Saturday, April 17, 2010

இறந்த காலம்....

உயிரின் பாதியாய் உணர்வின் மீதியாய்
கலந்திட்டவள் என்றும் அவனுக்காய்
காத்திருந்தவள்,

கடைக்கண் பார்வையில் பூத்துக் குலுங்கும்
மலர் என்று தெரியாமல் பாரா முகம்
காட்டி இருந்தவன்,

ஒற்றை வார்த்தையாய் சட்டென்று அவன்
கூப்பிடும் பெயரில் தன் அத்தனை துயரையும்
தூசு தட்டி போடுவாள்,

பூவுக்கும் பெண்ணுக்குமான தொடர்பை மறந்து
கடவுளர்க்கு பூ மாலை போட குளமாகும் கண்கள்
அதை பாரேன் என்பான்,

முடிந்து விட்டது எல்லாம், அவள் முகம் பார்க்க
தோன்றிய பொழுதுகளும் மடி சாய்க்கும் பொழுதுகளும்
இனி வரப் போவதில்லை,

இப்பொழுதும் கடவுளர்க்கு தான் பூ மாலை
இடுகிறான், அதற்கு நடுவில் அவளின் படத்திற்கும்
சேர்த்தே....

- காவிரிக்கரையோன் MJV

Saturday, April 3, 2010

அவளாய் போன அவன்...

முள்ளிருக்கும் ரோஜா எனினும் உன்னைத்
தள்ளி வைக்கப் போவதில்லை என்ற
கர்வமுனக்கு,

செருப்பாயிருந்தாலும் ஒரு முறை பெட்டியினுள்
அமர்ந்து விட்டதால் எத்தனை முறை
அழுக்குகளை மிதித்தாலும்
தேய்மானம் ஆகா தன்மானமுண்டுனக்கு,

உள்ளுணர்வு அதட்டி சொன்னாலும் பெண்மையின்
காதலை துணிந்து கேட்கும் தன்னம்பிக்கை
உண்டு எல்லா ஆணுக்கும்,

விழுக்காடுகளில் தான் இருக்கிறது வாழ்க்கை
முறை என்றாலும் பெண்ணியம் உண்டு அதில்
தெய்வீக அன்புண்டு எல்லா பெண்ணிற்கும்,

கழிப்பறையில் கூட அவதிப்பட்டு
நிற்கும் இந்த இனத்திற்கு இந்த உலகத்தில்
ஏதெனும் அடையாளம் விற்கப்படுகிறதா?

- காவிரிக்கரையோன் MJV