Sunday, February 28, 2010

சச்சினுக்கு எழுந்து நின்று ஒரு சலுயூட்!!!1989களில் கிரிக்கெட் உலகத்தை ஆக்கிரமித்து இன்றளவும் அதே தாக்கத்துடன் ஆதிக்கம் செலுத்தி வரும் சச்சின் டெண்டுல்கரின் சாதனைப் பட்டியலே இன்னொரு சாதனையாய் மாறிக் கொண்டிருக்கிற வேலை. சச்சினின் காயங்கள் காரணமாக சரியாக ஆட மாட்டார். இனி அவ்வளவுதான், பூட்ஸை கழற்றி ஆணியில் மாட்டும் தருணங்கள் வந்து விட்டது என்று பலரும் பலவாறாக பேசத் தொடங்கி சுமார் ஐந்து வருடங்கள் முடிந்திருக்கும். இன்றைக்கு அப்படி சொல்லியவர்களில் பல பேர் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் சச்சின் இன்றைக்கும் இங்கே இருந்து கொண்டு தான் இருக்கிறார். "எங்க வீட்டு பிள்ளையும் கச்சேரிக்கு போகுது" என்று இல்லாமல், அவரும் ஒவ்வொரு சாதனையாக செய்து கொண்டே முன்னெறிக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு இத்தகைய புகழும் பெருமையும் எப்படி கிடைத்திருக்கிறது? அதற்கு காரணம் அவர் எடுத்த ரன்களோ ஈட்டித் தந்த வெற்றிகளோ மட்டுமில்லை, அவரது தனி மனித ஒழுக்கம், எந்த நிலைக்கு சென்றிருந்தாலும் செருக்கோ ஆணவமோ இல்லாத நடத்தை, மனதில் பட்டதை கூறும் நடத்தை இவைகள் அனைத்துமே காரணங்கள் தான். எத்தனை முறை தனி நபர் தாக்குதலில் அகப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு முறையும் தன் மட்டையை பேச வைப்பதே சச்சினுக்கு பிடித்தமான பொழுது போக்குகளில் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

சிறு வயது முதலே இந்த விளையாட்டின் மீதுள்ள பற்றுதான் இந்த நிலைக்கு இவரை உயர்த்தி இருக்கிறது. தன்னுடைய குருவை மிகவும் மதிக்கக் கூடிய சீடர். இதைப் பல முறை ரமாகாந்த் அச்சேர்கர் அவர்கலே பல முறை பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார். சிம்ம சொப்பனம் என்று சொல்லுவார்களே அது போல திகழ்ந்து வருகிரார் சச்சின். எந்த நாட்டு காப்டனும் முதலில் சச்சின் ஆட்டமிழந்தால் நன்றாக இருக்கும். மிக குறைந்த நேரத்தில் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறன் அவருக்கு உண்டு என்பதனை மிகவும் உணர்ந்து கூறுவார்கள். இப்படியாக ஷார்ஜாவில் கிளப்பப்பட்ட புயல் இன்றளவும் சூறாவளியாய் சுழன்று வீசிக் கொண்டிருக்கிறது.

சச்சினின் ஆட்டத்தை பார்ப்பதற்கு மட்டுமென்றே ஒரு பட்டாளம் இருக்கிறது. தலைவர் என்ற சொல் எங்கள் விளையாட்டு சம்பந்தப்பட்ட உரையாடல்களில், சச்சினை மட்டுமே குறிக்கும். எனக்கு சச்சின் அறிமுகம் 1994ஆம் வருடம் எங்கள் பக்கத்து வீட்டு அண்ணனால் கிடைத்தது. அப்பொழுதெல்லாம் டிவி பெட்டியின் முன் அதிக நேரம் இருப்பது சச்சினுக்காக மட்டும்தான். ஹிந்தியில் வேறு வர்ணனை போகும். எப்பொழுதும் எப்பாடுப்பட்டாவது சச்சினின் படங்களை கண்ட படிக்கு எடுத்து வைத்திருப்பேன். முக்கால் வாசி பேரின் அறைக்கதவுகளில் சச்சினின் ஆக்கிரமிப்பு இருக்கும், இருந்திருக்கும்!!! எத்தனை ஆட்டங்களில் சச்சினை வாய் பிளந்த படி பார்த்து அமர்ந்திருப்போம்.

