Sunday, November 15, 2009

ஆட்டோமொபைல் பக்கங்கள் - பாகம் 1: மாருதி ஸ்விஃப்ட் டீசல்...புதிதாக வண்டி ஓட்ட கற்றுக் கொண்டு பிறகு, ஒரு கார் வாங்கலாம் என்றோ இல்லை கார் வாங்கி நீண்ட நாட்கள் ஆகி விட்டது என்றோ நினைப்பவர்களுக்காக, இனி கார்களைப் பற்றி எனக்கு தெரிந்தவற்றை இங்கே பகிறப் போகிறேன். வாருங்கள் இந்த பதிவில் என் மனம் கவர்ந்த வண்டியைப் பற்றி பார்க்கலாம். அதனால் அதை இப்போது 2 வருடங்களாக ஓட்டிக் கொண்டும் இருக்கிறேன் (பிடிச்சதால வாங்கிட்டேன்பா, எங்களின் முதல் கார்)....

இந்தியாவைப் பொறுத்த வரையில், எந்த நான்கு சக்கர வாகனங்களை வாங்குவது என்று வாடிக்கையாளர்கள் யோசிப்பது, அந்த வண்டி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கோ இல்லை டீசலுக்கோ எவ்வளவு கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் என்பதை பற்றிதான் பெரும்பாலும் யோசிக்கிறோம். அதைப் பொருத்து தான் இந்த வண்டிகளின் அட்டவணை முதலில் தயாரிக்கப்படுகிறது. அப்புறம் தான் மற்ற விஷயங்களைப் பார்க்கிறோம் என்பது என்னுடைய அனுபவத்தில் கண்டறிந்த உண்மை.

இந்த விஷயத்தை எப்பொழுதும் மனதில் வைத்து கொண்டு அவ்வப்போது இது போன்ற வாகனகளை வினியோகத்துக்கு அறிமுகப்படுத்தி கலக்குவதில் டாட்டா நிறுவனத்திற்கும், மாருதி நிறுவனதிற்கும் பெரிய போட்டா போட்டியே பல வருடங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த பதிவில், 2005 ஆம் ஆண்டு மே மாதம் மாருதி நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் வண்டியைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

அதிலும் என்னை கவர்ந்த டீசல் ஸ்விஃப்டை பற்றி பார்ப்போம். 2005 இல் பெட்ரோல் ஸ்விஃப்டை அறிமுகப்படுத்திய மாருதி நிறுவனம், 2 ஆண்டுகள் கழித்துதான் டீசல் வண்டியை அறிமுகப்படுத்தியது. அதற்குள்ளாகவே அதுவரை, ஹுண்டாய் நிறுவனம் கவர்ந்து வைத்திருந்த மார்கெட்டை (அப்படி சொல்லி விட முடியாது. ஏனென்றால் சான்ட்ரோ வேறு ரக வண்டி (ஹாட்ச்பாக்), ஸ்விஃப்ட் வேறு ரக வண்டி (பிரீமியம் ஹாட்ச்பாக்) என்று இருந்தாலும், ஆல்டோ, சென், வேகன்-ஆர் என்ற போன்ற வண்டிகளைத் தாண்டி சான்ட்ரோ பின்னி எடுத்துக் கொண்டிருந்த நேரம் அது). வெகுவாக தன் பக்கம் மறுபடியும் இழுக்கத் தொடங்கி இருந்தது மாருதி நிறுவனம். இந்த சமியத்தில் அறிமுகம் ஆனார் மாருதி ஸ்விஃப்ட் டீசல் வண்டி.

சும்மா அதிருதுல்ல என்ற அளவுக்கு பல தரப்பட்ட ஆட்டோ நாளிதழ்களும் அலசி ஆராய்ந்து டீசல் ஸ்விஃப்டுக்கு சான்றிதழ் கொடுத்திருந்தனர். இருந்தாலும் எல்லோருக்கும் ஒரு சிறிய பயம் இருந்தது. ஹுண்டாய் நிறுவனம் இதற்கு போட்டியாக, ஹுண்டாய் கெட்ஸ் டீசலை செப்டம்பர் 2007இல் அறிமுகபடுத்த திட்டமிட்டு இருந்தது. மாருதி நிற்வனத்தார் முந்திக் கொண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தினர்.

