Sunday, January 31, 2010

காதலர்களுக்கு ஒரு கடிதம்...

காதல், இந்த ஒரு வார்த்தை இல்லை என்றால் இந்த உலகம் இயங்காது என்ற வரிக்கு சத்தியமாய் அடிமையாகிப் போன பல கோடி மனிதர்களில் நானும் ஒருவன். இப்பொழுதும் அடிமை தான், (அய்யா எனக்கு திருமணம் ஆகிடுச்சி என் காதலியோடு). எவ்வளவோ முறை பட்டிமன்றங்களில் தலைப்பாகி பல முறை மிகப் பெரிய சண்டைகளுக்கு கூட இந்த காதல் காரணமாகி இருப்பது நமக்கெல்லாம் தெரிந்த ஒரு விடயமே. இப்பொழுது என்ன, எப்போழுதும் புதியதாய் ஒரு விவாதத்தை எந்த ஒரு சலனமுமின்றி தொடங்கி வைக்க கூடிய சாமர்த்தியம் இந்த காதலுக்கு உண்டு.

இப்படி தான் கோடு போட்டு காதல் செய்ய வேண்டும் என்றோ, இப்படிப்பட்ட காதல் தான் வெற்றி பெறும் என்றோ ஆணித்தரமாக சொல்ல முடியாத ஒரு திரிசங்கு நிலையில் தானே காதல் எப்போதும் இருந்து வந்துள்ளது. எங்களைப்பொருத்த (வீட்டம்மாவையும் சேர்த்துதான்)வரை, எப்படியாவது அனைவரின் சம்மதம் வாங்கிதான் திருமணம் முடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் இருந்தது. அதன்படியே செய்தோம். இன்னொரு நண்பரால் அப்படி செய்ய முடியவில்லை, பதிவுத் திருமணத்தில்தான் சேர்ந்தார்கள். ஆனால் அவர்கள் காதலும், அவர்களது அன்பும் வெற்றி பெற்றது. இப்பொழுது இரு வீட்டாரும் சண்டையின்றி அன்பாக வாழ்ந்து வருகின்றனர்!

சரி, காதலர்கள் மணமாகிப் பின்னர் பெற்றோருடன் சேர்ந்த பொழுதுகளில், பெரிய சாதனையை செய்ததாய், காதலர்களை தான் பாரட்டுகிறோம். உண்மையில் அது தான் நடக்கிறதா? இல்லை என்கிற பொழுதுகளில், கண்டிப்பாய் கல்லடிக்கு தயாராய் தான் இந்த இடுகையை எழுதுகிறேன்! அவ்வளவு வருடங்கள் உயிரும் உரிமையுமாய் வளர்த்து விட்டு, சட்டென்று பிரிந்து போகும்படியான ஒரு நிலைமைக்கு தள்ளப்படும் பொழுது பரவச நிலையிலா குதிப்பார்கள்? பிரிந்து போகும் நிலை என்பது, கண்டிப்பாய் எல்லாத் திருமண நிகழ்வுகளிலும் உண்டு. இப்பொழுதெல்லாம் மகள் இருந்தால் மட்டுமல்ல, மகன் இருந்தால் கூட இந்த நிலையில் தான் இருக்கின்றது.

மகன் இருந்தால் இன்னும் முன்னரே பிரிவு என்பது புலப்பட ஆரம்பித்து விடுகிறது. சரி பிரிவு என்று நான் சொன்னது, வீட்டில் திருமணம் ஆகாமல் இருக்கும் போது, உடம்புக்கு முடியாம இருக்கு, "அவனையோ, அவளையோ போய்ப் பார்த்தால் எனக்கு உடம்பு சரி ஆகி விடும், இந்த வீட்டுக்குள்ளையே இருந்தா என்ன பண்ண முடியும்?", "ஏன் எல்லாரும் அவனை/அவளை எதிரியாகவே பார்க்கிறீர்கள்?" போன்ற ஒரு தரப்பு நியாயங்கள் தான் பெற்றோரை கொதி நிலைக்கு கொண்டு செல்கிறது. கண்டிப்பாக அவர்களின், ஆதரவற்ற நிலைதான் பல சமயம் காதலுக்கு எதிர்ப்பாய் கிளம்புகிறது.

சராசரியா ஓட்டுப்போடுகிற வயதை காதலிக்கும் வயதாய் எடுத்து கொள்வோம். சரி இந்த பல்கலைக்கழகத்தில் தான் இந்த வயது பிரச்சனைகள் அதிகமாய் உள்ளதே, அது பற்றிப் பேசப் போனால் அது வேறு ஒரு பகிர்வாக போய் விடும். அதனால் ஒரு கணக்கிற்காக, 19 ஆண்டுகளாய் பார்த்து பார்த்து செய்தவர்களை சட்டென்று உதறிப்போவதும் ஒரு வித துரோகமாய்தான் எனக்கு படுகிறது. அவங்க ஒத்துக்கறாங்களோ இல்லையோ அவர்களை நோகடிக்க வேண்டாமே. கண்டிப்பாக 100 விழுக்காடு அப்படி இருக்கவும் முடியுமா என்றால், இருக்க முடியாது என்பது தான் விடையாக வரும் என்பதையும் மனதில் ஊசலாட விட்டு விட்டு தான் இந்த இடுகையை எழுத ஆரம்பித்தேன்.

ஆனால் 100 விழுக்காடு காதலனையோ/காதலியையோ நினைத்து உருகிக் கொண்டிருக்கும் பெருவெளித் தருணங்களின் சில விழுக்காடுகள் பெற்றோரையும் யோசித்துப் பார்க்கலாம். "என்னச் செல்லம், ஏன் தான் இந்த பாரன்ட்ஸெல்லாம் இப்படி இருக்காங்களோ?" என்ற குறுஞ்செய்தி பரிமாறிக் கொள்வதை விட்டு, "என்னம்மா சாப்டீங்களா? என்னப்பா சாப்டீங்களா?" என்கிற பொழுதுகள், அதுவே உங்கள் காதலுக்கு நல் வழியாய் காட்டிக் கொடுக்கும். எந்த ஒரு தருணத்திலும், உங்கள் பெற்றோரை விட்டுக் கொடுக்காதீர்கள். அவர்கள் என்றைக்குமே உங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுப்பதில்லை.

உங்களுக்கு நம்பிக்கை கொடுத்தவர்கள், உங்களில் நம்பிக்கைத் தேட இருப்பவர்கள், அவர்களை கண்டிப்பாக கைவிடக் கூடாது. ஒவ்வொரு முறை நீங்கள் உங்கள் பெற்றோரின் மீது எரிந்து விழும்போது, உங்கள் மீதே உங்களுக்கான நம்பிக்கையையும், உங்கள் பெற்றோரின் நெருக்கத்தையும் நீங்கள் இழந்து கொண்டுதான் இருக்கிறீர்கள். இதைப் போன்ற தருணங்களை தள்ளி வையுங்கள். சத்தியமா இது அக்மார்க் சுத்தமான அறிவுரை இல்லை. நிறைய முறைப் பார்த்து சொந்தமாக அனுபவப்பட்டும்தான் இந்த இடுகை நிறைவுரையை நோக்கிப் பயணிக்கிறது.

ஆகக்கூடி முடிந்த வரை, அவர்களின் ஆசியுடன் மண வாழ்வில் காலடி எடுத்து வையுங்கள். எப்பொழுதுமே 100 விழுக்காடு கச்சிதமாய் எந்த விடயங்களிலும் அப்படி நிறைவேறும் என்று சொல்லக்கூட முடியாதுதான். நிறைவேற்றப் படதான் வேண்டும். அடுத்த தலைமுறை என்பதால் முந்தைய தலைமுறையை மொத்தமாக தள்ளி சென்று விட முடியாது. அப்படியெல்லாம் யோசித்துப் பார்த்தால் இந்த இடுகை கூட தமிழில் இருந்திருக்காது. மறைந்து போயிருக்கும். இது காதலர்கள் எல்லோருக்குமான மடல். வைத்துக் கொள்வதும் நினைவிலிருந்து கிழித்தெறிவதும் உங்கள் கையில் தான் இருக்கிறது!!!

- காவிரிக்கரையோன் MJV

Saturday, January 30, 2010

புனைப்பெயர்...

இயற்கைதானே
கொட்டும் மழைக்கு
குடைகள் இயற்கை என்றால்,
இருட்டும் மாலைக்கு நிலா
வெளிச்சம் இயற்கை என்றால்,
நம் காதலுக்கு உன் முதல் சொல்,
"செருப்பு பிஞ்சிடும்"
என்பதும் இயற்கை தானே!!!

மரப்பலகை
மரப்பலகையை மிதித்த
குழந்தையை தொட்டு கும்பிடச்
சொன்னதும் மீண்டும் மீண்டும்
மிதித்து பார்த்துத் தொட்டு
கும்பிட்டு கொண்டே இருந்தது
குழந்தை!