நன்றாக நினைவு தெரிந்து பார்க்க ஆரம்பித்த ஆட்டங்கள் 96 உலகக்கோப்பை போட்டியும் அதன் பிறகு இன்று வரை உள்ள ஆட்டங்கள் என்று சொல்லலாம். அந்த போட்டியில் அவர் இலங்கைக்கு எதிராக விளாசிய 137 ரன்கள் தான் பல நாட்களுக்கு அவருடைய அதிகபட்ச ஒரு நாள் போட்டி ரன்களாக இருந்தது. பின்னர் ஷார்ஜாவில் கிளம்பிய சூறாவளியின் போது 143 ரன்கள் எடுத்தாரே அது வரை அதிகப்பட்சமாக இருந்தது. அந்த தேதியை என்னால் மறக்க இயலாது. அதற்கு அடுத்த நாள் எனக்கு கடைசி எஸ்.எஸ்.எல்.சி தேர்வு. முடித்து விட்டு ஓடி வந்தமர்ந்து பார்த்த ஆட்டம். இந்த இறுதி ஆட்டத்திலும் பாடு பிரமாதமாக ஆடி 134 ரன்கள் குவித்தார். ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி, அன்று சச்சினின் பிறந்த நாளும் கூட. இந்த ஆட்டத்தை என் மனைவிக்கு பிறந்த நாள் பரிசாக சமர்ப்பிக்கிறேன் என்றார். அந்த வயதில் அது ஒரு இனம் புரியாத உணர்வு. சச்சினைப் பற்றி தப்பாக யாரும் பேசினால் சண்டை வரும் அளவிற்கு சென்ற நாட்கள்!!!

சச்சினின் ஆட்டத்தை நேரில் பார்க்க பல முறை ஆசைப்பட்டும், முதல் ஐ.பி.எல் போட்டியின் போது தான் சச்சினின் ஆட்டத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பை பெற்றேன். என்ன அருமையான ஆட்டம். சச்சின் மைதானத்தில் வந்தவுடன் ஒரு மிகப்பெரிய ஓசை அலை எழுந்ததே அதை போன்றதொரு சத்தத்தை நான் வேறு எங்கேயும் எந்த மனிதருக்கும் கேட்டதில்லை. மற்ற எந்தவொரு வீரருக்கும் அப்படி மைதானம் அதிரும்படியான சத்தம் கேட்கவில்லை, குஷிப்படுத்தும் பெண்களைத் தவிர!!! இத்தனைக்கும் அது பெங்களூரில் நடந்த ஆட்டம், ராயல் சாலஞ்சர்களுக்கும், மும்பை இந்தியன்சுக்கும் இடையே நடைபெற்ற போட்டி. அப்பொழுது ஆரம்பித்திருந்த பழக்கமான, இந்திய வீரர்களையே பிற மாநிலத்தில் ஆடிய பொழுதுகளில் பார்வையாளர்கள் ஆதரவு கொடுக்க வில்லை. அதையும் மீறி இந்தியர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பவர் சச்சின்...

இங்கே விடுங்கள். எந்தவொரு நாட்டு வீரருக்கும் இவ்வளவு மரியாதை கொடுத்த நடத்தியதில்லை ஆஸ்த்ரேலியர்கள். ஒவ்வொரு முறை சச்சின் களமிறங்கும் பொழுதும் அப்படி ஒரு கைத்தட்டல் வாங்கியது சச்சினின் ஆட்டத் திறமையும், அடக்கமும் மட்டுமே காரணம். 50 ஆட்டங்கள் ஆடி விட்டு, உலகமே தங்கள் கையில் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பல வீரர்களுக்கு மத்தியில் சச்சின் பல பேருக்கு ஒரு புரியாத புதிர்தான். அனுபவம் வர வர, அதிரடி ஆட்டத்தை குறைத்து கொண்ட சச்சின், அதிக ஆபத்தில்லாமல் ரன்களை சேர்க்க ஆரம்பித்தார். சிறு மாறுதல்கள், சிறு தியாகங்கள் என்று சச்சினின் ஆட்டத்தில் சிற்சில மாற்றங்கள் வந்த வண்ணம் இருந்தன 2000ஆவது ஆண்டிலிருந்து. இப்பொழுது மறுபடியும் இரண்டு வருடங்களாக பின்னி எடுத்து கொண்டிருக்கிறார்.

