Saturday, October 24, 2009

ஹார்லிக்சும் பொட்டுக்கடலையும்!!!இப்போதுதான் தீபாவளி முடிந்து என்னுடைய சொந்த ஊரிலிருந்து திரும்பி வந்தாச்சு... இப்பொழுது மெதுவாய் சின்ன சின்ன விடயங்களை, என்னுடைய சின்ன வயதில் நடந்த (தின்ற!!!) சிலவற்றை ருசி பார்க்க ஆசை எழுந்தது. அப்பொழுதெல்லாம், தின்பண்டம் அப்பா வாங்கிட்டு வருவாங்க. அப்போதைக்கு கொஞ்சமாக எடுத்து சாப்பிட்டு விட்டு, உள்ளே எடுத்து வைக்க செல்லும் அம்மாவைப் படுத்தி எடுத்து இருப்போம். அது என்னமோ தெரியலையப்பா, அந்த தின்பண்டம் யார் வாங்கிட்டு வந்திருந்தாலும், வந்தவங்க எப்போடா வந்த வழி போவாங்கன்னு பாத்துட்டு, உடனே ஓடிப் போய் அத எடுத்துட்டு வந்து, வீட்ல அக்கா, தங்கையோ இல்லை அண்ணா, தம்பியோ இருந்தாங்கன்னா அவங்களோட, சண்டை போட்டு சாப்பிடுவோம். சில சமயம் வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் இருக்கும்போதே, சமையல் அறைக்கு போய் வேட்டையாடவும் விளையாடவும் அரம்பித்து விடுவோம்!


இப்படியாக சாப்பிடுகிற தின் பண்டங்கள் தீர்ந்து போகின்ற பொழுதுதான் நம்முடைய மூளை வேலை செய்ய ஆரம்பிக்கும். அம்மா திங்கறதுக்கு ஒன்னும் இல்லயாமா? என்று சோகமாக முகத்தை வைத்து கொண்டு கேட்டுப் பார்த்தவுடன், அம்மா உருகி சரி இருப்பா, ஏதாவது செய்து தருகிறேன் என்று தன்னால் முடிந்த அளவுக்கு துரிதமாக, உதாரணத்திற்கு, பக்கோடா செய்து கொடுப்பாங்க! சரி இது முடிந்தவுடன் என்ன பண்றது? அம்மா கிட்ட மறுபடியும் கேட்டால், அடி விழும், அதனால், கப்பல் புயலில் மாட்டி கொண்டு தத்தளிக்கும் போது கப்பல் மாலுமியின் நிலையில், அமர்ந்து யோசித்து யோசித்து ஹையா, அந்த ஹார்லிக்ஸ் பாட்டில் இருக்கே!


இப்படி ஒரு சிந்தனை உதித்ததும், தேவையான பொருட்கள் என்று மனம் ஒரு சிறிய பட்டியல் தயாரிக்கும்.
தேவையான பொருட்கள்:
1. ஒரு நாற்காலி (அப்போல்லாம் உயரம் கொஞ்சம் கம்மிப்பா)
2. ஒரு பழைய துணி (இறுக்கமாக மூடியிருந்தால் - ஏயப்பா பெரிய புத்திசாலிதான்!)
3. ஒரு சின்ன கரண்டி (இதற்காகவே அம்மா கரண்டி போடாமல் வைச்சிருப்பாங்க)

அம்மா கிட்ட கேட்டா எடுத்து கொடுப்பாங்க ஆனாலும், நிறைய அடிக்கடி எடுத்து சாப்பிட முடியாது. அதனால் அந்த நாற்காலியை போட்டு ஏறி அந்த பாடிலை எடுத்து, அடடா அதிலிருந்து ஒரு கரண்டி அள்ளி போட்டு அத ருசி பாத்துட்டு யாருக்கும் தெரியாம மறுபடி அதே இடத்தில் எடுத்து வைத்து விட்டு எல்லா பொருட்களையும் எடுத்த இடத்தில் வைத்து விட்டு நகரும் போது, தங்கை ஒரு சத்தம் போடுவா பாருங்க, ' அம்மா அவன் ஹார்லிக்ச சாப்பிட்டுட்டு இருக்கான்மா' என்ற சத்தம் வந்தவுடன் அந்த இடத்தில் இருந்து எடு ஓட்டம்.....

அடுத்தது இதே வரிசையில், பொட்டு கடலையும், சக்கரையும் சேர்த்து மாவாக்கி சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்!!! இதுவும் அம்மாவிடம் கேட்டால், அருமையாக அதை மிக்சியில் அரைத்து மாவாக்கி தருவார்கள். ஆனால் இதுவும் அடிக்கடி கிடைக்காதே....

இதற்கு தேவையான பொருட்கள்:
சின்ன அம்மி கல்லும் குழவியும்! - ஏன்னா மிக்சி போட்டால் சத்தம் கேட்குமே!!! (அபார அறிவு புள்ளைக்கு)
சிறிது சக்கரை - இது தான் இங்க பெரிய விடயம்!!!
தேவையான அளவுக்கு பொட்டு கடலை!

இதில் திறமை எங்கே இருக்கிறது என்றால், சப்தமே வரமால் அந்த பொட்டு கடலையை இடித்து, அதை சக்கரையோட கலந்து சாப்பிட்டால் ஆகா என்று இருக்கும். இதில் தவறு எங்கே நடக்கும் என்றால் உண்மையிலேயே வயிற்று வலி வந்து வீட்டில் மாட்டிப்போம். இல்லை என்றால், நமக்கு ஆப்பு வைக்கறதுக்கு என்றே, இந்த எறும்புகளுக்கு சக்கரை மேல் உள்ள அன்பு அப்போதுதான் வெளிப்பட்டு அம்மாவுக்கு விடயங்களைத் தெரியப்படுத்தும்....

அடுத்து இந்த வரிசையில், என்ன என்று யோசித்தவுடன் எண்ணத்திற்கு வருவது புளி.... எதுவுமே கிடைக்கலை என்றால், இது தான் இது தான், இதுல இருக்கிற அந்த ருசி, எதுவுமே இல்லாத பொழுது, புளியை சாப்பிடும் போது, அடடா.... ஒரு அவசரத்தில், அந்த புளி டப்பாவைப் போட்டு உடைத்து, என் முதுகு உடைந்து நொறுங்கிய நேரங்கள் உண்டு...
சரி இந்த பட்டியலில் நிறைய உண்டு.... அதையெல்லாம் சொல்லி கொண்டே போகலாம்... முந்திரி பருப்பு, உருண்டை வெல்லம், மாங்காய் வற்றல் அடப்பாவிகளா அடப்பாவிகளா, ரொம்ப நல்லா இருக்குமே!!! ம்ம்ம்ம்ம் நாங்கள்ளாம் அந்த காலத்திலே பெரிய கண்டுபிடிப்பாளன்பா!!! இப்பொழுது சென்ற போது கூட இதெல்லாம் பண்ணி பார்த்தேன், ருசித்தேன்.... வித்தியாசம் அந்த சிறிய வயசில் இருந்த ஒரு விறுவிறுப்பு இப்போ இல்லை.... யாரும் எதுவும் சொல்லலை.....


- MJV