Saturday, February 6, 2010

குறுஞ்செய்தி...

குறுஞ்செய்தி
தட்டி தட்டி தேய்ந்து கொண்டிருந்தன
நம் விரல் ரேகைகளும் நம்
அலைபேசி பொத்தான்களின் ஆயுளும்!

சாளரம்
அக்கால காதல் சாளரத்தின்
பின்னே வளர்ந்து வாழ்ந்தது
இக்கால காதல் சாளரத்தின் (விண்டோஸ்)
ஊடே வளர்ந்து கண்டங்கள் கடக்கிறது!

சிறை
இரும்புக் கதவுடைத்து
திருடியவன் இரும்பு கம்பிகளுக்கு
பின்னால் சிறை வைக்கப்பட்டான்,
மனக் கதவை உடைத்து
உன் இதயத்தை கொள்ளை
அடித்தவனை நீ எங்கே சிறை
வைக்கப் போகிறாய்?

காலை
அலைகளுக்கு இல்லா சோம்பலையும்
பருந்துக்கு இல்லா சோர்வையும்
எனக்கு கொடுத்து,
என் அறையில் சிறிதளவு
மீதமிருந்த வெப்பக்காற்றையும்
அநியாயமாய் பிடுங்கிச்
சென்றது மார்கழியின்
கடும்பனிக்காலை....

பல்லி
பசிக்கு கத்தும் பல்லியை
கடவுளின் குரல் என்று
சொல்லும்போதும், பிச்சை
எடுக்கும் சிறுவனிடம் இல்லை
என்று கை ஆட்டும் போதும், உதாசீனம்
மட்டும் தானே செய்கிறோம்
பல்லியின் பசியையும், சிறுவனின் பசியையும்...

- காவிரிக்கரையோன் MJV

எம்.ஜேயின் மிச்ச சொச்சங்கள் - 06/02/10

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். அது என்னமோ உண்மைதான். சமீபத்தில் நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில், தன் அணி தோல்வி அடைந்து கொண்டிருக்கிறது என்பதால் அப்ரிடி, கிர்க்கெட் பந்தை கடித்து, ஆசீஃபிடம் கொடுத்து இருக்கிறார். என்ன நெனைச்சானோ மனுஷன், மைதானத்தில் 29 காமெராக்கள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் வெறி கொண்டு கடிக்க ஆரம்பித்து விட்டார். கிரிக்கெட் உலகம் எங்கே பயணிக்கிறது என்பதே தெரியவில்லை. இவர் சுத்தமான "இந்த பூனையும் பால் குடிக்குமா ரகமா?" என்றால் அதுவும் இல்லை. முன்பே ஒரு முறை இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த சமயம், தன் பூட்ஸ் காலால் ஆடுகளத்தை பதம் பார்த்தவர்தான். இப்பொழுது மீண்டும் ஒரு சர்ச்சை. இதற்கு சில போட்டிகளில் ஆட தடை விதித்திருக்கிறார்கள். ஆனால் அந்த புறம் பார்த்தால் ஆஸ்த்ரேலிய அணி வெளுத்து எடுத்திருக்கிறார்கள் பாகிஸ்தானிய அணியினரை. "வேணாம் வலிக்குது, அழுதுருவேன்" என்ற நிலைக்கு அழ விட்டிருக்கின்றனர் பாகிஸ்தான் அணியை!!! டெஸ்ட் (3 - 0), ஒரு தினப்போட்டி (5 - 0) மற்றும் டி20 (1 - 0)!!!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

