Friday, November 6, 2009

சச்சின் என்ற சகாப்தம் - என்னை கவர்ந்த கிரிக்கெட் வீரர்....இப்படி தொலைக்காட்சி முன் இதயம் படபடக்க ஒரு கிரிக்கெட் போட்டி பார்த்து வெகு நாட்கள் ஆகிறது. யோசித்து பார்த்தால், 6 வருடத்திற்கு முன்பு பாகிஸ்தானை எதிர்த்து 2003ஆம் ஆண்டில் உலக கோப்பையில் இந்தியா ஆடிய ஆட்டத்தின் பொழுது இருந்தோம். அந்த போட்டிக்கு பிறகு எவ்வளவோ போட்டிகள் இந்தியா வெற்றியை தழுவி இருக்கிறது. எவ்வளவோ போட்டிகளில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. ஆனாலும் இன்று நடந்த ஆட்டம் என்னை மறுபடி அப்படி ஒரு நிலையில் அமரந்து பார்க்க வைத்தது.


ஆட்டத்தின் விவரம் - இந்தியாவிற்கும் ஆஸ்த்ரேலியாவிற்குமான 2293ஆவது ஒரு நாள் போட்டி. 2-2 என்ற நிலையில் சம நிலையில் இருந்த தொடர்.

இடம் - ராஜீவ் காந்தி கிரிக்கெட் விளையாட்டு அரங்கம்.


பான்டிங் டாசில் வென்று மட்டை வீச முடிவு எடுத்தார். இந்த ஆட்டத்தில் பந்து வீச்சாளர்களின் பங்கு சிறிது குறைவாக இருந்ததாலும், பல மட்டை வீச்சாளர்கள் நன்றாக விளையாடி இருந்த போதிலும், ஆயிரம் விடயங்கள் நடந்திருந்தாலும், சச்சினின் ஆடத்தை பற்றி மட்டுமே இங்கே பேச போகிறேன். சுமார் பதினோரு வருடங்களுக்கு முன்னால் 1998ஆம் ஆண்டில் ஷார்ஜாவில் மையம் கொண்ட சூறாவளி காற்று, இன்றும் சுழன்று கொண்டுதான் இருக்கிறது. என்னத்த சொல்றது, 10ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த அன்று, சச்சின் அடித்த அந்த சதத்தை கண்டு கண்டு மகிழ்ந்த கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். இப்பொழுது எத்தனையோ வீரர்கள் வந்திருந்தாலும், சச்சின் ஆட்டம் என்றால் அமர்ந்து பார்க்கும் நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அன்று 1998ஆம் வருடத்தில் தான் சச்சின் மொத்தம் 1894 ரன்கள் குவித்து சாதனை படைத்து இருக்கிறார். இன்னும் அதை யாராலும் முறியடிக்க முடியவில்லை. அந்த வருடத்தில் மட்டும் 9 சதங்கள் அடித்துள்ளார்.


1995ஆம் வருடத்தில் இருந்து நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்து இருந்தேன். என்னை சச்சினின் ஆட்டம் மட்டும் தான், கிரிக்கெட்டை நோக்கி இழுத்திருக்கிறது. ஆனால் அப்புறமாக, எந்த ஒரு ஆடத்தையும் நுணுக்கமாய் பார்க்க ஆரம்பித்து விட்டேன். சரி என் புராணம் இருக்கட்டும். இன்றைய ஆட்டத்தை பற்றி பார்ப்போம். இது வரை இந்த தொடரில், சச்சின் சரியாக சோபிக்க வில்லை. ஆனால் சோடை போக வில்லை என்பதை, மறுபடியும் சச்சின் தான் கிரிக்கெட் சாம்ரஜியத்தின் சக்கரவர்த்தி என்று நிரூபித்திருக்கிறார். பான்டிங்கின் முகத்தை பார்க்க வேண்டுமே, "இஞ்சி தின்ன குரங்கே, இருந்த இடத்தில் உறங்கே" என்று தான் இருந்தார் ஆட்டம் முழுவதும். மெக்கேயின் ஒவரில் முதல் பந்தில், சச்சின் ஹௌரிட்சின் கையில் பந்தை காட்ச் கொடுத்து வெளியேறினார். அப்பொழுதும், இந்த பாழாய் போன மனது, பாகிஸ்தானுடன், சென்னையில் அவர் விளையாடி, 136 ரன் களில் ஆட்டம் இழக்க இந்திய அணி மீதமிருந்த 3 ஆட்டக்காரர்களை அடுத்த 5 ரன் களுக்கு இழந்து, 12 ரன் களில் தோல்வியைத் தழுவியது. அந்த ஆட்டம் தான் கண் முன்னே வந்து சென்றது.


அதே போலவே, சச்சின் ஆட்டம் இன்று ஆட்டம் இழந்த பொழுது, இந்தியாவிற்கு, 17 பந்துகளில், 19 ரன் கள் தேவைப்பட்டது, இந்தியா சாதனை படைக்க. என்னப்பா பண்றது, "பழைய குருடி, கதவை திறடி" என்ற பழமொழி போல, மறுபடியும் அதே தோல்வி. என்ன இந்த முறை, கொஞ்சம் அருகாமையில் சென்று தோல்வியை தழுவியிருக்கிறோம். என்னைப் பொறுத்த வரை இன்றும் இந்திய அணி சில சமையங்களில், ஆங்கிலத்தில், "One Man Army" என்று சொல்லுவார்கள். அதை போலத்தான் இருக்கின்றது. யாருடைய ஆட்டத்தால் தோற்றோம், என்று கேட்டால், சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அதனால் ஒன்றும் நேரப் போவது இல்லை. இதிலிருந்து ஒன்று தெரிகிறது, இன்றளவும், சச்சின் எல்லோருக்கும் ஒரு சிம்ம சொப்பனமாய் இருக்கிறார். எந்த நிலைமையில் இருந்தாலும் எந்த ஆஸ்த்ரேலிய அணியாக இருந்தாலும், அவர்கள் தோல்வி என்பதை அவ்வளவு எளிதாக ஒப்பு கொள்ள மாட்டார்கள். அடை மழையாய் சச்சின் அவர்களை வெலுத்து வாங்கினாலும், ஒற்றை குடை கொண்டு தப்பித்து தாண்டியிருக்கிறார்கள்.


