உள்ளே சென்று என்ன இருக்கு சாப்பிட என்று கேட்க, கல்லாவில் இருந்தவர், எங்களை ஏறெடுத்து கூட பாராமல் 7 மணிக்குதான் சாப்பாடு ரெடி ஆகும் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க சார்னு சொல்ல, அசடு வழிந்து எல்லோருக்கும் காப்பி சொல்லி குடித்து விட்டு, எப்பாடு பட்டாவது, பொங்கல் அதுவும் நல்ல பொங்கல் சாப்பிட்டு விட வேண்டும் என்ற விடா முயற்சி (எப்படி இங்கெல்லாம் நாங்க விடாம முயற்சி செய்வோம் பாத்துக்கோங்க) கொண்டு பயணித்தோம்.

சுமார் 8, 8.30 மணிக்கு வேலூர் வந்தடைந்தோம். அங்கே உள்ள ஆ வில் ஆரம்பிக்கும் ஓர் உணவகத்தில் பொங்கல் நன்றாக இருக்கும் என்று நண்பன் சொல்ல, வண்டியை ஓரமாக பூட்டிவிட்டு, உள்ளே நடை கட்டினோம். சர்வரிடம் முதலில், 3 பொங்கல், 3 வடை என்றோம். இன்னொரு நண்பனுக்கு சாம்பார் வடை சொல்லி விட்டுக் காத்திருந்தோம். சும்ம சுட சுட வந்த பொங்கலை ஒரு கைப் பார்த்து விட்டு, வெகுவாக சாப்பிட்டு முடித்திருக்கும் பொழுது, உண்ட களைப்பில் நாங்களும், ஆர்டர் எடுத்த களைப்பில் சர்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு நண்பன் பில் கொண்டு வாங்க என்று சொன்னான். "சார், சார்" என்றார். சொல்லுங்க என்றோம். "கோச்சிக்கலன்னா கொஞ்சம் எவ்வளவு பொங்கல்னு சொல்லுங்க சார்" என்றார் சர்வர். மொத்த ஆர்டர்ல லேசா கொஞ்சம் குழப்பம் இருக்கு சார்! அந்த கேள்விக்கு விடை, "8 பொங்கல், 3 வடை, 1 சாம்பார் வடை, 3 தோசை, 2 பூரி, 1 காபி, 1 டீ"!!! இதெல்லாம் யோசிச்சிட்டு எங்களுக்குள்ள, சர்வர்கிட்ட சொல்றதுக்கு முன்னாடியே, என் நண்பன், " நாங்க சொல்ல மாட்டோமே, நீங்க கண்டு பிடிங்க " என்று சொல்ல, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, அன்று காலை உணவிற்கு மொத்தம் 280 ரூபாய் கொடுத்து விட்டு வந்தோம்!!!!! ஹிட்டு - பொங்கல் செம ஹிட்டு:-)

குட்டு
சரி நல்ல படியாக, நண்பனின் வரவேற்புக்கெல்லாம் சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்ப தொடங்கி இருந்தோம். கல்பாக்கத்தில் இருந்து, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் வழியாக தேசிய நெடுஞ்சாலை 46 ஐ (NH - 46) சென்றடைய முடியும். ஒரே நாளில் கல்பாக்கம் சென்று அன்றிரவே திரும்ப வேண்டிய கட்டாயத்தில் அனைவருமே இருந்தோம். ஒரு வழியாக டீசல், உணவு, இசை என்று எல்லாவற்றையும் சரி செய்து விட்டு, வேகம் எடுக்க தொடங்கி இருந்தேன், கல்பக்கம் - செங்கல்பட்டு மாநில நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தோம். ஒரு லாரி வெகு நேரமாக எங்களுக்கு முன் சென்று கொண்டிருந்தது. சரி இப்படியே லாரிக்கு பின்னால் சென்று கொண்டிருந்தால் விடிந்து விடும் என்று நினைத்து, அந்த லாரியை முந்த நினைத்து அதற்கான ஆயத்தங்களில் இறங்கினேன்( சிறிது வேகம் கூட்டிக் கொள்வது, விளக்கை ஹை பீம் மற்றும் லோ பீம்களில் அடித்து காண்பிப்பது என்றெல்லாம்). லாரி ஓட்டுனர் ரொம்ப நல்லவர், சட்டென்று வழி கொடுத்தார். சட்டென்று பறக்கும் வேகத்தில், ஒலி எழுப்பிக் கொண்டு ஒரு வண்டி, எங்களையும் தாண்டி சாலையின் வலது ஓரத்தில் சென்று மறுபடியும் வேகமாக இடது ஓரமாக ஒதுங்கியது. ஒதுங்கியதில் கட்டுப்பாட்டில் இல்லாமல், வயலுக்குல் சென்றிருக்கும், ஏதோ அந்த ஓட்டுனர் சமாளித்து, எங்களை போகுமாறு கை அசைத்தார்.

சரி என்று வண்டியை கிளப்பிக் கொண்டு சென்று கொண்டிருந்தோம். திடீரென்று வீறிடும் விசில் சத்தங்கள், மற்றும் எங்களை நோக்கி செய்கை காட்டி கொண்டே அதே வண்டி எங்களை படு வேகத்தில் தாண்டி சென்றது. சரி ஒரு கை பார்த்து விடலாம் என்று வண்டியை விரட்டிய பொழுது, ஓரிடத்தில் அந்த வண்டி வேகம் குறைத்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளே சின்னஞ்சிறு குழந்தைகளும், ஒரு குடும்பமும் சென்று கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து விட்டு, "அட ஏண்டா அவன் இப்படி ஓட்டிட்டு போறான், விடு ஃபேமிலியா போறாங்க, ஏதோ ஒரு சந்தோஷம் அவங்களுக்கு, நாம விரட்ட போய், எதாவது ஆகிடுசின்னா" என்றான் என் நண்பன். "ஒரு மோசமான ஓட்டுனரிடமிருந்து நீ தப்பிக்க, ஒன்று நீ மெதுவாக சென்று அவனுக்கு வழி விடு, இல்லை அவன் கண்ணிலிருந்து காணாமல் போய் விடு என்று யாரோ சொன்னது மீண்டும் ஒலித்தது!!! (If you want to escape from a dangerous driver, Either Leave him or Lose him). குட்டு - குழந்தைகள் மற்றும் பெண்களை வைத்துக் கொண்டு அவ்வளவு அலட்சியமாக ஓட்டிய அந்த கார் ஓட்டுனருக்கு:-(

ஷொட்டு
சரி இந்த ஏழரையை முன்னால் விட்டு விட்டு, செங்கல்பட்டு - காஞ்சீபுரம் மாநில நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருந்தோம். நல்ல கும்மிருட்டு. அதில் வண்டியின் விளக்கை ஒரு முறை நிறுத்தியெல்லாம் பார்த்து எந்த அளவுக்கு திகிலான ஒரு சாலையில் பயணிக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டு சென்று கொண்டே இருக்கிறோம். திடீரென்று என் நண்பன் ஒருவன் சொல்கிறான், "மச்சான் ரோட்டோரமா யாரோ விழுந்து கெடக்காண்டா" என்று. " என்னடா இவ்வளவு இருட்டா இருக்கு, உனக்கு மட்டும் எப்படி தெரிஞ்சிது" என்று கேட்டுக் கொண்டிருந்தாலும் வெகுவாக வண்டியின் வேகத்தை குறைத்து விட்டேன். அது குறுகலான சாலை என்பதால், திருப்ப முடியாது வண்டியை, அதனால் யாராவது 2 பேர் பாத்துட்டு வாங்க என்று சொன்னேன். இருந்தாலும், சுத்த இருட்டு. சரி மனசு கேக்கல. கொஞ்ச தூரம் சென்று வண்டியை திருப்பி கொண்டிருக்கிறோம். இன்னொரு நண்பன், மச்சான் வேண்டாம் பேசாம, போலீசுக்கு போன் பண்ணிட்டு கெளம்பலாம் என்றான்.

சரி அதுக்கு உண்மையிலேயே யாரவாது கெடக்காங்களான்னு பாத்துட்டு இருந்தா போன் பண்ணிட்டு கெளம்பிடுவோம்.(கவனிக்க வேண்டிய விடயம். சில சமையம் இப்படி பரிதாபப்பட்டு திரும்பி போய் பார்த்த கார்களில் இருந்தவர்கள் தான் இடித்து விட்டார்கள் என்று உள் குத்து வைத்து நெம்பிய விடயத்தையும் கேள்வி பட்டிருக்கிறோம்) நாங்கள் வேகமெடுத்து போய் பார்க்கும் நேரத்தில், 3 பேர், 2 சக்கர வாகனங்களில் வந்தவர்கள் பார்த்து ஆள் ஆளுக்கு ஒன்று சொல்ல ஆரம்பித்தனர். அதில் ஒருவர் வேகமாக, கீழே கிடந்தவரின் கையை பிடித்து பார்த்து விட்டு, உயிர் இல்லை என்று அறிவித்தார். எங்களுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் சரி இவ்வளவு தூரம் வந்தாகி விட்டது என்று அலைபேசியில் எண்களை சுழற்றும் அளவுக்கு சென்றாகி விட்டது. அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒருவர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, சட்டென்று கீழே கிடந்தவரின் முகத்தில் 2 அரை விட்டார். சட்டென்று எழுந்தார் இந்த ரெஸ்ட்லிங்க் பார்க்கிறவர்களுக்கு தெரிந்திருக்கும், அண்டர் டேக்கர் போல எழுந்தமர்ந்தார்.

என்னய்யா இங்க கெடக்கன்னு கேட்டா?, சார் சும்மா சரக்கு சார், அதுக்குள்ள என்னா சார் போன்லாம் பண்றீங்க என்று அந்த குடிமகன் எங்களைக் கலாய்க்கத் தொடங்கி இருந்தார். எக்கேடோ கெட்டு ஒழி என்று சபித்து விட்டு, அந்த நாடி பிடித்த நபரை எல்லோரும் ஒரு முறை தேடி விட்டு வண்டியை கிளப்பிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். ஷொட்டு - ஒரு வேலை உண்மையிலேயே உயிருக்கு போராடி ஒருவர் விழுந்து கிடந்திருந்தால்? சரி போய் பார்த்து விட்டு தான் வருவோமே என்று சொல்லிய என் நண்பனுக்கு!!!

- காவிரிக்கரையோன் MJV


பி.கு - இந்த இடுகையின் தலைப்புக்கும் உள்ள இருக்கிற விடயத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பவர்களுக்கு - இந்த பயணத்தில் மொத்தமாக நாங்கள் பயணித்த தூரம் கிலோமீட்டர் அளவீட்டில்!!!!!!

நான், அவள் மற்றும் அவன்....

சில்லென்று வீசும் காற்றைக் கிழித்துக் கொண்டு வேகமெடுத்தது அந்த மின்சாரத் தொடர் வண்டி. சட்டென தோன்றிய மின்னலும், தொடர் வண்டியின் அதீத வேகமும் என் சிந்தனையை சன்னல் பக்கமிருந்து வண்டிக்குள்ளே திருப்பியது. பல காலியிடங்கள் இருந்தாலும், பயணச்சீட்டு வாங்க முடியாததால் எப்பொழுதும் கீழேயே அமர்ந்து வரும் அவனை சென்ற மாதம் வரை எனக்கும் தெரியாது. அந்த நாள் நினைவின் அழியாப் பிரதியாய் என் மனதின் ஆழத்தில் குடில் போட்டு அமர்ந்திருந்தது. காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா போன்ற சித்தாந்தங்கள் பேச வைத்த நாள் அது.

சரி இன்னும் எப்படியும் 1 மணி நேர ஓட்டத்திற்கு பிறகுதான் நாம் இறங்கப் போகிறோம் என்ற நினைவு உள்ளே நுழைய, நிகழ்காலம் என்னிடமிருந்து விடை பெற்று, சென்ற மாதம் அந்த நாளுக்குள் நுழைந்தது. அன்று எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும், இந்த வண்டி சற்று கூட்டம் கம்மியாக ஓடிக் கொண்டிருந்தது. அவனும் அங்கே இருந்தான். சனி பகவான் அன்று என்னவோ தெரியவில்லை அவன் இருக்கும் இடத்தை அடமாக ஆக்கிரமித்து கொண்டார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பறக்கும் படை எங்கள் பெட்டியில் அன்று வெகுவாக பல பேரைப் பின்னலாம் என்று வந்திருப்பார்கள். பாவம் சற்று ஏமாற்றம்தான் அவர்களுக்கு. அப்போதுதான் அவன் அவர்களிடம் சிக்கினான். சின்ன பின்னப் படுத்தி கொண்டிருந்தார்கள். கேசம் கலைந்து பாலைவனம் ஆன அவன் உடலுக்கும் அவன் நடத்தைக்கும் சிறிது கூட சம்பந்தம் இல்லை. மெல்ல மெல்ல அவன் சித்த சுவாதீனம் இல்லாதவன் என்பதை புரிந்து கொண்டும் அவனை அவர்கள் விடவில்லை.