உறுதிமொழி
பணப் பற்றாக்குறைக்கு
தான் உபயோகிப்பேன் உறுதிமொழி
எடுத்த கடன் அட்டை அனைத்தையும்
குழிப்பறித்த தருவாய்,
செய்வதறியாமல் இரண்டாவது
கடன் அட்டைக்கு விண்ணப்பப்படிவம்
பூர்த்தி செய்தபடி நான்!

ஒற்றை மேசை
ஒரே ஏவுகணை இரண்டு
இடங்களை அழித்த நிகழ்வைப் பற்றிக்
கேட்டிருக்கிறீர்களா?
நடந்ததே நேற்று எனக்கும் என்
நண்பனுக்கும்,
மாறிப் போன கடிதங்களில் மாறி
போன பெயர்கள்,
பழியை ஏற்ற படி நட்சத்திர
வானத்திற்கு சாட்சியாய்
எங்கள் அறையின் ஒற்றை மேசை!

நிலா
கிணற்றுத் தவளைகளுக்கு
தெரிந்திருக்குமா கிணற்றுடன்
கண்ணாம்பூச்சி ஆடும் நிலா
கிணற்று நிலா இல்லை என்று?

புனைப்பெயர்
புதிதாய் காதலிக்க தொடங்கிய
எனக்கு கவிதை எழுதிப் பார்த்தால்
என்ன என்ற வினா எழுந்தது,

தீவிரமாய் கவிதைக்கு வார்த்தைகளையும்
பாடுபொருளையும் தேடிகொண்டிருந்தேன்
கிடைக்கவே இல்லை,

என்னடா இது காதலும் கவிதையும்
இரட்டைப் பிறவிகள் இல்லையா,
இந்நேரம் 30, 40 தாள்கள் நிறைந்திருக்குமே,

மனக்கிடங்கு ஓர் ஓரமாய் புனைப்பெயர்
தேடிக் கொண்டிருக்க கவிதை எங்கிருந்து
வரும்?
"ஓட்டை வாலியில் தண்ணீர் பிடிக்க
ஓராயிரம் பேர் வரிசையில நின்னாங்களாம்!"

- காவிரிக்கரையோன் MJV

Tuesday, January 26, 2010

எம்.ஜே யின் மிச்ச சொச்சங்கள்...

மனக்கிடங்கின் ஆழ் துளை தேக்கங்களில் போட்டு அடைக்கப்பட்ட எண்ணக்குவியல்களில் சில விடயங்கள் நீங்காமல் நிலைத்து நிற்கும். அப்படி இருக்கின்ற மிச்ச சொச்சங்களை இனி வரும் நாட்களில் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். அதுதான் என் எண்ணக்குவியல்களின் மிச்ச சொச்சங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நேற்று ஒரு முக்கியமான விடயமாக ஓசூர் வரை செல்ல வேண்டியிருந்தது. 4 நண்பர்கள் சூழ என் காரில் சென்றிருந்தோம். வழியில் எங்கும் என்னுடைய ஒரு நண்பன் பசிக்கிறது. நிறுத்துங்கப்பா வண்டிய என்று அறைகூவல் விடுத்தபடியே வந்து கொண்டிருந்தான். நிறுத்தாமல் நாங்களும் சென்று எங்கள் வேலையை முடித்து கொண்டு திரும்பினோம். எப்படியும் பெங்களூருக்கு சென்று உணவருந்த நேரம் இல்லாமையால், அங்கேயே உணவருந்தலாம் என்ற முடிவுக்கு வந்தோம். உள்ளே சென்று அமர்ந்தவுடன் என் இன்னொரு நண்பர் அந்த சர்வரிடம் வேகமாக "புரோட்டா இருக்காப்பா?" என்றார், உடனே அந்த சர்வர் "இருக்கு சார்" என்றார். அதற்கு இவர் "டிபன் என்னப்பா இருக்கு உங்ககிட்ட" என்றவுடன் அனைவரும் சட்டென்று சிரிக்க, சர்வரும் சேர்ந்து கொண்டார். அய்யா புரோட்டாவும் டிபனுக்கு சாப்பிடுகிற ஐடம் தான் என்று சொல்லி சாப்பிட ஆரம்பித்தோம். நானும் இதில் சேர்ந்து கொண்டு, "சர்வர் ஆம்லேட் இருக்கா?" என்றேன். சர்வர் "இருக்கு சார்" என்றார். "அப்போ ஒரு ஃபுல் பாயிலும், ஒரு ஹாஃப் பாயிலும் கொண்டு வாங்க" என்றேன். சர்வர் இந்த முறை சிரிக்க வில்லை. என் நண்பர் மெதுவாக காதருகில் வந்து, "பின்னி பெடல் எடுக்கிறதுக்கு முன்னாடி கிளம்பிடறது நல்லது" என்றவுடன் வேகமாய் சாப்பிட்டு முடித்து கிளம்பினோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நேற்று காலை அலுவலகம் செல்லும் வழியில் ஒரு விடயத்தை பார்த்தேன். 2 கைகளையும் ஸ்டியரிங்கில் வைத்து ஓட்டினாலே இப்பொழுதெல்லாம் அடி பலமாக விழுகிறது காரில் செல்லும் பொழுதெல்லாம். அதனால் அலைபேசியைக் கூட ஒலிபெருக்கியில் போட்டுதான் பேசுகிறேன். அதுவும் முக்கியம் என்றால் தான். ஒரு அம்மா தன் நாய் குட்டியை மடியில் வைத்துக் கொண்டு கார் ஓட்டி சென்றார்கள். வந்தார்கள் வென்றார்கள் மாதிரி சரித்திரம் ஆகிடாதம்மா என்று நினைத்துக் கொண்டே இருக்கையில் எங்கள் வழிக்கு, வழி கொடுத்தார் போக்குவரத்து காவலர். அந்த நாய் மேலே எவ்வளவு முடி (சிங்காரவேலன் படத்தில் வரும் "அண்ணி சட்டை மேலே எவ்ளோ பட்டன்ஸ்" என்கிற மாதிரி படிக்க!!!)
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அகநாழிகை பதிப்பகத்தின் வெளியீடுகளான நர்சிமின் "அய்யனார் கம்மா", பா.ராவின் "கருவேல நிழல்", விநாயக முருகனின் "கோவில் மிருகம்", லாவண்யாவின் "நீர்க்கோல வாழ்வை நச்சி", டி.கே.பி.காந்தியின் "கூர்தலறம்" ஆகிய புத்தகங்களை படித்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொருவரும் வாழ்க்கையின் நுணுக்கங்களை ஒவ்வொரு விதமாக எடுத்து சொல்லி இருக்கின்றனர். அருமையான படைப்புகள். வாசிக்க வாசிக்க யோசிக்க யோசிக்க! அந்த படைப்புகளை பற்றிய விடயங்கள் கூடிய விரைவில் தனி இடுகையாய் வரும் என்பதை இந்த மேடையில் ஆணித் தரமாக கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன்!!! அகநாழிகை பொன்.வாசுதேவன் சிறப்பான இதழையும், வளர்ந்து வரும் எழுத்தளர்களையும் நமக்கு கரம் பற்றி அறிமுகப்படுத்துகிறார். அற்புதமான விடயம்!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
- காவிரிக்கரையோன் MJV

தீவுகள்...

ஊர்களும் நாடுகளும் பல மாதிரி விட்டுச்
சென்ற சுவடுகளில் தூசி தட்ட நாங்களும்
வந்தமர்ந்தோம்,

வந்தவாசி, ஈரோடு, மதுரை, ஆத்தூர்
கோவில்பட்டி, கும்பகோணம், தஞ்சாவூர்,
திருச்சி, ராஜஸ்தான், சிக்கிம்,பெல்ஜியம், அந்தமான்,

எல்லா சாலைகளையும் எங்கள் வசம்
திருப்பி உலக சமாதானத்தின் ஒற்றை
அடிக்கல் நாங்கள் என்றுதான் மார் தட்டினோம்,

அயர்ந்திருந்த நேரத்தில் சட்டென்று கிளம்பியது
ஒதுக்குப்புறமாய் அதுவரை ஒதுங்கியிருந்த
பிரிவினைகள் ஒய்யாரமாய்,

கண்களில் முட்களின் தாக்கம் ஒரு புற
பார்வையில் மட்டும் என்றாகிப் போய்
வேகமாய் நகர மறுத்த நாட்கள்,

ஊர்கள் மாநிலங்கள் நாடுகள் அனைத்தும்
தனி தனி தீவுகளென மாறிப் போய்
அலை அலையாய் நகர்ந்த வாழ்க்கை,

தீவுகள் மூழ்கினால் அதில் என்ன முத்தா
எடுக்க முடியும்? தீவுகள் தனை சேர்க்க
என்ன அந்நியனா அவதரிக்க முடியும்?

