Thursday, January 14, 2010

குறுங்கவிதைகள்!

மு.கு - கீழ்வரும் கவிதைகளில் நிறம் மாறின எழுத்துக்கள் தான் அந்த அந்த படைப்பின் தலைப்பு!!!

தலை திரும்பல், கண்களின் பயண வழி
மாற்றம், சட்டென்ற வேக குறைப்பு,
தெரு முனையில் திரும்பும் முகம்
அவனேதான் என் கல்லூரித் தோழன்,
சொன்னால் கட்டளை கேட்டு தெரு முனை
செல்லவா போகிறது கால்கள்?
இல்லை அவனில்லை என்ற கட்டளைக்கு
பல் இளிக்கும் மனதை எதை கொண்டு சாத்துவது!

மகிழ்ச்சி துக்கம் இரண்டும் சமம்
எனக்கு, உனக்கும் அப்படியா?
மகிழ்ச்சியில் அன்று கண்ணாடிக் கிண்ணத்தில்
நிரம்பி வழிந்த திரவத்திடம் கேட்டான்
(கேட்டேன்) நண்பன் (நான்)!

குளிர்சாதன அறையில் நடந்தது
அந்த வருட கொள்கை விளக்க கூட்டம்,
"அற்புதமான கொள்கைகள்",
"இந்த வருடம் இனிதாக ஆரம்பம்",
வேகமாக வெளியில் வந்த நான்,
"கொஞ்சம் கோணலாதான் இருக்கு"
கூட்டத்தின் பொழுது வரைந்த பெயர் அறியா
உருவத்தின் மூக்கைப் பார்த்தபடி!!!

எப்படியும் இந்த முறை பறக்க
முடியும், காகத்தைப்
பார்த்து பார்த்து குதித்தது குழந்தை,
ஒவ்வொரு முறையும் குழந்தையை
தோற்கடித்த புவி ஈர்ப்பு விசையை,
மீண்டும் மீண்டும் தோற்கடித்து
கொண்டிருந்தன காகத்தின் சிறகசைவுகள்!

மனிதர்களில் தான் காதல் கொலையாளிகள்
உண்டு என்றால், புல்லின் மீதான
பனித்துளியின் காதலை கொல்லும்
சூரியனுக்கும் அந்த பட்டியலில் இடம் உண்டா?

சாவி வைத்த சாளரக் கதவில் வறுமையும் காக்கையும்...

சாவித்துவாரம்
சாவி துவாரத்தில் சாவியின்
தீண்டல் வெளிச்சம்,
அதில் விழி மடல்களின்
தீண்டல் விரசம்....

சாளரம்
சாளரத்தில் காற்று வர
வேலைப்பாடுகள் வைத்த கட்டுமான
நிபுணருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை,
அதற்கு அப்பால் இருந்த
பெண்ணின் அந்தரங்கம்
விலைபோகப் போகிறதென்று...


கதவு
கதவைத் திறங்கள்
காற்று வரும் என்கிறார்கள்,
தட்டிப் பாருங்கள்
கதவுத் திறக்கும் என்கிறார்கள்,
புரிந்தல் தொலைந்து போய்,
வெடித்து சிதறிய மிச்சத்தில்
கதவு கிடைக்கிறதா என்று
தேடிக் கொண்டிருந்தது குழந்தை...


வறுமை
கொல்லைபுறத்தில் காய்த்து குலுங்கும்
முருங்கை நிழலுக்கும்,
கால் தடங்கள் பதிய ஏங்கும்
நீண்ட தாழ்வாரத்திற்கும்
தெரியாது வறுமைக்கு விலை
போயின வீட்டின் பத்திரங்கள் என்று...


காக்கை
அசுத்தம் செய்தாலும் காந்தியின்
சிலை வழியேனும் பயணிக்கிறது
ஐந்தறிவு காக்கைகள்!

- காவிரிக்கரையோன் MJV

பொங்கல் இனிக்கும் பொங்கல்!

