Sunday, February 28, 2010

கோழி...

கோழி
கோழியினால் வெகு தூரம்
பறக்கவும் முடியாது,
பின் இறக்கை எதற்கு?
அன்று மதியம் உண்ட இறைச்சிக்காக
கடை சென்ற நேரத்தில் விடை கண்டு
கொண்டேன்,
இரு இறக்கைகளை வாகாய்ப் பிடித்து
கழுத்தில் கத்தி வைக்கையில் சொன்னார்,
"சார் தள்ளி நில்லுங்க, ரத்தம் தெறிக்கும்"...

ஆத்தா
கோவில்களில் கூட தர்மத்தை நிலை
நாட்ட நம்மை விட்டால் யார் இருக்கிறார்கள்?
கருணையில் சொல்வோம், "ஆத்தா இன்னும்
சம்மதம் கொடுக்கல",
மஞ்ச தண்ணிய அது மேல ஊத்தி
கேளுங்க, நீர் பட்டவுடன்,
"ஆத்தா சம்மதம் சொல்லிட்டா",
அடுத்த கணம் ஆடிய ஆட்டின்
தலை துடிக்கும் தரையில்,
கேட்டுப் பாருங்க ஆத்தாதான்
சம்மதம் கொடுத்தா...

திருமணம்
பிரம்மச்சாரி நண்பர்களுக்கு
அடிக்கடி சொல்வதுண்டு உங்கள் திருமணங்களை
விடுமுறை நாட்களில் வையுங்கள் உங்களுக்கு
புண்ணியம் கூடுமென்று,
ஒரு நாள் விடுப்புக்கு இத்தனை ஆர்ப்பாட்டம்
தேவை இல்லை என்பான் என் நண்பன்,
சென்ற வாரம் வந்த கைபேசி அழைப்பில்,
இப்போது மணமாகிவிட்ட அதே நண்பன்,
வேலை நாளில் வைக்கப்பட்ட இன்னொரு
திருமணத்திற்காக சலித்துக் கொண்டான்!!!

விற்பனை
கடற்கரைக்கு போகலாம் காற்று
வாங்கலாம் என்று அந்த பக்கம்
பயணித்தோம்,
இந்த கடற்கரை விற்பனைக்கு அல்ல
என்று அடிகோடிட்ட வாசகம் பார்த்தேன்,
ஏதோ உணர்ந்தது போல், தூக்கி
எறிந்த பிளாஸ்டிக் பாட்டிலை
எடுத்துக் கொண்டு நடந்தேன்!

பயணம்
கசங்கிய உடம்பும் அழுக்கேறிய
தோற்றமுமாய் ஓர் உருவம் என்னுடனே
பயணித்தது,
பேரூந்து, சாலை, உணவகம், அலுவலகம்
என்று எல்லா இடங்களிலும் குறுக்கும்
நெடுக்குமாய், வலம் இடமாய் தொடர்ந்தது
அந்த உருவத்தின் பயணம்,
ஆனால் வீட்டினுள் வருவதில்லை அது,
மெல்ல உணர்ந்து கொண்டேன்,
வாசலில் காத்து காத்து இன்னும்
இளைத்துக் கொண்டிருந்தது எங்கள் வீட்டில்
தொலைந்தே போன அன்பு...

- காவிரிக்கரையோன் MJV

3 comments:

Madurai Saravanan said...

கோழி, கடற்கரை பிளாஷ்டிக் பாட்டில் அருமை. கவிதை அனைத்தும் நன்றாக வந்துள்ளது. வாழ்த்துக்கள்.

தியாவின் பேனா said...

அருமை

காவிரிக்கரையோன் MJV said...

@ Madurai Saravanan - வாங்க சரவணன். வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி.
@ தியாவின் பேனா - வாங்க தியா. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.