இதுவரை இதை பார்த்துக் கொண்டிருந்த நான், இவங்களுக்கு வேற வேலை கிடையாது என்று மீண்டும் இயற்கை புத்தகத்தில் தலை நுழைத்தேன். பாதி பாதியாய் நின்றிருக்கும் அந்த கட்டிடங்கள் தான் இயற்கை புத்தகத்தை நாமே கிழித்து எறிந்ததற்கு சான்றாய் நின்றிருந்தன. சரி என்ன நடந்தது என்று திரும்பி பார்க்கையில் அவனை இறக்கி கொண்டிருந்தார்கள். சட்டென்று வந்த அழுகை சத்தம் எங்கே என்று தெரியாமல் திரும்பி பார்க்கையில் அவளின் அலைபேசியின் அழைப்பு என்று தெரிந்து திரும்பி கொண்டேன். இருந்தாலும் அந்த முகத்தை எங்கோ மறக்கக் கூடாதென்று பதியம் போட்டதாய் ஒரு நினைவு. சற்று என் மூளைக்கு அந்த கணத்தில் அதிக வேலைப் பளு கொடுக்கப்பட்டது என்னவோ உண்மைதான். சிறிது நேர யோசிப்பு படலம் முடிந்த பின், அவள் எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த கீதா என்று உரைத்தது. அட இவர்கள் வீடு காலி செய்து போய் சுமார் 7 வருடங்கள் இருக்குமே. சரி இவ்வளவு மூளைக்கு சலவை செய்யும்போதே அவளும் நானும் நல்ல நண்பர்கள் என்பதை நிரூபிக்க அவளிடம் பேச எத்தனிப்பதற்குள் அந்த தொடர் வண்டி நான் வர வேண்டிய இடத்தில் நின்று விட்டது. கீதா என்று சுற்றிப் பார்த்து பார்த்து தலை சுற்றியதுதான் மிச்சம்.

சரி இதே வண்டியில் தானே பிரயாணம் செய்கிறாள், மறு முறை பார்க்கும் போது பேசிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கிளம்புகையில் அவனும் அந்த தொடர்வண்டி நிலையத்தில் தென்பட்டான். இப்படியே யோசித்து யோசித்து ஒரு மாதமே கழிந்து விட்டது. அவளைப் பார்த்த பாடும் இல்லை. நீ எல்லாம் ஒரு மனுஷனா என்று என்னைப் பார்த்து என் மனசாட்சியே மிரட்டும் அளவுக்கு கீதா என் உள்ளத்தை ஆக்கிரமித்து இருந்தாள். "காதலா காதலா" குரல் கேட்டுத் திடுக்கிட்டு திரும்பினேன், அட என் மனசாட்சி தான். மறுபடியும் சிரித்துக் கொண்டே "உனக்கு கீதா மேல் காதலா காதலா" என்று மறுபடியும் கேட்க, இது சரி வராது என்று மீண்டு, மீண்டும் என் கவனத்தை இன்று சன்னல் பக்கம் திருப்பினேன்.

"நீங்க ரகு தானே?" அடங்க மாட்டியே நீ என்று மனசாட்சியைத் திட்டிக் கொண்டே திரும்புகையில், 50 கிலோ சக்கரை இனிப்பை சட்டென்று ஒரு நொடியில் சுவைத்தது போல் இருந்தது எனக்கு. "ஆமாம் நீங்க?", இதுக்கு கண்டிப்பா, எங்காளு என்னை வாங்கு வாங்கென்று வாங்குவார்(என் நிழல்... அதான் மனசாட்சி!). "நான் தான் கீதா உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்தேனே! பெரிய வேப்ப மரம் ஒன்னு இருக்குமே அதெல்லாம் இருக்கா இப்போ?" பேசும் கண்களும், சுழலும் பேச்சுமாக, கீதா கேட்டுக் கொண்டிருந்தாள். "எல்லாம் அப்படியே தான் இருக்கு. நல்லா இருக்கோம் நாங்க எல்லோரும்." என்று சொல்லிவிட்டு, (கேக்காமலேயே ஏண்டா இதெல்லாம் சொல்ற? என்று என்னையே கடிந்து கொண்டு) மெல்ல சிரித்து "நீங்க எங்கே இருக்கீங்க?" என்று கேட்க "என்ன வாங்க நீங்கன்னு, கொஞ்சம் அதிகமா தெரியல" என்று பேசி முடிக்கவும் இந்த பாழாப் போன என் நிறுத்தம் வரவும் சரியாக இருந்தது.

சடக்குன்னு என் அலைபேசியை எடுத்து, உன் நம்பர் கொடு என்று, கீத் என்று பதிய வைத்தேன். நாளைக்கு பார்ப்போம் என்று சொல்லி விட்டுப் பறந்து போனாள். அடுத்த நாளும் வந்தது. கீத்தும் வந்தாள். அடப் பாருடா, ம்ம்ம் "கீத் ஆம்ல" கொக்கரித்தார் மனசாட்சி. வழக்கம் போல் பேச ஆரம்பித்தோம், நிறைய பேசினோம். இப்படியே நெருங்கிய நண்பர்களாய் மாறிப் போனோம் கீத் இன் "கூற்றுப்படி". சரி எவ்வளவு நாள் தான் நாமும் சொல்லாம விடறது. அப்பா அம்மால்லாம் வேற, பொண்ணு பாக்க போறோம்டா உனக்குன்னு சர மாறியாக சரம் வைத்துக் கொண்டிருந்தனர். சரி இன்றைக்கு கண்டிப்பா சொல்லிடனும் என்ற முடிவுடன் அலுவல்கள் முடிந்ததும், தொடர் வண்டியில் ஏறினேன்.

அன்றைக்கு அவனைக் காணவில்லை. சரி வேறு வண்டி பார்த்து கிளம்பியிருப்பான் என்று நினைத்துக் கொண்டேன். கீத் ஏறும் நிறுத்தம் வர இன்னும் 10 நிமிடங்கள் இருக்கும். இயற்கை புத்தகத்தில் இருக்கும் மிச்ச சொச்சங்களையும், சொச்ச மிச்சங்களையும் பார்ப்போம் என்று சன்னல் பக்கம் பார்வையை அனுப்பினேன். கீத் என்ற தேவதை என்றெல்லாம் பேசும் போது அவள் சட்டென்று சிரிப்பாள். அதிலேயே பாதி வெற்றியை கவர்ந்து கொண்டு இருமாப்பாய் இருப்பாள். உண்மையிலேயே இப்போ சொல்லிடுவோம் என்று நினைக்கும் போதெல்லாம் அவள் கண்களிடம் தோற்று அடங்கி விடுவேன். சரி இன்னொரு நாள் போர்த் தொடுப்போம் என்று. சட்டென்று அழைப்பு மணி அடித்தார் போல், நடப்பு காலத்திற்கு வந்தேன். என்ன இன்றைக்கு வரவில்லை? அவளின் நிறுத்தம் கூட கடந்து விட்டது போல் இருக்கிறதே? சரி அவள் அலைபேசிக்கு அழைப்போம் என்றால், அட அதன் இயக்கம் நின்று போய் இருக்கிறது. சரி சிறிது நேரத்தில் மீண்டும் அழைப்போம் என்று என் நிறுத்ததில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.

மறுபடி அழைத்தேன். ஒரு குரல் பதட்டமாய் பதில் சொன்னது, " கொஞ்சம் நிலைமை சரி இல்லை. நல்லா அடிப்பட்டிருக்கு " உடனே வாங்க ராகா ஹாஸ்பிட்டலுக்கு. அலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஒன்றும் புரியவில்லை எனக்கு. அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனையோ, செயல்பாடோ இல்லை. அப்போது அவனைப் பார்த்தேன். "போ போ போ" என்று என்னை பார்த்து கத்தி விட்டு அழத் தொடங்கினான் அவன். எங்கே போவது என்று தெரியாமல், மூளையில் சிக்கித் தவித்தது என் எண்ண அலைகள். சற்று சுதாரித்தவனாய், எழுந்து ஓட ஆரம்பித்து இருந்தேன். ராகா, ராகா என்ற அந்த 2 எழுத்தை மந்திரம் போல் சொல்லிக் கொண்டே ஓடினேன். மீண்டும் கீத் இன் எண்ணுக்கு அழைத்தேன். நல்ல வேலை அந்த அழுகை சத்ததைக் காட்டி கொடுத்தது. 2 பெண்கள் நின்று இருந்தார்கள்.

"நீங்க தான் ரகுவா?" ஆமாம் என்பது போல் தலை அசைத்தேன். "அவளோட அம்மா அப்பாக்கு சொல்லிட்டோம். அவங்க வந்துட்டே இருக்காங்க". இடியாய் இறங்கிய இந்த வார்த்தைகள் பாதி இருதைய துடிப்பை என்னில் அடக்கியது. அவளப் பாக்கலாமா? அறை எண் 201 இல் இருப்பதாக தெரிவித்தனர். கதவைத் திறந்தவுடன் என் மீதி இருந்த கொஞ்ச துடிப்பும் நின்று விடும் தருவாயில் இருந்தது. அப்போது சட்டென்று என்னை ஒரு கரம் பற்றி இழுத்தது. கீத் தான் அது. ஓடி சென்று கட்டி அணைத்தேன். வழிந்தோடிய இருவரின் கண்ணீரும், எங்கள் காதலுக்கு சாட்சி கையெழுத்து இட்டன.

என்ன நடந்தது என்று கேட்ட போதுதான், அந்த பையில் இருந்த கடிதத்தையும் என்னவளின் கரம் பட்டு இன்னும் சிவந்திருந்த ரோஜாக்களையும் எடுத்து கொடுத்து மீண்டும் ஒரு முறை என்னை கட்டி அணைத்தாள். அன்று அவளும் என்னிடம் காதல் சொல்லிட வேண்டும் என்று அவசரம் அவசரமாக வந்த போதுதான் ஒரு விபத்தில் சிக்கி இருப்பதும், அவளுடைய நண்பிகள் கூட இருந்ததால் உயிர் பிழைத்தேன் என்றும் கூற கூற எனக்கு கண் பார்வை சற்று மங்களாக தொடங்கியிருந்தது விழி நீர் மறைத்ததால்.

சரி அழாதேம்மா என்று அவளைத் தேற்றி விட்டு அவளின் நண்பிகளிடம் சொல்லி விட்டுக் கிளம்பினேன். அடுத்த நாள் வருவதாகவும், அது வரை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் சொல்லி விட்டுக் கிளம்பும் பொழுது, என் மனசட்சியின் வேலையை கீத் இன் நண்பிகள் செய்யத் தொடங்கினர்! அடுத்த நாள் என் நிறுத்தத்திற்கு வந்த போது, அவனை மீண்டும் பார்த்தேன். சட்டென்று அவனை பற்றி அந்த டீ கடைக்காரரிடம் கேட்கத் தோன்றியது. அவர் சொன்னார், " அதுவாப்பா, அவனும் ஒரு பொண்ணும் ரொம்ப நெருங்கி பழகினாங்க போல இருக்கு, ஒரு 2 வருஷத்துக்கு முன்னாடி தோ, அதே இடத்துல அந்த பொண்ணு லாரி ஒன்னு மோதி செத்துடிச்சிப்பா. அதுலேந்து அவன் இங்க தான் சுத்தறான்,அத விடுப்பா ". அவனை பார்த்து என்ன செய்வதென்றோ சொல்லுவதென்றோ தெரியவில்லை. வேகமாய் "2 பன் ஒரு டீ அண்ணே" என்று சொல்லி அதை அவனிடம் கொடுத்து விட்டு கீத் ஐப் பாஅர்க்க மருத்துவமனை நோக்கி பயணப்பட்டேன்.

- காவிரிக்கரையோன் MJV
பி.கு - இந்த கதை “செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் பரிசுப் போட்டி இக்காக எழுதப் பட்டது!!! அப்படியே இவரு வெறும் போட்டிக்கு மட்டும்தான் எழுதுவாரு அப்படின்னெல்லாம் சொல்லப்டாது!!!!!

Friday, November 27, 2009

வாய்ப்பு வழங்கிய சர்வேசன்500 நச் கதை போட்டி - 2009 க்கு நன்றி!!!

நேரம் கிடைக்கும் பொழுது, ஒரு இடுகையை போட்டோமா, அங்க அங்க போய் பின்னூட்டம் போட்டோமான்னு இருந்த என்னையும், ஒரு கதை எழுதிதான் பாரேண்டா என்று ஒரு ஊக்கத்தை கொடுத்து என்னை போல் இன்னும் பலருக்கும் இந்த ஆவலினை தூண்டி எழுத வைத்த சர்வேசன் கண்டிப்பாக பாராட்டுக்கு உரியவர்.

சரி இந்த கதை விட்டுதானே பழக்கம், இதெல்லாம் வேலைக்கு ஆகுமான்னு யோசிச்சிக்கிட்டே இருந்த பொழுது, மறுபடியும் அந்த இடுகையை பார்த்தால், நவம்பர் 15 ஆம் தேதி தான் என்று சொல்லி ஒரு பீதிய கிளப்பி விட்டாங்க. சரி ஆனது ஆகட்டும், கண்டிப்பா ஒரு கதைய எழுதி கொடுக்கணும்னு சும்மா முரட்டு தனமால்லாம் இல்லாம!!! யோசிச்சி ஒரு கதையை
இயந்திரம். அந்த போட்டிக்கு அனுப்பி வைத்தேன்!!!