நான்கு ஆண்டுகள் முடியும் தொனியில்
தீவுகளை சட்டென்று இணைத்து போனது
கல்லூரி இறுதி ஆண்டு விழா!


- காவிரிக்கரையோன் MJV

Saturday, January 23, 2010

சவரத்தழும்பு...

கவிதை
எழுத்துக்களின் ஏகாதிபத்தியத்தில்
வார்த்தைகளின் அடிமைத்தனம்
அழிக்க தெறிக்கின்ற
ஒவ்வொரு புரட்சிக்கும்
பெயர்தான் கவிதையா? ....

எம்மக்கள்
நாரேற்றப்பட்ட பூக்கள்
எட்டுக்கால் பூச்சியின் வலை
வீழ்ந்த சிறு பூச்சிகள்
வீடு திரும்ப தவித்த எம்மக்கள்
அனைவரின் வாழ்க்கையிலும்
மிச்ச சொச்சங்கள் தான் மொத்தமும்...

ஓடம்
ஓடமேறிய வண்டிகளையும்
வண்டியேறிய ஓடங்களையும்
பழமொழிகள் கேட்டு
சலித்து விட்டன,
ஓடங்கள் அனைத்தும் சலனமின்றி
ஆற்றின் விதவைத்தனத்தை நோக்கியபடி....

ஓநாய்
ஆறில் சனி எட்டில் குரு
ஏழில் செவ்வாய் உச்சத்தில்
புதன், வேகமாய் பேசினார்
அவர், "இவங்கல்லாம் யாருப்பா?",
"அப்படியெல்லாம் கேக்கக் கூடாது குட்டி",
கண்களால் விடை திருத்தி
பவ்யமாய் தலை ஆட்ட தொடங்கினேன்
மீண்டும் ஓநாய், மீண்டும் ஆடு...

குழந்தை
மைனா அகவியும் ஆடுகள் உறுமியும்
புலிகள் கனைத்தும் சிங்கங்கள் செருமியும்
காட்டுகிறதா உங்களைப் பார்த்து?
அது தான் இரண்டாம் குழந்தை
பருவத்துக்கான தொடக்கம்!

சவரத்தழும்பு
ஒவ்வொரு முறை வேலைக்கான
நேர்காணலின் போதும்
என்னை வில்லனாகவும், விபரீதமாகவும்
சித்தரித்து வேடிக்கை பார்க்கிறது
சவரத்தழும்பு.

- காவிரிக்கரையோன் MJV

Tuesday, January 19, 2010

அவதார் என்கிற சங்கமம்!என்னதான் தொழில் நுட்பம் வளர்ந்திருந்தாலும் மனிதத்திற்கும் காதலுக்கும், திரைப்படத்திலும் சரி வாழ்க்கையிலும் சரி தனி இடம் உண்டு என்பதற்கு சாட்சியாக இந்த அவதார் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பக் காட்சிகள் இந்த படத்தில் வெகுவாக பிரபலப்படுத்தப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே கூர்ந்து கவனிக்கப்படுகின்ற காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. கலகலப்பிரியா என்ற பதிவர் உணர்ச்சிப்பூர்வமாக தன் இடுகையில் கடைசி வரியில் குறிப்பிட்டு இருப்பது முற்றிலும் உண்மையே...


ஓர் இனம் அழிவதை சகிக்க முடியாத கதாநாயகன் ஜேக்ஸ் சாலி, மனிதனாக இருந்தாலும், நவிகளுக்கு தோள் கொடுத்து தூக்கி நிறுத்துவதாக காட்டப் பட்டதற்கு இரண்டே இரண்டு காரணங்களை தான் என்னால் உணர முடிகிறது. ஒன்று அந்த நவி இன இளவரசியின் மீதுள்ள காதல், மற்றும் ஓர் இனம் தேவை இல்லாமல் குறி வைத்து தாக்கி அழிக்கப்படுகிறது என்பதற்கான மனிதமும்தான் இந்த படத்தின் முதுகு எலும்புகள். தங்களின் சுய நலத்திற்காக பண்டோரா கிரகத்தை அழித்து அதில் இருக்கின்ற கணிம வளத்தை சுருட்டி கொள்ள நினைக்கும் மனித இனத்திற்கு தோள் கொடுப்பதைக் காட்டிலும் தங்கள் இனத்தைக் காப்பாற்றிக் கொள்ள போராடும் ஓர் இனத்திற்கு தோள் கொடுப்பது சால சிறந்தது என்று கதாநாயகன் அவதாரம் எடுப்பதுதான் இந்த அவதாரின் கதை.


முதலில் ஒரு 15 நிமிடங்களுக்கு எந்த உலகத்தில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் இருக்கும்படிக்கு சிறு குழப்பம் இருக்கின்றது. அதிலிருந்து படத்தின் இறுதி வரை பிரம்மாண்டங்கள்தான் வியக்க வைக்கிறது. மிதக்கும் மலைகளாக இருந்தாலும் சரி, அந்த படத்தின் காட்டபடும் இடங்களாக இருந்தாலும் சரி, கதாநாயகன் அந்த கிரகத்தில் தனியாக அலையும் முதல் இரவாக இருந்தாலும் சரி அட பிரிச்சிருக்காங்கலே என்ற உணர்வுடன் தான் இந்தப் படத்தில் திரைப்படம் நகர்கிறது. இவைலா என்ற அந்த புனிதமான வெண்ணிற ஜந்துக்கள் (அது என்ன என்பது சரியாக என் சிற்றரிவுக்கு புலப்படவில்லை!) முதன் முதலில் ஜேக்ஸின் மீது வந்து அமர்வதை அறிந்த நாயகி தன் இன மக்களிடம் இவன் நம்மில் ஒருவன்தான் என்று வாதாடுகிறார்.


ஒரு மனிதனின் சுய மரியாதையை காலி செய்யும் விதமாக வேலைகள் நடந்தால் இரண்டு விதமாக மனிதனின் எண்ண ஓட்டங்கள் இருக்கும். ஒன்று அதை எதிர்த்து முயற்சியில் செய்து காட்டுவது இல்லை என்றால் அதையே நினைத்து வெதும்பி கொண்டிருப்பது. இதில் முதல் ரகம் இந்த கதாநாயகன். நம் இனத்தில் ஒருவனாக இவனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நவி கிரகத்தின் சிற்றரசன் சொல்லும்போது, செய்வேன் என்று வீராவேசமாக எழுந்தாலும் பின்னர் பல இன்னல்கலைக் கடந்து சாகசம் புரிகிறார்.


அவர்கள் கிரகத்தின் குதிரைகளை ஓட்டும் பொழுதும் சரி, அவர்களின் பறவையை தேர்ந்தெடுக்கும் பொழுதும் சரி, அவர் வெகுவாக தன்னம்பிக்கையை இழக்க செய்யும் நிகழ்வுகள் நடந்தாலும் அதையும் தாண்டி சாதிக்கிறார். அவர்கள் கிரகத்தில் எதை செய்ய வேண்டும் என்றாலும், உணர்வுகள் அடிப்படையில் தான் செய்தாக வேண்டும். தங்களுடைய ஜடையில் இருக்கும் ரோமங்களையும் மற்ற ஜந்துக்களின் ரோமங்களையும் இணைத்து அதை செயல் பட வைப்பது நமக்கெல்லாம் நல்ல படிப்பினையை தருகின்றது. எந்த ஒரு விடயத்தையும் உணர்வு ரீதியாக புரிந்து கொண்டால் நிச்சயம் நன்மை விளையும் என்பது இங்கே தெளிவாக விளக்கப்படுகிறது.


தன் தம்பிக்கு பதிலாக இந்த பண்டோரா கிரகத்திற்கு வந்து சேரும் கதாநாயகனுக்கு தரப்படும் வாக்குறுதி, கால்கள் செயல் இழந்த அவருக்கு, கால்கள் பெற்றுத் தரும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்பதே. இந்த படத்தில் வரும் இராணுவ அதிகாரி மிகவும் கண்டிப்பாகவும் இரக்கமற்றவராகவும் சித்தரிக்கப் பட்டிருக்கிறார். அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற முறையில் அவர் செம்மையாக நடித்துள்ளார் என்றே சொல்லியாக வேண்டும். அந்த கிரகத்தில் மனிதர்களால் சுவாசிக்க இயலாது. ஒரு முறை கதாநாயகன், மற்றும் அந்த படத்தில் இந்த ப்ராஜெக்டிற்கு தலைமை தாங்கும் விஞ்ஞானி மற்றும் இவர்களோடு ஒத்தக் கருத்து உடையவர்கள் தப்பித்து செல்லும் காட்சியில், அந்த ஆக்ஸிஜென் மாஸ்க்கை கூட மாட்டாமல் அந்த இராணுவ அதிகாரி வெளியே வந்து இவர்களைத் தாக்குவது அவரின் கதப்பாத்திரத்தின் அழுத்ததை எடுத்து சொல்லும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.


