Sunday, February 14, 2010

எம்.ஜேயின் மிச்ச சொச்சங்கள் - 14/02/2010

இவ்வளவு நிலைகளில் இந்த சமூகம் உயர்ந்திருந்தாலும், இன்னமும் ஆன்மீகத்தை ஒரு கருவியாக பயண்பாட்டில் வைத்திருக்கும் நபர்கள் அதிகமாக இருந்து கொண்டு தான் வருகிறார்கள். இதற்கு உதாரணமாக சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்வு அமைந்திருந்தது. ஓர் ஊரில் ஒதுக்குப்புறமாக ஒருவரின் இடம். அதில் ஒரு முனியப்பன் கோவில். அந்த பக்கம் வரும் பக்தர்கள் வழிப்பட்டுக் கொண்டு செல்வார்கள். அந்த இடத்திற்கு அருகில் 6 அல்லது 7 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் குடியேறுகிறார். 2 பிள்ளைகள் மனைவி என்று குடும்பம் சூழல் இருக்கிறது. அவர்கள் சொற்ப வருமானத்திற்கு துணிகளை அயன் செய்து தருபவர்கள். அவரின் இளைய மகன் அந்த கோவிலை சுத்தபடுத்தி விட்டு தினமும் பெரும்பாலான பொழுதுகளை அங்கேயே கழித்து வருகிறார். இவர் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். திடீரென்று ஒரு நாள் பல நாட்களாக அங்கேயே சுற்றித் திரிந்ததாய் சொல்லப்படும் பாம்பு அவர் மேல் விழ பதறியடித்து வீட்டிற்கு சென்று சொல்கிறார். வந்து பார்க்கையில் அந்த பாம்பு மரச்சிலையாக மாறிவிட்டதாம். அவ்வளவுதான் அந்த இடத்தில் சிறிது நேரத்திற்கெல்லாம் ஆயிரக்கணக்கில் மக்கள் சூழ்ந்து இந்த பையனை தெய்வமாகவும், அந்த இடத்தில் மிகப்பெரிய கோவில் அமைக்க வேண்டியும் போராட்டம் நடத்துகிறார்கள். இதை என்னவென்று சொல்வது!!! 3 விடயங்கள் எனக்குள் நெருடலை உண்டு செய்கிறது!
1. அந்த இடத்துக்கு சொந்தக்காரிடமிருந்து வெகு விரைவில் அந்த நிலம் பறிக்கப்படலாம்.
2. அந்த சிறுவன் முழு நேர பூசாரியாக மாற்றப்படலாம்.
3. அந்த சிறுவனின் படிப்பு முழுவதுமாக பாதிக்கப்படலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சென்ற மாதக் கடைசியிலிருந்தும், இந்த மாத முதல் இரு வாரங்களிலும் நாங்க ஒரே பிஸியோ பிஸி. ஏனென்றால் இது அப்ரைசல் நேரம். சட்டென்று கடந்து விடும் ஒவ்வொரு வருடமும். ஆனால் அதன் முடிவில் அமர்ந்து கடந்த வருடத்தில் என்ன செய்தோம், யாரிடம் பாராட்டு, யாரிடம் ஆப்பு இப்படி எல்லாவற்றையும் நினைவலையில் தேடி எடுத்து முடித்து, என் மானேஜரிடம் சென்று ஒரு 2 முதல் 3 மணி நேரம் மொக்கைப் போட்டு, வெளியில் வந்து, ஆத்தா நான் ஃபஸ்ட் க்ளாசில் பாஸ் பண்ணிட்டேன் என்று சொல்வது போல வந்து நண்பர்களிடம், "மச்சான் பிரிச்சிடோம்ல இந்த வாட்டினு" சொல்லி, கையில் மறுபடியும் சம்பளம் வரும்போது, என்னடா மாப்ள, 500 ஓவாதான் அதிகமா வருதுன்னு சொல்லிட்டு மீண்டும் அடுத்த வருடைத்தை நோக்கி பயணிப்பதில் தான் எத்தனை களைப்பு! பயணம் தொடங்கும் முன்னரே இப்படி ஒரு களைப்பு!!!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