யெப்பா இந்த காதலர் தினத்தோடு, 6 மாதங்கள். எவ்வளவு போராட்டங்கள், எவ்வளவு வேதனைகள், எவ்வளவு சோதனைகள் அதில் தான் எத்தனை சாதனைகள். என்னமோ போங்கப்பா, கைகளில் இருந்த வல்லினம் ஒன்று மெல்ல மெல்ல என் நுரையீரல்களை இடையினம் ஆக்கி கொண்டிருந்தது. மெல்லினமாய் மன மாற்றம் கொண்டு அந்த வல்லினத்தை அதிகாரக் கரம் கொண்டு அடக்கியதின் பலன், கடந்த 6 மாதங்களாய் வெண் பத்தியை (புத்தி கெட்டு சிகரெட்டுக்கு வைத்த பெயர்!!!) நிறுத்தி விட்டேன் என்பதை நெஞ்சம் நிமிர்த்தி சொல்லமுடியும் என்னால்... படிக்கட்டு பயணங்கள் முன்பெப்போதும் இல்லாத படிக்கு சுலபமாய் இருக்கிறது! உண்மையாப்பா... அப்புறம் ஜிம்பாடி நாங்க இப்போ!!! இது 5ஆம் முறை, உடற்பயிற்சி களத்திற்கு சென்று வருவது.... பார்ப்போம் இந்த முறை கொஞ்ச நாட்கள் நீடிக்கும் என்பது என் நினைப்பு(நெனப்பு தான் பொழப்பக் கெடுக்கும் அப்டியெல்லாம் சொல்ல கூடாது)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தரத்துக்கு பெயர் போன ஜப்பானிய கார்களில் தொடர் பிரச்சனைகள். விற்ற கார்களை மீண்டும் வாங்கி சரி செய்யும் அளவுக்கு மிகவும் முக்கியமாக இருக்க வேண்டிய வேளைப்பாடுகள் பல்லைக்காட்டி நிற்கிறது. டொயோட்டா நிறுவன வண்டிகளில், வேகக்குரைப்பான் (ப்ரேக் - இதற்கு நான் இட்ட தமிழ் பெயர். உண்மையான பெயர் தெரிந்தால் நண்பர்கள் சொல்லலாம்!சாதனம் நேரம் தாழ்த்திதான் நம் கட்டளையை ஏற்கிறதாம். இதனால் சில விபத்துகள் நடக்க சுறுசுறுப்பானது டொயோட்டா நிறுவனம். மேலும் வேகக்கூட்டி (ஆஃஸிலரேட்டர் - இதற்கு நான் இட்ட தமிழ் பெயர். உண்மையான பெயர் தெரிந்தால் நண்பர்கள் சொல்லலாம்!) அழுத்தப்பட்டு பின்னர், எடுத்துவிட்டாலும் அதன் சரியான நிலைக்கு வருவதில்லையாம். விளைவு பல விபத்துகள். இந்தியாவைப் பொருத்த வரை, காம்ரி, கொரோலா போன்ற வகை வண்டிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை சரி செய்ய டொயோட்டாவிற்கான செலவு 33.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (3 பில்லியன் யென்). இதே போல் ஹோண்டா நிறுவனத்தாரும், இந்தியாவில் உள்ள இரண்டாம் தலைமுறை, சிட்டி மற்றும் ஜாஸ் என்ற வண்டிகளையும் மீண்டும் கேட்டிருக்கிறார்கள். காரணம்: தானியங்கி சாளரங்களில் மழை நேரத்தில் தண்ணீர் புகுந்து எரிகிறதாம்.... அவ்வளவு தூரம் தரம் பார்க்கும் ஜப்பான் நாட்டினருக்கு இது ஒரு சாபக்கேடுதான்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காந்தளூர் வசந்தகுமாரன் நாவல் படித்து கொண்டிருக்கிறேன். சுஜாதா அவர்களின் படைப்பு. பொன்னியின் செல்வன் படித்ததாலோ என்னவோ குறைந்த பட்சம் இந்த புத்தகத்தில் வருகின்ற மன்னர்கள் பெயராவது தெரிகிறது. தெளிந்த நீரோடை போல இழுத்து செல்கிறது கதை. பண்டைய கால வழக்கில் இருந்த சொற்கள் சில்வற்றை பயன்படுத்தி உள்ளார் ஆசிரியர். முடிந்த வரை அதற்கான விளக்கங்களையும் கொடுத்து இருக்கிறார். அவருடைய முன்னுரையிலேயே சற்று வித்தியாசமான வரலாற்றுக் கதை என்று குறிப்பிட்டு இருந்ததை, நித்தம் நினைவுக்கு கொண்டு வருகிறது கதையின் ஓட்டம். வசந்தகுமாரனின் சில்மிஷங்களும், கணேசப்பட்டரின் செயல்களும், அபிமதியின் காதலும் சுண்டி இழுக்கிறது. முடித்து விட்டு இன்னும் சொல்கிறேன். அய்யனார் கம்மா, கருவேல நிழல், கூர்தலறம், நீர்க்கோல வாழ்வை நச்சி, கோவில் மிருகம் ஆகிய புத்தகங்களை படித்தாயிற்று. அதை பற்றி பகிர்ந்து கொள்ள நேரம் கிடைக்கவில்லை. கண்டிப்பாக இந்த வாரத்தில் ஏதெனும் ஒரு புத்தகத்தை பற்றியாவது சொல்ல முயல்கிறேன்!!!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
- காவிரிக்கரையோன் MJV