Wednesday, November 11, 2009

அவரு என் அண்ணன்....

ஆள் அரவமற்ற அந்த ஊர் கோடி ஆலமரத்துக்கு பக்கத்தில் உள்ள கல்லின் மீதுதான் முதன் முதலில் ஏறி பயணப்பட்டது நம் காதல். உன் விழிகள் என் சுவாசம் திருட, என் இதழ்கள் அதற்கு பிராண வாயுவாய், காதலின் புரிதல் தொடங்கி இன்றோடு ஐந்து வருட காலங்களை நம் காதல் அருந்தி முடித்திருந்தது. தேன் குடித்த தேனீக்கள் மயங்கி கிடப்பது போல என்று உவமை சொல்லும் கவிஞர்களை எனக்கு பார்த்து சிரிக்கத்தான் தோன்றியது. இந்த காதலின் புரிதல் நிலையை விட ஒரு மயக்கம் இருக்குமோ இந்த உலக நிகழ்வுகளில்.... அவள் கண்கள் என்னும் கரிய பெரிய தானியக்கி கொண்டு என்னை ஆட்டுவித்தாள்.

நானோ அனைத்தும் புரிந்தவனாய் ஆடினேன். சூரியன் என்னும் பாம்பாட்டி ஆட்டி வைப்பானே இந்த அகில உலகத்தையும், அந்த ஆடல், இரவு வரை நீடிக்கும், இரவு தோல்வியே கதியாய் வானத்தின் முகம் கருகும்போது, பளீர் என போட்டு வைக்க நிலவு வருமே, அப்படிதான் இவளும் என் இரவின் இருளை நீக்கி போகும் வல்லமை படைத்தவள். அம்மாவாசை இரவுகளில் வானம் இருளில் காணாமல் போகின்ற தருணங்கள் வரும், அன்றும் இவள் கரு விழிகளில் உள்ள வெளிச்சம் எனக்கு அவளின் விழி காட்டும், அவளின் வழி காட்டும்.

பல காலம் கூட இருந்தவர்கள் போல சில நேரங்கள் விலகினாலும், பதறி துடித்தது மனம், அச்சம் என்னும் எதிரி வீட்டு நண்பன் கேட்காமலேயே வந்து அமர்ந்தான். சீ உனக்கு வெட்கமாய் இல்லையா? மதியாதார் தலை வாசல் மிதித்து அமர்ந்துள்ளாயே என்று அவமானப்படுத்தியும், அவன் நகரவில்லை. முன்பெல்லாம் இப்படி இவன் வந்ததில்லை. ஏன் அழையா விருந்தினராய் வந்தான். இதற்கும் வரலாறுதான் மிக முக்கியம் .....

பாலின் நிறத்தில் அவளா, அல்லது அவள் நிறத்தில் பாலா என்ற ஐயத்தை தூண்டுகின்ற ஒரு மாலை வேளையினில் அவளுக்காய், காலத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், வெகு நேரமாய் என்னை வெறித்து பார்த்து கொண்டிருந்த ஒரு காளை மாடு என்னை நோக்கி மிரட்டலுடன் ஓடி வந்தது. வீரம் என்பது மனதின் தையிரியம் என்று போதித்தவர்கள் எழுந்து காணாமல் போயிருந்தார்கள்.

நானும் அவர்களுள் ஒருவராய் காணாமல் போயிருப்பேன். அந்த காளை என்னை கடந்த பின்னரும் என் துடிப்புகள் அடங்கவில்லை. இன்னும் வேகமாய் துடிக்க ஆரம்பித்தது இதயம். எப்போதும் ஏதாவது ஒரு மலருக்கு உவமை கூற வைக்கும் அவள் முகம் இன்று, ஏனோ கலை இன்றி வாடி வதங்கி இருந்தது. மலர்களுக்கெல்லாம் மகிழ்ச்சி இன்றாவது இவனுடைய "அவள் புகழ் பாடலிலிருந்து தப்பித்தோமே" என்று. அப்படியெல்லாம் சொல்லிய மலர்களை எதிர்த்து பேச தெம்பில்லாமல் இருந்தேன் நான்.

காதலி முகம் வாடி இருக்க, கலங்காத காதலனும் பிறப்பானோ இந்த பூமியில் என்று லட்சத்தி பத்தாவது முறையாய் கவிஞனாய் மாறியிருந்தேன். என்ன என்று நீண்டு முடியாத பாதையை உற்று நோக்க, அவள் என்னுடைய மைத்துனன் பின் தொடர பூமி மாதாவுக்கு வலிக்குமே என்ற தயக்கத்துடன் காலடி சுவடு கூட பதியாமல் நடந்து வந்தாள். நடந்து வந்தவள் என் அருகில் நின்றவுடன் விழுந்தாள். என்ன என்று கேட்பதற்குள்ளாகவே பாதம் தரையில் படாத காரணம் புரிந்து கொண்டேன். பூக்களை எரிக்கவும், துளிர் விட்ட மரத்தை வெட்டவும் கூட துணிந்த மனிதர்கள் இருப்பதை அவள் பாதம் சுட்டி காட்டியது. ஒருவன் வாழ்வின் ஒளியாய் அமைந்ததால் அவளின் பாதத்திற்கு சூடு போட்டு எக்காளமிட்டு இருக்கிறார்கள், அதில் ஆண்மகன் என்ற வேடத்தில் என்னவளின் பின்னால் வரும் பெண்டு மகனும்
அடக்கம்.

