Saturday, November 28, 2009

நான், அவள் மற்றும் அவன்....

சில்லென்று வீசும் காற்றைக் கிழித்துக் கொண்டு வேகமெடுத்தது அந்த மின்சாரத் தொடர் வண்டி. சட்டென தோன்றிய மின்னலும், தொடர் வண்டியின் அதீத வேகமும் என் சிந்தனையை சன்னல் பக்கமிருந்து வண்டிக்குள்ளே திருப்பியது. பல காலியிடங்கள் இருந்தாலும், பயணச்சீட்டு வாங்க முடியாததால் எப்பொழுதும் கீழேயே அமர்ந்து வரும் அவனை சென்ற மாதம் வரை எனக்கும் தெரியாது. அந்த நாள் நினைவின் அழியாப் பிரதியாய் என் மனதின் ஆழத்தில் குடில் போட்டு அமர்ந்திருந்தது. காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா போன்ற சித்தாந்தங்கள் பேச வைத்த நாள் அது.

சரி இன்னும் எப்படியும் 1 மணி நேர ஓட்டத்திற்கு பிறகுதான் நாம் இறங்கப் போகிறோம் என்ற நினைவு உள்ளே நுழைய, நிகழ்காலம் என்னிடமிருந்து விடை பெற்று, சென்ற மாதம் அந்த நாளுக்குள் நுழைந்தது. அன்று எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும், இந்த வண்டி சற்று கூட்டம் கம்மியாக ஓடிக் கொண்டிருந்தது. அவனும் அங்கே இருந்தான். சனி பகவான் அன்று என்னவோ தெரியவில்லை அவன் இருக்கும் இடத்தை அடமாக ஆக்கிரமித்து கொண்டார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பறக்கும் படை எங்கள் பெட்டியில் அன்று வெகுவாக பல பேரைப் பின்னலாம் என்று வந்திருப்பார்கள். பாவம் சற்று ஏமாற்றம்தான் அவர்களுக்கு. அப்போதுதான் அவன் அவர்களிடம் சிக்கினான். சின்ன பின்னப் படுத்தி கொண்டிருந்தார்கள். கேசம் கலைந்து பாலைவனம் ஆன அவன் உடலுக்கும் அவன் நடத்தைக்கும் சிறிது கூட சம்பந்தம் இல்லை. மெல்ல மெல்ல அவன் சித்த சுவாதீனம் இல்லாதவன் என்பதை புரிந்து கொண்டும் அவனை அவர்கள் விடவில்லை.

இதுவரை இதை பார்த்துக் கொண்டிருந்த நான், இவங்களுக்கு வேற வேலை கிடையாது என்று மீண்டும் இயற்கை புத்தகத்தில் தலை நுழைத்தேன். பாதி பாதியாய் நின்றிருக்கும் அந்த கட்டிடங்கள் தான் இயற்கை புத்தகத்தை நாமே கிழித்து எறிந்ததற்கு சான்றாய் நின்றிருந்தன. சரி என்ன நடந்தது என்று திரும்பி பார்க்கையில் அவனை இறக்கி கொண்டிருந்தார்கள். சட்டென்று வந்த அழுகை சத்தம் எங்கே என்று தெரியாமல் திரும்பி பார்க்கையில் அவளின் அலைபேசியின் அழைப்பு என்று தெரிந்து திரும்பி கொண்டேன். இருந்தாலும் அந்த முகத்தை எங்கோ மறக்கக் கூடாதென்று பதியம் போட்டதாய் ஒரு நினைவு. சற்று என் மூளைக்கு அந்த கணத்தில் அதிக வேலைப் பளு கொடுக்கப்பட்டது என்னவோ உண்மைதான். சிறிது நேர யோசிப்பு படலம் முடிந்த பின், அவள் எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த கீதா என்று உரைத்தது. அட இவர்கள் வீடு காலி செய்து போய் சுமார் 7 வருடங்கள் இருக்குமே. சரி இவ்வளவு மூளைக்கு சலவை செய்யும்போதே அவளும் நானும் நல்ல நண்பர்கள் என்பதை நிரூபிக்க அவளிடம் பேச எத்தனிப்பதற்குள் அந்த தொடர் வண்டி நான் வர வேண்டிய இடத்தில் நின்று விட்டது. கீதா என்று சுற்றிப் பார்த்து பார்த்து தலை சுற்றியதுதான் மிச்சம்.

