Wednesday, December 9, 2009

டிசம்பர் ஆறு - வெறுமை .....

இந்த தேதியை இந்தியா அவ்வளவு சுலபமாக மறந்திருக்க முடியாது. ஆனால் என் வாழ்விலும் இப்படி ஒரு நிகழ்வு நடந்து இந்த நாள் அந்த அளவுக்கு மறக்க முடியாத நிலைக்கு இட்டு செல்லும் என்று நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. என்னுடைய வாழ்வில் மிகவும் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் அவர். என் கல்லூரியில் எனக்கு ஒரு வருடம் சீனியர். சில நேர முதல் வருட அறிமுகங்கள் முதலே நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள்.

ரோட்டராக்ட் கழகம் முதல் என்னை, நல்ல பேச்சாளனாக ஆக்கியது வரை அவருக்கு வெகுவான பங்கு உண்டு. பணி காரணமாய் நானும் அவரும் வெவ்வேறு ஊருக்கு சென்றோம். இருந்தும் அவ்வப்போது மின்னஞ்சல், அலைபேசி என்று எப்போதும் தொடர்பில் இருந்தோம். அவரும் நானும் அவ்வப்போது அலைபேசியில் வேலை தொடர்பான விடயமாக பேசிக் கொண்டிருப்போம். உன்னால வேலையெல்லாம் வாங்க முடியும் என்று உற்சாகம் ஊட்டியவர்களில் இவரும் ஒருவர்.

2005ஆம் ஆண்டு அவரும் நான் இருந்த இடத்திற்கு வர எங்கள் நட்பு மறுபடியும் தொடர்ந்தது. மனுஷன் நல்ல கலகலப்பான ஆள். எனக்கு திருமணம் அவருக்கு திருமணம் அப்புறம் என் வேலையும் அவருடைய நிறுவனத்திலேயே கிடைக்க மிகவும் நெருங்கி வந்து விட்டோம். வாழ்க்கையில் இது வரை எவ்வளவோ விடயங்கள் பேசியிருக்கிறோம் சில வற்றை செயல் முறை படுத்தியும் இருக்கிறோம். முக்கியமாக அவர் மன நலம் குன்றிய குழந்தைகளுக்கான வாழ்வியல் முன்னேற்றத்திற்கு பாடு படும் ஒரு நிறுவனத்தில் உறுப்பினராக இருந்து அவரால் இயன்ற வரையில் உதவி செய்தும் வருகிறார். யாருக்கு என்ன உதவி என்றாலும் முன் நின்று நடத்தி வைக்க கூடியவர்.

அவருடைய குடும்பம் என்னுடைய மனைவியின் சொந்த ஊரில் தான் வசித்தார்கள். அதனால் இன்னும் நன்றாக குடும்ப அளவில் அவரை தெரியும். அவருக்கு ஒரு அக்கா. அவர்களும் திருமணமாகி நாங்கள் இப்பொழுது இருக்கும் ஊரிலியே தான் இருக்கிறார்கள். நாங்கள் எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். அவர் அக்காவுக்கு இரண்டு குழந்தைகள். ஆறு வயதில் ஒரு மகன். ஐந்து மாதத்தில் ஒரு மகள். நன்றாக போய் கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் ஜுரம் வடிவில் விதி (விதியா இல்லை என்ன சொல்வது என்றே தெரியவில்லை) விளையாட ஆரம்பித்து இருந்தது.

அதற்காக அந்த அக்காவை உயர் தர மருத்துவமனை ஒன்றில் சேர்த்திருந்தார்கள். பிளட் பிளேட்லட்ஸ் குறைவாக இருந்த படியால் நிறைய ரத்தம் தேவைப்படுவதாக அவர் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிருந்தார். சரி என்று எங்கள் அலுவலகத்தில் இருந்து சில நண்பர்களை அனுப்பி வைத்து விட்டு எப்படி இருக்கிறார்கள் அக்கா என்று அலைபேசியில் கேட்ட பொழுது நன்றாக உள்ளார் மேலும் மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்லுமாறு கூறி விட்டபடியால் (சென்ற வெள்ளி கிழமை) கிளம்புவோம் என்றும் தெரிவித்தார். அந்த
மருத்துவமனை பற்றி எல்லா நண்பர்களுமே, "அவனுங்க நல்லாவே பார்க்க மாட்டனுங்களே, மாப்ள வேற ஹாஸ்பிட்டல் மாத்த சொல்லுடா" என்றார்கள். ஆனால் அந்த மருத்துவர் தெரிந்தவர் என்பதனால் தான் அங்கே அழைத்து சென்றோம் என்பதை சொன்னார் அந்த நண்பர்.

சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் வேகமாக ஓடிப் போக, திங்கள் அன்று காலை ஆறு மணியிருக்கும் என் மனைவியார் என்னை எழுப்பி, அந்த நண்பர் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார் பாருங்கள் என்றார். " இந்த குறுஞ்செய்தியை கண்டவுடன் எனக்கு அழைப்பு விடுங்கள்" என்றது அந்த குறுஞ்செய்தி. குறுஞ்செய்தி வந்திருந்த நேரம் 2 .30 நேரம் இரவுக்கு வந்திருந்தது. உடனே நானும் அழைத்தேன், சரி மறுபடியும் இரத்தம் தேவைப்படுகிறது என்றுதான் அழைத்தேன். சொல்லுங்க என்றேன், கலக்கமான குரலில், " மேட் அக்கா இறந்துட்டாங்க என்றார்".

எனக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் உடனே கிளம்பி சென்றேன். அந்த வீட்டில் இருந்த சூழ்நிலை, அந்த அக்காவின் அம்மா, அப்பா, என் நண்பர் என்று எல்லோரும் கதறி அழுது கொண்டிருந்தனர். என்னை பார்த்ததும் மேலும் அழ ஆரம்பித்து இருந்தனர். இவ்வளவு அழுகையிலும் ஒரு சிறிய சிரிப்பு சத்தம் அந்த ஐந்து மாத குழந்தையினுடையது. என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு ஐந்து நிமிடம் அப்படியே நின்று கொண்டிருந்தேன். அப்புறம் கொஞ்சம் தெளிந்து அங்கே செய்ய வேண்டிய வேலைகளை பார்க்க ஆரம்பித்தோம். எனக்கு முன்பே வந்து அவரது நண்பர்களுடன் சேர்ந்து மற்ற விடயங்களை பார்க்க முற்பட்டோம்.

ஆயிற்று நான்கு ஐந்து நிமிடங்களுக்குள்ளாக அந்த அக்கா சாம்பல் ஆகி விட்டார்கள். அது வரை அவர்களின் அம்மா, அப்பா இவரது மனைவி நண்பர்கள் உறவினர்கள் என்று யாவரும் மீளா சோகத்தில் ஆழ்ந்து இருந்தனர். என்னவோ செய்கிறோம், எப்படியோ வாழ்கிறோம், எத்தனை சோகம், எத்தனை மகிழ்ச்சி, எத்தனை சண்டைகள், எத்தனை துன்பங்கள் இதையெல்லாம் தாண்டிதான் வாழ்க்கை. நேற்று நம்மோடு இதையெல்லாம் பகிர்ந்த ஒருவர் இன்று இல்லை என்கிற அந்த உணர்வே நம்மை வாட்டி எடுக்கும். இதையும் கடந்து தான் வாழ்க்கை ஓடும். அதோடு நாமும் ஓட வேண்டும்.

கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் மருத்துவத்தை திட்டி தீர்த்து ஆற்றி கொள்கிறோம். கடவுள் நம்பிக்கை இருந்தால் இது போன்றதொரு துன்பியல் நிகழ்வுகளில் கடவுளை திட்டி ஆற்றி கொள்கிறோம். என்றாலும் அந்த சோகம் மனதை அகல மறுக்கிறது எனக்கே. என் நண்பரின் நிலை கண்டும் அவரின் குடும்பத்தாரின் நிலை கண்டும் கலங்கிதான் போய் இருக்கிறது என் மனம். அந்த நிகழ்வுகள் என்னை விட்டு செல்ல மறுக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் அந்த வீட்டில் இருந்த நேரங்கள் கண் முன் வந்து செல்கிறது. எதையும்
மறக்க முடியாமல் நானும் என் மனைவியும் போராடி கொண்டிருக்கிறோம்.

நெருடலாகவே இருந்த விடயங்கள்:
அம்மா நம்மை விட்டுட்டு எங்கேயும் போகல. நம்ம கூடவேதான் இருக்காங்க. நீ தானே பெரிய அண்ணன் பாப்பாவ நீ தான் இனிமே பாத்துக்கணும் என்று அந்த தந்தை கூறியவுடன் ஓடி சென்று தன் தங்கையுடன் விளையாடிய அந்த ஆறு வயது சிறுவன்.

ஒரு முறையேனும் அவர்களை மருத்துவமனையில் சென்று பார்க்காமல் விட்ட நான். சரி நன்றாக உள்ளார்களே என்று இருந்த என்னை நினைக்கும் போதெல்லாம் நெருடலாகவே உள்ளது. மன்னியுங்கள் அக்கா. மன்னியுங்கள் நண்பரே.

அக்கா நீங்கள் கூடவே இருந்து இந்த குடும்பத்துக்கு வழி காட்டுங்கள். நாங்களும் இருக்கிறோம். ச்சே இதான் வாழ்க்கை என்று நினைத்து பார்த்தால் ஒன்றுமே இல்லை. வெறுமைதான் மிஞ்சி இருக்கிறது. இருப்பினும் வாழ்ந்து தான் பார்க்க வேண்டும். கனமான இதயத்துடன் அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பி வந்து விட்டேன்.


- காவிரிக்கரையோன் MJV