இன்னும் எத்தனை பேர் இவரை போதும் ஆட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லப் போகிறார்களோ, இன்னும் எத்தனை முறை அவர்களின் வாயை அடைக்க எந்தெந்த நாடுகளை சேர்ந்தவர்கள் வாங்கிக் கட்டி கொள்ளப்போகிறார்களோ!!! ஒவ்வொரு முறை இப்படி சிலர் சொல்லும்பொழுதும் சச்சினிடம் கேட்டால், அது அவர்களுடைய கருத்து அதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டு பின்னர் விளையாடி அவர்களின் மூக்குடைப்பார். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தன் வசீகரமான ஆட்டத்தால் கவர்ந்து வைத்திருக்கிறார். 90களில் சச்சின் ஆடவில்லை என்றால் கொஞ்சம் கூட இந்திய அணிக்கு வாய்ப்பில்லை என்கிற அளவுக்கு இந்திய அணியின் ஆட்டம் இவரின் ஆட்டத்தை மட்டுமே நம்பியிருந்தது. பின்னர் கங்கூலி, திராவிட் போன்ற ஆட்டக்காரர்கள் வந்ததால் சற்று சச்சினின் பளு குறைய ஆரம்பித்திருந்தது 90களின் கடைசி சில வருடங்களிலிருந்து...

டெஸ்ட் போட்டியின் அசாதாரணமாக விளையாடி 4 ரன்கள் அடித்தால் தன்னுடைய சராசரி 100 தொட்டிருக்கும் என்றிருந்த நிலையில் பூஜியத்தில் ஆட்டமிழந்து 99.94 ரன்கள் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் என்று எடுத்து வைத்திருந்த டான் பிராட்மேன் தன்னை பாராட்டியதை (சச்சினின் ஆட்டம் பார்ப்பதற்கு என் ஆட்டம் போலவே இருக்கிறது என்று டான் அவருடைய மனைவியிடம் கூறியிருக்கிறார்) இன்றளவும் சச்சின் சொல்லும் பொழுதினில் ஒரு குழந்தையின் குதூகலத்தை காண முடியும். ஷேன் வார்னே ட்விட்டரில் தன் நண்பர் 200 ரன்களை அடித்திட வேண்டும் என்று தொடர்ந்து ட்விட்டிக் கொண்டே இருந்திருக்கிறார். பொதுவாக ஆஸ்த்ரேலியர்கள் இவ்வாறு இருப்பதில்லை. அவர்களுக்கு அவர்களுடைய ஆட்டம் தான் பெரிதெனக் கொள்ளும் ஒரு மனோபாவம் உண்டு, அப்படிதான் அவர்களும் ஆடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் கூட வாய் விட்டுப் பாராட்டுகிறார்கள் என்றால் சச்சின் ஒரு சகாப்தம் தான் என்பது நமக்கெல்லாம் விளங்கும்.

கண்டிப்பாக எதிர் வரும் காலங்களில் நம் பெயரன்களுக்கோ, பெயர்த்திகளுக்கோ, சச்சினின் ஆட்டத்தை பார்த்த வகையில் சொல்லி காட்டலாம். அந்த காலத்துல சச்சின் அப்படினு ஒரு ப்ளேயர் இருந்தாரு பாரு என்று. இவர் வைத்திருக்கும் சாதனைகளை முறியடிக்க இந்த தலைமுறை ஆட்டக்காரர்களில் பான்டிங்கால் மட்டுமே முடியும். அதுவும் சச்சின் உடனடியாக ஓய்வு பெற்றால் தான் உண்டு. இனியும் ஒருவன் பிறந்து தான் வர வேண்டும்... அல்லது நம் வாழ்நாளில் அந்த சாதனைகள் முறியடிக்கப்படாமலேயே போகலாம். அந்த சாதனைகள் முறியடிக்கப்பட்டால் விளையாடிற்கு பெருமை, இல்லையென்றால் சச்சினுக்கு பெருமை என்ற வகையில் எது நடந்தாலும் என்னைப் போன்ற ரசிகனுக்கு பரவாயில்லைதான்.

