Sunday, January 31, 2010

காதலர்களுக்கு ஒரு கடிதம்...

காதல், இந்த ஒரு வார்த்தை இல்லை என்றால் இந்த உலகம் இயங்காது என்ற வரிக்கு சத்தியமாய் அடிமையாகிப் போன பல கோடி மனிதர்களில் நானும் ஒருவன். இப்பொழுதும் அடிமை தான், (அய்யா எனக்கு திருமணம் ஆகிடுச்சி என் காதலியோடு). எவ்வளவோ முறை பட்டிமன்றங்களில் தலைப்பாகி பல முறை மிகப் பெரிய சண்டைகளுக்கு கூட இந்த காதல் காரணமாகி இருப்பது நமக்கெல்லாம் தெரிந்த ஒரு விடயமே. இப்பொழுது என்ன, எப்போழுதும் புதியதாய் ஒரு விவாதத்தை எந்த ஒரு சலனமுமின்றி தொடங்கி வைக்க கூடிய சாமர்த்தியம் இந்த காதலுக்கு உண்டு.

இப்படி தான் கோடு போட்டு காதல் செய்ய வேண்டும் என்றோ, இப்படிப்பட்ட காதல் தான் வெற்றி பெறும் என்றோ ஆணித்தரமாக சொல்ல முடியாத ஒரு திரிசங்கு நிலையில் தானே காதல் எப்போதும் இருந்து வந்துள்ளது. எங்களைப்பொருத்த (வீட்டம்மாவையும் சேர்த்துதான்)வரை, எப்படியாவது அனைவரின் சம்மதம் வாங்கிதான் திருமணம் முடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் இருந்தது. அதன்படியே செய்தோம். இன்னொரு நண்பரால் அப்படி செய்ய முடியவில்லை, பதிவுத் திருமணத்தில்தான் சேர்ந்தார்கள். ஆனால் அவர்கள் காதலும், அவர்களது அன்பும் வெற்றி பெற்றது. இப்பொழுது இரு வீட்டாரும் சண்டையின்றி அன்பாக வாழ்ந்து வருகின்றனர்!

சரி, காதலர்கள் மணமாகிப் பின்னர் பெற்றோருடன் சேர்ந்த பொழுதுகளில், பெரிய சாதனையை செய்ததாய், காதலர்களை தான் பாரட்டுகிறோம். உண்மையில் அது தான் நடக்கிறதா? இல்லை என்கிற பொழுதுகளில், கண்டிப்பாய் கல்லடிக்கு தயாராய் தான் இந்த இடுகையை எழுதுகிறேன்! அவ்வளவு வருடங்கள் உயிரும் உரிமையுமாய் வளர்த்து விட்டு, சட்டென்று பிரிந்து போகும்படியான ஒரு நிலைமைக்கு தள்ளப்படும் பொழுது பரவச நிலையிலா குதிப்பார்கள்? பிரிந்து போகும் நிலை என்பது, கண்டிப்பாய் எல்லாத் திருமண நிகழ்வுகளிலும் உண்டு. இப்பொழுதெல்லாம் மகள் இருந்தால் மட்டுமல்ல, மகன் இருந்தால் கூட இந்த நிலையில் தான் இருக்கின்றது.

மகன் இருந்தால் இன்னும் முன்னரே பிரிவு என்பது புலப்பட ஆரம்பித்து விடுகிறது. சரி பிரிவு என்று நான் சொன்னது, வீட்டில் திருமணம் ஆகாமல் இருக்கும் போது, உடம்புக்கு முடியாம இருக்கு, "அவனையோ, அவளையோ போய்ப் பார்த்தால் எனக்கு உடம்பு சரி ஆகி விடும், இந்த வீட்டுக்குள்ளையே இருந்தா என்ன பண்ண முடியும்?", "ஏன் எல்லாரும் அவனை/அவளை எதிரியாகவே பார்க்கிறீர்கள்?" போன்ற ஒரு தரப்பு நியாயங்கள் தான் பெற்றோரை கொதி நிலைக்கு கொண்டு செல்கிறது. கண்டிப்பாக அவர்களின், ஆதரவற்ற நிலைதான் பல சமயம் காதலுக்கு எதிர்ப்பாய் கிளம்புகிறது.

