Monday, September 21, 2009

க மற்றும் கி போன்ற எழுத்துக்கள் நம் வாழ்வில் வகிக்கும் பங்கு - நகைக்க!!!பொதுவாக பேச்சு வழக்கில் தமிழ் எவ்வளவு பாழாகிக் கிடந்தாலும் இந்த பதிவில் நாம் பேசப் போகும் விஷயம் கொஞ்சம் புரியாத புதிராகவே இருக்கின்றது. தமிழ் அன்னை சொல்ல முடியாத அளவுக்கு பல மாறுதல்களை கடந்து இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள். அதில் ஒரு பக்கத்தைப் படித்துப் பார்ப்போம்.


ஆசிரியர் : தம்பி இன்றைக்கு தேர்வு வைப்பதாக சொல்லியிருந்தேனே எல்லோரும் தயாராய் இருக்கின்றீர்களா?
மாணவர்கள் : இந்த வாத்தியார் எப்பவும் இப்டி தான் டெஸ்ட் கிஸ்டுன்னு வெச்சி நம்ம உயிர வாங்குவாரு!!!


வழிபோக்கர் : யெப்பா இந்த வெலாசத்த கொஞ்சம் எங்க இருக்குன்னு சொல்றீங்களா?
வழி சொல்பவர் : நேரா போங்க, அங்க ஒரு கோவில் வரும். அப்புறமா அங்கேந்து வலது கை பக்கம் திரும்பி போய்கிட்டே இருங்க. அங்க ஒரு பெரிய தண்ணி டாங்க் இருக்கும். அதுக்கிட்ட தான் இந்த இடம் இருக்கு. வழிபோக்கர் : ரொம்ப நன்றிப்பா.
வழி சொல்பவர் : பெரியவரே நான் சொன்ன மாதிரியே போங்க. வழி கிழி மாறி போய்டாதீங்க!!!


வீட்டுகாரம்மா : பால்காரரே இன்னிக்கி கொஞ்சம் விருந்தாளிங்க வந்திருக்காங்க. கூட ஒரு 1 லிட்டர் பால் சேத்து கொடுங்க.
பால்காரர் : யெம்மா இன்னிக்கி பால் கீல் எஃஸ்டிரா கேக்காதம்மா. பால் கரெக்டா இருக்கு இன்னிக்கி!!!


வங்கி ஊழியர் : இந்த காசோலையில உங்க கையெழுத்தே இல்லாம கொடுத்துருக்கீங்க சார், போட்டு கொடுங்க. ம்ம்ம் அடுத்த ஆள் வாங்க சார்.
காசோலை கொடுக்க வந்தவர் : சார் இப்போவே போடு கொடுத்திடறேன். பேனா கீனா இருந்தா கொடுங்க சார்!!!


நண்பன் : மச்சான் அவசரமா ஒரு 100 ரூவா தேவப்படுதுடா. கொஞ்சம் இருந்தா கொடுடா. அடுத்த வாரம் கொடுத்திடறேன்.
இன்னொரு நண்பன் : போன வாரம் கொடுத்த காசே இன்னும் திரும்பி வரல. பணம் கிணம்னு எங்கிட்ட எதுவும் கேக்காத. ஓடிப் போய்டு!!!


பையன் : அம்மா நாளைக்கி நான் டூர் போரேம்மா பாண்டிசேரிக்கு. கொஞ்சம் பணம் கொடுங்கம்மா.
அம்மா : (பணம் கொடுத்து விட்டு) சரிப்பா ஒழுங்கா போய்ட்டு வரணும். அங்க கடல் ல கிடல் ல குளிக்கக் கூடாது சரியா!!!


விருந்தாளி :(வீட்டுக்குள் நுழைந்து கொண்டே) என்னப்பா எல்லாரும் சௌக்கியமா?
வீட்டில் உள்ளவர் : வாங்க வாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?
அவரின் மனைவி : வாங்க வாங்க, என்னங்க வந்தவரை வாசலிலேயே நிக்க வெச்சி பேசிட்டு இருக்கீங்க? ஒரு சேர் கீர் எடுத்து போட்டு உக்கார சொல்லுங்க!!!


அம்மா : சீக்கரமா ரெடி ஆகும்மா மாப்பிள்ளை வீட்லிருந்து வந்துட போறாங்க.
பெண் : இதோ ரெடி ஆகிட்டே இருக்கேன்மா. வந்துடறேன்.
அம்மா : நல்லா ஒரு பொட்டு கிட்ட வெசிக்கிட்டு சீக்கிரம் ரெடி ஆகும்மா!!!


கணவர் : என்னம்மா பண்ற நான் வந்துட்டேன். எங்க இருக்க?
மனைவி : இதோ வந்துட்டேங்க. எப்டி போச்சு இன்னிக்கி வேலையெல்லாம்?கணவர் : ஏம்மா ஒரு காபி கீபி போட்டு கொடுத்துட்டு கேக்க கூடாதா இதெல்லாம்!!!


இப்படி பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன அர்த்தம் யார் ஆரம்பிச்சான்னு யோசிச்சா மட்டும் தெரிஞ்சுடுமா எப்படி உருவாச்சுன்னு, விடுங்க பாஸ். சரி சரி அப்டியே ஒட்டு கீட்டு போட்டு, அப்றம் கமென்ட் கிமென்ட் போட்டு ஆதரவு கொடுங்கப்பா!!!


- MJV

அம்மா என்ற ஆனந்தம்!அகர வரிசையில் முதலிடம் பிடித்த பெண் என்பதால்
எந்த குழந்தைக்கும் நீங்கள் தான் முதல் பாடம்,

அவ்வைக்கும் இந்த மேன்மை புரிந்ததால் தான்
உங்களையே கருத்தில் கொண்டு கடவுளாய் வைத்தார்,


எதைத்தான் நீங்கள் இழக்கவில்லை எங்களுக்காக
உங்களின் பசியிடமும் தூக்கத்திடமும் நிரந்தர பகைமை பாராட்டினீகள்,

தன் மேல் முள் தைத்தும் சிரிக்கும் ரோஜா மலர் போல்
துன்பங்கள் தூக்கியெறிந்து எங்களுக்காய் சிரித்து பார்த்தீர்கள்,

மழை வேண்டி நிற்கும் நிலத்துக்கு மாரி போல்
எங்கள் வாழ்வின் வற்றாத அன்பு சிரபுஞ்சியாய் வாழ்கிறீர்கள்,

தரணி ஆண்டாலும் கோடி பரிசு கொற்றவனாய் இருந்து கொட்டி கொடுத்தாலும்
உங்கள் அன்பு என்னும் அஸ்திரத்துக்கு முன்னால் அவை தூளே யாவும் பாழே,

முரண்பாட்டு மொழி அதிகம் பேசியே பழக்கப்பட்ட நாங்கள்
அம்மா உங்களிடம் வஞ்ச புகழ்ச்சியில் பேசியிருக்கலாம்,
ஆனால் உளமார சொல்கிறேன் அதெல்லாம் உணர்வு வழி உருவெடுத்தவை அல்ல, உடம்பு வழி உருவெடுத்தவை,

இப்பொழுதும் எப்பொழுதும் அனைவருக்கும் இறைவா
அம்மா என்ற ஆனந்ததை மட்டும் நிறைவாக கொடுத்து விடு!

- MJV
(நண்பன் விஜய் ஆனந்துக்காக, மற்றும் இவ்வளவு நாள் அம்மாவை பற்றி எழுதாமல் விட்ட எனக்காகவும்!!!)