சரி இதே வண்டியில் தானே பிரயாணம் செய்கிறாள், மறு முறை பார்க்கும் போது பேசிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கிளம்புகையில் அவனும் அந்த தொடர்வண்டி நிலையத்தில் தென்பட்டான். இப்படியே யோசித்து யோசித்து ஒரு மாதமே கழிந்து விட்டது. அவளைப் பார்த்த பாடும் இல்லை. நீ எல்லாம் ஒரு மனுஷனா என்று என்னைப் பார்த்து என் மனசாட்சியே மிரட்டும் அளவுக்கு கீதா என் உள்ளத்தை ஆக்கிரமித்து இருந்தாள். "காதலா காதலா" குரல் கேட்டுத் திடுக்கிட்டு திரும்பினேன், அட என் மனசாட்சி தான். மறுபடியும் சிரித்துக் கொண்டே "உனக்கு கீதா மேல் காதலா காதலா" என்று மறுபடியும் கேட்க, இது சரி வராது என்று மீண்டு, மீண்டும் என் கவனத்தை இன்று சன்னல் பக்கம் திருப்பினேன்.

"நீங்க ரகு தானே?" அடங்க மாட்டியே நீ என்று மனசாட்சியைத் திட்டிக் கொண்டே திரும்புகையில், 50 கிலோ சக்கரை இனிப்பை சட்டென்று ஒரு நொடியில் சுவைத்தது போல் இருந்தது எனக்கு. "ஆமாம் நீங்க?", இதுக்கு கண்டிப்பா, எங்காளு என்னை வாங்கு வாங்கென்று வாங்குவார்(என் நிழல்... அதான் மனசாட்சி!). "நான் தான் கீதா உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்தேனே! பெரிய வேப்ப மரம் ஒன்னு இருக்குமே அதெல்லாம் இருக்கா இப்போ?" பேசும் கண்களும், சுழலும் பேச்சுமாக, கீதா கேட்டுக் கொண்டிருந்தாள். "எல்லாம் அப்படியே தான் இருக்கு. நல்லா இருக்கோம் நாங்க எல்லோரும்." என்று சொல்லிவிட்டு, (கேக்காமலேயே ஏண்டா இதெல்லாம் சொல்ற? என்று என்னையே கடிந்து கொண்டு) மெல்ல சிரித்து "நீங்க எங்கே இருக்கீங்க?" என்று கேட்க "என்ன வாங்க நீங்கன்னு, கொஞ்சம் அதிகமா தெரியல" என்று பேசி முடிக்கவும் இந்த பாழாப் போன என் நிறுத்தம் வரவும் சரியாக இருந்தது.

சடக்குன்னு என் அலைபேசியை எடுத்து, உன் நம்பர் கொடு என்று, கீத் என்று பதிய வைத்தேன். நாளைக்கு பார்ப்போம் என்று சொல்லி விட்டுப் பறந்து போனாள். அடுத்த நாளும் வந்தது. கீத்தும் வந்தாள். அடப் பாருடா, ம்ம்ம் "கீத் ஆம்ல" கொக்கரித்தார் மனசாட்சி. வழக்கம் போல் பேச ஆரம்பித்தோம், நிறைய பேசினோம். இப்படியே நெருங்கிய நண்பர்களாய் மாறிப் போனோம் கீத் இன் "கூற்றுப்படி". சரி எவ்வளவு நாள் தான் நாமும் சொல்லாம விடறது. அப்பா அம்மால்லாம் வேற, பொண்ணு பாக்க போறோம்டா உனக்குன்னு சர மாறியாக சரம் வைத்துக் கொண்டிருந்தனர். சரி இன்றைக்கு கண்டிப்பா சொல்லிடனும் என்ற முடிவுடன் அலுவல்கள் முடிந்ததும், தொடர் வண்டியில் ஏறினேன்.

