Sunday, February 14, 2010

காணாமல் போன திண்ணைகள்...

திண்ணைக்கும் உண்டோ அடைக்குந் தாழ்
உழைப்புக்கும் சோம்பலுக்குமான இடம்!

ஐயன் திருவள்ளுவரை ஸ்பூஃப் செய்யுமளவுக்கு நான் ஆகிவிடவில்லை. ஆகவும் முடியாது. ஒரு முயற்சிதான். சரி சுயபுராணத்தை நிறுத்தி விட்டு இடுகைக்குள்ளே வருகிறேன்! ஆனால் இந்த திண்ணை பற்றி பேசும் பொழுது இது போன்ற எண்ணங்கள் தோன்றி மறைவதுண்டு. இந்த காலத்து கான்க்ரீட் காடுகளுக்கு மத்தியில் இது போன்ற விடயங்களை பார்ப்பதே அரிதாகப் போய் விட்டது. ஆனாலும் இப்பொழுதும் கிராமங்களுக்கு சென்று பார்க்கின்ற பொழுது, காத்தாட இந்த திண்ணையில உக்காந்துட்டு போ ராசா என பாம்படக் கிழவி சொல்வதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன. அந்த திண்ணை தான் பெரும்பாலும் பெருசுகளின் புகலிடம், வசிப்பிடம், அரட்டை அடிக்கும் இடம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். சிறு பிள்ளைகளுக்கு அதுவும் வீட்டை விட்டு வெளியே சென்று விளையாட அனுமதி மறுக்கபட்டவர்களுக்கு முக்கியமான ஆடுகளம் இந்த திண்ணை.

"எங்க பெருச காணும்", "எங்க போயிருக்க போகுது அந்த திண்ணையிலதான் காத்தாட உக்காந்திருக்கும்", "அடியேய் இங்க தாண்டி இருக்கேன். ", "அட அததான் நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன், அதுக்குள்ள எதுக்கு பாயற?" போன்ற வினா எதிர் வினாதல் விடைகளில் தான் திண்ணையில் பொழுதுகள் கழியும். அப்படி அங்கே வாசம் செய்யும் பெருசுகளுக்கும் அவர்கள் நண்பர்களுக்கும் திண்ணை தான் சரணாலயம். "வா ஆத்தா உன்ன நாச்சும் உன் புள்ள நல்லா வெச்சிருக்கானா? இல்ல திண்ணையோட வெச்சிருக்கானா?" என தன் பிள்ளை இருப்பதை தெரிந்து கொண்டே ஆத்தா வம்படிக்க ஆரம்பிப்பதும், தன் பிள்ளை வெளியே வருவது தெரிந்தவுடன், "அட நீ வீட்டுக்கு போகலையா இன்னும், இதுக்கு இங்கன நின்னு வாயாடர?" என்று பக்கத்து வீட்டு கிழவிக்கு பல்ப் கொடுப்பதுமாக நேரங்கள் சுவாரசியமாய் கழியும்..

அதே போல் பெயரன் பேத்திகளை பாதுகாக்கும் இடமாகவும் அந்த திண்ணை இருக்கும். அப்பாவிடமிருந்தும் அம்மாவிடமிருந்தும் தங்களைப் பாதுகாத்து கொள்ள சிறார்களுக்கு சரியான இடம் அது. ஏதாவது குறும்பு செய்து விட்டு, லேசாக 2 சாத்து சாத்துவதற்குள் ஊரையே கூட்டும் அளவுக்கு பெரும் கூச்சலிட்டு கொண்டே வரும் குழந்தைகள் தஞ்சம் புகுவது திண்ணையில் காத்தாட இருக்கும் பாட்டியிடம்தான். அது என்னவோ ராமர் போட்ட கோடு போல், யாரும் அப்பாவும் சரி அம்மாவும் சரி, அந்த கோட்டைத் தாண்டி உள்ளே வந்து பிள்ளைகளை கண்டித்ததாய் எனக்கு தெரியவில்லை. திண்ணை அப்பொழுதும் தன் வேலையை செவ்வனே செய்து விட்ட மகிழ்ச்சியில் அவர்களின் உரையாடலுக்கு காது கொடுக்கும்.

"ஏண்டா கண்ணு, அம்மா அடிக்குது உன்ன, என்ன செஞ்ச?", "இல்ல பாட்டி பக்கத்து வீட்டு மாங்காய பறிக்க போனேன், அதுக்குதான் அம்மா அடிக்குது", "அதெல்லாம் செய்யக் கூடாது கண்ணு, பாட்டி காசு தாரேன், போய் நல்ல மாவடுவா வாங்கிட்டு வா என்ன" என்று பல சமாதானங்களை பார்த்திருக்கும் அந்த திண்ணை. ஓடி போய் வாங்கி வந்த மாவடுவை அழகாய் கீரி லேசாக உப்பு மிளகாய் தூள் போட்டு அந்த திண்ணையிலிருந்தே பல பேருக்கும் அவை சென்று சேரும். இது போல எண்ணற்ற விடயங்களை கண்டு, தன்னகத்தே பல கதைகளையும் உள்ளடக்கி வைத்துதான் இருந்தது அந்த திண்ணை.

