Sunday, October 25, 2009

கண்ணீர் துளி...அன்று என்னவோ தெரியவில்லை கரண்ட் அதிசயமா, ஒரு முழு நாள் முழுசுமா போகல. டேய் கண்ணா, ' இன்னிக்கி உக்காந்து எல்லாத்தையும் படிச்சிடு, அப்புறமா கரண்ட் மறுபடி போய்டும்'. 'சரிம்மா சரிம்மா படிச்சிட்டே இருக்கேன்மா' பதில் தன் மகன் ராஜூவிடமிருந்து வந்தவுடன் கலகலப்பானாள் கண்ணம்மா. பாத்திரங்களை தேய்த்துக் கொண்டே யோசித்து கொண்டிருந்தாள்.

எப்படியும் இந்த வருடம், ராஜூ படிப்பு முடிஞ்சிடும். அப்புறமா கீதாவோட திருமணத்தை பற்றி ஒரு முடிவு செய்யணும். பாவம் இந்த புள்ள வேலைக்கு போய் இந்த குடும்பத்த காப்பாத்திக்கிட்டு கெடக்கா. அவளுக்கு ஒரு விடிவு காலம் வரணும். கண்ணம்மாவின் இந்த பொருமலில் இன்னும் அதிகமாக எரிந்தது அவங்க வீட்டு அடுப்பு.

கீதா கண்ணம்மாவின் மூத்த மகள். ராஜூ கடைசி மகன். 15 வருடத்திற்கு முன்னால் இறந்த கணவருக்கு பின், இந்த குடும்பத்தை எப்படி காப்பாற்ற போகிறோம் என்ற கண்ணம்மாவின் கவலையை சீக்கிரமாய் போக்கியவள் கீதா. 12 ஆவது வரை படித்து விட்டு, சட்டென்று, கொஞ்சம் அது என்னமோ சொல்றாங்களே, பியோ, சியோ அதெல்லாம் படிச்சிட்டு, இப்போ ஒரு 7, 8 வருஷமா வேலை பார்த்து வருகிறாள் கீதா. எப்பொழுது தன் மகளைப் பற்றி நினைத்தாலும் தன்னை அறியாமலேயே இரு கண்ணீர்த்துளிகள் தாடையை வந்தடைவது உண்டு. அதை யாரும் அறியாமல் அவள் துடைத்து விடுவதும் உண்டு.

'அம்மா, அம்மா' என்ற ராஜூவின் அழைப்பு காதில் விழுந்து, கண்ணம்மாவின் எண்ணங்களை கலைத்து, நிகழ் காலத்திற்கு அவளைக் கொண்டு வந்தது. 'என்னடா கண்ணா' என்று அந்த பாத்திரங்களை கவிழ்த்து வைத்து விட்டு எழுந்து வந்தாள் கண்ணம்மா.

'அம்மா, உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்மா', என்றான் ராஜூ. எப்பொழுதுமே, தயங்கி பேசாத பிள்ளை என்ன இன்னைக்கு இப்படி தயங்குகிறான் என்று நினைத்து கொண்டே 'சொல்லுப்பா' என்றாள் கண்ணம்மா. 'ஒரு நல்ல வரன் வந்திருக்கும்மா, நீங்க என்னம்மா சொல்றீங்க? இதுதான் சரியான டைம் கல்யாணம் பண்ணன்னு நினைக்கிறேன்', 'நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்மா. அப்போதான் உனக்கும் கொஞ்சம் பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கும்' . நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்தது கண்ணம்மாவுக்கு. 'அம்மா அக்காக்கிட்டயும் சொல்லிடேன்மா, அவளும் சரின்னு சொல்லிட்டா'. ' நீங்க சரின்னு சொன்னா அடுத்த மாசமே பண்ணிடலாம்மா' ராஜூவின் வேகம் கண்ணம்மாவின் நெஞ்சை படப் படக்க செய்தது.

என்னடா ஒரு அக்கா இருக்கா, அவளப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம, ஏன் இப்படி கல் நெஞ்சக்காரனா இருக்கான். ' இததான் பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லுனு' சொல்லுவாங்களா? இவன பிள்ளையா பெத்ததுக்கு, அய்யோ அய்யோ என்று உள்ளம் முழுக்க குமுறிக் கொண்டிருந்தாள் கண்ணம்மா. இந்த நேரத்தில் கீதா வீட்டுக்குள் நுழைந்து கொண்டே, 'அம்மா, அம்மா இன்னிக்கி என்ன நடந்தது தெரியுமா உனக்கு?

'திடீரென்று, கண்ணம்மா கதறி கதறி அழத் தொடங்கினாள். 'அம்மா ஏன்மா என்ன ஆச்சு உனக்கு? நான் ஒரு நல்ல செய்தி சொல்லலாம்னு வந்தா, என்னம்மா ஆச்சு?', ராஜூ இங்க வாடா என்னடா ஆச்சு அம்மாவுக்கு?

இதோ வந்துட்டேன் அக்கா, ' அக்கா உனக்கு அந்த வரன் பாத்ததா சொன்னேனே, அத பத்தி அம்மா கிட்ட சொல்லிட்டே இருந்தேன். அதுக்குள்ள நீயே வந்துட்ட'. ஒன்றுமே புரியாத பதட்டத்தில், கண்ணம்மா ராஜூவை கேள்விக்குறியோடு நோக்க, ராஜூ அம்மாவை ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி ஏமாற்றி விட்ட மகிழ்ச்சியில், அக்காவிடம் விஷயத்தை சொல்ல, கண்ணம்மாவின் தாடையில் இரண்டு கண்ணீர்த்துளிகள் வழிந்தோடின. மகன் மேல் இருந்த கோபம், பறந்து போனதற்கு சாட்சியாய்!!!

அப்புறம் என்ன, கீதாவை பெண் பார்க்க, உண்மையாகவே மாப்பிள்ளை வீட்டாரை வர வைத்து, ஆறு மாதம் கழித்து அக்கா திருமணத்தை தடபுடலாய் அரங்கேற்றினான் ராஜூ....

- காவிரிக்கரையோன் MJV