படத்தில் சின்ன சின்ன கதாப்பாத்திரத்தில் வருகின்றவர்கள் கூட செம்மையாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அந்த பறவைகளை அடக்கி ஆளும் காட்சிகளைப் பார்க்கையில் டிராகன் ரைடர் என்ற படத்தின் சாயல் சிறிதாக வந்து செல்கிறது. அவ்வளவு சிரமப்பட்டு படத்திற்கு டிக்கெட்டுகள் எடுத்து சென்றது வீண் போக வில்லை என்பது நன்றாக புலப்படுகிறது. படத்திற்கு டிக்கெட் 150 ரூபாய். அந்த 3டி கண்ணாடியை திருப்பிக் கொடுக்காமல் போனாலோ அல்லது உடைத்து விட்டாலோ 300 ரூபாய் அபராதம் என்பதை நல்ல வேளை முன்பே பார்த்து விட்டோம்! கண்டிப்பாக இந்த படத்தை 3டி உள்ள திரை அரங்குகளில் மட்டுமே சென்று பாருங்கள். எல்லா திரை அரங்குகளும் வேக வேகமாக இந்த படத்திற்காக 3டி முறையில் படம் பார்க்கும் தொழில் நுட்பத்தை வாங்குகிறார்கள் என்பது மட்டும் உண்மை:-)


10 அடி உயரம் கொண்டவர்கள் நவிக்கள் என்பது மனிதர்களும் நவிக்களையும் ஒரு சேரக் காட்டும் காட்சிகளில் தான் புலப்படுகிறது. அந்த போர்க் காட்சிகளில் அதிகமான பிரம்மாண்டம். முதல் போரில் போட்டியே இல்லாமல் தோற்றுப் போவதும் பின்னர், 5 தலைமுறைக்கு முன்னர் நவிக்களின் மூதாதையரில் சிலர் மட்டுமே பறந்த அந்த ராட்சதப் பறவையில் பரந்து வந்து கதாநாயகன் தானும் ஒரு நவிதான் என்று நிரூபித்தப் பிறகு அனைவரும் ஒன்று கூடி நடத்தும் இரண்டாவது போர் வியப்பில் ஆழ்த்துகிறது. மனிதர்கள் வரும் படைகளுக்கு மேலே இருந்து தாக்கி அவர்களை அழிப்பது வெகுவாக கவர்கிறது. அந்த காட்டில் இருக்கும் மிருகங்கள் கூட சரியான நேரத்தில் வந்து நவிக்களுக்கு உதவி செய்வது தத்ரூபமாக சொல்லப் பட்ட காட்சிகள்.


இதுவரை நம் நாட்டில் மட்டும் 100 கோடிகளைத் தாண்டி வசூல் செய்திருக்கிறது இந்தத் திரைப்படம். வெளியிட்ட முதல் ஒரு வாரத்திலேயே படத்தின் பாதி செலவை இந்த படம் அள்ளிவிட்டதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. காமரூன் வருடங்கள் பலக் காத்திருந்தாலும் ஒரு மிகப்பெரிய காவியத்தைதான் உருவாக்கி இருக்கிறார். மீண்டும் ஒரு முறை பார்க்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறேன். இந்த படத்தை மட்டும் மீண்டும் நான் சொன்னது போல் 3டி அமைப்பு இருக்கின்ற அரங்குகளில் சென்று பாருங்கள். அந்த அனுபவம் மிக நன்றாக இருக்கும்.


படத்தைப் பார்த்து விட்டு திரும்பும் போது கலகலப்பிரியாவின் எண்ணங்களின் பிரதிபலிப்பு கண்டிப்பாவகே இருந்தது. வெகு விரைவில் நம் தமிழ் இனத்திற்கும் ஒரு விடிவு காலம் இருக்கிறது என்று நினைத்து கொண்டேதான் வெளியில் வந்தோம்.


அவதார் - அசாத்திய அலங்காரம் (மனிதம், காதல் மற்றும் தொழில் நுட்பத்திற்கு!!!)

Thursday, January 14, 2010

குறுங்கவிதைகள்!

மு.கு - கீழ்வரும் கவிதைகளில் நிறம் மாறின எழுத்துக்கள் தான் அந்த அந்த படைப்பின் தலைப்பு!!!

தலை திரும்பல், கண்களின் பயண வழி
மாற்றம், சட்டென்ற வேக குறைப்பு,
தெரு முனையில் திரும்பும் முகம்
அவனேதான் என் கல்லூரித் தோழன்,
சொன்னால் கட்டளை கேட்டு தெரு முனை
செல்லவா போகிறது கால்கள்?
இல்லை அவனில்லை என்ற கட்டளைக்கு
பல் இளிக்கும் மனதை எதை கொண்டு சாத்துவது!

மகிழ்ச்சி துக்கம் இரண்டும் சமம்
எனக்கு, உனக்கும் அப்படியா?
மகிழ்ச்சியில் அன்று கண்ணாடிக் கிண்ணத்தில்
நிரம்பி வழிந்த திரவத்திடம் கேட்டான்
(கேட்டேன்) நண்பன் (நான்)!

குளிர்சாதன அறையில் நடந்தது
அந்த வருட கொள்கை விளக்க கூட்டம்,
"அற்புதமான கொள்கைகள்",
"இந்த வருடம் இனிதாக ஆரம்பம்",
வேகமாக வெளியில் வந்த நான்,
"கொஞ்சம் கோணலாதான் இருக்கு"
கூட்டத்தின் பொழுது வரைந்த பெயர் அறியா
உருவத்தின் மூக்கைப் பார்த்தபடி!!!

எப்படியும் இந்த முறை பறக்க
முடியும், காகத்தைப்
பார்த்து பார்த்து குதித்தது குழந்தை,
ஒவ்வொரு முறையும் குழந்தையை
தோற்கடித்த புவி ஈர்ப்பு விசையை,
மீண்டும் மீண்டும் தோற்கடித்து
கொண்டிருந்தன காகத்தின் சிறகசைவுகள்!

மனிதர்களில் தான் காதல் கொலையாளிகள்
உண்டு என்றால், புல்லின் மீதான
பனித்துளியின் காதலை கொல்லும்
சூரியனுக்கும் அந்த பட்டியலில் இடம் உண்டா?

சாவி வைத்த சாளரக் கதவில் வறுமையும் காக்கையும்...

சாவித்துவாரம்
சாவி துவாரத்தில் சாவியின்
தீண்டல் வெளிச்சம்,
அதில் விழி மடல்களின்
தீண்டல் விரசம்....

சாளரம்
சாளரத்தில் காற்று வர
வேலைப்பாடுகள் வைத்த கட்டுமான
நிபுணருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை,
அதற்கு அப்பால் இருந்த
பெண்ணின் அந்தரங்கம்
விலைபோகப் போகிறதென்று...


கதவு
கதவைத் திறங்கள்
காற்று வரும் என்கிறார்கள்,
தட்டிப் பாருங்கள்
கதவுத் திறக்கும் என்கிறார்கள்,
புரிந்தல் தொலைந்து போய்,
வெடித்து சிதறிய மிச்சத்தில்
கதவு கிடைக்கிறதா என்று
தேடிக் கொண்டிருந்தது குழந்தை...


வறுமை
கொல்லைபுறத்தில் காய்த்து குலுங்கும்
முருங்கை நிழலுக்கும்,
கால் தடங்கள் பதிய ஏங்கும்
நீண்ட தாழ்வாரத்திற்கும்
தெரியாது வறுமைக்கு விலை
போயின வீட்டின் பத்திரங்கள் என்று...


காக்கை
அசுத்தம் செய்தாலும் காந்தியின்
சிலை வழியேனும் பயணிக்கிறது
ஐந்தறிவு காக்கைகள்!

- காவிரிக்கரையோன் MJV

பொங்கல் இனிக்கும் பொங்கல்!

"எனக்கு வெண் பொங்கல் வேண்டாம்" என்று சொல்லியே தித்திக்கும் பொங்கல் திருநாளை ஆரம்பிக்கும் நாட்கள் இன்னும் பசுமையாய் மணக்கின்றது. சக்கரைப்பொங்கலை மட்டுமே நாட்கள் முழுக்க உண்டு வாழ்ந்த காலங்கள். கரும்பிற்கு நடக்கும் போட்டிகள். இரண்டு வாரங்களுக்கு முன்பே கரும்பை வாங்கி வைத்து விட்டு அதை எடுக்கவா? இல்லை பதுக்கி வைக்கவா என்று சுற்றித் திரிந்த பருவங்கள்.

