Saturday, November 14, 2009

இயந்திரம்...

அன்று சனிக்கிழமை என்பதால் மந்தமாய் இருந்த வீட்டில் சுறுசுறுப்பாய் வேலைகளை செய்து கொண்டிருந்தாள் லெட்சுமி, அந்த வீட்டின் தலைவி. மணி சரியாக எட்டை தாண்டி இருந்தது. வாரம் முழுவதும், 25 வருடங்களாக மெஷினோட மல்லுகட்டியோ என்னவோ, ஒரு மெஷினாகவே மாறியிருந்தார் ராமதுரை, அந்த வீட்டின் தலைவர். அவர் எழுந்திருக்க இன்னும் அரை மணி நேரமே இருந்த நிலையில் தான் லெட்சுமி பம்பரமாய் சுழன்று காலை உணவு தயாரித்து கொண்டிருந்தாள். எழுந்து குளித்தவுடன் ராமதுரைக்கு தயாராக உணவு இல்லையென்றால், அடுத்த 3 நாட்களுக்கு ஒரே காலட்சேபமாக இருக்கும் என்பது லெட்சுமிக்கு தெரிந்ததாலேயே இவ்வளவு பரபரப்பு.

"வாரம் முழுக்க போய் உழைச்சி கொண்டாந்து கொட்டினா, ஒரு நாள் ஒழுங்கா நேரத்துக்கு சோறு போட முடியல. அப்படி என்னத்ததான் நீ வெட்டி முறிக்கற வீட்லனு எனக்கு தெரியல. எல்லாம் என் தலையெழுத்து", ஒரு சனிக்கிழமை அன்று சனி பகவான், பாய் போட்டு படுத்தே விட்டார் ராமதுரை நாக்கில். உடம்புக்கு சரியில்லாமல் லெட்சுமி கிடந்தபோது வாங்கிய ஏச்சுப்பேச்சுக்கள் இதெல்லாம். கீதாவும், ரகுவுமாய் ராமதுரையை சமாதானப்படுத்தினர். லெட்சுமிக்கும், ராமதுரைக்கும் 2 குழந்தைகள். மூத்த மகள் கீதா திருமணமாகி ஒன்றரை வருடங்களாக சென்னையில் மாப்பிள்ளை பிரசாத்தோடு வசித்து வருகிறாள். இளைய மகன் ரகு கல்லூரிப் படிப்பு முடியும் தருவாயில் இருக்கிறான்.

எப்போதும் ராமதுரை சற்று குழந்தைகளிடமிருந்து விலகியேதான் இருப்பார். எதற்கும் அலட்டி கொள்ள மாட்டார். ஆனால் அடிக்கடி கோபம் வந்து விடும். லெட்சுமி வாங்கி கட்டி கொள்வாள். பெரிதாக வாயாடவும் மாட்டார். வீட்டில் பெரும்பாலும் ஒலிக்கும் குரல் லெட்சுமியுடையதாகவே இருக்கும். லெட்சுமி ராமதுரைக்கு நேர் மாறான குணம். எல்லோரிடமும் அதிக பாசம் காட்டுவாள். எதிரெதிர் துருவங்கள் தான் ஒன்று சேரும், என்று சொல்வது சரிதான் என்று ரகுவுக்கும் கீதாவுக்குமே பல முறை தோன்றியிருக்கிறது.

இன்றும் அப்படி ஒரு வசை வாங்கக் கூடாதென்பதில் லெட்சுமி குறியாயிருந்தாள். சட்டென கத்தி கையை மெதுவாக பதம் பார்த்ததில், துடித்து நிகழ்காலத்திற்கு வந்தாள். அவ்வப்போது தன்னை மறந்து யோசிப்பதுண்டு. வாசல் கதவை யாரோ தட்டுவது போல இருந்தது, இவ்வளவு சீக்கிரம் யாராக இருப்பார்கள்? பிரம்மையாய் இருக்கும் என நினைத்து கொண்டாள். வேகமாய் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு லெட்சுமி எழுந்து போய் திறப்பதற்குள், "அம்மா கீதா வந்திருக்காம்மா", என்ற படி 2 சூட்கேஸ்களுடன் ரகு அக்காவுக்கு பின்னே உள்ளே நுழைந்தான். என்னம்மா மாப்பிள்ளை வரலையா என்று வாசலைப் பார்த்து கொண்டே கேட்டாள்.

அம்மாவின் கேள்வி கேட்காதது போலவே, கீதா வேகமாக தன் பழைய அறைக்கு சென்றாள். என்ன தான் அவள் 15 வருடங்களாக பழகிய அறை என்றாலும், இந்த ஒன்றரை வருடங்களில் மிகவும் அன்னியப்பட்டுதான் போயிருந்தது. மறுபடியும் பழகி விடும் என்று தேற்றி கொண்டாள், விழியோரமாய் பொங்கிய கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்து கொண்டே. ராமதுரை வழக்கம் போல் எழுந்து குளித்து முடித்து, காலை உணவு உண்டு, பேப்பர் படித்து கொண்டிருந்தார் சேரில் சாய்ந்தபடி.

"என்னங்க கீதா தனியா வந்திருக்கா. ஆனா மாப்பிள்ளை வரல. என்னனு கேளுங்களேன் நீங்க", லெட்சுமி குரலில் ஒரு வித அச்சம் பரவியிருந்தது. "அத என்னத்த போய் நான் கேக்கறது. அம்மாவும் பொண்ணும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க. ஏதாவது சண்டையா என்னன்னு கேளு" என்று ஒரே மூச்சில் பேசி முடித்தார் ராமதுரை.அன்று இரவே லெட்சுமிக்கும் ரகுவுக்கும் புரிந்து போனது. கீதாவுக்கும், அவள் கணவன் பிரசாத்திற்கும் ஏதோ சின்ன சின்ன சண்டைகளில் ஆரம்பித்து, பெரிய சண்டையில் போய் முடிந்திருக்கிரது. இவள் மீது கை ஓங்கியும் இருக்கிறான் . பிறகு நடந்த வாக்கு வாதத்தில், அவள் மாமியார் அவளைப் பார்த்து, "எங்கள விட்ட உனக்கு வேறு நாதி யாரு இருக்கா" என்று கேட்டு வைக்க, ரோஷம் பொங்க விருட்டென்று கிளம்பி வந்து விட்டள் அம்மா வீட்டிற்கு. அன்று ஆகஸ்டு 15 ஆம் தேதி, தனக்கும் சுதந்திரம் என்று நினைத்து கொண்டாள்.
நடந்ததையெல்லாம் பொறுமையாய் கேட்டு கொண்டிருந்த ராமதுரை, "எனக்கு ரொம்ப தூக்கம் வருது, நான் போய் படுக்கிறேன். நாளைக்கு காலையில சீக்கிரமாய் எழுப்பி விடு. ஃபாக்டரி வரைக்கும் போக வேண்டிய வேலை இருக்கு" என்று சொல்லி விட்டு யார் பதிலுக்கும் காத்திராதவராய், சட்டென்று தன் அறைக்கு சென்று தாழிட்டுக் கொண்டார். "இந்த மனுஷனுக்கு எப்போ தான் பாசம், பந்தம் உறவெல்லாம் புரியுமோ" தலையில் அடித்து கொண்டு அழுது தீர்த்தாள் லெட்சுமி. "இப்போ எதுக்கு ஒப்பாரி வைக்கிற, உன் பொண்ணுக்கிட்ட கேளு, பாசம் பந்தமெல்லாம் இருக்கான்னு" என்று கர்ஜித்து விட்டு அவர் அறையின் விளக்கை அணைத்தார்.