அன்றைக்கு அவனைக் காணவில்லை. சரி வேறு வண்டி பார்த்து கிளம்பியிருப்பான் என்று நினைத்துக் கொண்டேன். கீத் ஏறும் நிறுத்தம் வர இன்னும் 10 நிமிடங்கள் இருக்கும். இயற்கை புத்தகத்தில் இருக்கும் மிச்ச சொச்சங்களையும், சொச்ச மிச்சங்களையும் பார்ப்போம் என்று சன்னல் பக்கம் பார்வையை அனுப்பினேன். கீத் என்ற தேவதை என்றெல்லாம் பேசும் போது அவள் சட்டென்று சிரிப்பாள். அதிலேயே பாதி வெற்றியை கவர்ந்து கொண்டு இருமாப்பாய் இருப்பாள். உண்மையிலேயே இப்போ சொல்லிடுவோம் என்று நினைக்கும் போதெல்லாம் அவள் கண்களிடம் தோற்று அடங்கி விடுவேன். சரி இன்னொரு நாள் போர்த் தொடுப்போம் என்று. சட்டென்று அழைப்பு மணி அடித்தார் போல், நடப்பு காலத்திற்கு வந்தேன். என்ன இன்றைக்கு வரவில்லை? அவளின் நிறுத்தம் கூட கடந்து விட்டது போல் இருக்கிறதே? சரி அவள் அலைபேசிக்கு அழைப்போம் என்றால், அட அதன் இயக்கம் நின்று போய் இருக்கிறது. சரி சிறிது நேரத்தில் மீண்டும் அழைப்போம் என்று என் நிறுத்ததில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.

மறுபடி அழைத்தேன். ஒரு குரல் பதட்டமாய் பதில் சொன்னது, " கொஞ்சம் நிலைமை சரி இல்லை. நல்லா அடிப்பட்டிருக்கு " உடனே வாங்க ராகா ஹாஸ்பிட்டலுக்கு. அலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஒன்றும் புரியவில்லை எனக்கு. அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனையோ, செயல்பாடோ இல்லை. அப்போது அவனைப் பார்த்தேன். "போ போ போ" என்று என்னை பார்த்து கத்தி விட்டு அழத் தொடங்கினான் அவன். எங்கே போவது என்று தெரியாமல், மூளையில் சிக்கித் தவித்தது என் எண்ண அலைகள். சற்று சுதாரித்தவனாய், எழுந்து ஓட ஆரம்பித்து இருந்தேன். ராகா, ராகா என்ற அந்த 2 எழுத்தை மந்திரம் போல் சொல்லிக் கொண்டே ஓடினேன். மீண்டும் கீத் இன் எண்ணுக்கு அழைத்தேன். நல்ல வேலை அந்த அழுகை சத்ததைக் காட்டி கொடுத்தது. 2 பெண்கள் நின்று இருந்தார்கள்.

"நீங்க தான் ரகுவா?" ஆமாம் என்பது போல் தலை அசைத்தேன். "அவளோட அம்மா அப்பாக்கு சொல்லிட்டோம். அவங்க வந்துட்டே இருக்காங்க". இடியாய் இறங்கிய இந்த வார்த்தைகள் பாதி இருதைய துடிப்பை என்னில் அடக்கியது. அவளப் பாக்கலாமா? அறை எண் 201 இல் இருப்பதாக தெரிவித்தனர். கதவைத் திறந்தவுடன் என் மீதி இருந்த கொஞ்ச துடிப்பும் நின்று விடும் தருவாயில் இருந்தது. அப்போது சட்டென்று என்னை ஒரு கரம் பற்றி இழுத்தது. கீத் தான் அது. ஓடி சென்று கட்டி அணைத்தேன். வழிந்தோடிய இருவரின் கண்ணீரும், எங்கள் காதலுக்கு சாட்சி கையெழுத்து இட்டன.