அங்க போட்டியும் பலமாகவே இருந்தது... சரியாக 70 கதைகள் களமிறங்கின. சரி விடுங்கப்பா கண்ண கட்டுது இப்போவேன்னு நெனச்சிக்கிட்டு சில கதைகளை படிக்க ஆரம்பித்தேன் இங்கிருந்து
70 ஒரு ஒரு கதையும் ம்ம்ம் கிளப்புங்கள் என்று இருந்தது.

இறுதியில், சர்வேசன் மற்றும் சென்ஷி ஆகியோர் சேர்ந்து, மொத்தம் 20 கதைகளை இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுத்து விமர்சனங்களுடன் வெளியிட்டனர். பார்த்தால் என் கதையும் அந்த பச்சை வண்ண சாயம் பூட்டி இருக்கிறது
Top 20 !!!! ஒரே சந்தோஷம் சரி, நம்ம கதையும் அங்கே வந்துடிச்சி என்று!


இப்பொழுது முதல் 2 கதைகளை தேர்ந்தெடுக்க சர்வே இங்கே நடக்கிறது - சர்வே!!! இங்கே சென்று எல்லா கதைகளையும் படிங்க. நல்லா இருக்கிற கதைக்கு (கதைகளுக்கு) உங்கள் பொன்னான வாக்குகளை பதிவு செய்யுங்கள்.... என் கதை நல்லா இருந்தா எனக்கும் ஒரு ஓட்டு போடுங்க:-) எல்லா கதைகளையும் படித்து பாருங்க....


இங்கே சென்று மேலும் நான் செய்திருக்கும் இன்னும் சில சோதனைகளை சகித்து கொண்டு -பாருங்கள்:-) சிறுகதை...

- காவிரிக்கரையோன் MJV

Tuesday, November 24, 2009

குறுங்கவிதைகள்...

சாமி
சாமிக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?
காது கிழிய ஒலிபெருக்கியில் எங்கோ ஒரு குரல்,
"சாமி கல்லா உக்காந்திருக்கு,
நாம கல்லா நடமாடறோம்"
சொல்லி சிரித்தால் போன வாரம்
சாதி கலவரத்தில் மகனை பறிகொடுத்த மூதாட்டி....

தன்னம்பிக்கை
நேற்று முன் தினம் மெல்ல
காதலை அவளிடம் சொல்லி,
நேற்று அவளின் பதிலுக்காக காத்திருந்து
வரவில்லை என்றவுடன்,
இன்று எழுதினேன் ஒரு கடிதம் அவளுக்கு,
"அன்புள்ள மனைவிக்கு"!!!

துகிலுரிப்பு
பிஞ்சிகளை சிதைத்தவனுக்கு
இன்று 33 ஆம் முறையாக விசாரணை,
"இந்த வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது"
என்றார் நீதிபதி,
"கவலைப்படாதீங்க அடுத்த முறையும் வாய்தா வாங்கிடலாம்"
என்றார் வழக்கறிஞர்,
நீதி தேவதை மற்றுமொரு முறை துகில் உரிக்கப்பட்டாள்...

Mr.X/Mr.Y ஜோக்குகள்... (இவை ஆனந்த விகடனில் வரும் Mr.X/Mr.Y ஜோக்குகளுக்காக எழுதினேன். சரி நம்ம பருப்பு அங்க வேகல உடனே இங்க போட்டிருக்கேன்:-) ஆனந்த விகடன்ல படைப்பு வரணும்னு ஒரு ஆசைதான்!!!! ஓகே ஓகே ஓகே.....)

Mr.X க்கு அரெஸ்ட் வாரண்ட் கொடுத்துட்டாங்கலாமே ஏன் மச்சான்?
அவர் படத்துக்கு போய் நிறைய பேர் தற்கொலை பண்ணிக்கிட்டாங்களாம் அதான்.

Mr.X , நீங்க ஒரு பெரியவராய் நடிக்கறீங்க இந்த படத்தில்.
சார், மேக்கப்புக்கு நிறைய நேரம் பிடிக்குமே?
அதெல்லாம் கவலைப்படாதீங்க Mr.X, உங்களுக்கு மேக்கப்பே தேவைப்படாது!!!

ஏன் இவரு எப்போ பாத்தாலும்,"எல்லாரும் ஒரு நாள் தெருவுக்கு வந்துட்வோம்னு" புலம்பிக்கிட்டே இருக்காரு?
ஓ! அவரா, அவரு தான் இப்போ Mr.Y நடிக்கற படத்தோட ப்ரொடியுசர்!!!

Mr.Y, நீங்க நடிக்க வரலைன்னா என்ன ஆகியிருப்பீங்க?
Mr.Y நீண்ட நேரம் யோசித்து விட்டு, படிச்சி கலெக்டர் ஆகியிருப்பேன்...
இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பொய்யே பேச மாட்டேன்னு சொன்னீங்க!?!?!

- காவிரிக்கரையோன் MJV

பல்லியின் சத்தம்....

கண்களின் ஊடே அணையின்றி தாண்டிடுமோ கண்ணீர்
என்று விழியின் வாசலை அடைத்து தான் காத்திருந்தேன்
அந்த நாள் கண்டிப்பாக வந்து என்னை சேரும் என்று,

மெல்லிய வண்ணத்துப்பூச்சி வேகமாய் சிறகடித்து
என் பக்கம் கடந்த போதெல்லாம் அதனினும் வேகமாய்
எட்டிப் பார்த்த அந்த கணங்கள் இன்றும் வண்ணத்துப்பூச்சியின்
மேல் மெலிதாய்,எனக்கும் தெரியும் கோபம் உண்டென்று,

பல்லியின் சத்தமெல்லாம் கதவின் ஆயுள் தண்டணை
உடைத்ததென்று அகலமாய் சிரிக்க முடியாமல்
திணறி வந்ததாய் நினைத்து ஆற்றாமை கொண்டதுண்டு,

வண்ணப் பகலுக்கும் வார்த்து வைத்த இரவுக்கும்
முரணான விளக்கங்கள் உண்டென்று உண்மை
கடைசி வரைத் தெரியாக் கூடாதென்ற ஏங்கின மனமுண்டு,

சலசலக்கும் ஆற்று நீருக்கும் சலனமே இல்லாத குளத்து
நீருக்கும் கூட தெரிந்து போன உண்மைகளை அவை
சட்டென்று கரையுடைத்து சொன்னது கூட மறந்ததுண்டு,

தபால்கார அண்ணாச்சியின் வருகை நின்ற பின்னும்
ஒரு கடிதம் வருமென்று ஏங்கி தவித்த காகித காலங்கள்
மீண்டும் வருமென்ற அதீத நம்பிக்கை இருந்ததுண்டு,

கசிந்தோடிய கண்ணீரில் கரைந்த காலங்கள் எங்கள்
மகனை தோள் கொண்டு தூக்கி நிறுத்திய அன்றொரு நாளில்
சட்டென்று வைக்கப் போன குங்குமம் சட்டென்று நிலம் பார்த்தது,

என்ன இது? வினவி எடுக்கும் முன் மகனின் கையில்
காகித தந்தி, புரிந்தது எனக்கு,
ஈன்றெடுத்த அன்னைக்கும், அன்னை பூமிக்குமாய் என்னவர்
இன்று நிஜமாகவே, பூரிப்பும் போர்களமுமாய் நான்....

- காவிரிக்கரையோன் MJV

Saturday, November 21, 2009

நாலு வார்த்த நறுக்குன்னு கேக்கணும்...என்னவென்று ஆரம்பிப்பது. 4 மாதத்திற்கு முன் என் மனைவியின் நண்பியின் திருமணத்தில் பார்த்த நண்பர் (மணப்பெண்ணின் பெரியப்பா மகன்). நன்றாக பேசினார். அவர்தான் எங்களுக்கு அறை மற்றும் வசதிகள் செய்து கொடுத்தார். எங்கள் குழந்தைக்கு பால் வேண்டுமா? என்று உரிமையுடன் கேட்டு திருமண மண்டபத்தின் அடுக்களையில் சென்று கொடுத்து விட்டு சென்றார். நான் என் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன், வெகு நாட்கள் பழகியவர் போல உரிமையுடன் செய்கிறார் பாரேன் என்று கூட சொல்லிக் கொண்டிருந்தேன்.

அந்த நண்பியிடம் இருந்து 3 நாட்களுக்கு முன்னர் ஒரு தொலைபேசி அழைப்பு. அமைதியாக ஆரம்பித்து, அந்த நபரின் பெயரை சொல்லி, அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் வீட்டில் எல்லோரும் ஒரே கவலையாக உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

என் மனைவி நான் அலுவலகம் முடிந்து வந்த பின்னர், என்னிடம் சொல்லி விட்டு விழியோரமாய் கண்ணீர் துளியை தன் சோகத்திற்கு துணைக்கு அழைத்திருந்தார். எனக்கு முதலில் அப்படியா, ஏன் என்ன ஆச்சு? நல்லாதான இருந்தார் நாம பார்க்கிறப்போ? என்று கேள்விகள் கேட்டு விட்டு, மேலும் என் மனைவியின் துயரத்தை அதிகரிக்காமல் உறங்க சென்று விட்டேன். " சரி சரி அதையே நினைக்காமல் ஒழுங்கா தூங்குப்பா" என்று சொல்லி விட்டு யோசிக்க ஆரம்பித்தேன்.

இதுவரை ஒரு 6 முறை இருக்குமா? இது போன்ற நிகழ்வுகளை என் வாழ்வில் கேட்டிருப்பேன். முதன் முதலில் கேட்டது நான் 6ஆவது படிக்கும்பொழுது இருக்கும். அந்த வயதில், எரிந்து போன அந்த உடலை, இப்படியெல்லாம் இப்பொழுது சொல்லுகிறேன். உரைந்து நின்று, தாயிடம் பிதற்றியது, அம்மா அந்த அண்ணன் ஏன்மா அப்படி பண்ணிக்கிட்டான் என்றதுதான். அனைவரின் அழுகைக் குரலுக்கும் நடுவில், எரிந்த அவனை மீண்டும் எரிக்க எடுத்து சென்றார்கள். கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், அந்த பையனை, அந்த பையனின் ஒவ்வொரு அசைவையும் கூட இருந்து ரசித்த (இந்த காலத்து குழந்தைகளுக்கு கிடைக்காத ஒரு வரம்) அவனின் 80 வயது பாட்டி, அழுததுதான். என்ன சொல்றது, ஒரு நிமிட தாமதம் அந்த மூளை சரியான கட்டளை இட, அதற்குள் அனைத்தும் முடிந்து விடுகிறது. இது தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு.

அனைத்துமே மறுபடி புதிதாகவும் புரியாமலும் நடக்க ஆரம்பிக்கிறது அந்த நபரின் தற்கொலைக்கு பிறகு அவனது அல்லது அவளது உறவுகளுக்கு, அவனது அல்லது அவளது நண்பர்களுக்கு!!! யெப்பா உங்களுக்கு எல்லாம், ஒரு 5 நிமிட வேதனையோ வலிக்கோ பிறகு, இயக்கம் நின்று விடுகிறது. உங்களுக்கான இலக்கை அடைந்து போய் சேர்ந்து விடுகிறீர்கள். ஆனால் உங்களையே நினைத்து வாழும், உயிர் இருந்தும் பிணமாய் வாழும் உங்கள் சொந்தங்களையோ, நண்பர்களையோ ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்திருப்பீர்களா? எது நடந்தா எனக்கு என்ன என்று நினைத்து போய் விடுகிறீர்கள்.

பேச்சு வழக்குல சொல்லுவதுண்டு, "தற்கொலை செய்துக்கறதுக்கு ஒரு தையிரியம் வேணும்பா". டேய் டேய் அதெல்லாம், சும்மா சொல்லி வைக்கறதுதாண்டா... எவ்வளவோ விடயங்களை நண்பர்களிடமோ அல்லது மனதுக்கு பிடித்தவரிடமோ, மனம் விட்டு பேசுகிறோம். அது போல, ஒரு இக்கட்டான சூழல் வரும் பொருட்டு, யாரிடமாவது பேசி பார்க்கலாம் இல்லையா?

அதெல்லாம் விட்டுட்டு, மலையிலேந்து குதிக்கறது, மயி** புடுங்கறது, இதெல்லாம் எதுக்கு? யெப்பா நீங்க ஒரு எலும்பு கூட இல்லாம, போய்ட்டீங்க.... இப்போ யோசிச்சி பாத்தா, உங்களது சிறு பிரயத்தில் இருந்து கூடவே இருந்து ஒவ்வொரு அசைவையும் ரசித்த உங்கள் பெற்றொருக்கு, உயிருடன் கொல்லி வைக்கும் கட்டாயம் இது போன்ற விடயங்கள். இதெல்லாம், இப்படி செஞ்சுக்கிட்டாங்களே என்று, ஏக்க போராடத்துக்குள் என்னை தள்ளியவர்களை ஏசி எழுதுகிறேன். இதெல்லாம் அவங்களுக்கு கேக்காதுன்னு எனக்கும் நல்லாவே தெரியுது. இருந்தாலும் அவய்ங்க மேல உள்ள மாறாத கோபம் என்னை இப்படியெல்லாம் எழுத வைக்குது.

