Monday, February 15, 2010

அய்யனார் கம்மா - இது விமர்சனம் அல்ல!!!இந்த இடுகையை எழுதுவதற்கு நிறைய நாட்கள் எடுத்து கொண்டேன். அகநாழிகை பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட, பிரபல பதிவர் நர்சிம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு அய்யனார் கம்மா. அவரின் எழுத்து நடை மிகவும் ரசனைக்குரியது. அவருடைய ரசனையின் ஊடே நம்மையும் இட்டு செல்வார். அற்புதமான மொழி ஆளுமை கொண்டவர். எந்த கதையை சொல்ல முற்படுகிறாரோ அந்த கதையை பின் நினைத்து பார்க்கையில் ஆழ் மனதில் பதியும் படி சில பாத்திரங்களை செதுக்கி விடுகிறார்.

இவரின் கூரிய சிந்தனையும், மனிதர்களை, அவர்களின் பழக்கத்தை மொழி நடையை மிகவும் சிரத்தை எடுத்து கவனித்து இருப்பார் என்பது என்னுடைய எண்ணம். இல்லையென்றால் எந்த மொழி நடையிலும், எப்படிப்பட்ட பாத்திரப்படைப்பிலும் நிலைத்து நிற்க முடியாத எழுத்தாகப் போயிருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஒவ்வொரு கதையையும் மிகுந்த ஆர்வத்துடன் படிக்க வைக்கிறார். எப்படிப் பார்த்தாலும் விரு விருவென்று அடுத்தடுத்த கதைகளை படிக்கத் தூண்டியிருக்கும் வேகம் இவருடையது. ஆனால் என் சிற்றறிவுக்கு எட்டிய, என்னால் படிக்கும் பொழுதுகளில், ஒவ்வொரு கதைக்கும் நச்சென்று ஒரு திருப்பம் இருக்கிறது. ஒரு வேலை இப்படிப்பட்ட திருப்பங்கள் இல்லாமல் கதைகளை சொல்ல முடியாதோ என்று கூட நினைத்தேன். பின்பு, சிறுகதைகள் இப்படிப்பட்ட திருப்பங்களுக்கு உட்பட்டு இருந்தால் தான் ஒரே மூச்சில் வாசகர்களை படிக்க வைக்க முடியும் என்பதைத் தெரிந்து கொண்டேன், அன்பினை முடிக்கும் பொழுது!

இதை நர்சிம் அவர்கள் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டு சிறுகதைகளை செதுக்கி இருக்கிறார். அவருக்கு ஒரு சபாஷ். இந்த புத்தகத்தை வாங்கிப் படிக்கும் முன்னரே, அவரின் எழுத்துக்களை வாசித்து இருப்பதால், கண்டிப்பாக ஏமாற்றி விட மாட்டார் என்ற எண்ணம் இருந்தது. மனிதர் நினைத்தது போலவே நச்சென்று கதைகளை லாவகமாய் நகர்த்துகிறார். ம'ரணம்', சந்தர்ப்ப'வதம்' போன்ற கதைகள் இதை வெகுவாக உணர்த்துகின்றன. எல்லாக் கதைகளுக்கும் ஒரு திருப்பம் இருக்கும் இல்லையென்றால் பெயர்க்காரணமாய் அந்த கதை முடிந்திருக்கும். அய்யனார் கம்மா என்ற கதையின் பெயரையே புத்தகத்துக்கு வைத்து வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த கதைக்கு ஏற்றார் போலவே புத்தகம் முழுவதுமே நான் சொன்னது போல் சுறுசுறுப்பாக படிக்க வைக்கத் தவறவில்லை!

கண்ணால் காண்பது யாவும் பொய் என்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கும் அய்யனார் கம்மா கதை அற்புதமாக முடிகிறது. உள்ளதை உண்மையாக சொல்கிறேன், மீண்டும் 2 முறை கூர்ந்து கதையின் இறுதிப்பாகத்தை படித்த பின் தான் அந்த கதையை புரிந்து கொள்ள முடிந்தது. பின் யோசிக்கையில் தான் ஓ இததான் சொல்ல வருகிறார் என்று வாசகனை எழுந்து உட்க்கார வைத்த முடிவு. ஆதலால் கதையில் இடையிடையே வைக்கப் பட்டிருக்கும் சின்ன சின்ன திருப்பங்களே கதையின் பெரிய திருப்பத்திற்கு உதவியாய் இருந்திருப்பது முற்றிலும் உண்மை. சஞ்சீவியின் இயல்பான செயல்கள் நம்மை ஈர்க்கின்றன.

தந்தையுமானவன், இதுக் கதையா என்பதே எனக்கு உறுத்தலாக இருக்கிறது. ஒரு வேலை இது உண்மையாக இருக்குமோ என்பது என் ஐயம். ஏனென்றால் ஒரு முறை நர்சிமின் வலைப்பூவில் ஓர் இடுகை இட்டிருந்தார். கைகளை வைத்து என்னென்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி. கடைசி வரியில் கைகளைக் கொண்டு ஒரு பிஞ்சிக் குழந்தையையும் மண்ணுக்குள் புதைக்க முடியும் என்பது போல் எழுதியிருந்தார். அது உண்மையாக இருக்குமென்றால் மனதின் சோகங்களை அப்படியே வடித்திருக்கிறார். மேலும் இதைப் பற்றி இங்கே குறிப்பிட எனக்கு விருப்பமில்லை.