சூறாவளியாய் அறிமுகம் ஆனது டீசல் ஸ்விஃப்ட். 2 விதமான மாடல்கள் இருக்கின்றன. ஒன்று எல் டீ ஐ மற்றொன்று வீ டீ ஐ என்பவை. வீ டீ ஐ ஹையர் எண்ட் மாடல் எல் டீ ஐ லோயர் எண்ட் மாடல். இரண்டிலும் போடப்பட்ட எஞ்சின் ஒரே எஞ்சின் தான். அதில் எதுவும் மாறுதல் இல்லை. ஸ்விஃப்ட் டீசலின் சில தொழில் நுட்ப விஷயங்களை அறிந்து கொள்வோம்.

1.3 லிட்டர் (1248 சிசி), 4 சிலிண்டர்கள், 16 வால்வுகள், 75 பிரேக் ஹார்ஸ் பவர் சக்தி, 190 நியுட்டன் மீட்டர் டார்க் இவைகளுடன் டி டி ஐ ஸ் முறையினில் டீசலை உள்ளிழுத்து கொள்கிறது இந்த எஞ்சின். டீசல் எஞ்சின் என்றாலே சத்தம் என்கிற காலமெல்லாம் மலையேறி போய் விட்டபடியால், டீசல் எஞ்சின் வண்டிகளைப் பற்றி அவ்வளவாக இப்போது யாரும் கவலை பட தேவை இல்லை.ரேடியேட்டர் சூடாகி விடும், தண்ணீர் ஊற்றி சரி செய்ய வேண்டும் என்ற நிலை மாறி இப்பொதேல்லாம் காற்று அல்லது எண்ணெய் முறையில் குளிர்விக்கும் நடைமுறைகள் வந்துவிட்டன. இதெற்கெல்லாம் அஞ்சாமல் வாங்கலாம் இந்த வண்டியை!

பெட்ரொல் வண்டிகளுக்கும் டீசல் வண்டிகளுக்கும் எப்பொழுதும் விலையில் நல்ல ஒரு வேறுபாடு இருக்கும். 70,000 ரூபாய் வித்தியாசம் இருந்தது ஸ்விஃப்ட் டீசலுக்கும், ஸ்விஃப்ட் பெட்ரொலுக்கும் அவர்கள் அறிமுகப்படுத்திய புதிதில். ஆனால் இப்பொழுது சிறிது குறைத்து 60,000 ரூபாயாக உள்ளது. ஸ்விஃப்ட் எல் டீ ஐ இன் விலையை விட 42,000 ரூபாய் அதிகமாக இருக்கிறது வீ டீ ஐ இன் விலை. இதில் இந்திய நிறுவனங்கள் பெரும்பாலும் பல பெரிய மாறுதல்களை ஹை எண்ட் வண்டிகளுக்கும் லோ எண்ட் வண்டிகளுக்கும் வைப்பதில்லை. வண்டி மேனி நிறத்தில், பின்னால் பார்க்கும் கண்ணாடிகள் இருக்கும், கதவு கைப்பிடிகளும் அதே நிறத்தில் இருக்கும். எல்லா கதவுகளுக்கும் பவர் விண்டோஸ் என்று சொல்லப்படும் தானியங்கி பொத்தான் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் வண்டியின் முன் புறமும் பின் புறமும், மழையில் செல்லும்போதோ இல்லை அடர்ந்த பனியில் செல்லும்போதோ, உபயோகமாய் இருக்கும் மூடு பனி விளக்குகள் (ஃபாக் லாம்ப்) பொருத்தியிருப்பார்கள். இப்படியாக சில விஷயங்கள் வீ டீ ஐ இல் அதிகமாக இருக்கும். எஞ்சின் சக்தியில் எந்த மாறுதலும் கிடையாது.

