Sunday, March 7, 2010

நினைவெல்லாம் நித்யா....

இந்த சாமி'யார்' புதிதாக இருக்கிறாரே என்று புறப்பட்டு செல்லும் மக்கள் காலப்போக்கில் அவரையே சாமியாக வழிபடும் விடயங்கள் நம் ஊருக்கோ நாட்டுக்கோ ஒன்றும் புதிதாக எனக்கு தோன்றவில்லை. இந்த நித்தியானந்தரின் செய்தி வந்ததிலிருந்து எவ்வளவோ வலைத்தளங்களிலும், வலைப்பூக்களிலும் பதிவர்கள் வெளுத்து வாங்கி விட்டார்கள். அது எப்படிப்பட்ட கோபம், எப்படிப்பட்ட சேவை என்பதை நிர்ணையிக்க முடியாது. எங்கெங்கு காணினும் வீடியோவடா என்பது போல் எல்லா இடங்களிலும் பாகு பாடின்றி நித்யா டி.ஆர்.பி தர வரிசைகளில் முதலிடம் பெற்றிருப்பார் என்று நினைக்கிறேன். சச்சினின் சாதனையை நித்யா முறியடித்து விடுவார் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். சரி இதை அக்கு வேராக ஆணி வேராக பிரித்து போட்டு பலரும் விவாதித்து விட்டனர். என் பங்குக்கு எனக்கு தோன்றிய எண்ணங்களை இங்கே பதிவு செய்கிறேன்.

முதல் வரியில் குறிப்பிட்டு இருந்தது போல், எங்கே காவி நிறத்தில் உடை அணிந்து மனிதர்கள் வந்தமர்கிறார்களோ அங்கெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோத ஆரம்பித்திருப்பதை பல காலங்களாக கண்டு வருகிறோம். இதோ இந்த இடுகை எழுதிக் கொண்டிருக்கும் வேலையில் தலை நகரத்தில் இருக்கும் பாம்பு சாமியார் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாய் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி பார்த்தேன். அது என்ன எந்த சாமியார் மாட்டினாலும் பெண்கள் விவகாரத்திலேயே மாட்டுகிறார்கள். ஏன் ஒரு கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டார், கொள்ளை அடிக்கும் பொழுது மாட்டினார் என்று வருவதில்லை. அதெல்லாம் அந்த சாமியார்களுக்கே வெளிச்சம். பெண்ணடிமைத்தனம் ஒழியாதது கூட காரணமாக இருக்கும். நான் சொல்வது முரணாகக் கூட இருக்கலாம்.

நம் நாட்டில் இருக்கும் அதீத தெய்வ பக்தி ஒரு காரணமாக இருக்கலாம். தெய்வத்தை வழிபடுங்கள் தவறில்லை. ஆனால் ஒரு சராசரி மனிதனை தெய்வமாக உயர்த்தி பார்க்கும் பொழுதே இது போன்ற பல நிலைகளில் அதிர்ச்சிகள் உருவெடுக்கின்றன. இவ்வளவு ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு வசை பாடுகிறார்களே அதில் எத்தனை ஊடகங்கள் தொடர்ந்து இது போன்ற சாமியார்களின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி இருக்கிறார்கள். உண்மையில் பார்த்தால் அந்த சாமியாரை ஆத்மார்த்தமாக வணங்கி வந்தவர்களுக்கு தான் இதில் ஏகப்பட்ட மனவருத்தம் இருக்க வேண்டும். ஏனென்றால் இதெல்லாம் அவர்களுக்கு அவர்களே வைத்துக் கொண்ட கொள்ளி. உனக்கு தெய்வ நம்பிக்கை இருக்கா, நீங்க கடவுளை நினைத்து வழிபடுங்கள். இதியாவில் இல்லாத கோவில்களா? காதலிலிருந்து கடவுள் வரை இடைத்தரகர்கள் வைத்தால் இந்த நிலைதான்.

இந்த வீடியோவை பார்க்காதவர்கள் யாரும் இருக்க மாட்டோம். இதற்கு மேலும் பார்க்க வேண்டுமா காசு கொடுத்து பதிவு செய்யுங்கள் என்று ஒரு புறம் அந்த வர்த்தகம் வெறு வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பிரம்மச்சர்யத்தை பிரச்சாரம் செய்து, அதை சட்டென்று கடைப்பிடிப்பது கடினம் என்பதால் தான் இந்த கொதிப்போ மக்களிடம். இதை சாக்காக வைத்து எத்தனை ஆசிரமங்கள் சூறையாடப்பட்டதோ இவையெல்லாம் மெதுவாக இனிமேல் தான் வெளியில் வரும். அன்றைக்கே சொல்லி சென்றார், செந்நாப் புலவர், "சொல்வது யார்க்கும் எளிதாம், சொல்லிய வண்ணம் செயல்". அதிகமாக தியானங்கள் செய்து இப்படி படுக்கையில் சல்லாபம் கொள்ளவா என்று மக்கள் கோபிக்கிறார்கள். இன்னும் சிலர், "அட, அந்த காவிய கூட கழட்டாம" என்று காவி உடைக்கு மரியாதை செய்கிறார்கள்.

