Monday, September 28, 2009

குழந்தையும் நீங்களும் - இளம் தந்தையர்களுக்காக!!!
இந்த வாழ்க்கையில் எத்தனை எத்தனை கனவுகள் கண்டிருக்கிறோம், காணுவோம். பல பேருக்கு பல ஆசைகள் உண்டு. வாழ்வில் நல்ல நிலைக்கு வர வேண்டும், பணம், புகழ், பதவி இப்படியாக பல விடயங்கள் அதில் முன்னணி வகிக்கின்றது. என்ன கனவுகள் கண்டாலும், ஒரு குழந்தை என்ற விடயம் அப்பப்பா, என்ன ஒரு ஆச்சர்யம். ஒரு குழந்தையின் சிரிப்பில் விழாதவர் எவரேனும் உண்டோ இந்த அகண்ட பிரம்மாண்டத்தில்!


குழந்தைகள் புதிதாய் இந்த உலகத்தில் பிறப்பெடுக்கும் போது, அந்த குழந்தைக்கு தெரிந்ததெல்லாம் அவன் அல்லது அவளுடைய அம்மா மட்டுமே! இது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். ஆனால் அப்பாவிடம் எப்படி அந்த குழந்தைக்கு அறிமுகம் கிடைக்கும். அம்மா அந்த படலத்தை நிகழ்த்தி வைப்பார். ஆனால் அதை தக்க வைத்து கொள்வது இளம் தந்தையர்களின் முக்கியமான ஒரு மாற்றம் அவர்களது வாழ்க்கையில். ஏன் என்றால் குழந்தை பிறக்கும் முன்னர் வரை, வாழ்க்கை வேறு மாதிரி நிகழ்ந்திருக்கும். இரவு நேரம் தாழ்த்தி வந்திருப்போம், நண்பர்களுடன் நன்றாக பொழுது கழிந்திருக்கும். வீட்டில் செலவழித்த நேரம் குறைவாக இருந்திருக்கலாம்.

ஆனால் இப்போது மூன்றாவது நபர் ஒருவர் வந்து விட்டார். இந்த நபரிடம் நீங்கள் பார்த்து நடந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் இவரின் நன் மதிப்பை (அன்பை!) நீங்கள் பெற முடியும். அவர்களின் நன் மதிப்பை பெறுவது மிகவும் சுலபம் தான் ஆனாலும் சற்று கவனிக்காமல் இருந்தால் அதுதான் மிக சிரமமான விடயமென்று நினைக்க வைப்பதும் அதுவேதான்!


முதன் முதலில் என் குழந்தையை நான் கையில் ஏந்திய பொழுது அந்த ஆனந்தம் இன்று வரை வேறு எந்த விடயதிற்கும் அப்படி ஒரு ஆனந்தம் இருந்ததில்லை. மருத்துவர் என்னை கூப்பிட்டு பாருங்கள் உங்கள் பெண்ணை, உங்களை பார்த்தவுடன் தான் அவளுக்கு சிரிப்பே வந்திருக்கிறது என்றார். அது உண்மைதான். அப்படி ஒரு புன்னகை.

என்னை பார்த்துதான் சிரித்தாள் என் மகள் என்று மெல்ல மெல்ல உண்மை புரிய புரிய தனி உலகத்தில் பறக்க ஆரம்பித்து விட்டேன். அதன் பிறகு நடந்தவை நடக்கின்றவை எல்லாமே புதிய புதிய அனுபவங்களை எனக்கு கொடுத்து கொண்டிருக்கின்றது!


குழந்தை எப்பொழுதுமே தாயின் அரவணைப்பில் இருப்பதால், அவர்கள் அவ்வளவு எளிதாக தந்தையிடம் பழக சிரமப்படுவார்கள். அதற்கு தந்தையர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நேரம் அதிகமாக செலவு செய்ய வேண்டியதுதான். ஒரு ஒரு அடி எடுத்து வைப்பதும் நீங்கள் புதியதாக ஒரு பாதையில் பயணப்படுவீர்கள். குழந்தையின் ஒவ்வொரு செயலிலும், ஒரு தந்தை செதுக்கப்படுகிறான், 'அபியும் நானும்' திரைப்படத்தில் ப்ரகாஷ் ராஜ் சொல்வது போல, அது உண்மை என்பது போக போகப் புலப்படும்.

