Thursday, January 7, 2010

அவதாரம் எடுத்து ஆடிக் கொண்டிருக்கும் அவதார்!!!

மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புடன் வருகின்ற அனைத்துப் படங்களுமே வெற்றி வாகை சூடுவதில்லை. 100 விழுக்காடுகள் அப்படிப்பட்ட படங்கள் வெற்றியைத் தழுவுவதில்லை. அந்த விழுக்காடு விளையாட்டில் 10 விழுக்காடு திரைப்படங்கள் வெற்றி பெற்றால் அது மிக பெரிய விடயமாக இருந்து வருகின்றது. இந்த சூழலில்தான் வெகு நாட்களாக அமைதியாக புதருக்குள் இருந்த புலி ஒன்று சீறிப் பாயத் தயாரானது. அப்படிப் பட்ட வட்டார வெகுமொழிகள் வந்ததிலிருந்தே எப்பொழுது திரைப்பட செய்திகள் இருந்தாலும் இந்த அவதாரத்தை பற்றின செய்திகள் இல்லாமல் முடிந்ததாக சரித்திரக் குறிப்புகள் ஒன்றும் இல்லை!

ஆம் உலகத் திரைப்படப் பதிவேட்டில் தனக்கென தனி இடத்தை தானே செதுக்கிக் கொண்ட ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் காமரூனைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறொம். நன்றாக படித்திருந்தாலும் (இயற்கை அறிவியல்) அவர் அதை விட்டு விட்டு, டிரக் ஓட்டுனராக பணி புரிந்து பின்னர் திரைப்பட துறையினுள் காலடி எடுத்து வைத்துள்ளார். தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பது போல இவர் இயற்றிய அனைத்து படங்களுமே வெற்றி வாகை சூடி இருப்பது இவருடைய உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்.

டைட்டானிக் என்ற உண்மை சம்பவத்தின் பிரமாண்டத்தை நமக்கு எடுத்து காட்டி அதன் நினைவு அடிவாரங்களில் நில சரிவு உண்டு செய்யும் படியாக இப்பொழுது மீண்டும் 13 வருடங்கள் கழித்து அவதாரில் மீண்டும் அவதாரம் எடுத்துள்ளார். அந்த கால கட்டத்திலேயே இந்த கதை தயாராக இருந்தது என்றும் அப்பொழுது அதற்கான அறிவியல் யுக்திகள் இல்லாத காரணத்தினால் இவ்வளவு ஆண்டுகள் பொறுத்திருந்து இப்பொழுது இந்த படத்தை வெளியிட்டுள்ளார். கதை என்று பார்த்தால் பெரிய விடயம் என்று நினைக்க முடியாது.

அதை எப்படி கொடுத்திருக்கிறார் என்பதில்தான் அவதார் மிகப் பெரிய அவதாரம் எடுத்து நிற்கிறது. முதல் ஒரு வாரத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் செய்து சாதனை சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறது. அவரின் காதல் காவியமான டைடானிக் செய்த வசூல் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்றார்கள் திரைப்பட வட்டாரத்தினர். யாருக்கிட்ட என்று வேட்டியை மடித்துக் கட்டி (வேட்டி கட்டத் தெரியும்பா அவருக்கு!!!) களத்தில் மீண்டும் இறங்கியிருக்கிறார்.

நம் இந்தியாவின் கமலிலிருந்து, ஆமிர்கான் முதல் எல்லோருக்கும் உள்ள பிரச்சனை இவருக்கும் எழுந்துள்ளது. இந்த படம் மற்றொரு படத்தின் தழுவல் என்று, அந்த திரைப்படம் பற்றி எனக்கு அந்த அளவுக்கு தெரியாததால் அதைப் பற்றி இங்கே குறிப்பிடவில்லை. இந்த படம் வாழ்னாளில் பார்க்கப் பட வேண்டிய படம் என்று முத்திரைத் தாளில் முத்திரைக் குத்தப்பட்டு அனைத்து 3டி திரை அரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் மூலம் என்ன கற்பிதம் செய்கிறார் காமரூன் நமக்கெல்லாம், "முயர்சி இருந்த மௌன்ட் எவெரெஸ்டும் நமக்கு கீழதான்" என்று வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

மக்களே தயவு செய்து சொல்றேன் இந்த படத்தை 3டி வசதி உள்ளத் திரை அரங்கில் சென்று பார்க்கவும். இப்படிதான் என் நண்பர்கள் எல்லாம் என்னிடம் கூறி வருகின்றனர். நானும் இந்த படத்தை எப்படியாவது திரை அரங்கில் பார்த்து விட வேண்டும் என்ற சபதத்தில் இருக்கிறேன். இந்த படம் அப்படி ஒரு தாக்கத்துடன் உலக மக்களை ஈர்க்கும் வண்ணமாக தயாரிக்கப்படுள்ளது. நானும் 2 வாரமாக இந்த படத்திற்கு எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் டிக்கெட்டை தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் சரியான நேரத்திற்கு கிடைத்தப் பாடில்லை.

சரி எப்படியும் பார்த்திட வேண்டும் என்ற எதிர்பார்பை உருவாகி உள்ளது இந்த படம். வெகு விரைவில் இந்த படத்தின் அதிரடி காட்சிகளைப் பற்றியும் காமரூனின் கலை வண்ணத்தைப் பற்றியும் எடுத்து சொல்லியே ஆக வேண்டும். விரைவில் இது போன்றதொரு திரைப்படம் இந்திய மண்ணின் மைந்தர்களுள் யாராவது ஒருவரால் வெளிவர வேண்டும் என்ற நம் எண்ணம் பலிக்குமா? அப்படி ஒரு பட்டியல் என்னிடமும் இருக்கிறது, இதைப் படித்து விட்டு அப்படி பட்ட படத்தை எடுக்கும் திறன் இந்தியாவில் யாருக்கு இருக்கின்றது என்று பட்டியல் சொல்லுங்க பார்ப்போம்!!!

அது வரை அவதார் பார்க்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருப்பேன்.
அவதார் - அலங்காரம்!!!