Monday, March 8, 2010

எம்.ஜேயின் மிச்ச சொச்சங்கள் - 07/03/2010


கடந்த வாரம் இந்திய ஹாக்கி அணியினர், பாகிஸ்தானுடன் காட்டிய வீரத்தோடு, பிறகு வந்த அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவினர். அதில் சில போட்டிகள் சற்று நிதானித்து ஆடியிருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்க முடியும் என்று அணியின் பயிற்சியாளர் தெரிவித்தார். ஒரு வேலை முன்பிருந்தே நல்ல விதமாக பயிற்சி எடுத்திருந்தால் நன்றாக விளையாடி இருப்போமோ என்ற ஐயப்பாடு எழுகிறது. சரி இந்த உலகக் கோப்பைதான் இப்படியாகி விட்டது. இனியாவது ஹாக்கி போட்டிகளுக்கு ஓர் விடுவு காலம் பிறக்கிறதா என்று பார்ப்போம். இந்திய ஹாக்கி சம்மேளனத்தை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு வேலை வீரர்கள் ஒழுங்காக விளையாடி இருந்தால் நல்ல வசதிகள் செய்து கொடுப்பார்களா? இதெல்லாம் மென்பொருள் கோடிங்கில் ரிகர்சிவ் கால் என்று ஒரு முறை சொல்லுவார்கள். அது போல தான் என்று நினைக்கிறேன். மீண்டும் மீண்டும் தங்களுக்குள்ளேயே குறை கண்டுபிடித்து அடித்து கொண்டே இருப்பது! சரி கண்டிப்பாக ஒரு நல்ல எதிர்காலம் ஹாக்கிக்கு உண்டு என்று நம்புவோம்.

கடந்த வாரம் ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை வாசித்தேன். அதன் தலைப்பு, "அமைதியை ருசித்திருக்கிறீர்களா?" என்பதுதான். அவ்வளவு அற்புதமாக அந்த கட்டுரை எழுதப்பட்டிருந்தது. வாழ்க்கையின் சத்தங்களூடே காணாமல் போகின்றோம் நாம் தினமும். உறக்கத்தின் போது உள்ள அமைதியை நாம் உணர முடிவதில்லை. அதை நம் உடல் தான் அனுபவிக்கிறது. நம்மை சுற்றி கலை அம்சத்துடன் நடக்கும் எதுவும் நம் கண்களில் புலப்படுவதில்லை. ஏனென்றால் நாம் விழித்துக் கொண்டே உறங்குபவர்கள். சப்த நாடியும் ஒடுங்கி போனால் மட்டுமே சப்தத்தின் ஆதிக்கம் நம் வாழ்விலிருந்து அடங்கிப் போகும் என்பதை புரிய வைத்திருக்கிறது இந்த கட்டுரை. ஒரு நாளும் மழையின் இசையையோ, ஒரு குயிலின் கூவலையோ, அமைதியான இரவின் நிசப்தத்தையோ ரசித்ததில்லைதான். ஆனால் இப்படிப்பட்ட விடயங்கள் நகரத்தில் மறைந்தே போய் விட்டது என்றுதான் எனக்கு தோன்றுகிறது. இல்லையென்றால் ஏதாவது ஒரு தருணத்தில் கண்டிப்பாய் ரசித்திருப்போம். இப்பொழுது கூட, அறையின் மின்விசிறி சத்தமும், சிறிது நேரத்திற்கு முன் குழந்தையை உறங்க வைக்க ஆட்டிய தொட்டிலின் ரீங்காரத்திலும் கண்டிப்பாய் மெய் மறந்து போனேன். இப்படிப்பட்ட அமைதியை ருசித்துதான் பார்க்க வேண்டும்...

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும், ரியாலிடி நிகழ்ச்சிகளை பற்றிய ஓர் விவாதம் அனல் பறக்க ஒரு தொலைக்கட்சியில் அரங்கேறிக் கொண்டிருந்தது. அதில் முக்கியமாக மிகவும் சிறு குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி நடத்துவதை தான் பெரும்பாலானோர் எதிர்த்தபடி பேசி வந்தனர். அதில் 10 மாத குழந்தையை நடிக்க வைத்த தாய் சொல்கிறார், "அந்த குழந்தைக்கு நான் யாரென்றெல்லாம் தெரியாது. என்னிடம் இருந்தாலும் அழும், ராக்கியிடம் இருந்தாலும் அழும். அதற்கெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது" என்கிறார். இந்த வாதத்திற்கு பல கோணங்களில் பொருள் தேடலாம். பிறந்த குழந்தைக்கு பிறந்த சில நாட்களிலேயே தாய் யாரென்பது தெரிந்து விடும் என்பது மருத்துவ ஆய்வில் கண்டறிந்த உண்மை. அப்படியிருக்க, இப்படி பேசுகிறார் அந்த தாய். நிகழ்ச்சி நடக்கையில் அந்த நடிகை, இந்த குழந்தையெல்லாம் என்னால சமாளிக்க முடியாது என்றபடி குழந்தையை தூக்கிப் போடுவது போலவும், அதைப் பார்த்து அதே தாய் கண் கலங்குவது போலவும் காட்டுகிறார்கள். என்ன இருந்தாலும் தன் குழந்தைக்கு தன்னைத் தெரியாது என்று மட்டும் சொல்லியிருக்க வேண்டாம். மற்றவை அவர்களின் சொந்த விடயம், நடிக்க அனுப்பியிருக்கவே கூடாது என்றெல்லாம் அந்த பெண்ணிடம் கேள்வி கேட்க முடியாது, அது கூடவும் கூடாது!!!

