Saturday, November 21, 2009

நாலு வார்த்த நறுக்குன்னு கேக்கணும்...என்னவென்று ஆரம்பிப்பது. 4 மாதத்திற்கு முன் என் மனைவியின் நண்பியின் திருமணத்தில் பார்த்த நண்பர் (மணப்பெண்ணின் பெரியப்பா மகன்). நன்றாக பேசினார். அவர்தான் எங்களுக்கு அறை மற்றும் வசதிகள் செய்து கொடுத்தார். எங்கள் குழந்தைக்கு பால் வேண்டுமா? என்று உரிமையுடன் கேட்டு திருமண மண்டபத்தின் அடுக்களையில் சென்று கொடுத்து விட்டு சென்றார். நான் என் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன், வெகு நாட்கள் பழகியவர் போல உரிமையுடன் செய்கிறார் பாரேன் என்று கூட சொல்லிக் கொண்டிருந்தேன்.

அந்த நண்பியிடம் இருந்து 3 நாட்களுக்கு முன்னர் ஒரு தொலைபேசி அழைப்பு. அமைதியாக ஆரம்பித்து, அந்த நபரின் பெயரை சொல்லி, அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் வீட்டில் எல்லோரும் ஒரே கவலையாக உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

என் மனைவி நான் அலுவலகம் முடிந்து வந்த பின்னர், என்னிடம் சொல்லி விட்டு விழியோரமாய் கண்ணீர் துளியை தன் சோகத்திற்கு துணைக்கு அழைத்திருந்தார். எனக்கு முதலில் அப்படியா, ஏன் என்ன ஆச்சு? நல்லாதான இருந்தார் நாம பார்க்கிறப்போ? என்று கேள்விகள் கேட்டு விட்டு, மேலும் என் மனைவியின் துயரத்தை அதிகரிக்காமல் உறங்க சென்று விட்டேன். " சரி சரி அதையே நினைக்காமல் ஒழுங்கா தூங்குப்பா" என்று சொல்லி விட்டு யோசிக்க ஆரம்பித்தேன்.

இதுவரை ஒரு 6 முறை இருக்குமா? இது போன்ற நிகழ்வுகளை என் வாழ்வில் கேட்டிருப்பேன். முதன் முதலில் கேட்டது நான் 6ஆவது படிக்கும்பொழுது இருக்கும். அந்த வயதில், எரிந்து போன அந்த உடலை, இப்படியெல்லாம் இப்பொழுது சொல்லுகிறேன். உரைந்து நின்று, தாயிடம் பிதற்றியது, அம்மா அந்த அண்ணன் ஏன்மா அப்படி பண்ணிக்கிட்டான் என்றதுதான். அனைவரின் அழுகைக் குரலுக்கும் நடுவில், எரிந்த அவனை மீண்டும் எரிக்க எடுத்து சென்றார்கள். கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், அந்த பையனை, அந்த பையனின் ஒவ்வொரு அசைவையும் கூட இருந்து ரசித்த (இந்த காலத்து குழந்தைகளுக்கு கிடைக்காத ஒரு வரம்) அவனின் 80 வயது பாட்டி, அழுததுதான். என்ன சொல்றது, ஒரு நிமிட தாமதம் அந்த மூளை சரியான கட்டளை இட, அதற்குள் அனைத்தும் முடிந்து விடுகிறது. இது தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு.

அனைத்துமே மறுபடி புதிதாகவும் புரியாமலும் நடக்க ஆரம்பிக்கிறது அந்த நபரின் தற்கொலைக்கு பிறகு அவனது அல்லது அவளது உறவுகளுக்கு, அவனது அல்லது அவளது நண்பர்களுக்கு!!! யெப்பா உங்களுக்கு எல்லாம், ஒரு 5 நிமிட வேதனையோ வலிக்கோ பிறகு, இயக்கம் நின்று விடுகிறது. உங்களுக்கான இலக்கை அடைந்து போய் சேர்ந்து விடுகிறீர்கள். ஆனால் உங்களையே நினைத்து வாழும், உயிர் இருந்தும் பிணமாய் வாழும் உங்கள் சொந்தங்களையோ, நண்பர்களையோ ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்திருப்பீர்களா? எது நடந்தா எனக்கு என்ன என்று நினைத்து போய் விடுகிறீர்கள்.

பேச்சு வழக்குல சொல்லுவதுண்டு, "தற்கொலை செய்துக்கறதுக்கு ஒரு தையிரியம் வேணும்பா". டேய் டேய் அதெல்லாம், சும்மா சொல்லி வைக்கறதுதாண்டா... எவ்வளவோ விடயங்களை நண்பர்களிடமோ அல்லது மனதுக்கு பிடித்தவரிடமோ, மனம் விட்டு பேசுகிறோம். அது போல, ஒரு இக்கட்டான சூழல் வரும் பொருட்டு, யாரிடமாவது பேசி பார்க்கலாம் இல்லையா?