என்ன நடந்தது என்று கேட்ட போதுதான், அந்த பையில் இருந்த கடிதத்தையும் என்னவளின் கரம் பட்டு இன்னும் சிவந்திருந்த ரோஜாக்களையும் எடுத்து கொடுத்து மீண்டும் ஒரு முறை என்னை கட்டி அணைத்தாள். அன்று அவளும் என்னிடம் காதல் சொல்லிட வேண்டும் என்று அவசரம் அவசரமாக வந்த போதுதான் ஒரு விபத்தில் சிக்கி இருப்பதும், அவளுடைய நண்பிகள் கூட இருந்ததால் உயிர் பிழைத்தேன் என்றும் கூற கூற எனக்கு கண் பார்வை சற்று மங்களாக தொடங்கியிருந்தது விழி நீர் மறைத்ததால்.

சரி அழாதேம்மா என்று அவளைத் தேற்றி விட்டு அவளின் நண்பிகளிடம் சொல்லி விட்டுக் கிளம்பினேன். அடுத்த நாள் வருவதாகவும், அது வரை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் சொல்லி விட்டுக் கிளம்பும் பொழுது, என் மனசட்சியின் வேலையை கீத் இன் நண்பிகள் செய்யத் தொடங்கினர்! அடுத்த நாள் என் நிறுத்தத்திற்கு வந்த போது, அவனை மீண்டும் பார்த்தேன். சட்டென்று அவனை பற்றி அந்த டீ கடைக்காரரிடம் கேட்கத் தோன்றியது. அவர் சொன்னார், " அதுவாப்பா, அவனும் ஒரு பொண்ணும் ரொம்ப நெருங்கி பழகினாங்க போல இருக்கு, ஒரு 2 வருஷத்துக்கு முன்னாடி தோ, அதே இடத்துல அந்த பொண்ணு லாரி ஒன்னு மோதி செத்துடிச்சிப்பா. அதுலேந்து அவன் இங்க தான் சுத்தறான்,அத விடுப்பா ". அவனை பார்த்து என்ன செய்வதென்றோ சொல்லுவதென்றோ தெரியவில்லை. வேகமாய் "2 பன் ஒரு டீ அண்ணே" என்று சொல்லி அதை அவனிடம் கொடுத்து விட்டு கீத் ஐப் பாஅர்க்க மருத்துவமனை நோக்கி பயணப்பட்டேன்.

- காவிரிக்கரையோன் MJV
பி.கு - இந்த கதை “செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் பரிசுப் போட்டி இக்காக எழுதப் பட்டது!!! அப்படியே இவரு வெறும் போட்டிக்கு மட்டும்தான் எழுதுவாரு அப்படின்னெல்லாம் சொல்லப்டாது!!!!!

15 comments:

ஜெகநாதன் said...

அவன் - மனச்சாட்சி - ​பேய் என்று ​போனாலும், பு​கையாக ​இழை​யோடுகிற காதல் இனிய பயணமாக அமைந்து விட்டது!

ஜெகநாதன் said...

வாழ்த்துகள்!

காவிரிக்கரையோன் MJV said...

@ ஜெகநாதன் - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. இதில் பேய் என்று நீங்கள் குறிப்பிட்டு இருப்பது என்னவென்று எனக்கு புரியவில்லை. இதில் ரகு - மனசாட்சி - அவன் இவர்களை வைத்துதான் கதை பயணிக்கிறது.

ஜெகநாதன் said...

அன்பு கா​வேரிக்க​ரை​யோன் (நீங்க எந்த ஸ்​டேட்டுன்னு ​தெரிஞ்சுக்கலாமா?),
//அதுவாப்பா, அவனும் ஒரு பொண்ணும் ரொம்ப நெருங்கி பழகினாங்க போல இருக்கு, ஒரு 2 வருஷத்துக்கு முன்னாடி தோ, அதே இடத்துல அந்த பொண்ணு லாரி ஒன்னு மோதி செத்துடிச்சிப்பா. அதுலேந்து அவன் இங்க தான் சுத்தறான்,//
என்ற வரிகளில் பயந்த ஒருவன் அந்த மனச்சாட்சி​யை ​பேய் எனக் கற்பிதங் ​கொண்டானாம்!
எனி மிஸ்​டேக் ப்ரம் ​மை ​ஸைட்?