ஒரு நாள் போட்டியில் 200 ரன்களைக் குவித்து உலக சாதனை. அதே நாளில் க்ரிக் இன்ஃபோ இணைய தளம் 45 மில்லியன் ஹிட்டுகளை பார்த்திருக்கிறது. பல சர்வர்களை செயல் இழக்க செய்தார் சச்சின் அன்று என்று பெருமையுடன் சொன்னார் அந்த இணைய தளத்தின் ஆசிரியர் சம்பித் பால். இப்படி பல சாதனைகளை படைத்து வரும் சச்சின் நம் தேசத்தின் பொக்கிஷம். உண்மையான பிரதிநிதி எல்லா விடயங்களுக்கும். மேலும் பல சாதனைகளை அவர் கையில் வைத்திருக்கிறார். இப்பொழுதும் 200ஐ அடித்த கையோடு இதை வெகு சீக்கிரம் முறியடிப்பார்கள், அது ஓர் இந்தியனாய் இருக்க வேண்டுமென்பது என் ஆசை என்றும் தெரிவித்திருக்கிறார்.

பெயரும் புகழும் வந்தவுடன் கண் மூடி தங்களை சுற்றி ஒரு வட்டம் வந்து விட்டதாக எண்ணும் பல பேர்களில் சச்சின் தன்னை எப்பொழுதும் போல ஒரு சராசரி மனிதனாக காட்டிகொள்வதும் நடந்து கொள்வதும்தான் இத்தனைக்கும் மிகப்பெரிய காரணமாக இருக்க முடியும் என்று கிரிக்கெட் வர்ணனையாளரும் சச்சினின் நண்பருமான ஹர்ஷா போக்ளே தெரிவித்திருக்கிறார். கடைசியாக இத்தனை வெற்றிகளுக்கும் பின்னால் அமைதியாக இருந்து சச்சினை நமக்கு தந்திருக்கும் அவர் மனைவி, பிள்ளைகள் மற்றும் அவரின் குடும்பத்தருக்கும் கண்டிப்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மென்மேலும் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் சச்சின். உங்களின் ஒரு ஆசைதான் எங்களுக்கும் பல நாட்களாக உள்ளது. உங்கள் ரன் குவிப்பில் 2011 உலக கோப்பையை கொண்டு வாருங்கள் தோனியின் தலைமையில்...

- காவிரிக்கரையோன் MJV

5 comments:

TechShankar @ டெக்‌ஷங்கர் said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

Heam said...

//அந்த தேதியை என்னால் மறக்க இயலாது. அன்று எனக்கு கடைசி எஸ்.எஸ்.எல்.சி தேர்வு. முடித்து விட்டு ஓடி வந்தமர்ந்து பார்த்த ஆட்டம். ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி, அன்று சச்சினின் பிறந்த நாளும் கூட.//

Wow.. i too was attending my sslc finals that day .. but that match was final and the 143 desert strom match is the previous one .. in final if am correct he was out for 139 .

காவிரிக்கரையோன் MJV said...

வாருங்கள் techshankar . வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
வாருங்கள் Heam . ஆம் அன்றைய இறுதி போட்டியில் அவர் 139 ரன்கள் தான் எடுத்தார். பிழை திருத்தப்பட்டு விட்டது!!! வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி...

Kiruthikan Kumarasamy said...

தோழா... அது 134.

1994ல் உங்களை இழுத்து கிரிக்கெட்டை ரசிக்க வைத்தார். 1996ல் என்னை. இதேபோல் பலரை. சேவாக், தோனி, யுவராஜ் என்று ஒரு பட்டாளமே இவரைப்பர்த்துத்தான் மட்டை தூக்கியது. 90களில் இந்தியாவின் அடுத்த தலைமுறைக்கு உதாரணமாக இருந்த சச்சின் இந்த 2010ல் அடித்த 200 மூலம் இன்னொரு அடுத்த தலைமுறைக்கும் முன்னுதாரணமாகிவிட்டார்

காவிரிக்கரையோன் MJV said...

தலைவரை பற்றி எழுதும் போது சில விடயங்களை மறந்து விடுகிறேன். மாற்றி விட்டேன். இறுதி போட்டியில் 134 , அதற்கு முந்தைய போட்டியில் 143 . சரிதானே நண்பா. ஆம் இந்த தலைமுறைக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார் சச்சின்.