சென்ற வாரம் ஓர் ஆங்கில நாவல் படித்தேன். அந்த நாவலின் பெயர், "The Curious Incident of Dog in the night Time". இந்த நாவலை மார்க் ஹாடன் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நாவலின் கதாநாயகன் கிரிஸ்டோபர் பூன் ஆஸ்பர்ஜெர் சிண்ட்றோம் என்ற நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு 15 வயது இளைஞன். இந்த நோய் உள்ளவர்கள் சில விடயத்தை மிகவும் அதிக ஆர்வத்துடன் செய்வார்களாம். உதாரணத்திற்கு கிரிஸ்டோபர் அதீத புத்திசாலி கணிதம் சம்பந்தமான கணக்குகளிலும் விடயங்களிலும். ஆனால் அவனால் சகஜமாக மற்றவர்களுடன் பழக இயலாது. அவர்களது தெருவில் வெலிங்க்டன் என்ற நாய் இறந்த அந்த இரவில் தான் கதை ஆரம்பமாகும். அற்புதமாக அந்த சிறுவனின் பார்வையில் அந்த கதை நகரும். அந்த நோயின் தன்மையை முழுவதுமாக உணர்ந்திருப்போம் நாவல் முடிந்திருக்கையில்...

விஜய் தொலைக்காட்சியில் இந்த வாரம் நடைபெற்ற நீயா நானா நிகழ்ச்சி மிகவும் எதார்த்தமான தலைப்பு. மனைவி அதிகம் சம்பாதிப்பதில் கணவருக்கு வரும் பிரச்சனைகள் அதனால் மனைவிக்கு அவர் திருப்பி கொடுப்பது என்று கார சார விவாதம். கோபிநாத் சொன்னது போலவே ஆண்கள் அணியிலிருந்த ஒருவர், ஆணித்தரமாக எடுத்து வைத்தார் தன் கருத்துக்களை. அந்த கருத்துக்கள் தான் உண்மையானவை என்றோ ஆண்களுக்கு ஆதரவாகவோ பேசவில்லை நான். ஆனால் அவர் , "ஆம் என் மனைவி அதிகமாய் சம்பாதிப்பது எனக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் இந்த சமுதாயம் காலம் காலமாக அப்படி சொல்லி வந்திருக்கிறது அதனால் நானும் அப்படியே வாழ்ந்து விட்டேன்" என்பார். அந்த நேர்மை பிடித்திருந்தது. ஆனால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை என்றால் இந்த விடயத்தால் குடும்பத்துக்குள் பிரச்சனை வர வாய்ப்பே இல்லை என்பது என் கருத்து. நானும் ஒரு கால கட்டத்தில் என் மனைவியை விட குறைவாகவே சம்பாதித்தேன். அதற்கெல்லாம் வருத்தப்பட்டதும் இல்லை அவர்களை வருத்தப்பட வைத்ததும் இல்லை. அதெல்லாம் நாங்க ஒரு காமெடியாவே எடுத்துக்கறது! சரி உண்மையில் இரு தரப்பிலும் ஏதெனும் நிகழ்வுகள் நடந்திருக்கும் மனம் புண்படும்படி. அப்பொழுதுதான் உண்மையில் ஒளிந்திருக்கும் அந்த சாத்தான் வேதம் ஓத ஆரம்பிக்கும். அந்த சாத்தானை சின்னதா ஒரு சாத்து சாத்தினா எல்லாம் சரியாகிடும்....

- காவிரிக்கரையோன் MJV

பி.கு - இந்த முறை சற்று தாமதாமாகி விட்டது இந்த இடுகை. கொஞ்சம் இன்டெர்னெட்டில் பிரச்சனை!!!

4 comments:

DHANS said...

அமைதியை ருசித்திருக்கிறீர்களா?"

yes i do sometimes, its a pleasent feeling.

like what you said for hockey good time awaits, i am sure sooner indian hockey is going to be backin form.

தமிழன் வீதி said...

தமிழகத்து காவிரிக்கரையோனா இல்லை கர்நாடக தேசத்து காவிரிக்கரையோனா ?

-தோழன் மபா

காவிரிக்கரையோன் MJV said...

வருகைக்கு மிக்க நன்றி. தோழரே இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்ல? தமிழகத்து காவிரிக்கரையோன் தான். கர்நாடகத்தில் தற்பொழுது இருப்பவன். தேசம் இந்தியா தான்!!!

காவிரிக்கரையோன் MJV said...

வாங்க தன்ஸ். வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி.