Tuesday, January 19, 2010

அவதார் என்கிற சங்கமம்!என்னதான் தொழில் நுட்பம் வளர்ந்திருந்தாலும் மனிதத்திற்கும் காதலுக்கும், திரைப்படத்திலும் சரி வாழ்க்கையிலும் சரி தனி இடம் உண்டு என்பதற்கு சாட்சியாக இந்த அவதார் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பக் காட்சிகள் இந்த படத்தில் வெகுவாக பிரபலப்படுத்தப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே கூர்ந்து கவனிக்கப்படுகின்ற காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. கலகலப்பிரியா என்ற பதிவர் உணர்ச்சிப்பூர்வமாக தன் இடுகையில் கடைசி வரியில் குறிப்பிட்டு இருப்பது முற்றிலும் உண்மையே...


ஓர் இனம் அழிவதை சகிக்க முடியாத கதாநாயகன் ஜேக்ஸ் சாலி, மனிதனாக இருந்தாலும், நவிகளுக்கு தோள் கொடுத்து தூக்கி நிறுத்துவதாக காட்டப் பட்டதற்கு இரண்டே இரண்டு காரணங்களை தான் என்னால் உணர முடிகிறது. ஒன்று அந்த நவி இன இளவரசியின் மீதுள்ள காதல், மற்றும் ஓர் இனம் தேவை இல்லாமல் குறி வைத்து தாக்கி அழிக்கப்படுகிறது என்பதற்கான மனிதமும்தான் இந்த படத்தின் முதுகு எலும்புகள். தங்களின் சுய நலத்திற்காக பண்டோரா கிரகத்தை அழித்து அதில் இருக்கின்ற கணிம வளத்தை சுருட்டி கொள்ள நினைக்கும் மனித இனத்திற்கு தோள் கொடுப்பதைக் காட்டிலும் தங்கள் இனத்தைக் காப்பாற்றிக் கொள்ள போராடும் ஓர் இனத்திற்கு தோள் கொடுப்பது சால சிறந்தது என்று கதாநாயகன் அவதாரம் எடுப்பதுதான் இந்த அவதாரின் கதை.


முதலில் ஒரு 15 நிமிடங்களுக்கு எந்த உலகத்தில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் இருக்கும்படிக்கு சிறு குழப்பம் இருக்கின்றது. அதிலிருந்து படத்தின் இறுதி வரை பிரம்மாண்டங்கள்தான் வியக்க வைக்கிறது. மிதக்கும் மலைகளாக இருந்தாலும் சரி, அந்த படத்தின் காட்டபடும் இடங்களாக இருந்தாலும் சரி, கதாநாயகன் அந்த கிரகத்தில் தனியாக அலையும் முதல் இரவாக இருந்தாலும் சரி அட பிரிச்சிருக்காங்கலே என்ற உணர்வுடன் தான் இந்தப் படத்தில் திரைப்படம் நகர்கிறது. இவைலா என்ற அந்த புனிதமான வெண்ணிற ஜந்துக்கள் (அது என்ன என்பது சரியாக என் சிற்றரிவுக்கு புலப்படவில்லை!) முதன் முதலில் ஜேக்ஸின் மீது வந்து அமர்வதை அறிந்த நாயகி தன் இன மக்களிடம் இவன் நம்மில் ஒருவன்தான் என்று வாதாடுகிறார்.


ஒரு மனிதனின் சுய மரியாதையை காலி செய்யும் விதமாக வேலைகள் நடந்தால் இரண்டு விதமாக மனிதனின் எண்ண ஓட்டங்கள் இருக்கும். ஒன்று அதை எதிர்த்து முயற்சியில் செய்து காட்டுவது இல்லை என்றால் அதையே நினைத்து வெதும்பி கொண்டிருப்பது. இதில் முதல் ரகம் இந்த கதாநாயகன். நம் இனத்தில் ஒருவனாக இவனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நவி கிரகத்தின் சிற்றரசன் சொல்லும்போது, செய்வேன் என்று வீராவேசமாக எழுந்தாலும் பின்னர் பல இன்னல்கலைக் கடந்து சாகசம் புரிகிறார்.


அவர்கள் கிரகத்தின் குதிரைகளை ஓட்டும் பொழுதும் சரி, அவர்களின் பறவையை தேர்ந்தெடுக்கும் பொழுதும் சரி, அவர் வெகுவாக தன்னம்பிக்கையை இழக்க செய்யும் நிகழ்வுகள் நடந்தாலும் அதையும் தாண்டி சாதிக்கிறார். அவர்கள் கிரகத்தில் எதை செய்ய வேண்டும் என்றாலும், உணர்வுகள் அடிப்படையில் தான் செய்தாக வேண்டும். தங்களுடைய ஜடையில் இருக்கும் ரோமங்களையும் மற்ற ஜந்துக்களின் ரோமங்களையும் இணைத்து அதை செயல் பட வைப்பது நமக்கெல்லாம் நல்ல படிப்பினையை தருகின்றது. எந்த ஒரு விடயத்தையும் உணர்வு ரீதியாக புரிந்து கொண்டால் நிச்சயம் நன்மை விளையும் என்பது இங்கே தெளிவாக விளக்கப்படுகிறது.


