Tuesday, January 26, 2010

எம்.ஜே யின் மிச்ச சொச்சங்கள்...

மனக்கிடங்கின் ஆழ் துளை தேக்கங்களில் போட்டு அடைக்கப்பட்ட எண்ணக்குவியல்களில் சில விடயங்கள் நீங்காமல் நிலைத்து நிற்கும். அப்படி இருக்கின்ற மிச்ச சொச்சங்களை இனி வரும் நாட்களில் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். அதுதான் என் எண்ணக்குவியல்களின் மிச்ச சொச்சங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நேற்று ஒரு முக்கியமான விடயமாக ஓசூர் வரை செல்ல வேண்டியிருந்தது. 4 நண்பர்கள் சூழ என் காரில் சென்றிருந்தோம். வழியில் எங்கும் என்னுடைய ஒரு நண்பன் பசிக்கிறது. நிறுத்துங்கப்பா வண்டிய என்று அறைகூவல் விடுத்தபடியே வந்து கொண்டிருந்தான். நிறுத்தாமல் நாங்களும் சென்று எங்கள் வேலையை முடித்து கொண்டு திரும்பினோம். எப்படியும் பெங்களூருக்கு சென்று உணவருந்த நேரம் இல்லாமையால், அங்கேயே உணவருந்தலாம் என்ற முடிவுக்கு வந்தோம். உள்ளே சென்று அமர்ந்தவுடன் என் இன்னொரு நண்பர் அந்த சர்வரிடம் வேகமாக "புரோட்டா இருக்காப்பா?" என்றார், உடனே அந்த சர்வர் "இருக்கு சார்" என்றார். அதற்கு இவர் "டிபன் என்னப்பா இருக்கு உங்ககிட்ட" என்றவுடன் அனைவரும் சட்டென்று சிரிக்க, சர்வரும் சேர்ந்து கொண்டார். அய்யா புரோட்டாவும் டிபனுக்கு சாப்பிடுகிற ஐடம் தான் என்று சொல்லி சாப்பிட ஆரம்பித்தோம். நானும் இதில் சேர்ந்து கொண்டு, "சர்வர் ஆம்லேட் இருக்கா?" என்றேன். சர்வர் "இருக்கு சார்" என்றார். "அப்போ ஒரு ஃபுல் பாயிலும், ஒரு ஹாஃப் பாயிலும் கொண்டு வாங்க" என்றேன். சர்வர் இந்த முறை சிரிக்க வில்லை. என் நண்பர் மெதுவாக காதருகில் வந்து, "பின்னி பெடல் எடுக்கிறதுக்கு முன்னாடி கிளம்பிடறது நல்லது" என்றவுடன் வேகமாய் சாப்பிட்டு முடித்து கிளம்பினோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நேற்று காலை அலுவலகம் செல்லும் வழியில் ஒரு விடயத்தை பார்த்தேன். 2 கைகளையும் ஸ்டியரிங்கில் வைத்து ஓட்டினாலே இப்பொழுதெல்லாம் அடி பலமாக விழுகிறது காரில் செல்லும் பொழுதெல்லாம். அதனால் அலைபேசியைக் கூட ஒலிபெருக்கியில் போட்டுதான் பேசுகிறேன். அதுவும் முக்கியம் என்றால் தான். ஒரு அம்மா தன் நாய் குட்டியை மடியில் வைத்துக் கொண்டு கார் ஓட்டி சென்றார்கள். வந்தார்கள் வென்றார்கள் மாதிரி சரித்திரம் ஆகிடாதம்மா என்று நினைத்துக் கொண்டே இருக்கையில் எங்கள் வழிக்கு, வழி கொடுத்தார் போக்குவரத்து காவலர். அந்த நாய் மேலே எவ்வளவு முடி (சிங்காரவேலன் படத்தில் வரும் "அண்ணி சட்டை மேலே எவ்ளோ பட்டன்ஸ்" என்கிற மாதிரி படிக்க!!!)
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அகநாழிகை பதிப்பகத்தின் வெளியீடுகளான நர்சிமின் "அய்யனார் கம்மா", பா.ராவின் "கருவேல நிழல்", விநாயக முருகனின் "கோவில் மிருகம்", லாவண்யாவின் "நீர்க்கோல வாழ்வை நச்சி", டி.கே.பி.காந்தியின் "கூர்தலறம்" ஆகிய புத்தகங்களை படித்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொருவரும் வாழ்க்கையின் நுணுக்கங்களை ஒவ்வொரு விதமாக எடுத்து சொல்லி இருக்கின்றனர். அருமையான படைப்புகள். வாசிக்க வாசிக்க யோசிக்க யோசிக்க! அந்த படைப்புகளை பற்றிய விடயங்கள் கூடிய விரைவில் தனி இடுகையாய் வரும் என்பதை இந்த மேடையில் ஆணித் தரமாக கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன்!!! அகநாழிகை பொன்.வாசுதேவன் சிறப்பான இதழையும், வளர்ந்து வரும் எழுத்தளர்களையும் நமக்கு கரம் பற்றி அறிமுகப்படுத்துகிறார். அற்புதமான விடயம்!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
- காவிரிக்கரையோன் MJV

4 comments:

புலவன் புலிகேசி said...

வாவ் சட்டை மேலே எவ்ளோ பட்டன்....

ரோஸ்விக் said...

மிச்சமின்றி படித்தாயிற்று உங்கள் மிச்ச சொச்சங்களை... :-)

தியாவின் பேனா said...

ம்..ம்..

காவிரிக்கரையோன் MJV said...

வருகைக்கு நன்றி புலிகேசி.
வருகைக்கு நன்றி ரோஸ்விக்
வருகைக்கு நன்றி தியா