திகட்டத் திகட்டக் காதலி, இந்த கதையில் காதல் உள்ளங்களை நிறம்ப தளும்ப விட்டிருக்கிறார். பி.கே மனதில் நிற்கிறார். என்ன ஆகுமோ இந்த காதல் என்று யோசிக்கையில் நச்சென்று ஒரு திருப்பம். கதையமைப்பில் நன்றாக செல்கிறது தெளிந்த நீரோடையாய் கதாபாத்திரங்கள். சரி இப்படியும் ஒரு காதலை வெற்றி பெற வைக்கலாமா!!! கடைசி சில வரியில் தெரிந்திருக்கும் நக்கல் பி.கே வை உயர்த்தி நிறுத்தி இருக்கிறது!

முரட்டுக் கறுத்தப் பாண்டியும் செம்பட்டக் கிழவியும் சேர்ந்து செதுக்கப்பட்டிருக்கும் கதை செம்பட்டைக் கிழவி. கறுத்தப் பண்டியின் துடுக்குத்தன்ம் மனதில் நிற்கிறது. செம்பட்டைக்கிழவியின் பாசம் பதற வைக்கிறது. இன்னுமொரு நல்ல கதையை படித்த வேகத்தில் பக்கங்கள் திருப்பினால் வருகிறது அழகாய் ஆனால் ரணமாய் ஆழ் மனதில் காயம் ஏற்படுத்தும் கதை ஞாபகமாய் ஒரு உதவி என்கிற கதை. மனதை நெருட வைக்கும் முடிவு. காலம் தாழ்த்தலின் இழப்பு வலிக்கிறது. கல்லூரி நட்பும் மற்றும் அதன் ஆழ் மன நினைவலைகள் அனைத்தையும் சட்டென்று ஒரு கணம் கண் முன் காட்டும் கதை.

ம'ரணம்' கதையைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் இரு நண்பர்களின் நட்பு மற்றும் மரணத்தை எதிர்நோக்கும் நண்பரின் கதை. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் இந்த சிறுகதைத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்துப் போன கதை தலைவர்கள். அதை பற்றியும் இங்கே சொல்லப் போவதில்லை படியுங்கள் உண்மையில் இது போன்ற பல தருணங்களில் நாமும் மாட்டியிருக்கிறோம் என்பதை உணர்வீர்கள். சந்தர்ப்ப'வதம்' கதை மிக இயல்பாய் இருக்கிறது. மேலும் சுவாரசியமாய் மனக்குரங்கு, மா'நரகம்', வெத்தலைப் பொட்டி போன்ற கதைகள் இருக்கின்றன. அன்பின் என்ற கதை, ஒரு கவிதைக் கதையோ என்று தோன்ற வைக்கிறது. ஆழமான வார்த்தைகள், அன்பின் வெளிப்பாடு என்று நன்றாக முடிகிறது அய்யனார் கம்மா.

எனக்கு மனதில் பட்டதை இங்கே பகிர்ந்திருக்கிறேன். இது விமர்சனம் அல்ல. என் பார்வையில், சக பதிவரின் புத்தகத்தில் படித்ததை சொல்லியிருக்கிறேன். தயவு செய்து என்னை மாட்டி விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!!! மேலும் நிறைய பதிப்பில் வர நர்சிமுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உள்ளதை உண்மையை பட்டென்று சொல்லத் தயங்காத உங்கள் இடுகைகள் தான் என்னை கவர்கின்றன. மாற்றிக் கொள்ள வேண்டாம் இந்த பழக்கத்தை. நர்சிமின் கவிதைப் படைப்பு ஒன்று வருகிறது என்று சொல்கிறார்கள். உண்மையா நர்சிம்? அகநாழிகை பொன்.வாசுதேவனுக்கு இந்த இடத்தில் என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கீழ் வருபவை எந்த விதமான ராங்கிங்கும் இல்லாமல் எனக்கு மிகவும் பிடித்த மூன்று கதைகள்!தலைவர்கள், சந்தர்ப்ப'வதம்' மற்றும் செம்பட்டை கிழவி.

திரை விமர்சனம் பாணியில் ஒரு வார்த்தை, அய்யனார் கம்மா - ஆழ்மனங்களின் ஆச்சர்யம்!
டிஸ்கி - இந்த இடுகையில் அடிக்கடி பயன்பட்டிருக்கும் நச் என்ற வார்த்தைக்கு முழுக் காரணம் நர்சிம், அவ்வளவு நச்சுகள் வைத்திருக்கிறார் கதைகளில்!!!

- காவிரிக்கரையோன் MJV

4 comments:

புலவன் புலிகேசி said...

இன்னும் படிக்கல...படிக்கிறேன்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

நானும் தான்.. இன்னும் படிக்கலா.. படிச்சிட்டு வரேன்...

அகநாழிகை said...

வாசித்ததுடன் அதைப்பற்றிய உங்கள் ரசனையான எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி காவேரிக்கரையோன் MJV.

அகநாழிகையின் மற்ற வெளியீடுகளையும் வாசித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்வீர்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நன்றி.

-பொன்.வாசுதேவன்

காவிரிக்கரையோன் MJV said...

@ புலிகேசி - வாங்க புலி. மிகவும் சுவாரசியமாய் இருக்கும். படியுங்கள்.. வருகைக்கு நன்றி.

@ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி - வருகைக்கு நன்றி பிரகாஷ். புத்தகம் நன்றாக இருக்கிறது. படித்து பாருங்கள்..

@ அகநாழிகை - வாங்க வாசுதேவன். வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி. கண்டிப்பாக எழுதுகிறேன்! நிறைய இருக்கிறதே இன்னும். பா.ராவின் கருவேல நிழல் மற்றும் கூர்தலறம், கோவில் மிருகம், நீர்க்கோல வாழ்வை நச்சி என்று. ஒவ்வொன்றாய் எழுதுகிறேன்....