எப்பொழுதெல்லாம் ஒரு தனி மனிதன், தெய்வத்திற்கு நிகராய் அல்லது தெய்வமாகவே கருதப்படுகிறானோ, அங்கெல்லாம் இப்படி ஏதாவது ஒன்று நடந்தே தீரும் என்பது இயற்கை நியதி என்றே எனக்குப்படுகிறது. நாம் வாழ்கின்ற இந்த காலத்தில் நிலை இப்படிதான் இருக்கிறது. எனக்கு தெரிந்த வரை காஞ்சிப்பெரியவர் ஒருவர் நம் காலத்தில் இது போன்ற எந்தவொரு விடயத்திலும் சிக்காமல் நன்னெறியில் வாழ்ந்து இறந்து போனதாக சொல்கின்றனர். மூடப்பழக்கங்கள், கண்மூடித்தனமான நம்பிக்கை என்று எவ்வளவு பெயர்கள் வைத்துள்ளோம், இவற்றை குறிப்பிட. எந்த ஒரு தனி மனிதன் தெய்வமாக தூக்கி வைத்த தலையிலேயே தாண்டவம் ஆடுகிறானோ, அவனுக்கெல்லாம் இந்த நிலைதான்.

எது எப்படி இருந்தாலும், இந்த ஒரு நிகழ்வாலோ, இல்லை இதற்கு மேல் எவ்வளவு நடந்தாலுமோ பலர் அப்படியே திருந்தி விடப்போவதில்லை. இந்த நிகழ்வில் யார் மீது குற்றம் யார் பாதிக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் சுற்றி அனைவரும் பேசிக் கொண்டிருந்தாலும், ஊடக தர்மத்தை கண்டிப்பாக காப்பற்றி இருக்க வேண்டும் என்று தான் எனக்கு தோன்றுகிறது. இதை மறுபடி மறுபடி போட்டு காட்டி, என்ன செய்தார்களோ தெரியவில்லை. அப்படி சமூக அக்கறை இருந்திருந்தால், இப்படியெல்லாம் நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பாகவே, பொதுவான விழிப்புணர்வை மக்களிடம் எடுத்து சொல்ல ஏதுவாக ஏதெனும் ஒரு நிகழ்ச்சியை நடத்தியிருக்க வேண்டும். அதையெல்லாம் விட்டு விட்டு, உங்கள் கையில் அந்த சி.டி கிடைத்தது என்பதற்காக அதையே நித்தம் நித்தம் காட்டாமல் இருந்திருக்கலாம். அந்த சாமியாரையும், அந்த நடிகையையும் மக்கள் பார்த்த அளவிற்கு அவர்களை அவர்களே பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

இது போன்ற நிகழ்ச்சிகள் நடப்பதால், என்ன ஆகும் ஒன்றும் இல்லை. அவரும் முடிந்த வரை தலைமறைவாக இருப்பார். கைதெல்லாம் எதற்காக செய்யப் போகிறார்கள்? இந்த வரம்பு மீறலுக்கெல்லாம் தண்டிக்க சட்டம் உண்டா என்பது தெரியவில்லை. தனி மனித ஒழுக்கம், பிரம்மச்சர்யம் கற்று கொடுத்த ஒருவரே இப்படி செய்து விட்டார், நம்பிக்கை துரோகம் என்றெல்லாம் சட்டம் இருந்தால் ஒரு வேலை கைது செய்யப்படலாம். என்ன நடக்க போகிறது அப்படியெல்லாம் நடந்தால்? இது போன்று பல வழக்குகளை நாமும் பார்த்துதான் வருகிறோம். இதற்கு இடையில் அந்த நடிகையின் சதித்திட்டம் தான் அது என்ற கதை வேறு கிளம்பியிருக்கிறது. முடியல கண்ணக்கட்டுது. அட போங்கப்பா, போய் வேலையப் பார்ப்போம்.

ஆனாலும் இப்படிப்பட்ட விடயங்கள் நடப்பதற்கு காரணிகளாய் இருப்பது அவரை ஏற்றி விட்டு அழகு பார்ப்பவர்கள் தான். நம்பிக்கை வீண் போய் விட்டது, நேர விரயம், பொருள் விரயம் என்று பல விரயங்கள் இப்படிப்படவர்களை ஏற்றி விடுவதால் கண்டிப்பாக நடக்கிறது. இதை தடுக்க என்ன செய்வது? ஒடுக்க சட்டம் போட்டால் குடியரசு, இது சர்வாதிகாரத்தனம் என்று ஒரு கூட்டம் கிளம்பி விடும். மக்களாய் பார்த்து திருந்தா விட்டால், "கதவை திறந்து வையுங்கள், என்று எல்லோரும் நுழைந்து கொண்டு தான் இருப்பார்கள்".

இந்த இடுகை மூலமாக, எந்த ஒரு தனிமனிதனையும் தெய்வமாகவோ, தெய்வத்திற்கு ஒரு படி மேலேயோ வைத்துப் பார்த்து வணங்கியதும் இல்லை, வணங்கப்போவதும் இல்லை என்ற உறுதி மொழியை சமர்பிக்கிறேன். இந்த இடுகைத் தலைப்பிற்கு காரணம், அந்த பெயரில் ஒரு திரைப்படம் வந்தது. அதில் வரும் ஒரு பாடலின் வரி, "பனி விழும் மலர் வனம், உன் பார்வை ஒரு வரம், இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்"!!!

- காவிரிக்கரையோன் MJV

1 comment:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஆன்மீகத்தை சரிவரப் புரிந்து கொள்ளாத ஆட்டு மந்தைக் கூட்டத்திற்கு வேண்டுமானால் இது அதிர்ச்சியைக் கொடுக்கலாம், ஆனால் உண்மையான ஆன்மீகவாதி ஒருபோதும் தனி மனிதனைத் தெய்வமாகக் கொண்டு கூத்தாட மாட்டான், பின்னால் வருந்தவும் மாட்டான். ஆன்மீகத்தைப் பற்றிய என் பதிவை இங்கே படியுங்கள்.........
http://ulagamahauthamar.blogspot.com/2010/03/blog-post.html