உங்கள மாதிரியான ஆட்களால் தான், இடத்துகெல்லாம், சூயிசைட் பாயின்டுன்னு பேர் வைக்கறானுங்க. நீங்க விட்டுட்டு போகிற சொத்து என்ன தெரியுமா? வெறுமையும், வேதனையும்தான். உங்களுக்கெல்லாம் கேக்காதுங்கறது தெரிஞ்சிருந்தாலும், இந்த ஆவி, ஆன்மா அப்படி என்று வினவுகின்ற விடயங்கள் உண்மையாய் இருக்கக் கூடாதான்னு தோணுது. அப்படி இருந்தா உங்களல்லாம் பாத்து நாலு வார்த்த நறுக்குன்னு கேக்கணும்.

இது இருக்கும் எல்லோருக்காகவும்:
மனம் விட்டு பேசுங்க. அப்படியெல்லாம் எண்ணம் ஏதாவது இருந்தா தயவு செய்து விட்டுடுங்க. உங்கள சுத்தி பாருங்க. கொஞ்சம் கொடைச்சலான உலகம்தான். ஆனா இத விட்டுடு வேற எங்க போவீங்க? "சுய மரணம்னு ஏன் இதுக்கு பெயர் வைக்கவில்லை?, ஒருவன்/ஒருவள் தன்னையும் மாய்த்து கொண்டு, உயிரோடு இருக்கும் அனைவரையும் கொன்று போட்டுட்டு போறானே/போறாளே அதனாலதான்". பயந்து செத்து போறது கோழைத் தனமாதான் எனக்கு தெரியுது:-(

- காவிரிக்கரையோன் MJV
பி.கு: இந்த இடுகையை யூத்புல் விகடன் குட் ப்ளாக்ஸ் பகுதியில் வெளியிட்டு இன்னும் பல பேருக்கு கொண்டு சென்றதற்கு மிக்க நன்றி...

இது என்னுடைய அரை சதம்!!!

ஆயிற்று இந்த பதிவை இணையத்தில் ஏற்றும் பொழுது, நான் 50 இடுகைகளை வலைப்பூவில் பதித்திருப்பேன். . என்னடா உன் அலம்பல் தாங்க முடியவில்லை என்று புலம்பும் பதிவர்களே, நண்பர்களே, நான் வலை உலகத்துக்கு வந்தது 2008 ஆம் ஆண்டாக இருந்தாலும், இந்த வருடம் தான் சற்று சுறுசுறுப்புடன் பதிவிட தொடங்கி இருக்கிறேன். இதற்கு காரணம் முழுக்க முழுக்க பதிவுலகம் தான். எத்தனை சிந்தனைகள், எத்தனை வித்தியாசங்கள் என்று எப்படி எப்படியோ மாறுப்பட்டு கிடந்தாலும், இந்த பதிவுலகின் மகத்துவம், அதில் உள்ள பதிவர்களின் எழுத்து நடை என்று பலவற்றையும் ரசிக்க தொடங்கி இருக்கிறேன்.

வந்த புதிதில் இங்கே சண்டை, அங்கே ஒரு வாய்ச் சண்ட, கை கலப்புல முடிந்தது, பார்க்க கூட்டிட்டுப் போய் சந்துல வெச்சி அடிக்கறாய்ங்க என்று பீதியை கிளப்பி கொண்டிருக்க, இதெல்லாம் ஊர்க் குருவி மாதிரியான விடயங்கள், அதெல்லாம் என்ன நினைத்தாலும் மேலே எழும்ப முடியாது என்று உரைக்கும் வண்ணம், கேபிள் சங்கர் என்ற பதிவரின், தந்தை மரணத்தின் போது, பதிவுலக நண்பர்கள் ஒன்று கூடி சத்தம் போடாமல் தங்களால் இயன்றவற்றை செய்து பதிவுலகத்தில், பருந்து பறக்கும் உயரத்திற்கும் மேலே நல் உள்ளம் கொண்டவர்களும் இங்கே தான் இருக்கிறோம் என்று நிரூபித்து விட்டு, பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

500, 1000 என்று பதிவுகளை நெருங்கி கொண்டிருக்கும் பதிவர்கள் அமைதியாய் இருக்க, 50 முடிக்கறதுக்கே, தோரணம் கட்டி பொங்க வைக்கிறது உசிதம் இல்லை என்று எல்லோரும் சொன்னாலும், இந்த பதிவு என்னை போன்று, புதிதாய் எழுதுபவருக்கு ஊக்கம் கொடுக்கும் என்று நினைத்து எழுதுகிறேன். வாங்கப்பா நெறைய எழுதுவோம். ஏதாவது சந்தேகம்னா பதித்து கூட்டி செல்ல நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் இங்கே!!! சில நண்பர்கள் பொழுதுபோக்கிற்காக எழுதுவாங்க, சில நண்பர்களுக்கு எழுதல்லன்னா தூக்கம் வராதுன்னு நினைக்கிறேன். எப்படியோ எல்லோரும் இப்படி எழுதினார்கள் என்றால், எதை படிக்க, எதை மறக்காமல் படிக்க என்றெல்லாம் குழப்பங்கள் வந்து இந்த வலை உலகத்தை நன்றாய் வாழ வைக்கும்.

நானும் உற்சாகம் மிகுதியில் நாளுக்கு ஒன்று என்ற வீதத்தில் பதிவெழுதும் வித்தைகளை யோசித்து கொண்டுதானிருக்கிறேன். பரிசல்காரன் அவர்களின் ஒரு பதிவைப் பார்த்து ஓ! இப்படிதான் ஒரு நாளுக்கு ஒரு பதிவு போடறாங்களா, இப்போவே கண்ண கட்டுதேனு யோசிச்சிட்டே இருக்கேன். அந்த கால இடைவெளியில் நர்சிம், கார்கி, ஆதிஷா, சென்ஷி, ஜாக்கி சேகர், ஊடகன், இனியவன், தீராத பக்கங்கள், பைத்தியக்காரன், குசும்பன் மற்றும் என்னை கவர்ந்த பல வலைகளையும் சுற்றி வந்துட்டு பாத்தா , வெகு நேரம் கழிந்து போயிருக்கும். அதனால, இப்படி பக்காவாக பதிவு போடும் பல நண்பர்கள் தான் என் பதிவின் எண்ணிக்கையை குறைத்ததில் பெரிய பங்கு வகித்திருக்கிறார்கள் என்று இந்த பதிவிலே தெரிவித்துக் கொள்கிறேன்!!!!!!!!!:-)

இப்படியாக, கொஞ்சம் அதீத வேகத்துடன் (இங்கே வேகம் என்று நான் குறிப்பிட்டு இருப்பது மிதமான வேகம் என்று வைத்து கொள்ளலாம்!!!) பதிவு எழுத ஆரம்பித்த போது சர்வேசன் வலையில் ஒரு சிறுகதைப் போட்டி என்று சொல்லி பல மாதிரி எழுதி கொண்டிருந்த என்னையும் ஒரு சிறுகதை கிறுக்க வைத்தது இந்த வலையுலகம்தான். எவ்வளவோ விடயங்கள் கொட்டி கிடக்கின்றன அதில் புகுந்து தேடினால் கிடைக்காத எழுத்துக்களும் இல்லை, சிந்தனைகளும் இல்லை. பதிவுகளை தான் திருடக்கூடாது. ஆனால் பதிவினால் மாறும் உங்கள் சிந்தனைகளுக்காக யாரும் உங்களுக்கு திருட்டுப்பட்டம் கட்ட மாட்டார்கள்.

இப்பொழுதெல்லாம் என்ன எழுதுவது என்று ரூம் போட்டு யோசிக்க வேண்டாம், நினைத்ததை பார்த்ததை கேட்டதைப் பற்றி எழுதக் கற்று கொடுத்த (சொந்த சிந்தனைனு சொல்ல வரேன்) வலை உலகத்திற்கு என் நன்றி. பின்னூட்டங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அது ஒரு அருமருந்து. நாகரிகம் பார்த்து, நல்லபடியாய் முரண்பட்டு, பின்னூட்டங்கள் வந்தால் அதை விட ஒரு டானிக் என்னவாக இருக்க முடியும்.

சரி எல்லாருக்கும் ஒரு பெரிய நன்றிப்பா. நிறைவாய், நிறைய எழுத எல்லோருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்!!!
- காவிரிக்கரையோன் MJV

Sunday, November 15, 2009

ஆட்டோமொபைல் பக்கங்கள் - பாகம் 1: மாருதி ஸ்விஃப்ட் டீசல்...புதிதாக வண்டி ஓட்ட கற்றுக் கொண்டு பிறகு, ஒரு கார் வாங்கலாம் என்றோ இல்லை கார் வாங்கி நீண்ட நாட்கள் ஆகி விட்டது என்றோ நினைப்பவர்களுக்காக, இனி கார்களைப் பற்றி எனக்கு தெரிந்தவற்றை இங்கே பகிறப் போகிறேன். வாருங்கள் இந்த பதிவில் என் மனம் கவர்ந்த வண்டியைப் பற்றி பார்க்கலாம். அதனால் அதை இப்போது 2 வருடங்களாக ஓட்டிக் கொண்டும் இருக்கிறேன் (பிடிச்சதால வாங்கிட்டேன்பா, எங்களின் முதல் கார்)....

இந்தியாவைப் பொறுத்த வரையில், எந்த நான்கு சக்கர வாகனங்களை வாங்குவது என்று வாடிக்கையாளர்கள் யோசிப்பது, அந்த வண்டி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கோ இல்லை டீசலுக்கோ எவ்வளவு கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் என்பதை பற்றிதான் பெரும்பாலும் யோசிக்கிறோம். அதைப் பொருத்து தான் இந்த வண்டிகளின் அட்டவணை முதலில் தயாரிக்கப்படுகிறது. அப்புறம் தான் மற்ற விஷயங்களைப் பார்க்கிறோம் என்பது என்னுடைய அனுபவத்தில் கண்டறிந்த உண்மை.

இந்த விஷயத்தை எப்பொழுதும் மனதில் வைத்து கொண்டு அவ்வப்போது இது போன்ற வாகனகளை வினியோகத்துக்கு அறிமுகப்படுத்தி கலக்குவதில் டாட்டா நிறுவனத்திற்கும், மாருதி நிறுவனதிற்கும் பெரிய போட்டா போட்டியே பல வருடங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த பதிவில், 2005 ஆம் ஆண்டு மே மாதம் மாருதி நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் வண்டியைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

அதிலும் என்னை கவர்ந்த டீசல் ஸ்விஃப்டை பற்றி பார்ப்போம். 2005 இல் பெட்ரோல் ஸ்விஃப்டை அறிமுகப்படுத்திய மாருதி நிறுவனம், 2 ஆண்டுகள் கழித்துதான் டீசல் வண்டியை அறிமுகப்படுத்தியது. அதற்குள்ளாகவே அதுவரை, ஹுண்டாய் நிறுவனம் கவர்ந்து வைத்திருந்த மார்கெட்டை (அப்படி சொல்லி விட முடியாது. ஏனென்றால் சான்ட்ரோ வேறு ரக வண்டி (ஹாட்ச்பாக்), ஸ்விஃப்ட் வேறு ரக வண்டி (பிரீமியம் ஹாட்ச்பாக்) என்று இருந்தாலும், ஆல்டோ, சென், வேகன்-ஆர் என்ற போன்ற வண்டிகளைத் தாண்டி சான்ட்ரோ பின்னி எடுத்துக் கொண்டிருந்த நேரம் அது). வெகுவாக தன் பக்கம் மறுபடியும் இழுக்கத் தொடங்கி இருந்தது மாருதி நிறுவனம். இந்த சமியத்தில் அறிமுகம் ஆனார் மாருதி ஸ்விஃப்ட் டீசல் வண்டி.

சும்மா அதிருதுல்ல என்ற அளவுக்கு பல தரப்பட்ட ஆட்டோ நாளிதழ்களும் அலசி ஆராய்ந்து டீசல் ஸ்விஃப்டுக்கு சான்றிதழ் கொடுத்திருந்தனர். இருந்தாலும் எல்லோருக்கும் ஒரு சிறிய பயம் இருந்தது. ஹுண்டாய் நிறுவனம் இதற்கு போட்டியாக, ஹுண்டாய் கெட்ஸ் டீசலை செப்டம்பர் 2007இல் அறிமுகபடுத்த திட்டமிட்டு இருந்தது. மாருதி நிற்வனத்தார் முந்திக் கொண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தினர்.

சூறாவளியாய் அறிமுகம் ஆனது டீசல் ஸ்விஃப்ட். 2 விதமான மாடல்கள் இருக்கின்றன. ஒன்று எல் டீ ஐ மற்றொன்று வீ டீ ஐ என்பவை. வீ டீ ஐ ஹையர் எண்ட் மாடல் எல் டீ ஐ லோயர் எண்ட் மாடல். இரண்டிலும் போடப்பட்ட எஞ்சின் ஒரே எஞ்சின் தான். அதில் எதுவும் மாறுதல் இல்லை. ஸ்விஃப்ட் டீசலின் சில தொழில் நுட்ப விஷயங்களை அறிந்து கொள்வோம்.