மேலே கூறப்பட்ட விஷயங்களை நீங்கள் தனியாகவும் பொருத்திக் கொள்ளலாம். 40,000 ரூபாய் அதிகம் செலவழிக்கனுமா? என்று யோசிப்பவர்கள், எல் டீ ஐ வண்டியை வாங்கி, 25,000 ரூபாய்க்குள், அதை ஒரு முழு வீ டீ ஐ யாக மாற்றி விடலாம். மாருதி நிறுவனத்தின் உதிரிப் பாகங்களே மாட்டி கொடுப்பார்கள். அங்கேயே மாற்றி கொள்ளலாம். இதில் ரிமொட் லாக்கிங்க் என்ற முறையில் காரை தூரத்தில் இருந்து பூட்டவும், திறக்கவும் உபயோகமாய் இருக்கும். இல்லை என்றால் ஒவ்வொரு முறையும் சாவி போட்டு பூட்டும் படி இருக்கும்.

உங்கள் தேவைக்கேற்ப பொருத்தி கொள்ள :
1. எல்லா கண்ணாடியையும் தானியங்கியாக மாற்றி கொள்ளலாம்.
2. ரிமொட் லாக்கிங்க் வைத்து கொள்வது.
3. பூட்டியிருக்கும்போது யாரேனும் திறக்க முயற்சித்தால் ஒலி எழுப்பும் ஆட்டோ காப் என்ற கருவி.
4. குறிப்பாக இதை வைக்கும்போது, சரியான முறையில் பார்த்து செய்ய வேண்டும் இல்லை என்றால் தெரியாமல் காரில் யார் கை பட்டாலும் சத்தம் போட ஆரம்பித்து விடும்.
5. இருக்கை கவர்கள். பெரும்பாலும் செயற்கை லெதர் கவர்கள் கையை கடிப்பதில்லை. 7,000 ரூபாயில் முடித்துக் கொள்ளலாம்.
6. சுத்தமான லெதர் கவர்கள் சுமார் 20,000 வரை ஆகலாம்.
7. உங்களின் தேவைக்கேற்ப, இசைச் சாதனங்கள் பொருத்தி கொள்ளலாம். பயனீர், ஜே பீ எல், சோனி போன்றவைகள் இதில் பிரபலம்.
8. ஒலிபெருக்கிகள் (சப் வூஃபர், ட்வீட்டர், ஆம்ப் மற்றும் வூஃபர் போன்றவைகள்) கடைசி இருக்கைகு பின்னாலும், உங்கல் தலைக்கு மேலேயும் (இங்கே பெரும்பாலும் ட்வீடர்கள் பொருத்தப்படும்) பொருத்தி கொள்ளலாம்.
9. வண்டியின் கதவுகளிலும் பொருத்தி கொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது.
10.வண்டியில் நல்ல ஒரு வசனைத் திரவியத்தை வைக்கலாம். அதில் தலை வலி வரும் என்று நினைப்பவர்கள் ஒரு அட்டை விற்கிறார்கள் அதை வாங்கி கொள்ளலாம்.