எனக்கும் அப்படிதான் மெல்ல மெல்ல புரிதல் தொடங்கி இருக்கிறது. முன்பெல்லாம் வீட்டில் வேலை செய்வது மிகவும் சிரமமான விடயம். முக்கியமாக என் மனைவி வேலைக்கு செல்பவர். அப்போதும் கொஞ்சம் யோசித்தது உண்டு. இப்போது, சின்ன சின்ன வேளைகள் செய்ய துவங்கி உள்ளேன். அதில் மிகவும் பெரிய விடயமாக என் மனைவி நினைப்பது எங்கள் குழந்தையை நான் உறங்க வைப்பது.


இந்த செயலின் மூலம், நானும் என் குழந்தையும் இன்னும் நெருக்கமானோம். துயிலச் செய்வதில் எப்படி இது சாத்தியம் என்று கேட்டாலும், நான் இதை வெகுவாக உணர்ந்துள்ளேன். குழந்தையிடம் ஏதாவது பேசி, பாடி, சிரிப்பு காட்டி அவளைத் தூங்க செய்வேன். என் குழந்தைக்கு இப்பொழுது 1 வருடம் 2 மாதங்கள் வயது ஆகிறது.

அது என்னவோ, என் குரல் அவளுக்கு பிடிக்கவில்லை அதனால்தான் தூங்கிப் போகிறாள் என்ற என் நண்பர்களின் கேலிக் கிண்டல்களைத் தாண்டி, என் குழந்தைக்கும் எனக்குமான, பந்தம் இன்னும் மேம்பட்டு இருக்கிறது. முன்பெல்லாம் வேலை முடித்து வீடு திரும்பும்போது, குழந்தை அவள் தாயாரிடம் இருப்பாள். இப்பொதெல்லாம் என்னிடம் வந்து ஒட்டி கொள்கிறாள்.


இன்னும் அவள் அம்மாவிடம் தான் ஒட்டி இருக்கிறாள் என்றாலும், என்னிடம் அவளின் குறும்பும் அன்பும் அதிகமாகி உள்ளது. முதலில் சிரமமாக தான் இருந்தது. அவள் ஓடிக் கொண்டே இருப்பாள். ஒரு தொலைக்காட்சி நிகழ்வைக் காண முடியாது. துரு துருவென்று இருக்கிறாள் என்று என் மனைவி ஆனந்தப் படுவாள். அது எனக்கு இப்போது நன்றாக புரிந்து விட்டது. நான் விழித்து கொண்டேன்.

வீட்டில் இருக்கும் நேரத்தை வெகுவாக என் மகளுடனே செலவிடுகிறேன். இப்பொழுது கூட என் மகள் வந்து என்னிடம் ஒரு விளையாடுப் பொருள் கொடுத்து விட்டு போகிறாள். அதை வாங்கி ' நல்ல இருக்கேப்ப, என்னது இது' போன்ற சின்ன சின்ன கேள்விகள் போதும், அவர்களும் அதையே எதிர்பார்க்கிறார்கள். நீங்களும் இதையெல்லாம் எண்ணி பாருங்கள். இந்த நேரம் போனால் மீண்டும் வராது. மீட்டு கொண்டு வருவது சாத்தியமும் இல்லை. நானும் நிறைய அதற்காக மாற்றிக் கொண்டேன் என்னை.


அவங்க அம்மா பாத்துப்பா குழந்தையை என்று இனி மேலும் சொல்லிப் பழகாதீர்கள்! நீங்கள் பல சின்ன சின்ன மகிழ்ச்சித் தருணங்களை இழந்து விடுவீர்கள். கொஞ்சம் மாறுதல்கள் வந்தால் ஒன்றும் தவறு இல்லையே. கொஞ்சம் கொஞ்சமாய் மாறலாம். அவரவர் குழந்தையின் சிரிப்புக்கு காரணமாய் நாம் இருப்பதற்கு!!!


- MJV