Sunday, February 28, 2010

எம்.ஜேயின் மிச்ச சொச்சங்கள் - 28/02/2010

சென்ற வாரம் மறுபடியும் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் அற்புதமான காலகட்டம். தென் ஆப்பிரிக்காவுடன் முதல் ஒரு நாள் சர்வதேசப் போட்டியை ஒரு ரன் வித்தியாசத்தில், வெற்றிக் கனியாக மாற்றியது. ஆனால் இந்த ஆட்டம் இதை விட சுறுசுறுப்பாக முன்னரே முடிந்திருக்க வேண்டியது. வேய்ன் பார்னலும், ஸ்டெய்னும் சேர்ந்து நம் பந்து வீச்சாளர்களை அடித்து துவைத்தனர். இந்த ஜோடி 35 பந்துகளில் 68 ரன்கள் குவித்து வெற்றிக்கு இட்டு செல்ல பார்த்தது. ஆயினும் எப்படியோ கடைசி நிமிட அபாரமான பந்து வீச்சிலும் சச்சின் தடுத்துக் கொடுத்த ஒரு ரன்னும் (இதில் சின்ன சர்ச்சை இருந்த போதிலும்) நம்மைக் காப்பற்றியது. அடுத்த ஆட்டம் பற்றிதான் நமக்கு நன்றாக தெரிந்திருக்கும். பாவம் இதில் ஓர் ஓரமாக டீவில்லியர்சும் ஒரு சடத்தை பூர்த்தி செய்தார். தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்ற எவ்வளவோ பாடுபட்டும், முடியவில்லை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருக்கிறோம். பரவாயில்லை நாம் நம்முடைய தரவரிசை பட்டியலிலும் அப்படியே உள்ளோம், எந்த வித மாற்றமும் இல்லை. இங்கே இந்த கதை இப்படி ஓடிக் கொண்டிருக்க, அந்த பக்கம் ஆஸ்த்ரேலியா தன் முன் வரும் அனைவரையும் அடித்து துவம்சம் செய்து கொண்டிருக்கிறது. ஒரு முறை நாம் அங்கே சுற்றுப்பயணம் செய்து வந்தால் தான் சரிப்படும் என்று நினைக்கிறேன்!!!

பரபரப்பாக இருந்த இந்திய ஹாக்கி வட்டார பேச்சுகள் முடிவடைந்த நிலையில் இன்று துவங்குகிறது உலக கோப்பை ஹாக்கி போட்டி. நமது பிரிவில் நாம் முதலில் களத்தில் சந்திக்க இருப்பது அருமை நண்பர்கள் பாகிஸ்தான் அணியினரை தான்!!! இது வரை ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகளில் 4 முறை சந்தித்து இது வரை இருவருமே தலா இரு போட்டிகளில் வெற்றி கண்டுள்ளனர். பார்ப்போம் இந்த முறை என்ன நடக்கிறது என்று... சொஹைல் அப்பாஸ் என்ற வீரரை நினைத்துதான் அனைவரும் கலங்கிய வண்ணம் உள்ளனர். இந்த பார்சீலோனாவை மறக்கடிக்கும் வகையில் நீங்கள் ஆட வாழ்த்துக்கள். (இந்த பதிவை நான் எழுதி முடிக்கும் போது இந்திய அணி பாகிஸ்தான் அணியை 4 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள்!!! )

2 நாட்களுக்கு முன்பு என் நண்பனின் திருமண நிகழ்வுக்காக ஈரோடு சென்றிருந்தேன். காதல் திருமணம் தான் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது. யாருமே ஒரு வித அக்கறை எடுத்துக் கொள்ளாதது போல் தெரிந்தது. தீவுகளாக இருந்தனர் இரு மண வீட்டாரும். நாங்கள் சென்ற பின்னர் கலை கட்டியது விழா. மாப்பிள்ளையும் மணப்பெண்ணையும் அமர வைத்து அவர்கள் ஊட்டி கொள்வது போல் புகைப்படம் எடுத்ததும் ஒரு வித சந்தோஷம் நண்பனின் முகத்தில் தெரிய ஆரம்பித்தது. நாங்கள் உடனே மதியம் புறபடுவதாக சொன்னவுடன் சிறிது சோர்வடைந்தான். பின்னர் சில நண்பர்கள் தங்கி வரவேற்பிலும் கலந்து கொண்டனர். இரு வீட்டாரும் விரைவில் ஒன்று சேர வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வந்து சேர்ந்தோம். மும்பையில் இருக்கும் ஒரு நண்பன் அழைத்து நீங்கள் மட்டும் எல்லாவற்றிலும் கலந்து கொள்கிறீர்கள் விரைவில் நானும் சென்னைக்கோ பெங்களூருக்கோ மாற்றல் செய்து வர வேண்டும் என்று புலம்பிய வண்ணம் இருந்தான். தனிமை படுத்தும் பாடு அது யாருக்கும் அமையக்கூடாது...

மீண்டும் சுனாமியின் கோர முகங்கள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. சிலி நாட்டில் வந்த 8.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் அந்த நட்டையே பிரட்டி போட்டிருக்கிறது. பல பேர் வீடிழந்து தவிக்கும் நிலை. இதனால் கடலுக்கடியில் சுனாமி உருவாகி இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பசிஃபிக் கடலோர நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படிருக்கிறது. ஜப்பான் நாட்டு மக்கள் செய்வதறியாது திகைத்திருக்கின்றனர். மேலும் அது போன்றதொரு சுனாமி வராமலிருக்க பிராத்திப்போம். இந்த முறை எச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் வண்ணம் அரசு செயல்படும் என்று நம்புவோம்....

கவிதை எழுத ஆரம்பிக்கும் எல்லா இளம் கவிகள் அனைவருக்குமே காதலால் தான் கவிதை எழுதத் தோன்றுமா என்ற எண்ணம் எனக்குள்ளே ஓடிக் கொண்டே இருக்கின்றது. அது விந்தைதான். காதல் கவிதையில் ஆரம்பித்துதான் பொதுவாக மற்ற கவிதைகள் எழுத ஆரம்பிப்பார்களா அனைவருமே? இப்படி இல்லாமல் கவிதை எழுத வேண்டும் என்ற தாக்கம் ஒவ்வொருவருக்கும் எப்படிதான் ஏற்படும் என்ற கேள்விக்கு நண்பர்களே நீங்கள் உங்களது சொந்த அனுபவத்திலோ அல்லது மற்றவரது அனுபவத்திலோ என்ன நேர்ந்திருக்கும் என்பதை பின்னூட்டத்தில் விளக்கி எழுதுங்கள். அனைவரின் அனுபவத்தையும்தான் தெரிந்து கொள்வோமே!!! ஆனால் நான் காதல் கவிதைகளை தான் முதலில் எழுத ஆரம்பித்தேன்!!! அடிக்கடி நினைவுக்கு வரும் வரிகள் கவிதை எழுதும் போது, "இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே" என்ற மஜ்னுவின் பாடல் வரிகள் தான்!!!

- காவிரிக்கரையோன் MJV

2 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நல்ல தகவல்கள் அனைத்தும் அருமை

புலவன் புலிகேசி said...

நண்பரே நான் காதல் கவிதைகள் அதிகம் எழுதியதில்லை. ஒன்றுதான் எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். என் முதல் கவிதையும் காதல் பற்றியது அல்ல...