யெப்பா அப்ரிடி நீங்க ரொம்ப பெரிய ஆள்பா. அன்றைக்கு ஒரு நாள் மாலையில் பானம் அருந்திக் கொண்டிருக்கையில், மொஹமத் ஆசீப் பந்து வீச்சின் போதுதான் அப்ரிடி பந்தை கடித்து பிரச்சனையில் மாட்டிக்கொண்டார் என்று பேசிக் கொண்டிருந்தேன். உடனே நண்பர் ஒருவர் 1000 ரூபாய் பந்தயம் என்றார். அந்த பந்து வீச்சாளர் ரான நவீத் என்றார். சரி கிரிக்கெட்டில் நமக்கு கொஞ்சம் விடயம் தெரியும் என்பதால் சட்டென்று ஒத்துக் கொண்டேன். சரி எப்படி ஜெயித்தவரை நிர்ணயம் செய்வது, என்றவுடன் நோக்கியா பதிப்பகத்தில் (இந்த வார்த்தை பயன்பாட்டிற்கான உரிமை முழுவதும் நர்சிம் அவர்களையே சாரும்!) சட்டென்று யூ டுயூபில் போட்டுப் பார்த்தால் ரான நவீத் பந்து போட செல்லும் பொழுதுதான் அப்ரிடி பந்தை கடிக்கிறார். நான் தோல்வியை ஒத்துக் கொள்ளாமல் பல பல்புகள் வாங்கிய பிறகும் அசராமல் இல்லை என்று சாதித்து விட்டு வீட்டிற்கு வந்தேன். சரி உண்டு விட்டு யு டுயூபில் பார்த்தால் இரு முறை அதே ஆட்டத்தில் மனுஷன் பந்தை பதம் பார்த்திருக்கிறார். அவர் ரொம்ப நல்லவர். எனக்கு 1000 ரூபாய் தப்பித்தது!!!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சேனைகளும் சேனாக்களுமாக சேர்ந்து நம் தாய் மண்ணை பதம் பார்த்து விடும் போலிருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியாமல் விழி பிதுங்கும் அரசாங்கம், நடிகர், கிரிக்கெட் வீரர் என்று அனைவரையும் நன்றாக பதம் பார்த்து வருகிறது. மீடியாக்கலும் அசராமல் பேட்டிகளை அள்ளி தெளித்துக் கொண்டுள்ளது. மும்பை முதன் மந்திரியை வர வைத்து வாங்கி கொண்டிருக்கிறார் ராஜ்தீப். சரி இதெல்லாம் நடக்கட்டும் இவர்கள் எப்போது திருந்துவார்கள் என்று வழக்கம் போல் இடுகை ஒன்றை இட்டு விட்டு அமைதியாக இருக்கிறார் ராஜ்தீப். கொஞ்சம் கூட பயப்படமால் மனுஷன் ஒரு இடுகையை இங்கே இட்டிருக்கிறார். அவருக்கு ஒரு ஷொட்டு (ஆ.வி பாணியில்)!!!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மீண்டும் இந்த தீவிரவாதம் தலை தூக்க தொடங்கி விட்டது. பூனாவில் ஜெர்மன் பேக்கரியில் இன்று சக்த்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்திருக்கிறது. என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் மக்கள் தெறித்தோடிய காட்சி மனதை கனக்க செய்கிறது. அது ஒரு சாதாரண நிகழ்வாக போய் விட்டது இந்தியாவில். மெல்ல தலை தூக்குகிறது பாகிஸ்தான் போன்ற நிலை இந்தியாவிலும். இந்த நிலை நீடிக்கும் என்றால் வாழ்வதற்கே பயந்து போகும் சூழ்நிலை வெகு தொலைவில் இல்லை. நந்தன் நிலக்கனி தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் யுனிக் ஐடி வந்தால் வெகுவாக ஊடுறுவல்களை தடுக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது...

- காவிரிக்கரையோன் MJV

பயம் வளர்க்கும் சுதந்திரம்...

ஏன் இப்படி குரோதமாய் பேசுகிறீர்கள்
நாய் வளர்த்த ஒருவர் என்னைப்
பார்த்து கேட்டுப் பார்க்கிறார்,

கோப நிழல்கள் என்னைத் தொடர்ந்தது
உண்மைதான் எத்தனை முறை சொல்லியும்
அந்த நாய் கட்டப்படாமலேயே அலைகிறது,

இத்தனை முறையும் என் மனைவியின்
பயம்தான் என்னைப் பேச வைத்திருக்கிறது
தெரியுமா உனக்கு என் வீட்டிலும் நாயெனும்
ஜீவன் வாழ்கிறது,

பயம் பற்றிய ஒருவரிடம் அதுவும் நாய்
பயம் பற்றிய ஒருவரிடமிருந்து
அந்த பயத்தை இம்மி அளவு கூட
நகர்த்திப் பார்க்க முடியாது,