1.3 லிட்டர் (1248 சிசி), 4 சிலிண்டர்கள், 16 வால்வுகள், 75 பிரேக் ஹார்ஸ் பவர் சக்தி, 190 நியுட்டன் மீட்டர் டார்க் இவைகளுடன் டி டி ஐ ஸ் முறையினில் டீசலை உள்ளிழுத்து கொள்கிறது இந்த எஞ்சின். டீசல் எஞ்சின் என்றாலே சத்தம் என்கிற காலமெல்லாம் மலையேறி போய் விட்டபடியால், டீசல் எஞ்சின் வண்டிகளைப் பற்றி அவ்வளவாக இப்போது யாரும் கவலை பட தேவை இல்லை.ரேடியேட்டர் சூடாகி விடும், தண்ணீர் ஊற்றி சரி செய்ய வேண்டும் என்ற நிலை மாறி இப்பொதேல்லாம் காற்று அல்லது எண்ணெய் முறையில் குளிர்விக்கும் நடைமுறைகள் வந்துவிட்டன. இதெற்கெல்லாம் அஞ்சாமல் வாங்கலாம் இந்த வண்டியை!

பெட்ரொல் வண்டிகளுக்கும் டீசல் வண்டிகளுக்கும் எப்பொழுதும் விலையில் நல்ல ஒரு வேறுபாடு இருக்கும். 70,000 ரூபாய் வித்தியாசம் இருந்தது ஸ்விஃப்ட் டீசலுக்கும், ஸ்விஃப்ட் பெட்ரொலுக்கும் அவர்கள் அறிமுகப்படுத்திய புதிதில். ஆனால் இப்பொழுது சிறிது குறைத்து 60,000 ரூபாயாக உள்ளது. ஸ்விஃப்ட் எல் டீ ஐ இன் விலையை விட 42,000 ரூபாய் அதிகமாக இருக்கிறது வீ டீ ஐ இன் விலை. இதில் இந்திய நிறுவனங்கள் பெரும்பாலும் பல பெரிய மாறுதல்களை ஹை எண்ட் வண்டிகளுக்கும் லோ எண்ட் வண்டிகளுக்கும் வைப்பதில்லை. வண்டி மேனி நிறத்தில், பின்னால் பார்க்கும் கண்ணாடிகள் இருக்கும், கதவு கைப்பிடிகளும் அதே நிறத்தில் இருக்கும். எல்லா கதவுகளுக்கும் பவர் விண்டோஸ் என்று சொல்லப்படும் தானியங்கி பொத்தான் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் வண்டியின் முன் புறமும் பின் புறமும், மழையில் செல்லும்போதோ இல்லை அடர்ந்த பனியில் செல்லும்போதோ, உபயோகமாய் இருக்கும் மூடு பனி விளக்குகள் (ஃபாக் லாம்ப்) பொருத்தியிருப்பார்கள். இப்படியாக சில விஷயங்கள் வீ டீ ஐ இல் அதிகமாக இருக்கும். எஞ்சின் சக்தியில் எந்த மாறுதலும் கிடையாது.

மேலே கூறப்பட்ட விஷயங்களை நீங்கள் தனியாகவும் பொருத்திக் கொள்ளலாம். 40,000 ரூபாய் அதிகம் செலவழிக்கனுமா? என்று யோசிப்பவர்கள், எல் டீ ஐ வண்டியை வாங்கி, 25,000 ரூபாய்க்குள், அதை ஒரு முழு வீ டீ ஐ யாக மாற்றி விடலாம். மாருதி நிறுவனத்தின் உதிரிப் பாகங்களே மாட்டி கொடுப்பார்கள். அங்கேயே மாற்றி கொள்ளலாம். இதில் ரிமொட் லாக்கிங்க் என்ற முறையில் காரை தூரத்தில் இருந்து பூட்டவும், திறக்கவும் உபயோகமாய் இருக்கும். இல்லை என்றால் ஒவ்வொரு முறையும் சாவி போட்டு பூட்டும் படி இருக்கும்.

உங்கள் தேவைக்கேற்ப பொருத்தி கொள்ள :
1. எல்லா கண்ணாடியையும் தானியங்கியாக மாற்றி கொள்ளலாம்.
2. ரிமொட் லாக்கிங்க் வைத்து கொள்வது.
3. பூட்டியிருக்கும்போது யாரேனும் திறக்க முயற்சித்தால் ஒலி எழுப்பும் ஆட்டோ காப் என்ற கருவி.
4. குறிப்பாக இதை வைக்கும்போது, சரியான முறையில் பார்த்து செய்ய வேண்டும் இல்லை என்றால் தெரியாமல் காரில் யார் கை பட்டாலும் சத்தம் போட ஆரம்பித்து விடும்.
5. இருக்கை கவர்கள். பெரும்பாலும் செயற்கை லெதர் கவர்கள் கையை கடிப்பதில்லை. 7,000 ரூபாயில் முடித்துக் கொள்ளலாம்.
6. சுத்தமான லெதர் கவர்கள் சுமார் 20,000 வரை ஆகலாம்.
7. உங்களின் தேவைக்கேற்ப, இசைச் சாதனங்கள் பொருத்தி கொள்ளலாம். பயனீர், ஜே பீ எல், சோனி போன்றவைகள் இதில் பிரபலம்.
8. ஒலிபெருக்கிகள் (சப் வூஃபர், ட்வீட்டர், ஆம்ப் மற்றும் வூஃபர் போன்றவைகள்) கடைசி இருக்கைகு பின்னாலும், உங்கல் தலைக்கு மேலேயும் (இங்கே பெரும்பாலும் ட்வீடர்கள் பொருத்தப்படும்) பொருத்தி கொள்ளலாம்.
9. வண்டியின் கதவுகளிலும் பொருத்தி கொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது.
10.வண்டியில் நல்ல ஒரு வசனைத் திரவியத்தை வைக்கலாம். அதில் தலை வலி வரும் என்று நினைப்பவர்கள் ஒரு அட்டை விற்கிறார்கள் அதை வாங்கி கொள்ளலாம்.

வண்டியின் முக்கிய செயலாற்றத் திறன் கள்:
- நல்ல பிக் அப் இருக்கும். 1.3 லிட்டர் எஞ்சினில் 190 என் எம் டார்கின் வேலையை நீங்கள் வண்டியை முதல் கியரில் இருந்து எடுக்கும் பொழுது உணர்வீர்கள்.
- அருமையாக வண்டி லாவகமாக கையாலும் தன்னையே. குறைந்த திரும்பும் ரேடியஸ் (4.7 மீட்டர்கள்) இருப்பதால் உங்களால் சிரமம் இல்லாமல் வண்டியை திருப்ப முடியும்.
- ஏ.சி உபயோகத்தில் இருக்கும் பொழுதும் அந்த அளவுக்கு இழுக்கும் திறன் (புல்லிங் பவர்) குறைந்ததாக தெரியாது.
- வண்டி சரியாக உங்கள் சொல் பேச்சு கேட்டு நடக்கும். நல்ல ரெஸ்பான்ஸ் என்று சொல்லுவார்கள் ஆங்கிலத்தில்.
- வண்டியில் அடிக்கடி பிரச்சனைகள் வராது.
- வண்டியின் உள் புறம் உள்ள இடம் நல்ல வசதியாய் இருக்கும். நான்கு பேர் பிரச்சனை இல்லாமல் அமர்ந்து செல்லலாம். ஐந்து பேர் செல்வது எந்த ஹாட்ச்பாகிலுமே சிறிது சிரமம் தான்.
- வண்டியின் பின் பக்கத்தில் இருக்கும் இடம் ஓரளவுக்கு போதுமானதாக இருக்கும்.
- டீசல் கொள்ளளவு 43 லிட்டர்கள்.
- நீண்ட தூரம் போக வேண்டிய பயணங்களில் சீரும் சிறுத்தையாய் ஓட விட்டு பார்க்கலாம்.
- ஒரு மணி நேரத்திற்கு 120 முதல் 135 கி.மீ என்ற கணக்கில் அயராமல் ஓட்டலாம்.
- அதி வேகம் ஆபத்தானது என்றாலும், ஒரு முறை 160 களில் சென்றிருக்கிறேன்.
- முக்கியமான மைலேஜிற்கு வருவோம் - நகரத்து ஓட்டத்தில் 16 முதல் 17 கி.மீ/லிட்டர் கொடுக்கும், கொடுக்கிறது என் வண்டி.
- நீங்கள் அதிக தூரம் (லாங்க் ட்ரைவ்) ஓட்டினால் சலைக்காமல் 21 முதல் 23கி.மீ/லிட்டர் கொடுக்கும்.
- நீண்ட தூர பயணத்தில்தான் இந்த வண்டியின் ஓட்டத் திறனை வெகுவாக உணர முடியும்.
- நகரத்தில் ஓட்டுவதில் லாவகம் என்றால், நீண்ட தூர பயணத்தில் வல்லினமாய் பறக்கும்.

வண்டியின் சில குறைகள்:
என்னதான் மிகச் சிறந்த வண்டி என்றாலும், சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது.
- வண்டியின் உட்புற பிலாஸ்டிக்குகள் இன்னும் கொஞ்சம் தரமானதாக இருந்திருக்கலாம்.
- இவ்வளவு சக்தி வாய்ந்த வண்டிக்கு ப்ரேக் கொஞ்சம் கம்மியாகதான் இருக்கிறது.
- மேலே சொன்னதை கண்டு என்ன இது பதற வேண்டாம். ப்ரெக் ரெஸ்பான்ஸ் சிறிது குறைவு என்பது என் அனுபவத்தில் வந்த கருத்து.
- டாஷ்போர்டின் பிரதிபலிப்பு, வெயில் நேரத்தில் ஓட்டும் பொழுது, முகப்பு கண்ணாடியில்(வின்ஷீல்ட்)பட்டு சரியாக தெரிவது (ரெடியுஸ்ட் விசிபிலிடி) இல்லை.
- இது போக போக பழகி விடும்.
- அறிமுகப்படுத்திய புதிதில் கதவுகளில் கற்களை தரையில் தேய்ப்பது போன்ற சத்தம் (ராட்லிங்க்)வந்து கொண்டிருந்தது. இப்பொழுது மாருதியில் அதை சரி செய்து விட்டர்கள்.
இப்படி சில குறைபாடுகள் இருந்தாலும், வண்டியின் சக்தி மற்றும் மைலேஜினால் டீசல் உலகில் ஹாட்ச்பாக் வட்டத்தில் இப்போதைக்கு முடி சூடா மன்னனாக டீசல் ஸ்விஃப்ட் விளங்கி கொண்டிருக்கிறது. பார்ப்போம் புதிதாக பல வண்டிகள் வந்திருக்கின்றன. உதாரணத்திற்கு, ஃபியட் புன்டோ, ஹுண்டாய் ஐ 20, டட்டா இண்டிகா விஸ்டா, ஸ்கோடா ஃபாபியா, ஹுண்டாய் கெட்ஸ் (இந்த வண்டியை நிறுத்தப் போகிறார்களாம்) இப்படி இருக்கின்றன்.இந்த வண்டிகள் பற்றி ஒவ்வொன்றாய் வரும் பதிவுகளில் பார்போம். அது வரை பத்திரமாய் ஓட்டுங்கள்.

- காவிரிக்கரையோன் MJV

Saturday, November 14, 2009

இயந்திரம்...

அன்று சனிக்கிழமை என்பதால் மந்தமாய் இருந்த வீட்டில் சுறுசுறுப்பாய் வேலைகளை செய்து கொண்டிருந்தாள் லெட்சுமி, அந்த வீட்டின் தலைவி. மணி சரியாக எட்டை தாண்டி இருந்தது. வாரம் முழுவதும், 25 வருடங்களாக மெஷினோட மல்லுகட்டியோ என்னவோ, ஒரு மெஷினாகவே மாறியிருந்தார் ராமதுரை, அந்த வீட்டின் தலைவர். அவர் எழுந்திருக்க இன்னும் அரை மணி நேரமே இருந்த நிலையில் தான் லெட்சுமி பம்பரமாய் சுழன்று காலை உணவு தயாரித்து கொண்டிருந்தாள். எழுந்து குளித்தவுடன் ராமதுரைக்கு தயாராக உணவு இல்லையென்றால், அடுத்த 3 நாட்களுக்கு ஒரே காலட்சேபமாக இருக்கும் என்பது லெட்சுமிக்கு தெரிந்ததாலேயே இவ்வளவு பரபரப்பு.