சராசரியா ஓட்டுப்போடுகிற வயதை காதலிக்கும் வயதாய் எடுத்து கொள்வோம். சரி இந்த பல்கலைக்கழகத்தில் தான் இந்த வயது பிரச்சனைகள் அதிகமாய் உள்ளதே, அது பற்றிப் பேசப் போனால் அது வேறு ஒரு பகிர்வாக போய் விடும். அதனால் ஒரு கணக்கிற்காக, 19 ஆண்டுகளாய் பார்த்து பார்த்து செய்தவர்களை சட்டென்று உதறிப்போவதும் ஒரு வித துரோகமாய்தான் எனக்கு படுகிறது. அவங்க ஒத்துக்கறாங்களோ இல்லையோ அவர்களை நோகடிக்க வேண்டாமே. கண்டிப்பாக 100 விழுக்காடு அப்படி இருக்கவும் முடியுமா என்றால், இருக்க முடியாது என்பது தான் விடையாக வரும் என்பதையும் மனதில் ஊசலாட விட்டு விட்டு தான் இந்த இடுகையை எழுத ஆரம்பித்தேன்.

ஆனால் 100 விழுக்காடு காதலனையோ/காதலியையோ நினைத்து உருகிக் கொண்டிருக்கும் பெருவெளித் தருணங்களின் சில விழுக்காடுகள் பெற்றோரையும் யோசித்துப் பார்க்கலாம். "என்னச் செல்லம், ஏன் தான் இந்த பாரன்ட்ஸெல்லாம் இப்படி இருக்காங்களோ?" என்ற குறுஞ்செய்தி பரிமாறிக் கொள்வதை விட்டு, "என்னம்மா சாப்டீங்களா? என்னப்பா சாப்டீங்களா?" என்கிற பொழுதுகள், அதுவே உங்கள் காதலுக்கு நல் வழியாய் காட்டிக் கொடுக்கும். எந்த ஒரு தருணத்திலும், உங்கள் பெற்றோரை விட்டுக் கொடுக்காதீர்கள். அவர்கள் என்றைக்குமே உங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுப்பதில்லை.

உங்களுக்கு நம்பிக்கை கொடுத்தவர்கள், உங்களில் நம்பிக்கைத் தேட இருப்பவர்கள், அவர்களை கண்டிப்பாக கைவிடக் கூடாது. ஒவ்வொரு முறை நீங்கள் உங்கள் பெற்றோரின் மீது எரிந்து விழும்போது, உங்கள் மீதே உங்களுக்கான நம்பிக்கையையும், உங்கள் பெற்றோரின் நெருக்கத்தையும் நீங்கள் இழந்து கொண்டுதான் இருக்கிறீர்கள். இதைப் போன்ற தருணங்களை தள்ளி வையுங்கள். சத்தியமா இது அக்மார்க் சுத்தமான அறிவுரை இல்லை. நிறைய முறைப் பார்த்து சொந்தமாக அனுபவப்பட்டும்தான் இந்த இடுகை நிறைவுரையை நோக்கிப் பயணிக்கிறது.

ஆகக்கூடி முடிந்த வரை, அவர்களின் ஆசியுடன் மண வாழ்வில் காலடி எடுத்து வையுங்கள். எப்பொழுதுமே 100 விழுக்காடு கச்சிதமாய் எந்த விடயங்களிலும் அப்படி நிறைவேறும் என்று சொல்லக்கூட முடியாதுதான். நிறைவேற்றப் படதான் வேண்டும். அடுத்த தலைமுறை என்பதால் முந்தைய தலைமுறையை மொத்தமாக தள்ளி சென்று விட முடியாது. அப்படியெல்லாம் யோசித்துப் பார்த்தால் இந்த இடுகை கூட தமிழில் இருந்திருக்காது. மறைந்து போயிருக்கும். இது காதலர்கள் எல்லோருக்குமான மடல். வைத்துக் கொள்வதும் நினைவிலிருந்து கிழித்தெறிவதும் உங்கள் கையில் தான் இருக்கிறது!!!

- காவிரிக்கரையோன் MJV

9 comments:

கனிமொழி said...

:-)
good...
we shouldn't leave both our parents and the love ...
the balancing is the game...

பிரியமுடன்...வசந்த் said...

என்னதான் பெற்றவர்கள் சம்மதம் வாங்கி திருமணம் முடிக்கவேண்டுமென்று நினைத்தாலும் கூடவே சாதின்ற கொக்கி போட்டு காதலை கொத்து கொத்தா கொத்திபோட்ற சாதிக்கூட்டத்தை என்ன செய்ய தல?

காவிரிக்கரையோன் MJV said...

@ கனிமொழி - வருகைக்கு நன்றி கனிமொழி. கண்டிப்பாக கம்பி மேல் கால்கள் போன்ற நிலைமை தான் காதலர்களுக்கு.