ஆயிற்று இன்றோடு ஒரு மாதம் முடிந்து விட்டது, கீதா வீட்டிற்கு வந்து. இந்த ஒரு மாதத்தில் அழுது அழுது அம்மாவும் மகளும், உடல் சற்று இளைத்தே விட்டார்கள். ரகுவுக்கு, அக்காவிடம் பேசி சமாதானம் செய்து பார்க்கலாம், என்று நினைத்து கீதாவிடம் அந்த பேச்சை எடுத்த போதெல்லாம், வேற ஏதாவது பேசலாமே ரகு என்று இவன் வாயை அடைத்திருந்தாள். அன்று ராமதுரை, சனிக்கிழமை வழக்கமாய், சாப்பிட்டு விட்டு சேரில் சாய்ந்திருந்தார். "கீதா கீதா" குரல் வந்த திசையை நோக்கி அனைவரும் பார்க்க, அங்கே பிரசாத் நின்று கொண்டிருந்தான், "உள்ளே வாங்க மாப்ள" என்று லெட்சுமி வேகமாய் ஓடியதில், தூணில் கால் இடறி விழுந்ததை கூட ஒருவாறு சமாளித்து எழுந்தாள். "வாங்க மாமா" சொல்லிக் கொண்டே ரகு சேரை எடுத்து போட்டான். ராமதுரையும், கீதாவும் சொல்லி வைத்தார் போல, தத்தம் அறைக்கு சென்றனர், பிரசாத்திடம் எதுவும் பேசாமல். கீதா குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்து இருந்தாள் பிரசாத் பேச பேச. கடைசியில் " வா கீதா, நம்ம வீட்டுக்கு போகலாம்" என்று சொல்ல சொச்ச மிச்சமும், மிச்ச சொச்சமுமாய் கை கோர்த்திருந்த அத்தனை கர்வமும், மொத்தாமாக தோற்றுப் போனது. ஓடி வந்து அவனை கட்டி அணைத்து கொண்டாள். லெட்சுமிக்கும், ரகுவுக்கும் யாருக்கும் தெரியாமல் விழியோரமாய் நீர் கோர்த்திருந்தது.

அன்று இரவுக்கெல்லாம் கீதாவும், பிரசாத்தும் சென்னை கிளம்ப ஆயத்தாமாகிக் கொண்டிருந்தனர். "நாங்க கிளம்பறோம்மா", கீதா அழைத்தவுடன், "மகராசி போயிட்டு வாம்மா" என்று அவள் நெற்றியை சுற்றி திருஷ்டி கழித்தாள். "நான் கிளம்பறென் ரகு, அம்மாவ நல்லா பாத்துக்க" என்றாள் கீதா. " நீ கவலப்படாம கெளம்புக்கா, நான் பாத்துக்கறேன் அம்மாவ. வாங்க மாமா, இதோ நானும் வர்றேன் பஸ் ஸ்டாண்டுக்கு" என்று ரகு சட்டை மாட்டி கொண்டு கிளம்பினான். "அப்பாக்கிட்ட ஒரு வார்த்த சொல்லிட்டு கிளம்பும்மா" என்றாள் லெட்சுமி. "அப்பா கிளம்பறேன்பா" என்று கீதா சொல்ல, சண்டை கிண்டை போட்டுட்டு இனி இந்த வீட்டுப் பக்கம் வராத, தண்டமா சோத்த வடிச்சி போடணும் ", ராமதுரை தீக்கங்குகளை விட சூடாக வார்த்தைகளை கக்கினார். ஆடிப் போனான் பிரசாத். அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, "அவரு அப்படிதான் மாப்ள, நீங்க ஒன்னும் மனசில வெச்சுக்காதீங்க, நல்ல நேரம் முடியறதுக்குள்ள கிளம்புங்க" என்றாள் லெட்சுமி. கண்கள் சிவந்த கீதா, இனி இந்த வீடுக்கு தனியா வரவே கூடது என்று உறுதியோடு நடக்க ஆரம்பித்திருந்தாள் பிரசாத்தின் கரம் பற்றி. அப்பாவை நினைக்க நினைக்க கோபம் வந்தது. அது அழுகையாய் மாறி அவள் கன்னங்களை நனைக்க ஆரம்பித்து இருந்தது.

சிறிது நாட்கள் கழித்து.....