சில நேரங்களில் பாட்டியின் நினைவலைகளையும் தட்டி பார்க்கும் இந்த திண்ணை. "இதே திண்ணையிலதான் ராசாவ, என்னோட துரைய சாத்தி வெச்சிருந்தானுங்க பாவிங்க" என்று சொல்ல சொல்ல, கண்களில் கோர்க்கும் நீரைப் பார்த்து வெளிறிப் போகும் குழந்தைகளை பார்த்தவுடன், "தாத்தா இருக்காங்கள்ள உங்களப் பாத்துட்டே இருப்பாங்க, நல்ல பிள்ளையலா இருக்கணும் தெரிஞ்சிதா கண்ணுகளா?" என்று தேற்றிக் கொண்டு திண்ணையில் கண்ணசரும் பாட்டிக்கு சாப்பாடு எடுத்து வர, ஓடும் வாண்டுகள். அப்படி திண்ணை நம் முன்னோர் வாழ்வில் நீங்கா இடம் பெற்றிருக்கும் என்பது அந்த திண்ணைகள் காணாமல் போகும்போது தான் நினைவுக்கு வரும்...

ஆக இப்படியிருந்த திண்ணைகள் காணாமல் போக போக தான் இந்த காப்பகங்கள் அதிகப்பட்டு போயிருக்குமோ என்ற ஐயப்பாடு எனக்கு வெகு நாட்களாக இருந்து வருகிறது. மனித மனங்களில் ஈரம் வற்றிப் போன பிறகு, திண்ணைகள் இருந்தால் மட்டும் என்ன காப்பகங்கள் இருந்து கொண்டுதான் இருக்கும். இந்த இடுகையின் கருப்பொருளான திண்ணைக்கும் இந்த வரிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் ஏனோ அப்படி தோன்றுகிறது எனக்கு...

இனிமேல் எங்கேனும் செல்லும் தருவாயில் திண்ணையைப் பார்த்தால் சற்றே அமர்ந்து பார்த்து வாருங்கள். அவை பல கதைகளை சொல்லிப் பார்க்கும். அவைகளை அசைப் போட்டபடி மீண்டும் கிளம்பி இந்த கான்க்ரீட் காடுகளுக்கு திரும்பி வாருங்கள்.

- காவிரிக்கரையோன் MJV

6 comments:

அகநாழிகை said...

நல்லா எழுதியிருக்கீங்க.

//அதே போல் பெயரன் பேத்திகளை பாதுகாக்கும் இடமாகவும் அந்த திண்ணை இருக்கும்.//

சரிதான். திண்ணைகளைப் பற்றி எழுதி சிறுவயது நினைவுகளை கிளறி விட்டு விட்டீர்கள். பகிர்தலுக்கு நன்றி.

காவிரிக்கரையோன் MJV said...

வாங்க வாசுதேவன். வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி. முதல் முறை வந்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். தொடர்ந்து வாருங்கள்!!!

ராமலக்ஷ்மி said...

அருமையான நினைவுகள். அழகாய் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். திண்ணையைப் பற்றிய பதிவுகள் எல்லாம் ஓரிடமாக சேமிக்கப் பட்டு வந்த லிங்க் இது. இப்போது ஏனோ வேலை செய்யவில்லை. இங்கே பதிந்து வையுங்களேன் பின்னூட்டமாக. என்னுடைய திண்ணை :)!

புலவன் புலிகேசி said...

எங்க வீட்டுத் திண்ணைக்கும் நிறைய வரலாறு இருக்கு..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

எங்கள் வீட்டிலும் திண்ணை இருந்தது, இப்போது இல்லை. உங்கள் பதிவைப் படித்ததும் என் பழைய ஞாபகங்கள் துளிர்த்தன. பதிவுக்கு நன்றி!
(அந்தக் காலத்தில் இருந்த எதை நினைத்தாலும் இனிய நினைவலைகள்தான்)

காவிரிக்கரையோன் MJV said...

@ ராமலக்ஷ்மி - வாங்க ராமலக்ஷ்மி அவர்களே. உங்கள் திண்ணை பற்றிய இடுகையும் அற்புதம். பாலபாரதியின் வலைப்பூவிலும் என் இடுகையை இணைத்து விட்டேன். நன்றி உங்கள் வருகைக்கும் உற்சாகத்திற்கும்!

@ புலவன் புலிகேசி - வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி புலி. அப்படிப்பட்ட நினைவுகளையும் வரலாறுகளையும் மீட்டெடுக்கதான் இந்த இடுகை!!!

@ பெயர் சொல்ல விருப்பமில்லை - வாருங்கள். வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி. அந்த கால நினைவலைகளை மீட்டத்தான் இந்த இடுகை....