"வாரம் முழுக்க போய் உழைச்சி கொண்டாந்து கொட்டினா, ஒரு நாள் ஒழுங்கா நேரத்துக்கு சோறு போட முடியல. அப்படி என்னத்ததான் நீ வெட்டி முறிக்கற வீட்லனு எனக்கு தெரியல. எல்லாம் என் தலையெழுத்து", ஒரு சனிக்கிழமை அன்று சனி பகவான், பாய் போட்டு படுத்தே விட்டார் ராமதுரை நாக்கில். உடம்புக்கு சரியில்லாமல் லெட்சுமி கிடந்தபோது வாங்கிய ஏச்சுப்பேச்சுக்கள் இதெல்லாம். கீதாவும், ரகுவுமாய் ராமதுரையை சமாதானப்படுத்தினர். லெட்சுமிக்கும், ராமதுரைக்கும் 2 குழந்தைகள். மூத்த மகள் கீதா திருமணமாகி ஒன்றரை வருடங்களாக சென்னையில் மாப்பிள்ளை பிரசாத்தோடு வசித்து வருகிறாள். இளைய மகன் ரகு கல்லூரிப் படிப்பு முடியும் தருவாயில் இருக்கிறான்.

எப்போதும் ராமதுரை சற்று குழந்தைகளிடமிருந்து விலகியேதான் இருப்பார். எதற்கும் அலட்டி கொள்ள மாட்டார். ஆனால் அடிக்கடி கோபம் வந்து விடும். லெட்சுமி வாங்கி கட்டி கொள்வாள். பெரிதாக வாயாடவும் மாட்டார். வீட்டில் பெரும்பாலும் ஒலிக்கும் குரல் லெட்சுமியுடையதாகவே இருக்கும். லெட்சுமி ராமதுரைக்கு நேர் மாறான குணம். எல்லோரிடமும் அதிக பாசம் காட்டுவாள். எதிரெதிர் துருவங்கள் தான் ஒன்று சேரும், என்று சொல்வது சரிதான் என்று ரகுவுக்கும் கீதாவுக்குமே பல முறை தோன்றியிருக்கிறது.

இன்றும் அப்படி ஒரு வசை வாங்கக் கூடாதென்பதில் லெட்சுமி குறியாயிருந்தாள். சட்டென கத்தி கையை மெதுவாக பதம் பார்த்ததில், துடித்து நிகழ்காலத்திற்கு வந்தாள். அவ்வப்போது தன்னை மறந்து யோசிப்பதுண்டு. வாசல் கதவை யாரோ தட்டுவது போல இருந்தது, இவ்வளவு சீக்கிரம் யாராக இருப்பார்கள்? பிரம்மையாய் இருக்கும் என நினைத்து கொண்டாள். வேகமாய் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு லெட்சுமி எழுந்து போய் திறப்பதற்குள், "அம்மா கீதா வந்திருக்காம்மா", என்ற படி 2 சூட்கேஸ்களுடன் ரகு அக்காவுக்கு பின்னே உள்ளே நுழைந்தான். என்னம்மா மாப்பிள்ளை வரலையா என்று வாசலைப் பார்த்து கொண்டே கேட்டாள்.

அம்மாவின் கேள்வி கேட்காதது போலவே, கீதா வேகமாக தன் பழைய அறைக்கு சென்றாள். என்ன தான் அவள் 15 வருடங்களாக பழகிய அறை என்றாலும், இந்த ஒன்றரை வருடங்களில் மிகவும் அன்னியப்பட்டுதான் போயிருந்தது. மறுபடியும் பழகி விடும் என்று தேற்றி கொண்டாள், விழியோரமாய் பொங்கிய கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்து கொண்டே. ராமதுரை வழக்கம் போல் எழுந்து குளித்து முடித்து, காலை உணவு உண்டு, பேப்பர் படித்து கொண்டிருந்தார் சேரில் சாய்ந்தபடி.

"என்னங்க கீதா தனியா வந்திருக்கா. ஆனா மாப்பிள்ளை வரல. என்னனு கேளுங்களேன் நீங்க", லெட்சுமி குரலில் ஒரு வித அச்சம் பரவியிருந்தது. "அத என்னத்த போய் நான் கேக்கறது. அம்மாவும் பொண்ணும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க. ஏதாவது சண்டையா என்னன்னு கேளு" என்று ஒரே மூச்சில் பேசி முடித்தார் ராமதுரை.அன்று இரவே லெட்சுமிக்கும் ரகுவுக்கும் புரிந்து போனது. கீதாவுக்கும், அவள் கணவன் பிரசாத்திற்கும் ஏதோ சின்ன சின்ன சண்டைகளில் ஆரம்பித்து, பெரிய சண்டையில் போய் முடிந்திருக்கிரது. இவள் மீது கை ஓங்கியும் இருக்கிறான் . பிறகு நடந்த வாக்கு வாதத்தில், அவள் மாமியார் அவளைப் பார்த்து, "எங்கள விட்ட உனக்கு வேறு நாதி யாரு இருக்கா" என்று கேட்டு வைக்க, ரோஷம் பொங்க விருட்டென்று கிளம்பி வந்து விட்டள் அம்மா வீட்டிற்கு. அன்று ஆகஸ்டு 15 ஆம் தேதி, தனக்கும் சுதந்திரம் என்று நினைத்து கொண்டாள்.
நடந்ததையெல்லாம் பொறுமையாய் கேட்டு கொண்டிருந்த ராமதுரை, "எனக்கு ரொம்ப தூக்கம் வருது, நான் போய் படுக்கிறேன். நாளைக்கு காலையில சீக்கிரமாய் எழுப்பி விடு. ஃபாக்டரி வரைக்கும் போக வேண்டிய வேலை இருக்கு" என்று சொல்லி விட்டு யார் பதிலுக்கும் காத்திராதவராய், சட்டென்று தன் அறைக்கு சென்று தாழிட்டுக் கொண்டார். "இந்த மனுஷனுக்கு எப்போ தான் பாசம், பந்தம் உறவெல்லாம் புரியுமோ" தலையில் அடித்து கொண்டு அழுது தீர்த்தாள் லெட்சுமி. "இப்போ எதுக்கு ஒப்பாரி வைக்கிற, உன் பொண்ணுக்கிட்ட கேளு, பாசம் பந்தமெல்லாம் இருக்கான்னு" என்று கர்ஜித்து விட்டு அவர் அறையின் விளக்கை அணைத்தார்.

ஆயிற்று இன்றோடு ஒரு மாதம் முடிந்து விட்டது, கீதா வீட்டிற்கு வந்து. இந்த ஒரு மாதத்தில் அழுது அழுது அம்மாவும் மகளும், உடல் சற்று இளைத்தே விட்டார்கள். ரகுவுக்கு, அக்காவிடம் பேசி சமாதானம் செய்து பார்க்கலாம், என்று நினைத்து கீதாவிடம் அந்த பேச்சை எடுத்த போதெல்லாம், வேற ஏதாவது பேசலாமே ரகு என்று இவன் வாயை அடைத்திருந்தாள். அன்று ராமதுரை, சனிக்கிழமை வழக்கமாய், சாப்பிட்டு விட்டு சேரில் சாய்ந்திருந்தார். "கீதா கீதா" குரல் வந்த திசையை நோக்கி அனைவரும் பார்க்க, அங்கே பிரசாத் நின்று கொண்டிருந்தான், "உள்ளே வாங்க மாப்ள" என்று லெட்சுமி வேகமாய் ஓடியதில், தூணில் கால் இடறி விழுந்ததை கூட ஒருவாறு சமாளித்து எழுந்தாள். "வாங்க மாமா" சொல்லிக் கொண்டே ரகு சேரை எடுத்து போட்டான். ராமதுரையும், கீதாவும் சொல்லி வைத்தார் போல, தத்தம் அறைக்கு சென்றனர், பிரசாத்திடம் எதுவும் பேசாமல். கீதா குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்து இருந்தாள் பிரசாத் பேச பேச. கடைசியில் " வா கீதா, நம்ம வீட்டுக்கு போகலாம்" என்று சொல்ல சொச்ச மிச்சமும், மிச்ச சொச்சமுமாய் கை கோர்த்திருந்த அத்தனை கர்வமும், மொத்தாமாக தோற்றுப் போனது. ஓடி வந்து அவனை கட்டி அணைத்து கொண்டாள். லெட்சுமிக்கும், ரகுவுக்கும் யாருக்கும் தெரியாமல் விழியோரமாய் நீர் கோர்த்திருந்தது.

அன்று இரவுக்கெல்லாம் கீதாவும், பிரசாத்தும் சென்னை கிளம்ப ஆயத்தாமாகிக் கொண்டிருந்தனர். "நாங்க கிளம்பறோம்மா", கீதா அழைத்தவுடன், "மகராசி போயிட்டு வாம்மா" என்று அவள் நெற்றியை சுற்றி திருஷ்டி கழித்தாள். "நான் கிளம்பறென் ரகு, அம்மாவ நல்லா பாத்துக்க" என்றாள் கீதா. " நீ கவலப்படாம கெளம்புக்கா, நான் பாத்துக்கறேன் அம்மாவ. வாங்க மாமா, இதோ நானும் வர்றேன் பஸ் ஸ்டாண்டுக்கு" என்று ரகு சட்டை மாட்டி கொண்டு கிளம்பினான். "அப்பாக்கிட்ட ஒரு வார்த்த சொல்லிட்டு கிளம்பும்மா" என்றாள் லெட்சுமி. "அப்பா கிளம்பறேன்பா" என்று கீதா சொல்ல, சண்டை கிண்டை போட்டுட்டு இனி இந்த வீட்டுப் பக்கம் வராத, தண்டமா சோத்த வடிச்சி போடணும் ", ராமதுரை தீக்கங்குகளை விட சூடாக வார்த்தைகளை கக்கினார். ஆடிப் போனான் பிரசாத். அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, "அவரு அப்படிதான் மாப்ள, நீங்க ஒன்னும் மனசில வெச்சுக்காதீங்க, நல்ல நேரம் முடியறதுக்குள்ள கிளம்புங்க" என்றாள் லெட்சுமி. கண்கள் சிவந்த கீதா, இனி இந்த வீடுக்கு தனியா வரவே கூடது என்று உறுதியோடு நடக்க ஆரம்பித்திருந்தாள் பிரசாத்தின் கரம் பற்றி. அப்பாவை நினைக்க நினைக்க கோபம் வந்தது. அது அழுகையாய் மாறி அவள் கன்னங்களை நனைக்க ஆரம்பித்து இருந்தது.

சிறிது நாட்கள் கழித்து.....

சுமார் ஒன்றரை மாதங்கள் கழிந்திருக்கும், கீதா மறுபடியும் அவள் கணவன் வீட்டிற்கு வந்து. இந்த நாட்களில், அவள் கணவனும் சரி, அவள் மாமியாரும் சரி நன்றாக இவளை கவனித்து கொண்டனர். இவளும் அவர்கள் அன்பை பொழிய ஆரம்பித்து இருந்தாள். அன்று கணவன் அலுவலகம் சென்றிருக்க, அவள் மாமியார் சற்று களைப்பாக இருக்கிறது என்று உறங்கி கொண்டிருந்தார்கள். கீதா வழக்கம் போல எல்லா வேலைகலையும் முடித்து விட்டு, அவர்கள் அறையை சுத்தம் செய்வதற்காய் துடைப்பத்துடன் நுழைந்தாள். அவர்கள் அறையில் இருந்த பெரிய பீரோவின் மீது அதிகமாய் தூசு படர்ந்திருப்பதை பார்த்து அதை தட்டி கொண்டிருந்தாள். திடீரென்று, ஒரு டைரி கீழே விழுந்தது. அது அவள் கணவனுடையது என்பதை பார்த்து விட்டு வைத்து விடலாம் என்று தோன்றியது. சரி விளையாட்டாய், "சில்லென்று ஒரு காதல்" போல ஏதவது இருக்குமோ என்று பிரித்து படிக்க ஆரம்பித்தாள். அது அந்த வருடத்தின் டைரி என்பதால் அந்த சுவாரசியங்கள் இருக்காது என்று மூடப் போக, அவளின் வளையலில் சில பக்கங்கள் சிக்கின.


எடுத்து பார்த்த போது அவை ஆகஸ்ட் மாசத்தின் பக்கங்கள். சரி படிப்போமே என்று ஆரம்பித்து, ஆகஸ்ட் 15 ஆம் தேதி பக்கத்தை எதேச்சையாக திருப்பினாள். அவளை அறியாமலேயே கண்கள் குளமாகின. இவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கோமே பிரசாத்த, என்று நினைத்து கொண்டே அடுத்த நாளை திருப்பினாள். அதை படிக்க படிக்க கீதாவின் இதயம் நின்று விடும் போல துக்கம் நெஞ்சை அடைத்தது. வெடித்து அழ ஆரம்பித்திருந்தாள் அந்த பக்கதின் தொடக்கத்தில், "இன்று திடீரென ராமதுரை மாமா என்னை ஆபீசில் சந்தித்தார். மாப்ள, என் மகள் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சிகோங்க. அவளுக்கு இனிமே நீங்கதான் எல்லாம்........................................................................................ என்று அவர் அனைத்தையும் சொல்லி முடித்து என் கையை பற்றி அழுத போது நான் இடிந்தே போனேன்".

கீதா தன்னை அறியாமலேயே "அப்பா, அப்பா" என்று பிதற்ற ஆரம்பித்திருந்தாள்!

- காவிரிக்கரையோன் MJV

Wednesday, November 11, 2009

அவரு என் அண்ணன்....