சுமார் ஒன்றரை மாதங்கள் கழிந்திருக்கும், கீதா மறுபடியும் அவள் கணவன் வீட்டிற்கு வந்து. இந்த நாட்களில், அவள் கணவனும் சரி, அவள் மாமியாரும் சரி நன்றாக இவளை கவனித்து கொண்டனர். இவளும் அவர்கள் அன்பை பொழிய ஆரம்பித்து இருந்தாள். அன்று கணவன் அலுவலகம் சென்றிருக்க, அவள் மாமியார் சற்று களைப்பாக இருக்கிறது என்று உறங்கி கொண்டிருந்தார்கள். கீதா வழக்கம் போல எல்லா வேலைகலையும் முடித்து விட்டு, அவர்கள் அறையை சுத்தம் செய்வதற்காய் துடைப்பத்துடன் நுழைந்தாள். அவர்கள் அறையில் இருந்த பெரிய பீரோவின் மீது அதிகமாய் தூசு படர்ந்திருப்பதை பார்த்து அதை தட்டி கொண்டிருந்தாள். திடீரென்று, ஒரு டைரி கீழே விழுந்தது. அது அவள் கணவனுடையது என்பதை பார்த்து விட்டு வைத்து விடலாம் என்று தோன்றியது. சரி விளையாட்டாய், "சில்லென்று ஒரு காதல்" போல ஏதவது இருக்குமோ என்று பிரித்து படிக்க ஆரம்பித்தாள். அது அந்த வருடத்தின் டைரி என்பதால் அந்த சுவாரசியங்கள் இருக்காது என்று மூடப் போக, அவளின் வளையலில் சில பக்கங்கள் சிக்கின.


எடுத்து பார்த்த போது அவை ஆகஸ்ட் மாசத்தின் பக்கங்கள். சரி படிப்போமே என்று ஆரம்பித்து, ஆகஸ்ட் 15 ஆம் தேதி பக்கத்தை எதேச்சையாக திருப்பினாள். அவளை அறியாமலேயே கண்கள் குளமாகின. இவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கோமே பிரசாத்த, என்று நினைத்து கொண்டே அடுத்த நாளை திருப்பினாள். அதை படிக்க படிக்க கீதாவின் இதயம் நின்று விடும் போல துக்கம் நெஞ்சை அடைத்தது. வெடித்து அழ ஆரம்பித்திருந்தாள் அந்த பக்கதின் தொடக்கத்தில், "இன்று திடீரென ராமதுரை மாமா என்னை ஆபீசில் சந்தித்தார். மாப்ள, என் மகள் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சிகோங்க. அவளுக்கு இனிமே நீங்கதான் எல்லாம்........................................................................................ என்று அவர் அனைத்தையும் சொல்லி முடித்து என் கையை பற்றி அழுத போது நான் இடிந்தே போனேன்".

கீதா தன்னை அறியாமலேயே "அப்பா, அப்பா" என்று பிதற்ற ஆரம்பித்திருந்தாள்!

- காவிரிக்கரையோன் MJV

7 comments:

ஸ்வர்ணரேக்கா said...

//மந்தமாய் இருந்த வீட்டில் சுறுசுறுப்பாய்//

நல்ல வரிகள்...

முடிவு எதிர்பார்க்கவில்லை.. நல்ல நச்...

வெற்றி பெற வாழ்த்துக்கள்..

காவிரிக்கரையோன் MJV said...

@ஸ்வர்ணரேக்கா - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அன்பையும் பாசத்தையும் தந்தையும் காட்டுவார், ஆனால் அதை வெளிக்காட்ட வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்த்திய கதை.

வாழ்த்துகள்!

Anonymous said...

நல்லா இருக்குங்க கதை. இயந்திரத்துக்கும் அப்பப்ப ஆயில் போட்டாத்தானே ஓடும். :)

Mohan Kumar said...

சர்வேசன் டாப் 20 லிஸ்ட்டில் செலெக்ட் ஆனதற்கு வாழ்த்துக்கள். (டாப் 20 ல் நானும் கூட ஓரமா இருக்கேன் )

தமிழ்ப்பறவை said...

நல்லா இருந்தது கதை... வாழ்த்துக்கள்....

காவிரிக்கரையோன் MJV said...

@பெயர் சொல்ல விரும்பவில்லை -
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே.
@சின்ன அம்மிணி -
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. உங்கள் கதையை படித்தேன். உங்கள் இடுகையில் பின்னூட்டம் இடுகிறேன்!!!
@மோகன்குமார் - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. உங்கள் கதையும் கலக்கி இருக்குது. வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
@தமிழ்ப்பறவை - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. பிளான் பண்ணாம எதையும் பண்ணக் கூடாது இல்லையா??? அப்படிதானே!!!