சில முறை கிராமத்து தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்று கிராமத்து பொங்கலை சுவாசித்து, அடடா என்ன திருவிழா அது!!! என்னை கேட்டால் நகரத்தில் செய்யும் (கொண்டாடும்) பொங்கலெல்லாம் சுத்த மண்ணுதான்..... மண் வாசனையோட தான் பொங்கல் வைக்கணும் அதை கிராமத்தில் தான் வைக்க வேண்டும். அது தானே நாம் உழவும் உழவு சார் தொழில் செய்யும் மக்களுக்கான மரியாதை. அதெல்லாம் முடியாமல் பற்பல காரணங்களினால் இங்கே உழன்று கொண்டிருக்கிறோம்.

நன்றாக நினைவில் உள்ளது. தாத்தா வீட்டில் (ஓட்டு வீடு) முற்றத்தில் நன்றாக வானம் பார்த்திருக்கும் அந்த இடத்தில் எப்போதுமே எடுத்து விட்டு பொங்கல் வைப்பதற்கு எதுவாக பத்து கற்கள் இருக்கும். பொங்கல் என்றால் போதும் அந்த கற்களை அகற்றி விட்டு அங்கே பொங்கல் வைப்போம். சூரியனுக்கு எங்கள் வீட்டு பொங்கல் நேரடி தரிசனம்!!! இங்க அப்படி பொங்கல் இட்டால் ஒன்று வீடு சொந்தக்காரன் உதைப்பான் இல்லை சொந்த சிறையாக (அப்பார்ட்மென்ட்) இருந்தால் அதன் தலைவர் வந்து அறிவுரை கூற ஆரம்பித்து விடுவார்.

சரி விடுங்கள் பொங்கல் எங்கே யார் யார் எப்படி இருந்தாலும் நல்ல படியாக கொண்டாடுங்கள். இனிக்க இனிக்க சக்கரைப் பொங்கலை உண்டு மகிழுங்கள். தெவிட்டாமல் இருக்க எப்படியாவது ஒரு பத்து வகை காய் கறிகளுடன் விருந்து சாப்பிடுங்கள். முடியாதவர்களுக்கு நாம் உண்பதில் பகிர்ந்து கொள்ளலாம். கண்டிப்பாக வெண் பொங்கல் சாப்பிடுங்கள். நன்றாக தான் இருக்கிறது.

சென்ற வருடத்தில் இருந்து பொங்கல் நன்னாளில் தான் தமிழர் புத்தாண்டு என்றும் அறிவிப்பு வந்து விட்டது. அனைவருக்கும் இனியத் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். என்ன செய்தாலும் எங்கு சென்றாலும் தமிழோடு நெருக்கம் கொண்டிருப்பது எப்போதுமே ஒரு சுகம் தான். அதையும் நிரம்ப செய்து பழகுவோம்.

நம்மைத் தாண்டி வரும் தலைமுறைக்கு பொங்கல் படங்களை அன்றி பொங்கல் திருவிழாவையும் காட்ட முனைவோம். பண்டிகைகளும் போற்றப் பட வேண்டிய பொக்கிஷங்கள் தான். போற்றி பாதுகாப்போம். மீண்டும் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

Sunday, January 10, 2010

சம்பளமும் நற்கொலையும்!

சம்பளம்
படங்கள் அதிகம் பார்க்கும் கணவன்
எப்பொழுதும் மனைவிடம் சொல்வது
"இரவில் வேசியாகவும், பகலில்
வாசுகியாகவும் இருக்கவேண்டும்",
கணவனின் மனதை அதிகம் படித்த
மனைவி வெதும்பி என்றோ
ஒரு நாள் கேட்டது,
"இரவில் என்ன சம்பளம்?"

நற்கொலை
நாட்காட்டியின் தேதிகள் நற்கொலை செய்யப்படும்
பழக்கத்தில் தான்
புது வருடம் பிறக்கின்றதோ ?
சிந்தனையில் புது நாட்காட்டியை
சுவருக்கு காட்டிய தருணம்,
"அப்பா 1 ஆம் தேதிய மட்டும் கிழிக்க வேண்டாம்பா"
சொல்லி காற்றில் மறைந்தாள் ,
அந்த வருடம் புத்தாண்டு
ஞாயிற்று கிழமையில் பிறந்திருந்தது!

- காவிரிக்கரையோன் MJV

Saturday, January 9, 2010

படம் - 9 விக்கெட்டு மாட்ச் பாகம் - 2. கதை/திரைக்கதை/இயக்கம்/வசனம்/தயாரிப்பு - கிரஹாம் ஆனியன்ஸ்! ஆண்டு - 2009/2010

இவர் சச்சின் போன்று பல களங்கள் கண்டதில்லை. ஷேன் வார்னே போன்று பல சாகசங்கள் புரியவில்லை. வேகப் பந்து வீச்சில் பல பேரைத் திணற அடித்ததும் இல்லை. மாறாக புதிதாக ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரர். 8 டேஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார். 28 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஒரு முறை 5 விக்கெடுகளை வீழ்த்தி இருக்கிறார். இருப்பினும் இவரை தலையில் வைத்து கொண்டாடுகிறது இங்கிலாந்து அணி. அப்படி என்ன செய்து விட்டார் இந்த 27 வயது கிரிக்கெட் வீரர். நம் இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் வெங்கடேஷ் பிரசாத், ஆஷிஷ் நெஹரா போன்ற வீரர்களால் செய்ய முடியாததை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

காரணம் டெஸ்ட் போட்டிகள் ஆரம்பித்த காலத்தில் இருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு சில பந்து வீச்சாளர்களே, 9 விக்கெட்டுகள் விழுந்த பின்னரும் நின்று ஆடி தங்கள் அணிக்கு ஆட்டத்தை சமன் செய்து கொடுத்ததாய் சரித்திரமே இல்லை. 90 களின் கடிசியிலும் 2000 ஆவது ஆண்டுக்கு பின்னரும் இந்த நிலை வெகுவாகவே மாறி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் இப்பொழுது கலக்கிக் கொண்டிருப்பவர் தான் இந்த ஆனியன்ஸ். முன்பெல்லாம் மட்டையாளர்கள் மட்டுமே செய்யக் கூடிய விடயமாக இருந்த வந்தது மட்டை ஆட்டம்.

வேகப் பந்து வீச்சாளர்கள் எல்லாம் பந்து வீசிப் பார்த்துப் பழக்கப் படுவதோடு சரி. ஏன் டெஸ்ட் போட்டியின் ஜாம்பவாங்களாக திகழ்ந்த மேற்கு இந்திய தீவு அணியில் கூட அப்படி ஒரு கடைசி நிலை ஆட்டக்காரர் இருந்ததாய் நினைவில் இல்லை. அதற்கு பிறகு கொடி காடி எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருந்த ஆஸ்த்ரேலிய அணியின் கடைசி ஆட்டக்காரர் மெக்ராவுக்கும் இதே நிலைதான். ஆனால் அவர் ஆடிய பல ஆட்டங்களில் எத்தனை முறை மட்டை சுழற்ற எத்தனை முறை களம் கண்டிருக்கிறார் என்ற எதார்த்தமான கேள்வியும் சரி தான். சொற்ப ஆட்டங்களாகதான் இருக்கும்.

இப்பொழுதெல்லாம் கடை நிலை ஆட்டக்காரர்கள் வந்து நின்று வெற்றி காண வைப்பதில்லை ஆனால் தங்கள் அணி தோல்வியைத் தழுவாமல் காப்பாற்றுவது போன்ற வெலைகளை செவ்வனே செய்து வருகின்றனர். கடைசியாக இங்கிலாந்து அணி ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 3 முறை இது போன்று தோல்வியின் விளிம்பிலிருந்து சமன் செய்து கொடுத்து திரும்பி இருக்கின்றனர் கடை நிலை ஆட்டக்காரர்கள். இது ஆரம்பித்தது சென்ற வருடத்தில் அவர்கள் ஆடிய ஆஷஷ் தொடரில் தான். கார்டிஃபில் நடந்த போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்ஸனும், மான்டியும் ஜோடி சேர்ந்து 10 ஓவர்களுக்கு மேல் நின்று ஆடி சமன் செய்து கொடுத்தனர்.

இப்பொழுது மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்த ஆனியன்சும், இங்கிலாந்து அணியின் சுவர் என்று அழைக்கப் படுகின்ற காலிங்க்வுட்டும் சேர்ந்து அந்த அணிக்கு செல்லவிருந்த வெற்றியைத் தட்டி பறித்தனர். ஆனாலும் மக்காயாவின் கடைசி ஓவர் பந்து வீச்சினை சமாளித்து சமன் செய்தது அப்பொழுதும் ஆனியன்ஸ்தான். அதற்கு முந்தைய ஓவரில் எப்படியோ ஒற்றை ஓட்டத்தை காலிங்க்வுடிற்கு கொடுக்காமல் தடுத்த தென் ஆப்பிரிக்க அணியினர், சற்று நிம்மதியாகவே காணப்பட்டனர். சரி ஆனியன்ஸ்தானே என்று.