ஆள் அரவமற்ற அந்த ஊர் கோடி ஆலமரத்துக்கு பக்கத்தில் உள்ள கல்லின் மீதுதான் முதன் முதலில் ஏறி பயணப்பட்டது நம் காதல். உன் விழிகள் என் சுவாசம் திருட, என் இதழ்கள் அதற்கு பிராண வாயுவாய், காதலின் புரிதல் தொடங்கி இன்றோடு ஐந்து வருட காலங்களை நம் காதல் அருந்தி முடித்திருந்தது. தேன் குடித்த தேனீக்கள் மயங்கி கிடப்பது போல என்று உவமை சொல்லும் கவிஞர்களை எனக்கு பார்த்து சிரிக்கத்தான் தோன்றியது. இந்த காதலின் புரிதல் நிலையை விட ஒரு மயக்கம் இருக்குமோ இந்த உலக நிகழ்வுகளில்.... அவள் கண்கள் என்னும் கரிய பெரிய தானியக்கி கொண்டு என்னை ஆட்டுவித்தாள்.

நானோ அனைத்தும் புரிந்தவனாய் ஆடினேன். சூரியன் என்னும் பாம்பாட்டி ஆட்டி வைப்பானே இந்த அகில உலகத்தையும், அந்த ஆடல், இரவு வரை நீடிக்கும், இரவு தோல்வியே கதியாய் வானத்தின் முகம் கருகும்போது, பளீர் என போட்டு வைக்க நிலவு வருமே, அப்படிதான் இவளும் என் இரவின் இருளை நீக்கி போகும் வல்லமை படைத்தவள். அம்மாவாசை இரவுகளில் வானம் இருளில் காணாமல் போகின்ற தருணங்கள் வரும், அன்றும் இவள் கரு விழிகளில் உள்ள வெளிச்சம் எனக்கு அவளின் விழி காட்டும், அவளின் வழி காட்டும்.

பல காலம் கூட இருந்தவர்கள் போல சில நேரங்கள் விலகினாலும், பதறி துடித்தது மனம், அச்சம் என்னும் எதிரி வீட்டு நண்பன் கேட்காமலேயே வந்து அமர்ந்தான். சீ உனக்கு வெட்கமாய் இல்லையா? மதியாதார் தலை வாசல் மிதித்து அமர்ந்துள்ளாயே என்று அவமானப்படுத்தியும், அவன் நகரவில்லை. முன்பெல்லாம் இப்படி இவன் வந்ததில்லை. ஏன் அழையா விருந்தினராய் வந்தான். இதற்கும் வரலாறுதான் மிக முக்கியம் .....

பாலின் நிறத்தில் அவளா, அல்லது அவள் நிறத்தில் பாலா என்ற ஐயத்தை தூண்டுகின்ற ஒரு மாலை வேளையினில் அவளுக்காய், காலத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், வெகு நேரமாய் என்னை வெறித்து பார்த்து கொண்டிருந்த ஒரு காளை மாடு என்னை நோக்கி மிரட்டலுடன் ஓடி வந்தது. வீரம் என்பது மனதின் தையிரியம் என்று போதித்தவர்கள் எழுந்து காணாமல் போயிருந்தார்கள்.

நானும் அவர்களுள் ஒருவராய் காணாமல் போயிருப்பேன். அந்த காளை என்னை கடந்த பின்னரும் என் துடிப்புகள் அடங்கவில்லை. இன்னும் வேகமாய் துடிக்க ஆரம்பித்தது இதயம். எப்போதும் ஏதாவது ஒரு மலருக்கு உவமை கூற வைக்கும் அவள் முகம் இன்று, ஏனோ கலை இன்றி வாடி வதங்கி இருந்தது. மலர்களுக்கெல்லாம் மகிழ்ச்சி இன்றாவது இவனுடைய "அவள் புகழ் பாடலிலிருந்து தப்பித்தோமே" என்று. அப்படியெல்லாம் சொல்லிய மலர்களை எதிர்த்து பேச தெம்பில்லாமல் இருந்தேன் நான்.

காதலி முகம் வாடி இருக்க, கலங்காத காதலனும் பிறப்பானோ இந்த பூமியில் என்று லட்சத்தி பத்தாவது முறையாய் கவிஞனாய் மாறியிருந்தேன். என்ன என்று நீண்டு முடியாத பாதையை உற்று நோக்க, அவள் என்னுடைய மைத்துனன் பின் தொடர பூமி மாதாவுக்கு வலிக்குமே என்ற தயக்கத்துடன் காலடி சுவடு கூட பதியாமல் நடந்து வந்தாள். நடந்து வந்தவள் என் அருகில் நின்றவுடன் விழுந்தாள். என்ன என்று கேட்பதற்குள்ளாகவே பாதம் தரையில் படாத காரணம் புரிந்து கொண்டேன். பூக்களை எரிக்கவும், துளிர் விட்ட மரத்தை வெட்டவும் கூட துணிந்த மனிதர்கள் இருப்பதை அவள் பாதம் சுட்டி காட்டியது. ஒருவன் வாழ்வின் ஒளியாய் அமைந்ததால் அவளின் பாதத்திற்கு சூடு போட்டு எக்காளமிட்டு இருக்கிறார்கள், அதில் ஆண்மகன் என்ற வேடத்தில் என்னவளின் பின்னால் வரும் பெண்டு மகனும்
அடக்கம்.

எல்லாருக்கும் வரும் சராசரி வேகத்தடைகள் தான் எங்கள் காதலுக்கும் என்றாலும், அவர்கள் குடும்பம் தலைமை தாங்கி நிற்கும் குடும்பம், உங்கள் குடும்பம் தலை தாழ்த்தி நிற்கும் குடும்பம், அந்த குடும்பத்தில் என் பெண் தலை தாழ்த்தி நிற்க கூடாது என்ற தலையான கொள்கை அவள் குடும்பத்திற்கு. என் பெற்றோர் வேண்டாம் மகனே, இதெல்லாம் என்று சொன்னாலும், விட்டு விடவா உயிரை கொடுத்து காதலிக்கிறோம், அதெல்லாம் கவலை படாதீங்க என்ற முரசு கொட்டி வந்தேன் எங்கள் இடத்திற்கு. ம் ஆமாம் சிறிது நாட்களில் எங்கள் பெயரை அந்த கல்லில் வரலாறு தானாகவே பதிக்க போவதாய் கேள்வி.

ஒரு கணம் நினைவுகளில் மீண்டு எழுந்து பார்க்க, அவள் அண்ணன், ஓங்கி ஒலிக்கும் குரலில், எலே, (*&^%^%^, என்று வசை பாடி அழைத்து, தம்பி என்று ஆரம்பிக்க, என் பராக்கிரமத்தை காண்பித்து விடலாம் என்று கை எடுக்க, என்னவள் என் முன்னாள் கை கூப்பி நின்றாள். "அவரு என் அண்ணன், மன்னிச்சிடுங்க" என்று சொல்லி விழி மெல்ல மூடி விழுந்தாள். அவளை அள்ளி தாங்க நான் தாவிய அந்த கணம், இரும்பு தடியின் ஆக்கிரமிப்புக்கு என் பின்னந்தலையில் பட்டா போடப்பட்டது.

நீண்ட உறக்கம் பிடித்தது போல என் கண்கள் சூரிய வெளிச்சம் பார்க்க நாணி குறுகியது. சட்டென்று தேள் கொட்டியது போல எழுந்து எவ்வளவு நாள் ஆச்சுமா என்றபடி சுவரோரம் சாய்ந்து, கண்ணில் ஈரம் வற்றி போய் இருக்கோமோ என்றபடி, அழுது சாய்ந்திருக்கும் ஆத்தாவிடம் கேட்டேன். ஈன ஸ்வரத்தில் ஆதா ஏதோ முனகியது. என்னாத்தா ஐயாவிற்கு உடம்பு சரி இல்லையா என்று கேட்டேன்.

காலை கட்டிக்கொண்டு வீடு முழுவதும் எதிரொலிக்க கதறியது அந்த கிழவி. ஈரக்குலை நடுங்கும் அளவுக்கு எனக்கு பயம் பற்றி கொண்டாலும், என்ன ஆத்தா என்று வினவ, இப்படி பண்ணிக்கிட்டாளே பாவி என்று கதற கதற, என்னவளின் நினைவு வந்தது. என்னமோ ஏதோ என்று பதறியடித்து நான் ஊர் கோடியில் உள்ள எங்கள் கல்லை நோக்கி ஓட, பாசி படர்ந்த அந்த கல் எனக்கு நான் எவ்வளவு காலம் கண் விழிக்கவில்லை என்பதை உணர்த்த, கூடு களைந்து பறக்க ஆரம்பித்த பறவையாய் அவளின் இல்லம் நோக்கி பறந்தேன்.

புகைப்படத்திற்கு என்னவளால் அழகா இல்லை புகைப்படம் அழகாக எடுக்கப்பட்டதா என்ற பட்டிமன்ற தலைப்பாய் என்னவள் அந்த புகைப்படத்தில் இருந்தாள். அந்த கரிய பெரிய விழிகள் என்னை பார்த்து சிரிப்பதை கண்டு ஓடி கட்டி உருண்டேன். அந்த புகைப்படத்தின் மாலையும் சந்தனமும் என் மேனியை கட்டி பிரண்டது. அவளே, என நினைத்து வா நம் கல்லுக்கு செல்வோம் என்று அவளை அழைத்து சென்றேன்.

அன்றிலிருந்து இன்று வரை நானும் என்னவளும் அந்த கல்லில்தான் அமர்ந்து கதை பேசி வருகிறோம். ஏனோ இப்போதெல்லாம் யாரும் எங்களை தட்டி கேட்பதில்லை. என் ஆத்தா வந்து என்னை பார்த்து ஏன்டா இப்படி கல்லே கதின்னு இருக்க, வீட்டுக்கு வாடா என்று அழைத்தது. நானோ ஆத்தா அவ இருக்கா, விட்டுட்டு வர முடியாது என்றேன். ஆத்தா அழுது கொண்டே சரிடா அவளையும் கூட்டிட்டு வா என்று சொல்லி விட்டு, முன்னே சென்றது. நான் என்னவளின் கரிய பெரிய விழிகளை பார்க்காமல் போகலாமா என்று கேட்டேன்.

அவள் பதில் சொல்லவில்லை. நான் தொடர்ந்து கேட்டு கொண்டே இருக்கிறேன். கோபம் தீர்ந்து எங்கள் வீட்டுக்கு வந்து விடுவாள் அப்போது நானும் வருகிறேன் என்று சொல்லி கொண்டே அவளின் தலை அசைவு என்ற கவிதைக்காய் எங்கள் கல்லின் மீது காத்திருக்கிறேன்....

- காவிரிக்கரையோன் MJV

Tuesday, November 10, 2009

பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக!!!(சொந்த மொக்கை)

என்னதான் அடுப்புல எண்ணெய் 'காயுது' அப்டின்னு சொன்னாலும்,
டக்குனு ஓடி போய் பறக்காம இருக்க க்ளிப் போட முடியாதில்லையா?

என்னதான் 'கோவ'க்காயா இருந்தாலும் அந்த காய் வாங்கினா
அது கோவத்தில சண்ட போடறதில்லையே!!!


என்னதான் Train போறதுக்கு ஒரு முக்கியமான காரணமா
இருந்தாலும், அத நாம 'தண்ட' வாளம்னு தானே சொல்றோம்!!!!


என்னதான் ட்ரிங் ட்ரிங் னு சவுண்ட் வந்தாலும் போன் னு நெனச்சிக்கிட்டு
காலிங் பெல்லுல ஹலோ சொல்ல முடியுமா????

என்னதான் தன்னோட பசங்கள கிட்டக்க உக்காந்து டிவி பாக்காதன்னு சொன்னாலும்
3rd அம்பையர் கிரிக்கெட்ல டிவிக்கு கிட்டக்க உக்காந்து பாத்துதான் அவுட் கொடுக்கணும்!!!!

என்னதான் 'கொத்த வர' ங்காய் னு பெயர் இருந்தாலும் மகுடி
ஊதினா படம் எடுக்காது இல்லையா?


- காவிரிக்கரையோன் MJV

Saturday, November 7, 2009

குறுங்கவிதைகள்...

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு....
அக்கா கொஞ்சம் மாவு கொடுங்க,
ஏம்மா இன்னிக்கி ரசம் வெச்சா கொடு
அக்கா வீட்ல செஞ்சேன் எடுத்துக்கோங்க
யெம்மா இன்னிக்கி வீட்ல சாமி கும்பிட்டோம்,

பாத்திரங்கள் வழி பயணப்பட்ட அன்பு,
வீட்டுக்குள் வராமலே கேட்ட குரல்கள்,
கொல்லைபுற மதில் சுவர் வழியே
வீட்டுக்குள் எப்போதும் வாழ்ந்தவர்கள்,
இப்போது கான்கிரீட் காடுகளில் காணாமல் போனவர்கள்.....