@ பிரியமுடன் வசந்த் - வாங்க வசந்த். அந்த கூட்டங்கள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. இதற்கு ஒரு சமுதாய எழுச்சிதான் வழி வகுக்கும். பெத்தவங்களும் அதற்கு சோடை போகின்ற நிலைமை தான் பயமே. என்னதான் பேசினாலும் எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும் பலருக்கு கிடைக்காமல் போகின்ற இந்த காதல் திருமணங்களுக்கு பெரும்பாலும் சாதிய அக்கிரமங்களே காரணம்...

புலவன் புலிகேசி said...

//பிரியமுடன்...வசந்த் said...

என்னதான் பெற்றவர்கள் சம்மதம் வாங்கி திருமணம் முடிக்கவேண்டுமென்று நினைத்தாலும் கூடவே சாதின்ற கொக்கி போட்டு காதலை கொத்து கொத்தா கொத்திபோட்ற சாதிக்கூட்டத்தை என்ன செய்ய தல?
//

அதேதான்...

காவிரிக்கரையோன் MJV said...

வாங்க புலிகேசி. அது என்னமோ சத்தியமா உண்மைதான்... பல தருணங்களில் ஒண்ணுமே செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அனுபவங்களும் உண்டு:-(

Sathish Mayil said...

@காவிரிக்கரையான் - அருமையான பதிவு, இன்றைய காதலர்களும், காதிலிக்க எத்தனிக்கும் உள்ளங்களும் படிக்க வேண்டிய ஒரு பதிவு.

@பிரியமுடன் வசந்த் & புலிகேசி - நிச்சியமாக சாதி கொக்கி காதலை பல இடங்களில் கொத்திக்கொண்டுதான் இருக்கிறது, அதே சமயத்தில் காலம் மாறிக்கொண்டிருகிறது என்பதை மறுதலிக்க இயலாது. பத்து ஆண்டுங்களுக்கு முன் காதலுக்கு இருந்த எதிர்ப்பு எப்பொழுது இல்லை என்பது எதார்த்தமான் உண்மை. இதற்கு காரணம் நமது காவிரிக்கரையான் போல் பலர் பெற்றோரின் சம்மதத்தோடு மணம் முடிதலாகும். சமுதாய மாற்றம் என்பது ஓரிரவில் வந்துவிடாது, அது வரை சற்று பொறுமையுடன் தான் நாம் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு இந்த பதிவில் பதில் இட்டவர் அனைவரின் பெற்றோர்களும் காதாலுக்கு உப்புக்கொள்லாமல் இருக்கலாம், ஆனால் நாம் அனைவரும் பெற்றோர்கள் ஆகும் தருணத்தில் நிச்சயமாக உப்புக்கொள்வோம் என்று நம்புகிறேன். - மயில்

Sathish Mayil said...

நேற்று வைரமுத்துவின் இதனால் சகலமானவர்களுக்கும் நூலில் "ஆதலினால் காதல் செய்வீர்" என்ற கடுரையை வாசித்துக் கொண்டிருந்தேன்.
அதிலிருந்து சில வரிகள் இங்கே இட்டால் பொருத்தாமாக இருக்கும் இன்று தோன்றியது.

"எந்த நாட்டிலும் காதலை இலக்கியம் ஆராதித்த அளவுக்கு சமுகம் ஆதரித்ததாய்ச் சரித்திரம் இல்லை.

காரணம் -

காதல் என்ற ரோஜாவில் இலக்கியம் மலர்களை மட்டுமே தரிசிக்கிறது. சமூகம் முட்களை மட்டுமே பார்க்கிறது."

தியாவின் பேனா said...

super

காவிரிக்கரையோன் MJV said...

@சதீஷ் - வா மயில். நிச்சயம் அப்படி ஒரு சமுதாயம் உருவெடுக்குமானால் அதை விட உன்னதம் என்ன இருக்கின்றது. ஆனால் நீ சொன்னது போன்ற பொறுமைக்கான அளவுகோல் எப்பொழுதும் சரியாக தெரிவதில்லை. எவ்வளவு காலங்கள் காத்திருக்க போகிறார்கள் காதல் என்னும் கோட்டையின் தூண்களை கட்டிக் காக்கும் காதலர்கள் என்று தெரியவில்லை. முடிந்தவரை நம் தலைமுறையில் கண்டிப்பாக செயல் படுத்தலாம் என்ற நினைப்பு நிறைய உண்டு எனக்கு.

தலைவரின் வரியை காட்டி மயக்கிட்ட.... அற்புதமான வரிகள் முன்பு எப்போதோ வாசித்தது. நினைவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி.

@தியா - வாங்க தியா. நன்றி.