Saturday, November 28, 2009

எழுநூற்றி பதினொன்று புள்ளி ஒன்பது.....

ஒரு நண்பனின் திருமணத்திற்கு தவிர்க்க முடியாத காரணத்தால் போக முடியவில்லை. ஆனால் அவனது வரவேற்பு நிகழ்வுக்கு போகலாம்னு முடிவெடுத்து, என்னுடைய காரில் 4 நண்பர்கள் கல்பாகத்திற்கு சென்றோம். அதில் அனைவருமே என் கல்லூரி நண்பர்கள் தான். அதில் 2 நண்பர்களை சந்தித்து சிறிது நாட்கள் ஆனதால் அவர்களோடு நிறைய பேசிக் கொண்டே சென்றோம். அதில் நடந்த சில சுவாரசியங்களை ஆனந்த விகடன் பாணியில் ஹிட்டு, குட்டு மற்றும் ஷொட்டு என்கிற வகையில் கொடுக்கிறேன்.


ஹிட்டு

காலையில் சுமார் 5.15 மணிக்கு பெங்களூரில் கிளம்பி, கிருஷ்ணகிரிக்கு கொஞ்சம் முன்னரே வந்து விடும் அந்த உணவகத்துக்காக தான் எல்லோரும் காத்துக்கொண்டிருந்தோம். நான் தான் கார் ஓட்டிக் கொண்டிருந்தேன். அந்த உணவகத்தில் பொங்கல் மிகவும் அற்புதமாக இருக்கும். நிறைய முறை அங்கே உணவு உண்டிருக்கிறோம். அந்த பொங்கலுக்காகவே நிறைய கூட்டம் வருவதுண்டு. மேலும் அந்த தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகங்களில் இந்த உணவகம் கொஞ்சம் அசத்தல். 2 நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் சொன்னதை நம்பி அந்த உணவகம் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்ற நப்பாசையில்!, உள்ளே சென்று என்ன இருக்கு சாப்பிட என்று கேட்க, கல்லாவில் இருந்தவர், எங்களை ஏறெடுத்து கூட பாராமல் 7 மணிக்குதான் சாப்பாடு ரெடி ஆகும் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க சார்னு சொல்ல, அசடு வழிந்து எல்லோருக்கும் காப்பி சொல்லி குடித்து விட்டு, எப்பாடு பட்டாவது, பொங்கல் அதுவும் நல்ல பொங்கல் சாப்பிட்டு விட வேண்டும் என்ற விடா முயற்சி (எப்படி இங்கெல்லாம் நாங்க விடாம முயற்சி செய்வோம் பாத்துக்கோங்க) கொண்டு பயணித்தோம்.

சுமார் 8, 8.30 மணிக்கு வேலூர் வந்தடைந்தோம். அங்கே உள்ள ஆ வில் ஆரம்பிக்கும் ஓர் உணவகத்தில் பொங்கல் நன்றாக இருக்கும் என்று நண்பன் சொல்ல, வண்டியை ஓரமாக பூட்டிவிட்டு, உள்ளே நடை கட்டினோம். சர்வரிடம் முதலில், 3 பொங்கல், 3 வடை என்றோம். இன்னொரு நண்பனுக்கு சாம்பார் வடை சொல்லி விட்டுக் காத்திருந்தோம். சும்ம சுட சுட வந்த பொங்கலை ஒரு கைப் பார்த்து விட்டு, வெகுவாக சாப்பிட்டு முடித்திருக்கும் பொழுது, உண்ட களைப்பில் நாங்களும், ஆர்டர் எடுத்த களைப்பில் சர்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு நண்பன் பில் கொண்டு வாங்க என்று சொன்னான். "சார், சார்" என்றார். சொல்லுங்க என்றோம். "கோச்சிக்கலன்னா கொஞ்சம் எவ்வளவு பொங்கல்னு சொல்லுங்க சார்" என்றார் சர்வர். மொத்த ஆர்டர்ல லேசா கொஞ்சம் குழப்பம் இருக்கு சார்! அந்த கேள்விக்கு விடை, "8 பொங்கல், 3 வடை, 1 சாம்பார் வடை, 3 தோசை, 2 பூரி, 1 காபி, 1 டீ"!!! இதெல்லாம் யோசிச்சிட்டு எங்களுக்குள்ள, சர்வர்கிட்ட சொல்றதுக்கு முன்னாடியே, என் நண்பன், " நாங்க சொல்ல மாட்டோமே, நீங்க கண்டு பிடிங்க " என்று சொல்ல, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, அன்று காலை உணவிற்கு மொத்தம் 280 ரூபாய் கொடுத்து விட்டு வந்தோம்!!!!! ஹிட்டு - பொங்கல் செம ஹிட்டு:-)