ஆனால் முன்பு ஒரு முறை மேற்கு இந்திய தீவு அணியின் தலைவர் கெய்ல் சொனது போல சற்று ஆனியன்ஸ் இந்த முறை தெ.ஆப்பிரிக்கா அணியினர் கண்களைப் பதம் பார்த்துதான் விட்டார். அதன் விளைவு முதல் போட்டி சமன் செய்தாகி விட்டது. அடுத்த போட்டியில் இங்கிலாந்தை ஒரு வழி ஆக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தெ.ஆப்பிரிக்க அணி ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 98 ஓட்டங்களில் மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த முறைப் பெரிதாக ஆனியன்ஸின் உதவி அந்த இங்கிலாந்திற்கு தேவைப்படவில்லை.

இப்பொழுது நடந்து முடிந்த 3ஆவது ஆட்டத்தில் தெ.ஆப்பிரிக்க அணியினர் ஒரு தீவிரத்துடன் விளையாடினர். போட்டியின் 5 நாட்களின் கடைசி அரை மணி நேரத்திற்கு முன்பு வரை, தெ.ஆப்பிரிக்க அணியினரின் பிடியில்தான் இந்த போட்டி இருந்தது. முதல் இன்னிங்க்ஸில் 291 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தாலும் இங்கிலாந்து அணியை 273 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்து 18 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. அத்ற்கு பிறகு ஆடிய தெ.ஆப்பிரிக்க அணி அதிரடியாக ஆடி 447 ஓட்டங்கள் எடுத்தது. அணித் தலைவர் ஸ்மித் 183 ஓட்டங்கள் விளாசினார். 466 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி பெற முடியும் என்ற இலக்குடன் களம் இறங்கியது இங்கிலாந்து அணி.

முதல் போட்டி போலவே உள்ளது என்று தெ.ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பௌச்சர் சொன்னது ஸ்டம்ப் மைக்ரொஃபோனில் கேட்டதாம். என்ன நினைத்து சொன்னாரோ தெரியவில்லை, அதே போன்று முடிவடைந்தது இந்த போட்டியும். தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெடுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது. ஆனல் கடைசி ஒரு மணி நேரத்தில் மல மலவென விக்கெட்டுகள் சரிந்து மறுபடியும் 9 விக்கெட்டுகளோடு இங்கிலாந்து அணி ஆட்டத்தின் கடைசி ஒவரை சந்திக்கத் தயாரானது. ஸ்டெய்ன் மற்றும் மார்கலின் அனல் பறக்கும் பந்து வீச்சில் நிலை குலைந்திருந்தது இங்கிலாந்து அணி.

மறுபடியும் ஆனியன்ஸ் தான் மட்டையாளர். இந்த முறை மார்கல் பந்து வீசத் தயாரானார். 2 ஆவது பந்திலோ மூன்றாவது பந்திலோ பலத்த ஒலி எழுப்பினர் தெ.ஆப்பிரிக்கா அணியினர். நடுவர் ஔட் கொடுக்க மறுக்கவே ரெஃபெர்ரல் என்ற பிரமாஸ்த்திரத்தை கையில் எடுத்தனர். வல்லவனுக்கு சட்டையும் ஆயுதமாக சட்டையில் உரசி சென்றது என்று 3ஆவது நடுவர் அறிவிக்கவே இங்கிலாந்து அணித் தலைவர் ஸ்ட்றாஸ் சற்று சிரித்துப் பழகினார்.

அடுத்த மூன்று பந்துகளை இலாவகமாக தடுத்து ஆட இங்கிலாந்தின் புதிய கதாநாயகனாக ஆனார் ஆனியன்ஸ். அவரை இந்த பாடு படுத்தியதற்கு அவரிடம் மன்னிப்பு கோருகிறொம் என்று சொன்னார் ஸ்ட்றாஸ். இதற்கு மேல் என்ன செய்வது என்றே தெரியாமல் கண்ணில் ஆனியன்ஸினால் பெருக்கெடுத்த கண்ணீருடன் அனைவருக்கு கை குலுக்கினார் தெ.ஆப்பிரிக்க அணித் தலைவர் ஸ்மித்.

தெ.ஆப்பிரிக்க அணி இனி மேல் அதிகம் பப்பிள் கம் மெல்லுமாரு அவர்களின் உயர் மட்ட குழுவில் இருந்து கேட்டு கொள்ளப்பட்டிருக்கிறார்கள். (பப்பிள் கம் மென்று கொண்டே வெங்காயம் உரித்தால் கண்ணில் நீர் சுரக்காதாம்!!!)

9 விக்கெட் மாட்ச் - சரியான பன்ச்!!!

Thursday, January 7, 2010

அவதாரம் எடுத்து ஆடிக் கொண்டிருக்கும் அவதார்!!!

மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புடன் வருகின்ற அனைத்துப் படங்களுமே வெற்றி வாகை சூடுவதில்லை. 100 விழுக்காடுகள் அப்படிப்பட்ட படங்கள் வெற்றியைத் தழுவுவதில்லை. அந்த விழுக்காடு விளையாட்டில் 10 விழுக்காடு திரைப்படங்கள் வெற்றி பெற்றால் அது மிக பெரிய விடயமாக இருந்து வருகின்றது. இந்த சூழலில்தான் வெகு நாட்களாக அமைதியாக புதருக்குள் இருந்த புலி ஒன்று சீறிப் பாயத் தயாரானது. அப்படிப் பட்ட வட்டார வெகுமொழிகள் வந்ததிலிருந்தே எப்பொழுது திரைப்பட செய்திகள் இருந்தாலும் இந்த அவதாரத்தை பற்றின செய்திகள் இல்லாமல் முடிந்ததாக சரித்திரக் குறிப்புகள் ஒன்றும் இல்லை!

ஆம் உலகத் திரைப்படப் பதிவேட்டில் தனக்கென தனி இடத்தை தானே செதுக்கிக் கொண்ட ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் காமரூனைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறொம். நன்றாக படித்திருந்தாலும் (இயற்கை அறிவியல்) அவர் அதை விட்டு விட்டு, டிரக் ஓட்டுனராக பணி புரிந்து பின்னர் திரைப்பட துறையினுள் காலடி எடுத்து வைத்துள்ளார். தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பது போல இவர் இயற்றிய அனைத்து படங்களுமே வெற்றி வாகை சூடி இருப்பது இவருடைய உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்.

டைட்டானிக் என்ற உண்மை சம்பவத்தின் பிரமாண்டத்தை நமக்கு எடுத்து காட்டி அதன் நினைவு அடிவாரங்களில் நில சரிவு உண்டு செய்யும் படியாக இப்பொழுது மீண்டும் 13 வருடங்கள் கழித்து அவதாரில் மீண்டும் அவதாரம் எடுத்துள்ளார். அந்த கால கட்டத்திலேயே இந்த கதை தயாராக இருந்தது என்றும் அப்பொழுது அதற்கான அறிவியல் யுக்திகள் இல்லாத காரணத்தினால் இவ்வளவு ஆண்டுகள் பொறுத்திருந்து இப்பொழுது இந்த படத்தை வெளியிட்டுள்ளார். கதை என்று பார்த்தால் பெரிய விடயம் என்று நினைக்க முடியாது.

அதை எப்படி கொடுத்திருக்கிறார் என்பதில்தான் அவதார் மிகப் பெரிய அவதாரம் எடுத்து நிற்கிறது. முதல் ஒரு வாரத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் செய்து சாதனை சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறது. அவரின் காதல் காவியமான டைடானிக் செய்த வசூல் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்றார்கள் திரைப்பட வட்டாரத்தினர். யாருக்கிட்ட என்று வேட்டியை மடித்துக் கட்டி (வேட்டி கட்டத் தெரியும்பா அவருக்கு!!!) களத்தில் மீண்டும் இறங்கியிருக்கிறார்.

