Saturday, December 12, 2009

மரணம்...

மரணம்
கவலைகள் காணாமல் போகும் அவளின் உதட்டோர
புன்னைகை நிமிடங்கள், கண்ணீர் வற்ற செய்யுமே அவை இனி கிடைக்காது,

செல்லமாய் தலை குட்டி அவள் மகனுக்கு அளித்த
உணவு, உணர்வு தேக்கி இருக்குமே அவை இனி கிடைக்காது,

ஐந்து மாத மகவை மடி சாய்த்து அவள் பார்த்த
பார்வைகள், மகிழ்ச்சி நிறைத்து பார்க்குமே அவை இனி கிடைக்காது,

அம்மாவின் அன்பிற்கு போட்டியாய் அவளின் வார்த்தைகள்
அமைதி கொடுத்து சிரிக்குமே அவை இனி கிடைக்காது,

அக்கா அக்கா என்று அம்மாவிற்கு அடுத்தபடி அதிகமாய் அவன்
வாயிலிருந்து விழுந்து தெறித்த குரல்கள், அவை இனி கிடைக்காது,

சாமி காட்டி கும்பிட சொன்ன இடத்தில் நீயே சாமியாய் போன போது
வாழ்கையின் கைப்பிடி தூரிகைக்கு வலுக்கட்டாயமாக
உன் மரணம் கொடுத்து விட்டு போன நிறம் கறுப்பு...

சமையல்
காரக்குழம்பில் உப்பு கம்மியா இருக்குடீ,
வெண்டைக்காய் பொரியலில் காரமே இல்லை,
ரசத்துல புளி அதிகமா இருக்குப் பாருப்பா,
மனைவியின் சமையலை எப்போதும் விமர்சித்தவன்,
இன்று கிளிப் பொரியலுக்கும் வளையல் வறுவலுக்கும்
"ரொம்ப நல்லா இருக்கும்மா" என்று வாங்கிக்கொண்டு
சிரிக்கிறேன், எங்கள் ஒன்றரை வயது மகள் சமைக்கும்போது!!!

பட்டம்
தலைவனுக்கு பிறந்தநாள்,
சுவரொட்டிக்கும் பசைக்கும் அடகு கடை
பக்கம் சென்றன வீட்டுப்பாத்திரங்கள்,
தலைவனுக்கு மந்திரி பதவி,
ஊருக்கெல்லாம் இனிப்பு வழங்க வட்டி கடை பக்கம்
சென்றது இல்லாளின் தாலி,
நீ சுமக்க தவறிய சுமை அவள் சுமந்த தருணம்,
உன் இல்லாளிடம் நீ கேட்டது, "எவன் கிட்ட போயிட்டு
சம்பாதிச்சிட்டு வர",
உன் இல்லாளுக்கு நீ கொடுத்த பட்டம், "வேசி".

- காவிரிக்கரையோன் MJV