வண்டியின் முக்கிய செயலாற்றத் திறன் கள்:
- நல்ல பிக் அப் இருக்கும். 1.3 லிட்டர் எஞ்சினில் 190 என் எம் டார்கின் வேலையை நீங்கள் வண்டியை முதல் கியரில் இருந்து எடுக்கும் பொழுது உணர்வீர்கள்.
- அருமையாக வண்டி லாவகமாக கையாலும் தன்னையே. குறைந்த திரும்பும் ரேடியஸ் (4.7 மீட்டர்கள்) இருப்பதால் உங்களால் சிரமம் இல்லாமல் வண்டியை திருப்ப முடியும்.
- ஏ.சி உபயோகத்தில் இருக்கும் பொழுதும் அந்த அளவுக்கு இழுக்கும் திறன் (புல்லிங் பவர்) குறைந்ததாக தெரியாது.
- வண்டி சரியாக உங்கள் சொல் பேச்சு கேட்டு நடக்கும். நல்ல ரெஸ்பான்ஸ் என்று சொல்லுவார்கள் ஆங்கிலத்தில்.
- வண்டியில் அடிக்கடி பிரச்சனைகள் வராது.
- வண்டியின் உள் புறம் உள்ள இடம் நல்ல வசதியாய் இருக்கும். நான்கு பேர் பிரச்சனை இல்லாமல் அமர்ந்து செல்லலாம். ஐந்து பேர் செல்வது எந்த ஹாட்ச்பாகிலுமே சிறிது சிரமம் தான்.
- வண்டியின் பின் பக்கத்தில் இருக்கும் இடம் ஓரளவுக்கு போதுமானதாக இருக்கும்.
- டீசல் கொள்ளளவு 43 லிட்டர்கள்.
- நீண்ட தூரம் போக வேண்டிய பயணங்களில் சீரும் சிறுத்தையாய் ஓட விட்டு பார்க்கலாம்.
- ஒரு மணி நேரத்திற்கு 120 முதல் 135 கி.மீ என்ற கணக்கில் அயராமல் ஓட்டலாம்.
- அதி வேகம் ஆபத்தானது என்றாலும், ஒரு முறை 160 களில் சென்றிருக்கிறேன்.
- முக்கியமான மைலேஜிற்கு வருவோம் - நகரத்து ஓட்டத்தில் 16 முதல் 17 கி.மீ/லிட்டர் கொடுக்கும், கொடுக்கிறது என் வண்டி.
- நீங்கள் அதிக தூரம் (லாங்க் ட்ரைவ்) ஓட்டினால் சலைக்காமல் 21 முதல் 23கி.மீ/லிட்டர் கொடுக்கும்.
- நீண்ட தூர பயணத்தில்தான் இந்த வண்டியின் ஓட்டத் திறனை வெகுவாக உணர முடியும்.
- நகரத்தில் ஓட்டுவதில் லாவகம் என்றால், நீண்ட தூர பயணத்தில் வல்லினமாய் பறக்கும்.

வண்டியின் சில குறைகள்:
என்னதான் மிகச் சிறந்த வண்டி என்றாலும், சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது.
- வண்டியின் உட்புற பிலாஸ்டிக்குகள் இன்னும் கொஞ்சம் தரமானதாக இருந்திருக்கலாம்.
- இவ்வளவு சக்தி வாய்ந்த வண்டிக்கு ப்ரேக் கொஞ்சம் கம்மியாகதான் இருக்கிறது.
- மேலே சொன்னதை கண்டு என்ன இது பதற வேண்டாம். ப்ரெக் ரெஸ்பான்ஸ் சிறிது குறைவு என்பது என் அனுபவத்தில் வந்த கருத்து.
- டாஷ்போர்டின் பிரதிபலிப்பு, வெயில் நேரத்தில் ஓட்டும் பொழுது, முகப்பு கண்ணாடியில்(வின்ஷீல்ட்)பட்டு சரியாக தெரிவது (ரெடியுஸ்ட் விசிபிலிடி) இல்லை.
- இது போக போக பழகி விடும்.
- அறிமுகப்படுத்திய புதிதில் கதவுகளில் கற்களை தரையில் தேய்ப்பது போன்ற சத்தம் (ராட்லிங்க்)வந்து கொண்டிருந்தது. இப்பொழுது மாருதியில் அதை சரி செய்து விட்டர்கள்.
இப்படி சில குறைபாடுகள் இருந்தாலும், வண்டியின் சக்தி மற்றும் மைலேஜினால் டீசல் உலகில் ஹாட்ச்பாக் வட்டத்தில் இப்போதைக்கு முடி சூடா மன்னனாக டீசல் ஸ்விஃப்ட் விளங்கி கொண்டிருக்கிறது. பார்ப்போம் புதிதாக பல வண்டிகள் வந்திருக்கின்றன. உதாரணத்திற்கு, ஃபியட் புன்டோ, ஹுண்டாய் ஐ 20, டட்டா இண்டிகா விஸ்டா, ஸ்கோடா ஃபாபியா, ஹுண்டாய் கெட்ஸ் (இந்த வண்டியை நிறுத்தப் போகிறார்களாம்) இப்படி இருக்கின்றன்.இந்த வண்டிகள் பற்றி ஒவ்வொன்றாய் வரும் பதிவுகளில் பார்போம். அது வரை பத்திரமாய் ஓட்டுங்கள்.

- காவிரிக்கரையோன் MJV