நம் இந்தியாவின் கமலிலிருந்து, ஆமிர்கான் முதல் எல்லோருக்கும் உள்ள பிரச்சனை இவருக்கும் எழுந்துள்ளது. இந்த படம் மற்றொரு படத்தின் தழுவல் என்று, அந்த திரைப்படம் பற்றி எனக்கு அந்த அளவுக்கு தெரியாததால் அதைப் பற்றி இங்கே குறிப்பிடவில்லை. இந்த படம் வாழ்னாளில் பார்க்கப் பட வேண்டிய படம் என்று முத்திரைத் தாளில் முத்திரைக் குத்தப்பட்டு அனைத்து 3டி திரை அரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் மூலம் என்ன கற்பிதம் செய்கிறார் காமரூன் நமக்கெல்லாம், "முயர்சி இருந்த மௌன்ட் எவெரெஸ்டும் நமக்கு கீழதான்" என்று வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

மக்களே தயவு செய்து சொல்றேன் இந்த படத்தை 3டி வசதி உள்ளத் திரை அரங்கில் சென்று பார்க்கவும். இப்படிதான் என் நண்பர்கள் எல்லாம் என்னிடம் கூறி வருகின்றனர். நானும் இந்த படத்தை எப்படியாவது திரை அரங்கில் பார்த்து விட வேண்டும் என்ற சபதத்தில் இருக்கிறேன். இந்த படம் அப்படி ஒரு தாக்கத்துடன் உலக மக்களை ஈர்க்கும் வண்ணமாக தயாரிக்கப்படுள்ளது. நானும் 2 வாரமாக இந்த படத்திற்கு எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் டிக்கெட்டை தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் சரியான நேரத்திற்கு கிடைத்தப் பாடில்லை.

சரி எப்படியும் பார்த்திட வேண்டும் என்ற எதிர்பார்பை உருவாகி உள்ளது இந்த படம். வெகு விரைவில் இந்த படத்தின் அதிரடி காட்சிகளைப் பற்றியும் காமரூனின் கலை வண்ணத்தைப் பற்றியும் எடுத்து சொல்லியே ஆக வேண்டும். விரைவில் இது போன்றதொரு திரைப்படம் இந்திய மண்ணின் மைந்தர்களுள் யாராவது ஒருவரால் வெளிவர வேண்டும் என்ற நம் எண்ணம் பலிக்குமா? அப்படி ஒரு பட்டியல் என்னிடமும் இருக்கிறது, இதைப் படித்து விட்டு அப்படி பட்ட படத்தை எடுக்கும் திறன் இந்தியாவில் யாருக்கு இருக்கின்றது என்று பட்டியல் சொல்லுங்க பார்ப்போம்!!!

அது வரை அவதார் பார்க்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருப்பேன்.
அவதார் - அலங்காரம்!!!

Tuesday, January 5, 2010

ராசாத்தி...

வழக்கத்தை விட அன்று வேகமாய் கிளம்பிக் கொண்டிருந்தான் ரவி. "ஜானு எங்கம்மா வெச்சிருக்க என் ஐ டி கார்ட?", "அங்கதாங்க இருக்கு, அந்த ஃப்ரிட்ஜ் மேல. எடுத்துக்கோங்க, நான் இங்க சாப்பாடு செஞ்சிக்கிட்டு இருக்கேன்". இவளுக்கு இதே வேலை, ஒரு அவசரம்னு கேட்டா எடுத்து கொடுக்க மாட்டா, மனதுக்குள் வசை பாடிக் கொண்டே வேகமாய் சென்று தன் ஐ டி கார்டை எடுத்துக் கொண்டு கிளம்பினான். "செல்லம் என்ன செஞ்சுக்கிட்டு இருக்கீங்க?" அவர்களின் செல்ல மகள் நந்திதாவை விசாரித்தபடியே தன் காலணியைத் தேடினான்.

"அம்மா ஜானு எங்கம்மா போச்சு என் ஷூ?", பதட்டத்துடன் கேட்க, ஜானுவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. "ஜானு, ஜானு அப்படி என்னதான் செய்யற அங்க" என்று கேட்டுக் கொண்டே அவர்களின் அறைக்கு சென்றான். அங்கே அவன் கண்ட காட்சி அவனை கோபத்தின் உச்ச நிலைக்கு தள்ளியது. "ஜானு, எவ்வளவு தடவை சொல்லியிருக்கேன், ஏண்டீ கேக்கவே மாடேங்கற?" என்று கோபத்துடன் முறைத்துக் கொண்டிருந்தான்.

"இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி குதிக்கறீங்க?, ஒரு சமையல் குறிப்பு பத்தி லாப்டாப்ல பாத்துக்கிட்டு இருந்தேன்" என்றாள் ஜானு. "என்னோட லாப்டாப்ப தொடாதன்னு சொல்லியிருக்கேன்ல, அதுக்குதான் உனக்கு ஒன்னு வாங்கிக் கொடுத்திருக்கேன்ல ஜானு, அதுல பாத்து தொலைய வேண்டியதுதானே, ஏன் இப்படி காலங்காத்தால என் உயிர வாங்கற?" மூச்சி விடாமல் திட்டித் தீர்த்தான் ரவி.

"ஏங்க அந்த லாப்டாப்லதான் பாட்டரி வேலை செய்யறது இல்லைன்னு போன வாரம் நீங்கதானே சர்விஸ் சென்டர்ல கொடுத்துட்டு வந்தீங்க. சும்மா இப்போ எதுக்கு என்ன கத்துறீங்க?" என்று கண்களில் கண்ணீர் தொனிக்க கேட்டாள் ஜானு. "அப்படின்னா அந்த லாப்டாப் வர வரைக்கும் இத எடுக்காத.... இந்த வீட்டுல எனக்குன்னு ஒரு பெர்சனல் ஸ்பேஸ் கிடையாது" என்று பொருமினான் ரவி.

"நந்தும்மா என்ன செய்யறீங்க?", "விளையாட்றேன்பா" என்று பதில் அளித்த நந்திதாவைப் பார்த்து, அந்த சைக்கிளை வெச்சிட்டு வேற ஏதாவது விளையாடும்மா என்று சொல்லிவிட்டு, "ஜானு ஷீ இஸ் வெரி பொஸ்ஸஸிவ்" என்ற ரவியைப் பார்த்து சிரித்த ஜானு " அப்பாவுக்கு புள்ளை தப்பாமல் பிறந்திருக்கு" என்றாள். "என்ன மாதிரியே இருக்கா", "ஜானு, நந்து ஈவினிங்க் பாப்போம்" பெருமிதத்துடன் அலுவலகத்திற்கு நடையைக் கட்டினான்.

மாலை அலுவலகம் விட்டு வந்த போது வீடே சத்தமாக இருந்தது, என்னவென்று ரவி எட்டிப் பார்த்த போது பக்கத்து வீட்டு குழந்தை கீதா வந்திருந்தாள். அவளோடு நந்திதா விளையாடிக் கொண்டிருந்தாள். கீதா, ரவி உள்ளே நுழையும் போது, சை சை என்று சைக்கிளை நோக்கி கையைக் காட்டிக் கொண்டிருந்தாள். "கீதா, இருடா வேற ஏதாவது பொம்ம தர்றேன் நான்" என்று ரவி சொல்லிக் கொண்டே பக்கத்து அறைக்கு செல்லும்
போது,

"டாடி, இருங்க இந்த சைக்கிளை பாப்பாவுக்காக கொடுக்கலாம். அவ விளையாடிட்டு தரட்டும்" என்று சொன்னாள் நந்திதா. நெற்றிப் பொட்டில் நங்கூரம் பாய்ச்சின மாதிரி ரவி நின்று கொண்டிருந்தான். உள்ளிருந்து ஓடி வந்த ஜானு, "அப்படி சொல்லுடீ என் ராசாத்தி" என்று திருஷ்டி சுற்றி எடுத்தாள் நந்துவுக்கு. அதில் ரவியின் திருஷ்டியும் சேர்ந்து கழிந்தது!

Sunday, January 3, 2010

மனப்பிராந்தி! - இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

"செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா, பூவாசம் மேடை போடுதம்மா, பெண் போல ஜாடை பேசுதம்மா, அம்மம்மா ஆனந்தம்". "நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட, வீடு போய் சேர்ந்துட மாட்ட", "வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ, விண்ணிலே பாதை இல்லை உன்னைத்தொட ஏணி இல்லை", "ஏ தண்ணி தொட்டி தேடி வந்த கன்னு குட்டி நான், இந்த சூரியன் வழுக்கி சேத்துல விழுந்தது சாமி சாமி சாமி, சாரயத்த ஊத்து, ஆ ஜன்னலத்தான் சாத்து"....

பசி வேற வயிற்ற கிள்ளுது (அது ஏண்டா வயிற்ற கிள்ளுது???) சரி நடக்கட்டும், ஒரு பொங்கல், ஒரு சாம்பார் வடை, ஒரு காபி. ரசிச்சி சப்பிடனும் சப்பாட அப்போதுதான் உடம்புல ஒட்டும்பா (அகில உலக உணவு ரசனை சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்). நல்ல சாப்பாடு. அந்த உணவகம், தரத்துக்கும் சுவைக்கும் பெயர் போனது. வேகமாய் காபியை குடித்து முடிக்கும்படியான கட்டாயம்.