தடுப்பூசி போட்டு தட்டில் சாதமும் பாலும்
வைக்கும் உனக்கு தெரிந்திருக்க நியாயமில்லை
எப்படி துரத்தி பார்க்கும் மற்றவர்களை
அந்த ஜீவன் என்று,

அந்த நாய் கடித்து பார்த்ததில்லை
என்ற உள்ளத்து உணர்வுகள்,
பயம்பற்றிய ஒருவரிடம் எப்போதும்
செல்ல மறுக்கும் சித்தாந்தங்கள் தான்,

கடித்தாலும் ஒன்றும் ஆகாது என்று
கூட சொல்லத் தயங்குவதில்லை
உங்கள் சிந்தனைக் கூடங்கள்,

இத்தனைக்கும் அப்பால் வெளியில் மிரட்டும்
சுதந்திரம் கொண்டு, சுதந்திரம்
பறித்த அந்த ஜீவன் கட்டிய இழை
அறுத்து ஓடிக் கொண்டுதானிருக்கிறது,

பயத்தினால் அழிக்கப்பட்ட சுதந்திரம்
சாளரக் கதவிடுக்கில் எட்டிப் பார்க்கிறது,
பயத்தினால் வளர்ந்த சுதந்திரம்
கதவுக்கப்பால் நாலு கால் பாய்ச்சலில்
ஓடி பயமுறுத்துகிறது!!!

- காவிரிக்கரையோன் MJV

காணாமல் போன திண்ணைகள்...

திண்ணைக்கும் உண்டோ அடைக்குந் தாழ்
உழைப்புக்கும் சோம்பலுக்குமான இடம்!

ஐயன் திருவள்ளுவரை ஸ்பூஃப் செய்யுமளவுக்கு நான் ஆகிவிடவில்லை. ஆகவும் முடியாது. ஒரு முயற்சிதான். சரி சுயபுராணத்தை நிறுத்தி விட்டு இடுகைக்குள்ளே வருகிறேன்! ஆனால் இந்த திண்ணை பற்றி பேசும் பொழுது இது போன்ற எண்ணங்கள் தோன்றி மறைவதுண்டு. இந்த காலத்து கான்க்ரீட் காடுகளுக்கு மத்தியில் இது போன்ற விடயங்களை பார்ப்பதே அரிதாகப் போய் விட்டது. ஆனாலும் இப்பொழுதும் கிராமங்களுக்கு சென்று பார்க்கின்ற பொழுது, காத்தாட இந்த திண்ணையில உக்காந்துட்டு போ ராசா என பாம்படக் கிழவி சொல்வதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன. அந்த திண்ணை தான் பெரும்பாலும் பெருசுகளின் புகலிடம், வசிப்பிடம், அரட்டை அடிக்கும் இடம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். சிறு பிள்ளைகளுக்கு அதுவும் வீட்டை விட்டு வெளியே சென்று விளையாட அனுமதி மறுக்கபட்டவர்களுக்கு முக்கியமான ஆடுகளம் இந்த திண்ணை.

"எங்க பெருச காணும்", "எங்க போயிருக்க போகுது அந்த திண்ணையிலதான் காத்தாட உக்காந்திருக்கும்", "அடியேய் இங்க தாண்டி இருக்கேன். ", "அட அததான் நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன், அதுக்குள்ள எதுக்கு பாயற?" போன்ற வினா எதிர் வினாதல் விடைகளில் தான் திண்ணையில் பொழுதுகள் கழியும். அப்படி அங்கே வாசம் செய்யும் பெருசுகளுக்கும் அவர்கள் நண்பர்களுக்கும் திண்ணை தான் சரணாலயம். "வா ஆத்தா உன்ன நாச்சும் உன் புள்ள நல்லா வெச்சிருக்கானா? இல்ல திண்ணையோட வெச்சிருக்கானா?" என தன் பிள்ளை இருப்பதை தெரிந்து கொண்டே ஆத்தா வம்படிக்க ஆரம்பிப்பதும், தன் பிள்ளை வெளியே வருவது தெரிந்தவுடன், "அட நீ வீட்டுக்கு போகலையா இன்னும், இதுக்கு இங்கன நின்னு வாயாடர?" என்று பக்கத்து வீட்டு கிழவிக்கு பல்ப் கொடுப்பதுமாக நேரங்கள் சுவாரசியமாய் கழியும்..