அதெல்லாம் விட்டுட்டு, மலையிலேந்து குதிக்கறது, மயி** புடுங்கறது, இதெல்லாம் எதுக்கு? யெப்பா நீங்க ஒரு எலும்பு கூட இல்லாம, போய்ட்டீங்க.... இப்போ யோசிச்சி பாத்தா, உங்களது சிறு பிரயத்தில் இருந்து கூடவே இருந்து ஒவ்வொரு அசைவையும் ரசித்த உங்கள் பெற்றொருக்கு, உயிருடன் கொல்லி வைக்கும் கட்டாயம் இது போன்ற விடயங்கள். இதெல்லாம், இப்படி செஞ்சுக்கிட்டாங்களே என்று, ஏக்க போராடத்துக்குள் என்னை தள்ளியவர்களை ஏசி எழுதுகிறேன். இதெல்லாம் அவங்களுக்கு கேக்காதுன்னு எனக்கும் நல்லாவே தெரியுது. இருந்தாலும் அவய்ங்க மேல உள்ள மாறாத கோபம் என்னை இப்படியெல்லாம் எழுத வைக்குது.

உங்கள மாதிரியான ஆட்களால் தான், இடத்துகெல்லாம், சூயிசைட் பாயின்டுன்னு பேர் வைக்கறானுங்க. நீங்க விட்டுட்டு போகிற சொத்து என்ன தெரியுமா? வெறுமையும், வேதனையும்தான். உங்களுக்கெல்லாம் கேக்காதுங்கறது தெரிஞ்சிருந்தாலும், இந்த ஆவி, ஆன்மா அப்படி என்று வினவுகின்ற விடயங்கள் உண்மையாய் இருக்கக் கூடாதான்னு தோணுது. அப்படி இருந்தா உங்களல்லாம் பாத்து நாலு வார்த்த நறுக்குன்னு கேக்கணும்.

இது இருக்கும் எல்லோருக்காகவும்:
மனம் விட்டு பேசுங்க. அப்படியெல்லாம் எண்ணம் ஏதாவது இருந்தா தயவு செய்து விட்டுடுங்க. உங்கள சுத்தி பாருங்க. கொஞ்சம் கொடைச்சலான உலகம்தான். ஆனா இத விட்டுடு வேற எங்க போவீங்க? "சுய மரணம்னு ஏன் இதுக்கு பெயர் வைக்கவில்லை?, ஒருவன்/ஒருவள் தன்னையும் மாய்த்து கொண்டு, உயிரோடு இருக்கும் அனைவரையும் கொன்று போட்டுட்டு போறானே/போறாளே அதனாலதான்". பயந்து செத்து போறது கோழைத் தனமாதான் எனக்கு தெரியுது:-(

- காவிரிக்கரையோன் MJV
பி.கு: இந்த இடுகையை யூத்புல் விகடன் குட் ப்ளாக்ஸ் பகுதியில் வெளியிட்டு இன்னும் பல பேருக்கு கொண்டு சென்றதற்கு மிக்க நன்றி...

இது என்னுடைய அரை சதம்!!!

ஆயிற்று இந்த பதிவை இணையத்தில் ஏற்றும் பொழுது, நான் 50 இடுகைகளை வலைப்பூவில் பதித்திருப்பேன். . என்னடா உன் அலம்பல் தாங்க முடியவில்லை என்று புலம்பும் பதிவர்களே, நண்பர்களே, நான் வலை உலகத்துக்கு வந்தது 2008 ஆம் ஆண்டாக இருந்தாலும், இந்த வருடம் தான் சற்று சுறுசுறுப்புடன் பதிவிட தொடங்கி இருக்கிறேன். இதற்கு காரணம் முழுக்க முழுக்க பதிவுலகம் தான். எத்தனை சிந்தனைகள், எத்தனை வித்தியாசங்கள் என்று எப்படி எப்படியோ மாறுப்பட்டு கிடந்தாலும், இந்த பதிவுலகின் மகத்துவம், அதில் உள்ள பதிவர்களின் எழுத்து நடை என்று பலவற்றையும் ரசிக்க தொடங்கி இருக்கிறேன்.