"திஸ் இஸ் மை லாஸ்ட் ரிசார்ட், சஃபகேஸன் யெட் நோ ப்ரீதிங்க். டோன்ட் கிவ் அ ஃப்*** இஃப் ஐ கட் மி ஆர்ம் ப்லீடிங்க்", "திருடாதே பாப்பா திருடாதே, வறுமை நினைத்து பயந்து விடாதே, திருடாதே பாப்பா திருடாதே", "சின்னத் தாயவள் தந்த ராசாவே, முள்ளில் தோய்ந்திட்ட ரோசாவே, சின்னத்தாயவள் தந்த ராசாவே", "இது ஒரு பொன் மாலைப் பொழுது, வான மகள் நாணுகிறாள் வேறு உடை தேடுகிறாள் இது ஒரு பொன் மாலைப் பொழுது"....

"சார் சிங்கிள் ஆர் டபிள்?, சிங்கிள் பாஸ், தாங்க் யூ சார்", "ஹாப்பி நியூ இயர் டு யூ பாஸ், சேம் டு யூ சார்", "அட வாடா மாபிள்ள வாழப் பழ தோப்புல வாலி பால் ஆடலாமா?, ஆடும் சாக்குல சைக்கிள் காப்புல கிடுக்கி பிடிப் போடலாமா?", "தென்றல் வந்து என்னைத் தொடும் ஆகா சத்தம் இன்றி முத்தமிடும்", "ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீயை ஏத்தி, மாத்தி மாத்தி மாத்தி, என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி, சூது வாது தெரியாது சொக்கத் தங்கம் ராசா", "ஏதெதோ எண்ணம் வளர்த்தேன், உன் கையில் என்னைக் கொடுத்தேன், நீதானே புன்னகை மன்னன்"....

"சார் சிங்கிள் ஆர் டபிள்?, சிங்கிள் பாஸ், தாங்க் யூ சார்", "ஹாப்பி நியூ இயர் டு யூ பாஸ், சேம் டு யூ சார்",

சரி இந்த க்லைன்ட்ஸெல்லாம் ஏன் இப்படி கஷ்டப்படுத்தரானுங்க, லீவுலெல்லாம் போய் தொலைய மாட்டனுங்களா? சரி அவனுங்களும் என்ன பண்ணுவானுங்க, அவனுக்கு மேல உள்ளவன் அவனுக்கு வெய்க்கறான், அவன் நமக்குத் திருப்பி விடறான். இதுல யாரையுமே தப்பு சொல்ல முடியாது. இதற்கு பெயர் என்னமோ சொல்லுவாங்களே அது என்ன சைக்கிள், அது சரி, அந்த கருமம் ஏதாவது இருந்துட்டு போவுது விடுப்பா. சின்ன வயசுல பரீட்சைக்கே அதெல்லாம் சாய்ஸ்ல விட்டாச்சு!

"ஒருவன் ஒருவன் முதலாளி, உலகில் மற்றவன் தொழிலாளி, விதியை நினைப்பவன் ஏமாளி, அதை வென்று முடிப்பவன் அறிவாளி", "டகுடு டகுடு, டிகுடு டிகுடு, டன் டன் டடா டன் ஓஓஓஓஓ டகுடு டிகுடு டன் டடான் டடான்", "உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா, தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம், கவிதையென மலர்ந்தோம்", "என்னைத் தாலட்ட வருவாளா, நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளா, தங்கத் தேராட்டம் வருவாளா, இல்லை ஏமாற்றம் தருவாளா?"....

இந்த மாடுகளுக்கு சிவப்பு நிறம் பார்த்தால் ஒரு வித கலக்கம் ஏற்படும்னு சொல்லுவாங்களே அது உண்மை தானா??? இல்லை அதெல்லாம் ஒரு விதமான மனப்பிராந்தியா? (ஓ ஓ ஓ, மனப்பிரந்திதானா, எதுவும் ப்ரென்ச் பிராந்தி இல்லையா!!!) சரி அந்த மாட்டுக்கு என்னவாகி இருக்கும்? அவ்வளவு மாடுகளில் அது மட்டும் ஏன் அப்படி செய்ய வேண்டும்? ஏன் அப்படி மாட்ட வேண்டும்? இப்படியும் நடக்குமா? இப்போ அந்த மாடு அடி மாடுதானா? அடி பட்டதால இது அடி மாடா? ஒன்னும் புரியவில்லை... சற்று கலங்கி விட்டுப் அந்த மாட்டுக்கு விதி (இப்போ இப்படி போட்டுகலாம், அப்புறம் மாத்திக்கலாம்) அப்படிதான் எழுதியிருக்கும்னு நெனச்சிக்கிட்டேன்.

"ஹாப்பி நியூ இயர் குட்டி" என்று பாப்பாவிற்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லி விட்டு, காரில் இருந்த பைகளை எடுத்து வீட்டினுள் வைத்து விட்டு எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி சற்று வசதியாக அமர்ந்தேன்.

மேற் கூறிய அனைத்தும் என்னவென்று இப்போது புரிந்திருக்கும். சரி நானே சொல்லி விடுகிறேன். நான் முதன் முதலாக வெகு தூரம் தனிமையில் கார் ஓட்டி கொண்டு வந்ததில் நடந்த நிகழ்வுகள் இவை!!! இடையில் இடையில் வந்த பாடல்கள், என் இசைத்தட்டில் இருந்து காரில் ஓடிக்கொண்டிருந்தவை. ஹேய் நாங்களும் ஆங்கிலப் பாட்டு கேப்போம். சரி சரி விடுங்க. அந்த சார் சார் விடயம், "சாலை உபயோகிப்பாளர்கள் கட்டண வசூல் மையத்தில்" நடந்த உரையாடல்கள். ஆனல் ஒரு இடத்தில் அப்படி சொல்லப் போய் அவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல, வேகமாக முகத்தைத் திருப்பி கொண்டார். அவருக்கு என்ன பிரச்சனையோன்னு வண்டிய கிளப்பிக்கிட்டு வந்துட்டேன். அப்புறம் அந்த க்லையன்ட் விடயம் புரிந்திருக்குமென்று நம்புகிறேன்.

என்னோடு நானே பேசிக் கொண்டு வந்தது!அந்த மாடுகள் விடயம் ஒரு சிறிய விபத்து. எனக்கு முன்னால் ஹுண்டாய் ஐ10 மற்றும் ஒரு மாருதி 800 சென்று கொண்டிருந்தன. சட்டென்று வேகமெடுத்த அந்த ஐ 10, ஒரு வேகத் தடைக்கு அப்புறமாக 800ஐ முந்தி கொண்டு சென்றது. நானும் அவ்வாறே செய்து விட்டு தொடர்ந்து கொண்டிருந்தேன் பயணத்தை. எனக்கு முன்னால் ஒரு 400 மீட்டரில் ஐ 10. அந்த வண்டிக்கு ஒரு 500 மீட்டர்களுக்கு முன்னால் சட்டென்று, ஒரு மாடுக் கூட்டம் சாலையை கடந்தது. ஐ 10 வேகத்தைக் குறைத்திருக்கலாம். அதை செய்யாமல் சட்டென்று சாலையின் வலதுப் புறமாக செல்ல, ஒரு மாடு துள்ளி குதிக்க, அதே சமயத்தில் அந்த வண்டியின் சக்கரங்கள் பங்க்ச்சர் ஆக, பக்கத்தில் வாய்க்காலில் விழாமல் சுவற்றில் மோதி நின்றது.

இதையெல்லாம் சற்றுப் பின் தங்கிப் பார்த்து வந்து கொண்டிருந்த நான், வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, அந்த வண்டியில் சென்றவர்களைப் பார்த்து ஒன்னும் அடி இல்லையே என்று கேட்டு விட்டு, அந்த பக்கம் திரும்பி பார்க்கையில், கால் எலும்பு முறிந்து தொங்கி கொண்டிருக்க, அந்த பக்கம் இந்த பக்கம் அசைய முடியாமல் நின்று கொண்டிருக்கிறது. சற்று நிதானித்திருந்தால் அந்த ஆறறிவு ஜீவன் ஒரு முறை யோசித்திருந்தால் ஐந்தறிவு ஜீவனுக்கு ஒன்றும் நேர்ந்திருக்காது... இப்போது ஒன்றும் செய்ய முடியாது. அடி பட்டதால் அது அடி மாடுக்குத்தான் இனி பயன்படும்:-( அந்த ஐ 10இன் நிறம் சிவப்பு. இது விதியல்ல, ஐ 10இன் சதியில் நடந்தது.

இப்படியாக எல்லா நினைவு ஓடைகளையும் பாடல்களையும் கடந்து புத்தாண்டன்று வீட்டிற்கு சென்றேன் என் மனைவியின் ஊருக்கு!