"எனக்கு வெண் பொங்கல் வேண்டாம்" என்று சொல்லியே தித்திக்கும் பொங்கல் திருநாளை ஆரம்பிக்கும் நாட்கள் இன்னும் பசுமையாய் மணக்கின்றது. சக்கரைப்பொங்கலை மட்டுமே நாட்கள் முழுக்க உண்டு வாழ்ந்த காலங்கள். கரும்பிற்கு நடக்கும் போட்டிகள். இரண்டு வாரங்களுக்கு முன்பே கரும்பை வாங்கி வைத்து விட்டு அதை எடுக்கவா? இல்லை பதுக்கி வைக்கவா என்று சுற்றித் திரிந்த பருவங்கள்.

சில முறை கிராமத்து தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்று கிராமத்து பொங்கலை சுவாசித்து, அடடா என்ன திருவிழா அது!!! என்னை கேட்டால் நகரத்தில் செய்யும் (கொண்டாடும்) பொங்கலெல்லாம் சுத்த மண்ணுதான்..... மண் வாசனையோட தான் பொங்கல் வைக்கணும் அதை கிராமத்தில் தான் வைக்க வேண்டும். அது தானே நாம் உழவும் உழவு சார் தொழில் செய்யும் மக்களுக்கான மரியாதை. அதெல்லாம் முடியாமல் பற்பல காரணங்களினால் இங்கே உழன்று கொண்டிருக்கிறோம்.

நன்றாக நினைவில் உள்ளது. தாத்தா வீட்டில் (ஓட்டு வீடு) முற்றத்தில் நன்றாக வானம் பார்த்திருக்கும் அந்த இடத்தில் எப்போதுமே எடுத்து விட்டு பொங்கல் வைப்பதற்கு எதுவாக பத்து கற்கள் இருக்கும். பொங்கல் என்றால் போதும் அந்த கற்களை அகற்றி விட்டு அங்கே பொங்கல் வைப்போம். சூரியனுக்கு எங்கள் வீட்டு பொங்கல் நேரடி தரிசனம்!!! இங்க அப்படி பொங்கல் இட்டால் ஒன்று வீடு சொந்தக்காரன் உதைப்பான் இல்லை சொந்த சிறையாக (அப்பார்ட்மென்ட்) இருந்தால் அதன் தலைவர் வந்து அறிவுரை கூற ஆரம்பித்து விடுவார்.

சரி விடுங்கள் பொங்கல் எங்கே யார் யார் எப்படி இருந்தாலும் நல்ல படியாக கொண்டாடுங்கள். இனிக்க இனிக்க சக்கரைப் பொங்கலை உண்டு மகிழுங்கள். தெவிட்டாமல் இருக்க எப்படியாவது ஒரு பத்து வகை காய் கறிகளுடன் விருந்து சாப்பிடுங்கள். முடியாதவர்களுக்கு நாம் உண்பதில் பகிர்ந்து கொள்ளலாம். கண்டிப்பாக வெண் பொங்கல் சாப்பிடுங்கள். நன்றாக தான் இருக்கிறது.

சென்ற வருடத்தில் இருந்து பொங்கல் நன்னாளில் தான் தமிழர் புத்தாண்டு என்றும் அறிவிப்பு வந்து விட்டது. அனைவருக்கும் இனியத் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். என்ன செய்தாலும் எங்கு சென்றாலும் தமிழோடு நெருக்கம் கொண்டிருப்பது எப்போதுமே ஒரு சுகம் தான். அதையும் நிரம்ப செய்து பழகுவோம்.

நம்மைத் தாண்டி வரும் தலைமுறைக்கு பொங்கல் படங்களை அன்றி பொங்கல் திருவிழாவையும் காட்ட முனைவோம். பண்டிகைகளும் போற்றப் பட வேண்டிய பொக்கிஷங்கள் தான். போற்றி பாதுகாப்போம். மீண்டும் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்....