காவிரிக்கரையோன் MJV said...

கும்பகோணம் என் சொந்த ஊர்!!! தமிழ்நாட்டை சேர்ந்தவன். அந்த வரிகளில் சொல்லப்பட்ட அவன் ஒரு மனிதன், காதலியை இழந்து சித்த சுவாதீனம் இல்லாமல் அலைபவன். அவன் என்று கதையில் குறிக்கப்படும் இடம் எல்லாமே அந்த காதலனை தான் குறிக்கிறது, இன்னொன்று ரகுவின் மனசாட்சி!!!

காவிரிக்கரையோன் MJV said...

ஸ்டேட் கேட்டது ஏன்னு தெரிஞ்சிக்கலாமா? ஜெகநாதன்:-)

ஜெகநாதன் said...

அட.. இதப் ​போயி சீரியஸா எடுத்துக்கிட்டு?
கா​வேரிக்கு கர்நாடகாவிலிருந்து கரையிருக்​கே அதுக்காக ​கேட்​டேன்!
நம்புங்க க​ரையா​ரே!!
ரகுவின் மனசாட்சி சத்தியமா இதுதான் அர்த்தம்!

ஜெகநாதன் said...

நீங்க தமிழ்நாடு ஸ்​டேட்தான்னு ​தெரிஞ்சு ​போச்சு!
அப்ப நானு?
Solid State!!

காவிரிக்கரையோன் MJV said...

சரி விடுங்க, நீண்ட கரைதான் காவிரிக்கு!!! அதனாலாதான் ஊர் பெயரும் சேர்த்து போட்டேன். என்னமோ சாலிட் அது இதுன்னு சொல்றீங்க.... ம்ம்ம்ம் நடக்கட்டும்!!!!

தமிழ்ப்பறவை said...

அட அதுக்குள்ள அடுத்த போட்டிக்கு கதையா...?!
ரயில்,இயற்கை,இளம்பெண், காதல் இதைவிட ரசனைக்குரியவை வேறென்ன இருக்க முடியும்...(இந்த வயதில்)..ரசித்தேன் கதையை...
நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்...இடையிடையே மனச்சாட்சிதான் தேவையில்லாமல் வந்தது போல் பட்டது.வழக்கமான கதையெனினும் படிக்கும் ஆர்வம் தடைப் படவில்லை...
வெற்றி பெற வாழ்த்துக்கள்...

முகிலன் said...

நல்ல கதை. நடையை மனசாட்சிதான் கொஞ்சம் குழப்புகிறது. நகைச்சுவைக்காக சேர்த்து இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

காவிரிக்கரையோன் MJV said...

@தமிழ்ப்பறவை - வாருங்கள் தமிழ்ப்பறவை நன்றி. மனசாட்சி கூடவே வந்ததாலோ என்னவோ கொஞ்சம் குழப்பங்கள் வந்திருக்கலாம்!!!! உங்கள் கதை ஒன்றையும் இந்த போட்டிக்கு எதிர்பார்க்கிறேன்..... உங்களுக்கும் வாழ்த்துக்கள் இந்த போட்டிக்கு.

காவிரிக்கரையோன் MJV said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி முகிலன். இவ்வளவு உன்னிப்பாக நம்மை கவனிக்கும் திறன் மனசாட்சிக்குதான் உள்ளது. அதை நகைச்சுவைக்காகதான் சேர்த்துள்ளேன்.

ராம்குமார் - அமுதன் said...

அருமையான கதை... வெற்றி பெற மனதார்ந்த வாழ்த்துக்கள்.... அந்த "மனநிலை மாறிய" கதாப்பாதிரத்தின் விவரிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது... கனமான பாத்திரப்படைப்பு....


வாழ்த்துக்கள் மீண்டும்....

காவிரிக்கரையோன் MJV said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ராம்குமார் - அமுதன்....