குட்டு
சரி நல்ல படியாக, நண்பனின் வரவேற்புக்கெல்லாம் சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்ப தொடங்கி இருந்தோம். கல்பாக்கத்தில் இருந்து, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் வழியாக தேசிய நெடுஞ்சாலை 46 ஐ (NH - 46) சென்றடைய முடியும். ஒரே நாளில் கல்பாக்கம் சென்று அன்றிரவே திரும்ப வேண்டிய கட்டாயத்தில் அனைவருமே இருந்தோம். ஒரு வழியாக டீசல், உணவு, இசை என்று எல்லாவற்றையும் சரி செய்து விட்டு, வேகம் எடுக்க தொடங்கி இருந்தேன், கல்பக்கம் - செங்கல்பட்டு மாநில நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தோம். ஒரு லாரி வெகு நேரமாக எங்களுக்கு முன் சென்று கொண்டிருந்தது. சரி இப்படியே லாரிக்கு பின்னால் சென்று கொண்டிருந்தால் விடிந்து விடும் என்று நினைத்து, அந்த லாரியை முந்த நினைத்து அதற்கான ஆயத்தங்களில் இறங்கினேன்( சிறிது வேகம் கூட்டிக் கொள்வது, விளக்கை ஹை பீம் மற்றும் லோ பீம்களில் அடித்து காண்பிப்பது என்றெல்லாம்). லாரி ஓட்டுனர் ரொம்ப நல்லவர், சட்டென்று வழி கொடுத்தார். சட்டென்று பறக்கும் வேகத்தில், ஒலி எழுப்பிக் கொண்டு ஒரு வண்டி, எங்களையும் தாண்டி சாலையின் வலது ஓரத்தில் சென்று மறுபடியும் வேகமாக இடது ஓரமாக ஒதுங்கியது. ஒதுங்கியதில் கட்டுப்பாட்டில் இல்லாமல், வயலுக்குல் சென்றிருக்கும், ஏதோ அந்த ஓட்டுனர் சமாளித்து, எங்களை போகுமாறு கை அசைத்தார்.

சரி என்று வண்டியை கிளப்பிக் கொண்டு சென்று கொண்டிருந்தோம். திடீரென்று வீறிடும் விசில் சத்தங்கள், மற்றும் எங்களை நோக்கி செய்கை காட்டி கொண்டே அதே வண்டி எங்களை படு வேகத்தில் தாண்டி சென்றது. சரி ஒரு கை பார்த்து விடலாம் என்று வண்டியை விரட்டிய பொழுது, ஓரிடத்தில் அந்த வண்டி வேகம் குறைத்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளே சின்னஞ்சிறு குழந்தைகளும், ஒரு குடும்பமும் சென்று கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து விட்டு, "அட ஏண்டா அவன் இப்படி ஓட்டிட்டு போறான், விடு ஃபேமிலியா போறாங்க, ஏதோ ஒரு சந்தோஷம் அவங்களுக்கு, நாம விரட்ட போய், எதாவது ஆகிடுசின்னா" என்றான் என் நண்பன். "ஒரு மோசமான ஓட்டுனரிடமிருந்து நீ தப்பிக்க, ஒன்று நீ மெதுவாக சென்று அவனுக்கு வழி விடு, இல்லை அவன் கண்ணிலிருந்து காணாமல் போய் விடு என்று யாரோ சொன்னது மீண்டும் ஒலித்தது!!! (If you want to escape from a dangerous driver, Either Leave him or Lose him). குட்டு - குழந்தைகள் மற்றும் பெண்களை வைத்துக் கொண்டு அவ்வளவு அலட்சியமாக ஓட்டிய அந்த கார் ஓட்டுனருக்கு:-(