வந்த புதிதில் இங்கே சண்டை, அங்கே ஒரு வாய்ச் சண்ட, கை கலப்புல முடிந்தது, பார்க்க கூட்டிட்டுப் போய் சந்துல வெச்சி அடிக்கறாய்ங்க என்று பீதியை கிளப்பி கொண்டிருக்க, இதெல்லாம் ஊர்க் குருவி மாதிரியான விடயங்கள், அதெல்லாம் என்ன நினைத்தாலும் மேலே எழும்ப முடியாது என்று உரைக்கும் வண்ணம், கேபிள் சங்கர் என்ற பதிவரின், தந்தை மரணத்தின் போது, பதிவுலக நண்பர்கள் ஒன்று கூடி சத்தம் போடாமல் தங்களால் இயன்றவற்றை செய்து பதிவுலகத்தில், பருந்து பறக்கும் உயரத்திற்கும் மேலே நல் உள்ளம் கொண்டவர்களும் இங்கே தான் இருக்கிறோம் என்று நிரூபித்து விட்டு, பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

500, 1000 என்று பதிவுகளை நெருங்கி கொண்டிருக்கும் பதிவர்கள் அமைதியாய் இருக்க, 50 முடிக்கறதுக்கே, தோரணம் கட்டி பொங்க வைக்கிறது உசிதம் இல்லை என்று எல்லோரும் சொன்னாலும், இந்த பதிவு என்னை போன்று, புதிதாய் எழுதுபவருக்கு ஊக்கம் கொடுக்கும் என்று நினைத்து எழுதுகிறேன். வாங்கப்பா நெறைய எழுதுவோம். ஏதாவது சந்தேகம்னா பதித்து கூட்டி செல்ல நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் இங்கே!!! சில நண்பர்கள் பொழுதுபோக்கிற்காக எழுதுவாங்க, சில நண்பர்களுக்கு எழுதல்லன்னா தூக்கம் வராதுன்னு நினைக்கிறேன். எப்படியோ எல்லோரும் இப்படி எழுதினார்கள் என்றால், எதை படிக்க, எதை மறக்காமல் படிக்க என்றெல்லாம் குழப்பங்கள் வந்து இந்த வலை உலகத்தை நன்றாய் வாழ வைக்கும்.

நானும் உற்சாகம் மிகுதியில் நாளுக்கு ஒன்று என்ற வீதத்தில் பதிவெழுதும் வித்தைகளை யோசித்து கொண்டுதானிருக்கிறேன். பரிசல்காரன் அவர்களின் ஒரு பதிவைப் பார்த்து ஓ! இப்படிதான் ஒரு நாளுக்கு ஒரு பதிவு போடறாங்களா, இப்போவே கண்ண கட்டுதேனு யோசிச்சிட்டே இருக்கேன். அந்த கால இடைவெளியில் நர்சிம், கார்கி, ஆதிஷா, சென்ஷி, ஜாக்கி சேகர், ஊடகன், இனியவன், தீராத பக்கங்கள், பைத்தியக்காரன், குசும்பன் மற்றும் என்னை கவர்ந்த பல வலைகளையும் சுற்றி வந்துட்டு பாத்தா , வெகு நேரம் கழிந்து போயிருக்கும். அதனால, இப்படி பக்காவாக பதிவு போடும் பல நண்பர்கள் தான் என் பதிவின் எண்ணிக்கையை குறைத்ததில் பெரிய பங்கு வகித்திருக்கிறார்கள் என்று இந்த பதிவிலே தெரிவித்துக் கொள்கிறேன்!!!!!!!!!:-)

இப்படியாக, கொஞ்சம் அதீத வேகத்துடன் (இங்கே வேகம் என்று நான் குறிப்பிட்டு இருப்பது மிதமான வேகம் என்று வைத்து கொள்ளலாம்!!!) பதிவு எழுத ஆரம்பித்த போது சர்வேசன் வலையில் ஒரு சிறுகதைப் போட்டி என்று சொல்லி பல மாதிரி எழுதி கொண்டிருந்த என்னையும் ஒரு சிறுகதை கிறுக்க வைத்தது இந்த வலையுலகம்தான். எவ்வளவோ விடயங்கள் கொட்டி கிடக்கின்றன அதில் புகுந்து தேடினால் கிடைக்காத எழுத்துக்களும் இல்லை, சிந்தனைகளும் இல்லை. பதிவுகளை தான் திருடக்கூடாது. ஆனால் பதிவினால் மாறும் உங்கள் சிந்தனைகளுக்காக யாரும் உங்களுக்கு திருட்டுப்பட்டம் கட்ட மாட்டார்கள்.

இப்பொழுதெல்லாம் என்ன எழுதுவது என்று ரூம் போட்டு யோசிக்க வேண்டாம், நினைத்ததை பார்த்ததை கேட்டதைப் பற்றி எழுதக் கற்று கொடுத்த (சொந்த சிந்தனைனு சொல்ல வரேன்) வலை உலகத்திற்கு என் நன்றி. பின்னூட்டங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அது ஒரு அருமருந்து. நாகரிகம் பார்த்து, நல்லபடியாய் முரண்பட்டு, பின்னூட்டங்கள் வந்தால் அதை விட ஒரு டானிக் என்னவாக இருக்க முடியும்.

சரி எல்லாருக்கும் ஒரு பெரிய நன்றிப்பா. நிறைவாய், நிறைய எழுத எல்லோருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்!!!
- காவிரிக்கரையோன் MJV