தன் தம்பிக்கு பதிலாக இந்த பண்டோரா கிரகத்திற்கு வந்து சேரும் கதாநாயகனுக்கு தரப்படும் வாக்குறுதி, கால்கள் செயல் இழந்த அவருக்கு, கால்கள் பெற்றுத் தரும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்பதே. இந்த படத்தில் வரும் இராணுவ அதிகாரி மிகவும் கண்டிப்பாகவும் இரக்கமற்றவராகவும் சித்தரிக்கப் பட்டிருக்கிறார். அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற முறையில் அவர் செம்மையாக நடித்துள்ளார் என்றே சொல்லியாக வேண்டும். அந்த கிரகத்தில் மனிதர்களால் சுவாசிக்க இயலாது. ஒரு முறை கதாநாயகன், மற்றும் அந்த படத்தில் இந்த ப்ராஜெக்டிற்கு தலைமை தாங்கும் விஞ்ஞானி மற்றும் இவர்களோடு ஒத்தக் கருத்து உடையவர்கள் தப்பித்து செல்லும் காட்சியில், அந்த ஆக்ஸிஜென் மாஸ்க்கை கூட மாட்டாமல் அந்த இராணுவ அதிகாரி வெளியே வந்து இவர்களைத் தாக்குவது அவரின் கதப்பாத்திரத்தின் அழுத்ததை எடுத்து சொல்லும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.


படத்தில் சின்ன சின்ன கதாப்பாத்திரத்தில் வருகின்றவர்கள் கூட செம்மையாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அந்த பறவைகளை அடக்கி ஆளும் காட்சிகளைப் பார்க்கையில் டிராகன் ரைடர் என்ற படத்தின் சாயல் சிறிதாக வந்து செல்கிறது. அவ்வளவு சிரமப்பட்டு படத்திற்கு டிக்கெட்டுகள் எடுத்து சென்றது வீண் போக வில்லை என்பது நன்றாக புலப்படுகிறது. படத்திற்கு டிக்கெட் 150 ரூபாய். அந்த 3டி கண்ணாடியை திருப்பிக் கொடுக்காமல் போனாலோ அல்லது உடைத்து விட்டாலோ 300 ரூபாய் அபராதம் என்பதை நல்ல வேளை முன்பே பார்த்து விட்டோம்! கண்டிப்பாக இந்த படத்தை 3டி உள்ள திரை அரங்குகளில் மட்டுமே சென்று பாருங்கள். எல்லா திரை அரங்குகளும் வேக வேகமாக இந்த படத்திற்காக 3டி முறையில் படம் பார்க்கும் தொழில் நுட்பத்தை வாங்குகிறார்கள் என்பது மட்டும் உண்மை:-)


10 அடி உயரம் கொண்டவர்கள் நவிக்கள் என்பது மனிதர்களும் நவிக்களையும் ஒரு சேரக் காட்டும் காட்சிகளில் தான் புலப்படுகிறது. அந்த போர்க் காட்சிகளில் அதிகமான பிரம்மாண்டம். முதல் போரில் போட்டியே இல்லாமல் தோற்றுப் போவதும் பின்னர், 5 தலைமுறைக்கு முன்னர் நவிக்களின் மூதாதையரில் சிலர் மட்டுமே பறந்த அந்த ராட்சதப் பறவையில் பரந்து வந்து கதாநாயகன் தானும் ஒரு நவிதான் என்று நிரூபித்தப் பிறகு அனைவரும் ஒன்று கூடி நடத்தும் இரண்டாவது போர் வியப்பில் ஆழ்த்துகிறது. மனிதர்கள் வரும் படைகளுக்கு மேலே இருந்து தாக்கி அவர்களை அழிப்பது வெகுவாக கவர்கிறது. அந்த காட்டில் இருக்கும் மிருகங்கள் கூட சரியான நேரத்தில் வந்து நவிக்களுக்கு உதவி செய்வது தத்ரூபமாக சொல்லப் பட்ட காட்சிகள்.


இதுவரை நம் நாட்டில் மட்டும் 100 கோடிகளைத் தாண்டி வசூல் செய்திருக்கிறது இந்தத் திரைப்படம். வெளியிட்ட முதல் ஒரு வாரத்திலேயே படத்தின் பாதி செலவை இந்த படம் அள்ளிவிட்டதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. காமரூன் வருடங்கள் பலக் காத்திருந்தாலும் ஒரு மிகப்பெரிய காவியத்தைதான் உருவாக்கி இருக்கிறார். மீண்டும் ஒரு முறை பார்க்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறேன். இந்த படத்தை மட்டும் மீண்டும் நான் சொன்னது போல் 3டி அமைப்பு இருக்கின்ற அரங்குகளில் சென்று பாருங்கள். அந்த அனுபவம் மிக நன்றாக இருக்கும்.


படத்தைப் பார்த்து விட்டு திரும்பும் போது கலகலப்பிரியாவின் எண்ணங்களின் பிரதிபலிப்பு கண்டிப்பாவகே இருந்தது. வெகு விரைவில் நம் தமிழ் இனத்திற்கும் ஒரு விடிவு காலம் இருக்கிறது என்று நினைத்து கொண்டேதான் வெளியில் வந்தோம்.


அவதார் - அசாத்திய அலங்காரம் (மனிதம், காதல் மற்றும் தொழில் நுட்பத்திற்கு!!!)