ஷொட்டு
சரி இந்த ஏழரையை முன்னால் விட்டு விட்டு, செங்கல்பட்டு - காஞ்சீபுரம் மாநில நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருந்தோம். நல்ல கும்மிருட்டு. அதில் வண்டியின் விளக்கை ஒரு முறை நிறுத்தியெல்லாம் பார்த்து எந்த அளவுக்கு திகிலான ஒரு சாலையில் பயணிக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டு சென்று கொண்டே இருக்கிறோம். திடீரென்று என் நண்பன் ஒருவன் சொல்கிறான், "மச்சான் ரோட்டோரமா யாரோ விழுந்து கெடக்காண்டா" என்று. " என்னடா இவ்வளவு இருட்டா இருக்கு, உனக்கு மட்டும் எப்படி தெரிஞ்சிது" என்று கேட்டுக் கொண்டிருந்தாலும் வெகுவாக வண்டியின் வேகத்தை குறைத்து விட்டேன். அது குறுகலான சாலை என்பதால், திருப்ப முடியாது வண்டியை, அதனால் யாராவது 2 பேர் பாத்துட்டு வாங்க என்று சொன்னேன். இருந்தாலும், சுத்த இருட்டு. சரி மனசு கேக்கல. கொஞ்ச தூரம் சென்று வண்டியை திருப்பி கொண்டிருக்கிறோம். இன்னொரு நண்பன், மச்சான் வேண்டாம் பேசாம, போலீசுக்கு போன் பண்ணிட்டு கெளம்பலாம் என்றான்.

சரி அதுக்கு உண்மையிலேயே யாரவாது கெடக்காங்களான்னு பாத்துட்டு இருந்தா போன் பண்ணிட்டு கெளம்பிடுவோம்.(கவனிக்க வேண்டிய விடயம். சில சமையம் இப்படி பரிதாபப்பட்டு திரும்பி போய் பார்த்த கார்களில் இருந்தவர்கள் தான் இடித்து விட்டார்கள் என்று உள் குத்து வைத்து நெம்பிய விடயத்தையும் கேள்வி பட்டிருக்கிறோம்) நாங்கள் வேகமெடுத்து போய் பார்க்கும் நேரத்தில், 3 பேர், 2 சக்கர வாகனங்களில் வந்தவர்கள் பார்த்து ஆள் ஆளுக்கு ஒன்று சொல்ல ஆரம்பித்தனர். அதில் ஒருவர் வேகமாக, கீழே கிடந்தவரின் கையை பிடித்து பார்த்து விட்டு, உயிர் இல்லை என்று அறிவித்தார். எங்களுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் சரி இவ்வளவு தூரம் வந்தாகி விட்டது என்று அலைபேசியில் எண்களை சுழற்றும் அளவுக்கு சென்றாகி விட்டது. அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒருவர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, சட்டென்று கீழே கிடந்தவரின் முகத்தில் 2 அரை விட்டார். சட்டென்று எழுந்தார் இந்த ரெஸ்ட்லிங்க் பார்க்கிறவர்களுக்கு தெரிந்திருக்கும், அண்டர் டேக்கர் போல எழுந்தமர்ந்தார்.