எல்லாருக்கும் வரும் சராசரி வேகத்தடைகள் தான் எங்கள் காதலுக்கும் என்றாலும், அவர்கள் குடும்பம் தலைமை தாங்கி நிற்கும் குடும்பம், உங்கள் குடும்பம் தலை தாழ்த்தி நிற்கும் குடும்பம், அந்த குடும்பத்தில் என் பெண் தலை தாழ்த்தி நிற்க கூடாது என்ற தலையான கொள்கை அவள் குடும்பத்திற்கு. என் பெற்றோர் வேண்டாம் மகனே, இதெல்லாம் என்று சொன்னாலும், விட்டு விடவா உயிரை கொடுத்து காதலிக்கிறோம், அதெல்லாம் கவலை படாதீங்க என்ற முரசு கொட்டி வந்தேன் எங்கள் இடத்திற்கு. ம் ஆமாம் சிறிது நாட்களில் எங்கள் பெயரை அந்த கல்லில் வரலாறு தானாகவே பதிக்க போவதாய் கேள்வி.

ஒரு கணம் நினைவுகளில் மீண்டு எழுந்து பார்க்க, அவள் அண்ணன், ஓங்கி ஒலிக்கும் குரலில், எலே, (*&^%^%^, என்று வசை பாடி அழைத்து, தம்பி என்று ஆரம்பிக்க, என் பராக்கிரமத்தை காண்பித்து விடலாம் என்று கை எடுக்க, என்னவள் என் முன்னாள் கை கூப்பி நின்றாள். "அவரு என் அண்ணன், மன்னிச்சிடுங்க" என்று சொல்லி விழி மெல்ல மூடி விழுந்தாள். அவளை அள்ளி தாங்க நான் தாவிய அந்த கணம், இரும்பு தடியின் ஆக்கிரமிப்புக்கு என் பின்னந்தலையில் பட்டா போடப்பட்டது.

நீண்ட உறக்கம் பிடித்தது போல என் கண்கள் சூரிய வெளிச்சம் பார்க்க நாணி குறுகியது. சட்டென்று தேள் கொட்டியது போல எழுந்து எவ்வளவு நாள் ஆச்சுமா என்றபடி சுவரோரம் சாய்ந்து, கண்ணில் ஈரம் வற்றி போய் இருக்கோமோ என்றபடி, அழுது சாய்ந்திருக்கும் ஆத்தாவிடம் கேட்டேன். ஈன ஸ்வரத்தில் ஆதா ஏதோ முனகியது. என்னாத்தா ஐயாவிற்கு உடம்பு சரி இல்லையா என்று கேட்டேன்.

காலை கட்டிக்கொண்டு வீடு முழுவதும் எதிரொலிக்க கதறியது அந்த கிழவி. ஈரக்குலை நடுங்கும் அளவுக்கு எனக்கு பயம் பற்றி கொண்டாலும், என்ன ஆத்தா என்று வினவ, இப்படி பண்ணிக்கிட்டாளே பாவி என்று கதற கதற, என்னவளின் நினைவு வந்தது. என்னமோ ஏதோ என்று பதறியடித்து நான் ஊர் கோடியில் உள்ள எங்கள் கல்லை நோக்கி ஓட, பாசி படர்ந்த அந்த கல் எனக்கு நான் எவ்வளவு காலம் கண் விழிக்கவில்லை என்பதை உணர்த்த, கூடு களைந்து பறக்க ஆரம்பித்த பறவையாய் அவளின் இல்லம் நோக்கி பறந்தேன்.

புகைப்படத்திற்கு என்னவளால் அழகா இல்லை புகைப்படம் அழகாக எடுக்கப்பட்டதா என்ற பட்டிமன்ற தலைப்பாய் என்னவள் அந்த புகைப்படத்தில் இருந்தாள். அந்த கரிய பெரிய விழிகள் என்னை பார்த்து சிரிப்பதை கண்டு ஓடி கட்டி உருண்டேன். அந்த புகைப்படத்தின் மாலையும் சந்தனமும் என் மேனியை கட்டி பிரண்டது. அவளே, என நினைத்து வா நம் கல்லுக்கு செல்வோம் என்று அவளை அழைத்து சென்றேன்.

அன்றிலிருந்து இன்று வரை நானும் என்னவளும் அந்த கல்லில்தான் அமர்ந்து கதை பேசி வருகிறோம். ஏனோ இப்போதெல்லாம் யாரும் எங்களை தட்டி கேட்பதில்லை. என் ஆத்தா வந்து என்னை பார்த்து ஏன்டா இப்படி கல்லே கதின்னு இருக்க, வீட்டுக்கு வாடா என்று அழைத்தது. நானோ ஆத்தா அவ இருக்கா, விட்டுட்டு வர முடியாது என்றேன். ஆத்தா அழுது கொண்டே சரிடா அவளையும் கூட்டிட்டு வா என்று சொல்லி விட்டு, முன்னே சென்றது. நான் என்னவளின் கரிய பெரிய விழிகளை பார்க்காமல் போகலாமா என்று கேட்டேன்.

அவள் பதில் சொல்லவில்லை. நான் தொடர்ந்து கேட்டு கொண்டே இருக்கிறேன். கோபம் தீர்ந்து எங்கள் வீட்டுக்கு வந்து விடுவாள் அப்போது நானும் வருகிறேன் என்று சொல்லி கொண்டே அவளின் தலை அசைவு என்ற கவிதைக்காய் எங்கள் கல்லின் மீது காத்திருக்கிறேன்....

- காவிரிக்கரையோன் MJV