சச்சினின் ஆட்டத்தை மெதுவாய், பரிசோதனை செய்து பார்த்தால், சேவாக் முதல் தோனி வரையிலானவர்கள் ஆட்டமிழந்த போதும் சச்சின் ஒரு புறம் அதிரடியாய், காதலில் விழுந்த காதலனும் காதலியும், மறுபடி மறுபடி காதலில் விழுந்து எழுவார்களே, அது போல, சச்சினின் மட்டை, தன் காதலியான கிரிக்கெட் பந்தை ஓடி ஓடி முத்தமிட்டது! ரைனாவுடன் ஜோடி சேர்ந்த சச்சின், நிதானமாய் தென்றல் காற்றாய் ஒன்று இரண்டாக, எடுக்க துவங்கினார். ரைனா சிறு பிள்ளை இல்லையா? தவறு செய்யும் பிள்ளையை திருத்தும் தந்தையாய், அடிக்கடி அறிவுறை கூற, ரைனாவும் ஆட்டத்தின் சூச்சமத்தை அழகாய் புரிந்து கொண்டு, அந்த புரிதலை ஆட்டத்தில் காட்ட ஆரம்பித்தார். சில ஓவர்களில் ஒன்று, இரண்டு என்றே ரன் கள் வந்தாலும், அடுத்த அடுத்த ஓவர்களில், விளாசித் தள்ளி, ரன் விகிதத்தை, இருவரும் கட்டு கோப்பில் வைத்திருந்தனர்.


சிறு பிராயத்து சச்சினே அவ்வப்போது வந்து போனதாய், பல பேர் தகவல் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அந்த நேர்த்தியான ஆட்டம், வீரர்களுக்கு இடையில் பந்தை விரட்டும் லாவகம், அது சச்சின்னுகே உரிய கலை. 141 பந்துகள் 175 ரன் கள் (19X4s , 4X6s) இவற்றிற்கு பிறகு, அதுவும், டீப் ஃபைன் லெக், 30 யார்ட் வட்டதுக்குள் நின்ற காரணத்தினால், அந்த பந்தை திருப்பி விட நினைத்து, மெக்கேயின் மாயஜாலத்தில் சிக்கி, வேகம் குறைந்த அந்த பந்தில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு, அடுக்கி வைக்கப் பட்ட சீட்டு கட்டுகளைப் போல, விழுந்து வீழ்ந்தனர் நம்மவர்கள். சரி என்ன செய்வது மனசை தேற்றிக் கொண்டு, அடுத்த ஆட்டத்திற்காய் தயாராகி கொண்டிருக்கிறேன்!!!


அதற்குள் மைதானத்தில், 200 அடிப்பார் சச்சின் என்ற ஆவல் அதிகமாய் இருந்தது ரசிகர்களிடம். நானும் தான்பா!!! கடைசியில் ஆட்டமிழந்த ஒவ்வொரு வீரருக்கும் இன்றிரவு தூக்கம் போயிருக்கும் என்று நினைக்கிறேன். அதெல்லாம் இல்ல, அவனுங்களுக்கு எங்க இதெல்லாம் தெரியும், விளம்பரப் படம் நடிக்க பாடம் எடுத்துக்கிட்டு இருப்பாங்கன்னு சொல்லுவது கேட்கிறது. இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி ரசிக்க வைத்த ஒரு மட்டை பந்தாட்டத்தின் வித்தகர் சச்சின்.


இப்படி அச்சம் இன்றி ஆட வேண்டும் இந்திய அணிக்கு கற்றுக் கொடுத்த, இந்தியாவின் தலை சிறந்த கிரிக்கெட் காப்டனாய் நான் கருதும், கங்கூலி, "சச்சின் கிரிக்கெட்டின் மஹாராஜா" என்று வர்ணித்து இருக்கிறார். சச்சினின் சதங்களில், 45 ஆவது சதமான இந்த சதம்தான் அவருடையதில் தன்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகவும், 351 ரன் கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடும் பொழுது, பாதி ரன் களை எடுத்து, வெற்றியின் விளிம்பிற்கே இட்டு சென்ற சச்சின் கிரிக்கெட் விளயாட்டில் சாதிக்காதது ஒன்றும் இல்லை என்றும் கூறுகிறார். சச்சினின் சாதனைகளும், அதில் இந்தியாவின் வெற்றிகளும் தொடர வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும், சராசரி கிரிக்கெட் ரசிகர்களில் ஒருவன்!!!


என்னதான் சச்சின் சரியில்ல, இனிமே ஆடுவதற்கு தகுதி இல்லை அப்படி என்றெல்லாம் புலம்பியபடி ஒரு கூட்டம் திரிந்தாலும், அவர்களும் இந்த ஆட்டத்தை ரசித்திருக்கக்கூடும் என்றே ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன (நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள்).....


- காவிரிக்கரையோன் MJV