என்னய்யா இங்க கெடக்கன்னு கேட்டா?, சார் சும்மா சரக்கு சார், அதுக்குள்ள என்னா சார் போன்லாம் பண்றீங்க என்று அந்த குடிமகன் எங்களைக் கலாய்க்கத் தொடங்கி இருந்தார். எக்கேடோ கெட்டு ஒழி என்று சபித்து விட்டு, அந்த நாடி பிடித்த நபரை எல்லோரும் ஒரு முறை தேடி விட்டு வண்டியை கிளப்பிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். ஷொட்டு - ஒரு வேலை உண்மையிலேயே உயிருக்கு போராடி ஒருவர் விழுந்து கிடந்திருந்தால்? சரி போய் பார்த்து விட்டு தான் வருவோமே என்று சொல்லிய என் நண்பனுக்கு!!!

- காவிரிக்கரையோன் MJV


பி.கு - இந்த இடுகையின் தலைப்புக்கும் உள்ள இருக்கிற விடயத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பவர்களுக்கு - இந்த பயணத்தில் மொத்தமாக நாங்கள் பயணித்த தூரம் கிலோமீட்டர் அளவீட்டில்!!!!!!

6 comments:

இராகவன் நைஜிரியா said...

ஒரே நாளில் 711.9 கிமீ தூரம் போய் வந்தது என்பது பெரிய விஷயம்தான்.

நண்பர்களும் ஓட்டி இருப்பார்கள் என நினைக்கின்றேன். நீங்கள் மட்டுமே ஓட்டி இருந்தீர்கள் என்றால், இது கொஞ்சம் அதிகப் படியான தூரம் என்பதை நினைவில் கொள்வது நல்லது. அட்வைஸ் என்று நினைக்காதீர்கள். மனதில் பட்டது சொல்லிவிட்டேன். தவறென்றால் மன்னிக்கவும்.

இராகவன் நைஜிரியா said...

ஓட்டல் பேரைச் சொல்லாமல், இப்படி புதிர் போட்டுட்டீங்களே... சொன்னால் நாங்களுகும் அடுத்த தடவை அங்கு போகும் போது சாப்பிடுவோமில்ல.

இராகவன் நைஜிரியா said...

// "ஒரு மோசமான ஓட்டுனரிடமிருந்து நீ தப்பிக்க, ஒன்று நீ மெதுவாக சென்று அவனுக்கு வழி விடு, இல்லை அவன் கண்ணிலிருந்து காணாமல் போய் விடு என்று யாரோ சொன்னது மீண்டும் ஒலித்தது!!!//

மிக நன்றாகச் சொன்னீர்கள். கார் ஓட்டும் போது சுயக் கட்டுபாடு அவசியம். அது உங்களுக்கு இருக்கின்றது. ஹாட்ஸ் ஆஃப் டூ யூ.

இராகவன் நைஜிரியா said...

// சரி போய் பார்த்து விட்டு தான் வருவோமே என்று சொல்லிய என் நண்பனுக்கு!!! //

உன் நண்பர்களைப் பற்றிச் சொல், உன்னைப் பற்றிச் சொல்லுகின்றேன் என்று சொல்லுவார்கள். அதுமாதிரி நல்ல நண்பனை பெற்ற உங்களுக்கு ஒரு ஷொட்டு.

இராகவன் நைஜிரியா said...

பின்னூட்டம் 1 & 2 குட்டு
பின்னூட்டம் 3 ஹிட்டு
பின்னூட்டம் 4 ஷொட்டு

காவிரிக்கரையோன் MJV said...

வாங்க ராக்கெட் இராகவன்.... சும்மா பிரிக்கறீங்க....
என் நண்பன் இன்னொருவனும் ஓட்டினான். அதனால் களைப்பு தெரியல. சரி அந்த உணவகத்தின் பெயர் ஆர்யாஸ்!!!! ஓரளவுக்கு சுய கட்டுப்பாடு உண்டு;-) அந்த பெருமை எல்லாம் என் நண்பர்களையே போய் சேரும்!!!!

ஹிட், ஹிட் & ஹிட் உங்களுக்கு!!!