வெறுமை
வண்ணத்துபூச்சியின் சிறகதிர்வு காணாமல்

போனதில் கலங்கிப்போன தோட்டம்,
மழையின் ஆட்டம் நின்ற
பின் சகாரவாகிப் போன சாலை,
அகண்ட நீள் பிரம்மாண்டத்தில் புள்ளியைவிட
சிறியதாய் போன பூமி,
அம்மாவாசை இரவினில் நிலவுக் காதலன் மறைந்த
சோகத்தில் கரிந்து போன வானம்,
தோட்டம், சாலை, வானம், பூமி இத்தனை
முரண்பாடுகளுக்கும் இவர்களுக்கும் ஒரே ஒற்றுமை வெறுமை,
இறப்பு அழிக்கும் கண்களைப்
பிறப்புக்கு கொடுத்துதான் பார்ப்போமே,
அவர்களின் வெறுமை போக்கி சாகா வரம் பெறத் தயார் ஆகுவோம்.

முழக்கம்
தேசிய விலங்குகளைப் பாதுகாப்போம்
சரணாலயங்களைப் புதுப்பிபோம்,
முழங்கினார் அரசியல்வாதி.
கழுத்தில் மின்னியது காலையில்
போட்ட புலிப்பல் செயின்...

பூச்சாண்டி
ஒழுங்கா சாப்பிடலைன்னா
பூச்சாண்டிக்கிட்ட சாப்பாட்ட கொடுத்திடுவேன்,
மிரட்டிய அம்மாவைப் பார்த்து சிரித்தபடி
குழந்தை வீட்டினுள்ளே,
கொடுத்தே விடுவார்கள் என்ற
நம்பிக்கையுடன் பூச்சாண்டி வெளியே
கதவோரமாய்...

சோறு
ஒட்டிக் கொண்டிருந்த சோற்றுப்பருக்கைகளை அகற்றிப்
பாத்திரங்களைக் கழுவிக் கொண்டே,
"பையா பக்கத்துல ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வா",
சொன்னது அன்றைய திருமணத்தில்
வயிறாறசமைத்துக் கொடுத்த
தலைமை சமையல்காரர்...

பேய்
இடுகாட்டின் பக்கமிருந்த சாலையில்
அமர்ந்து, "பேயும் இல்ல பூதமும் இல்லடா "
என்றேன் நண்பனிடம்,
முந்தாநாள் தெருக்கோடி சாமியாரிடம்
எதற்கும் இருக்கட்டுமேயென்று
வாங்கிய தாயத்தை இறுக்கமாய்
பிடித்துக் கொண்டே....

- காவிரிக்கரையோன் MJV

Friday, November 6, 2009

சச்சின் என்ற சகாப்தம் - என்னை கவர்ந்த கிரிக்கெட் வீரர்....இப்படி தொலைக்காட்சி முன் இதயம் படபடக்க ஒரு கிரிக்கெட் போட்டி பார்த்து வெகு நாட்கள் ஆகிறது. யோசித்து பார்த்தால், 6 வருடத்திற்கு முன்பு பாகிஸ்தானை எதிர்த்து 2003ஆம் ஆண்டில் உலக கோப்பையில் இந்தியா ஆடிய ஆட்டத்தின் பொழுது இருந்தோம். அந்த போட்டிக்கு பிறகு எவ்வளவோ போட்டிகள் இந்தியா வெற்றியை தழுவி இருக்கிறது. எவ்வளவோ போட்டிகளில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. ஆனாலும் இன்று நடந்த ஆட்டம் என்னை மறுபடி அப்படி ஒரு நிலையில் அமரந்து பார்க்க வைத்தது.


ஆட்டத்தின் விவரம் - இந்தியாவிற்கும் ஆஸ்த்ரேலியாவிற்குமான 2293ஆவது ஒரு நாள் போட்டி. 2-2 என்ற நிலையில் சம நிலையில் இருந்த தொடர்.

இடம் - ராஜீவ் காந்தி கிரிக்கெட் விளையாட்டு அரங்கம்.


பான்டிங் டாசில் வென்று மட்டை வீச முடிவு எடுத்தார். இந்த ஆட்டத்தில் பந்து வீச்சாளர்களின் பங்கு சிறிது குறைவாக இருந்ததாலும், பல மட்டை வீச்சாளர்கள் நன்றாக விளையாடி இருந்த போதிலும், ஆயிரம் விடயங்கள் நடந்திருந்தாலும், சச்சினின் ஆடத்தை பற்றி மட்டுமே இங்கே பேச போகிறேன். சுமார் பதினோரு வருடங்களுக்கு முன்னால் 1998ஆம் ஆண்டில் ஷார்ஜாவில் மையம் கொண்ட சூறாவளி காற்று, இன்றும் சுழன்று கொண்டுதான் இருக்கிறது. என்னத்த சொல்றது, 10ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த அன்று, சச்சின் அடித்த அந்த சதத்தை கண்டு கண்டு மகிழ்ந்த கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். இப்பொழுது எத்தனையோ வீரர்கள் வந்திருந்தாலும், சச்சின் ஆட்டம் என்றால் அமர்ந்து பார்க்கும் நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அன்று 1998ஆம் வருடத்தில் தான் சச்சின் மொத்தம் 1894 ரன்கள் குவித்து சாதனை படைத்து இருக்கிறார். இன்னும் அதை யாராலும் முறியடிக்க முடியவில்லை. அந்த வருடத்தில் மட்டும் 9 சதங்கள் அடித்துள்ளார்.


1995ஆம் வருடத்தில் இருந்து நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்து இருந்தேன். என்னை சச்சினின் ஆட்டம் மட்டும் தான், கிரிக்கெட்டை நோக்கி இழுத்திருக்கிறது. ஆனால் அப்புறமாக, எந்த ஒரு ஆடத்தையும் நுணுக்கமாய் பார்க்க ஆரம்பித்து விட்டேன். சரி என் புராணம் இருக்கட்டும். இன்றைய ஆட்டத்தை பற்றி பார்ப்போம். இது வரை இந்த தொடரில், சச்சின் சரியாக சோபிக்க வில்லை. ஆனால் சோடை போக வில்லை என்பதை, மறுபடியும் சச்சின் தான் கிரிக்கெட் சாம்ரஜியத்தின் சக்கரவர்த்தி என்று நிரூபித்திருக்கிறார். பான்டிங்கின் முகத்தை பார்க்க வேண்டுமே, "இஞ்சி தின்ன குரங்கே, இருந்த இடத்தில் உறங்கே" என்று தான் இருந்தார் ஆட்டம் முழுவதும். மெக்கேயின் ஒவரில் முதல் பந்தில், சச்சின் ஹௌரிட்சின் கையில் பந்தை காட்ச் கொடுத்து வெளியேறினார். அப்பொழுதும், இந்த பாழாய் போன மனது, பாகிஸ்தானுடன், சென்னையில் அவர் விளையாடி, 136 ரன் களில் ஆட்டம் இழக்க இந்திய அணி மீதமிருந்த 3 ஆட்டக்காரர்களை அடுத்த 5 ரன் களுக்கு இழந்து, 12 ரன் களில் தோல்வியைத் தழுவியது. அந்த ஆட்டம் தான் கண் முன்னே வந்து சென்றது.


அதே போலவே, சச்சின் ஆட்டம் இன்று ஆட்டம் இழந்த பொழுது, இந்தியாவிற்கு, 17 பந்துகளில், 19 ரன் கள் தேவைப்பட்டது, இந்தியா சாதனை படைக்க. என்னப்பா பண்றது, "பழைய குருடி, கதவை திறடி" என்ற பழமொழி போல, மறுபடியும் அதே தோல்வி. என்ன இந்த முறை, கொஞ்சம் அருகாமையில் சென்று தோல்வியை தழுவியிருக்கிறோம். என்னைப் பொறுத்த வரை இன்றும் இந்திய அணி சில சமையங்களில், ஆங்கிலத்தில், "One Man Army" என்று சொல்லுவார்கள். அதை போலத்தான் இருக்கின்றது. யாருடைய ஆட்டத்தால் தோற்றோம், என்று கேட்டால், சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அதனால் ஒன்றும் நேரப் போவது இல்லை. இதிலிருந்து ஒன்று தெரிகிறது, இன்றளவும், சச்சின் எல்லோருக்கும் ஒரு சிம்ம சொப்பனமாய் இருக்கிறார். எந்த நிலைமையில் இருந்தாலும் எந்த ஆஸ்த்ரேலிய அணியாக இருந்தாலும், அவர்கள் தோல்வி என்பதை அவ்வளவு எளிதாக ஒப்பு கொள்ள மாட்டார்கள். அடை மழையாய் சச்சின் அவர்களை வெலுத்து வாங்கினாலும், ஒற்றை குடை கொண்டு தப்பித்து தாண்டியிருக்கிறார்கள்.


சச்சினின் ஆட்டத்தை மெதுவாய், பரிசோதனை செய்து பார்த்தால், சேவாக் முதல் தோனி வரையிலானவர்கள் ஆட்டமிழந்த போதும் சச்சின் ஒரு புறம் அதிரடியாய், காதலில் விழுந்த காதலனும் காதலியும், மறுபடி மறுபடி காதலில் விழுந்து எழுவார்களே, அது போல, சச்சினின் மட்டை, தன் காதலியான கிரிக்கெட் பந்தை ஓடி ஓடி முத்தமிட்டது! ரைனாவுடன் ஜோடி சேர்ந்த சச்சின், நிதானமாய் தென்றல் காற்றாய் ஒன்று இரண்டாக, எடுக்க துவங்கினார். ரைனா சிறு பிள்ளை இல்லையா? தவறு செய்யும் பிள்ளையை திருத்தும் தந்தையாய், அடிக்கடி அறிவுறை கூற, ரைனாவும் ஆட்டத்தின் சூச்சமத்தை அழகாய் புரிந்து கொண்டு, அந்த புரிதலை ஆட்டத்தில் காட்ட ஆரம்பித்தார். சில ஓவர்களில் ஒன்று, இரண்டு என்றே ரன் கள் வந்தாலும், அடுத்த அடுத்த ஓவர்களில், விளாசித் தள்ளி, ரன் விகிதத்தை, இருவரும் கட்டு கோப்பில் வைத்திருந்தனர்.


சிறு பிராயத்து சச்சினே அவ்வப்போது வந்து போனதாய், பல பேர் தகவல் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அந்த நேர்த்தியான ஆட்டம், வீரர்களுக்கு இடையில் பந்தை விரட்டும் லாவகம், அது சச்சின்னுகே உரிய கலை. 141 பந்துகள் 175 ரன் கள் (19X4s , 4X6s) இவற்றிற்கு பிறகு, அதுவும், டீப் ஃபைன் லெக், 30 யார்ட் வட்டதுக்குள் நின்ற காரணத்தினால், அந்த பந்தை திருப்பி விட நினைத்து, மெக்கேயின் மாயஜாலத்தில் சிக்கி, வேகம் குறைந்த அந்த பந்தில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு, அடுக்கி வைக்கப் பட்ட சீட்டு கட்டுகளைப் போல, விழுந்து வீழ்ந்தனர் நம்மவர்கள். சரி என்ன செய்வது மனசை தேற்றிக் கொண்டு, அடுத்த ஆட்டத்திற்காய் தயாராகி கொண்டிருக்கிறேன்!!!


அதற்குள் மைதானத்தில், 200 அடிப்பார் சச்சின் என்ற ஆவல் அதிகமாய் இருந்தது ரசிகர்களிடம். நானும் தான்பா!!! கடைசியில் ஆட்டமிழந்த ஒவ்வொரு வீரருக்கும் இன்றிரவு தூக்கம் போயிருக்கும் என்று நினைக்கிறேன். அதெல்லாம் இல்ல, அவனுங்களுக்கு எங்க இதெல்லாம் தெரியும், விளம்பரப் படம் நடிக்க பாடம் எடுத்துக்கிட்டு இருப்பாங்கன்னு சொல்லுவது கேட்கிறது. இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி ரசிக்க வைத்த ஒரு மட்டை பந்தாட்டத்தின் வித்தகர் சச்சின்.


இப்படி அச்சம் இன்றி ஆட வேண்டும் இந்திய அணிக்கு கற்றுக் கொடுத்த, இந்தியாவின் தலை சிறந்த கிரிக்கெட் காப்டனாய் நான் கருதும், கங்கூலி, "சச்சின் கிரிக்கெட்டின் மஹாராஜா" என்று வர்ணித்து இருக்கிறார். சச்சினின் சதங்களில், 45 ஆவது சதமான இந்த சதம்தான் அவருடையதில் தன்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகவும், 351 ரன் கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடும் பொழுது, பாதி ரன் களை எடுத்து, வெற்றியின் விளிம்பிற்கே இட்டு சென்ற சச்சின் கிரிக்கெட் விளயாட்டில் சாதிக்காதது ஒன்றும் இல்லை என்றும் கூறுகிறார். சச்சினின் சாதனைகளும், அதில் இந்தியாவின் வெற்றிகளும் தொடர வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும், சராசரி கிரிக்கெட் ரசிகர்களில் ஒருவன்!!!


என்னதான் சச்சின் சரியில்ல, இனிமே ஆடுவதற்கு தகுதி இல்லை அப்படி என்றெல்லாம் புலம்பியபடி ஒரு கூட்டம் திரிந்தாலும், அவர்களும் இந்த ஆட்டத்தை ரசித்திருக்கக்கூடும் என்றே ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன (நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள்).....


- காவிரிக்கரையோன் MJV