அதே போல் பெயரன் பேத்திகளை பாதுகாக்கும் இடமாகவும் அந்த திண்ணை இருக்கும். அப்பாவிடமிருந்தும் அம்மாவிடமிருந்தும் தங்களைப் பாதுகாத்து கொள்ள சிறார்களுக்கு சரியான இடம் அது. ஏதாவது குறும்பு செய்து விட்டு, லேசாக 2 சாத்து சாத்துவதற்குள் ஊரையே கூட்டும் அளவுக்கு பெரும் கூச்சலிட்டு கொண்டே வரும் குழந்தைகள் தஞ்சம் புகுவது திண்ணையில் காத்தாட இருக்கும் பாட்டியிடம்தான். அது என்னவோ ராமர் போட்ட கோடு போல், யாரும் அப்பாவும் சரி அம்மாவும் சரி, அந்த கோட்டைத் தாண்டி உள்ளே வந்து பிள்ளைகளை கண்டித்ததாய் எனக்கு தெரியவில்லை. திண்ணை அப்பொழுதும் தன் வேலையை செவ்வனே செய்து விட்ட மகிழ்ச்சியில் அவர்களின் உரையாடலுக்கு காது கொடுக்கும்.

"ஏண்டா கண்ணு, அம்மா அடிக்குது உன்ன, என்ன செஞ்ச?", "இல்ல பாட்டி பக்கத்து வீட்டு மாங்காய பறிக்க போனேன், அதுக்குதான் அம்மா அடிக்குது", "அதெல்லாம் செய்யக் கூடாது கண்ணு, பாட்டி காசு தாரேன், போய் நல்ல மாவடுவா வாங்கிட்டு வா என்ன" என்று பல சமாதானங்களை பார்த்திருக்கும் அந்த திண்ணை. ஓடி போய் வாங்கி வந்த மாவடுவை அழகாய் கீரி லேசாக உப்பு மிளகாய் தூள் போட்டு அந்த திண்ணையிலிருந்தே பல பேருக்கும் அவை சென்று சேரும். இது போல எண்ணற்ற விடயங்களை கண்டு, தன்னகத்தே பல கதைகளையும் உள்ளடக்கி வைத்துதான் இருந்தது அந்த திண்ணை.

சில நேரங்களில் பாட்டியின் நினைவலைகளையும் தட்டி பார்க்கும் இந்த திண்ணை. "இதே திண்ணையிலதான் ராசாவ, என்னோட துரைய சாத்தி வெச்சிருந்தானுங்க பாவிங்க" என்று சொல்ல சொல்ல, கண்களில் கோர்க்கும் நீரைப் பார்த்து வெளிறிப் போகும் குழந்தைகளை பார்த்தவுடன், "தாத்தா இருக்காங்கள்ள உங்களப் பாத்துட்டே இருப்பாங்க, நல்ல பிள்ளையலா இருக்கணும் தெரிஞ்சிதா கண்ணுகளா?" என்று தேற்றிக் கொண்டு திண்ணையில் கண்ணசரும் பாட்டிக்கு சாப்பாடு எடுத்து வர, ஓடும் வாண்டுகள். அப்படி திண்ணை நம் முன்னோர் வாழ்வில் நீங்கா இடம் பெற்றிருக்கும் என்பது அந்த திண்ணைகள் காணாமல் போகும்போது தான் நினைவுக்கு வரும்...

ஆக இப்படியிருந்த திண்ணைகள் காணாமல் போக போக தான் இந்த காப்பகங்கள் அதிகப்பட்டு போயிருக்குமோ என்ற ஐயப்பாடு எனக்கு வெகு நாட்களாக இருந்து வருகிறது. மனித மனங்களில் ஈரம் வற்றிப் போன பிறகு, திண்ணைகள் இருந்தால் மட்டும் என்ன காப்பகங்கள் இருந்து கொண்டுதான் இருக்கும். இந்த இடுகையின் கருப்பொருளான திண்ணைக்கும் இந்த வரிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் ஏனோ அப்படி தோன்றுகிறது எனக்கு...

இனிமேல் எங்கேனும் செல்லும் தருவாயில் திண்ணையைப் பார்த்தால் சற்றே அமர்ந்து பார்த்து வாருங்கள். அவை பல கதைகளை சொல்லிப் பார்க்கும். அவைகளை அசைப் போட்டபடி மீண்டும் கிளம்பி இந்த கான்க்ரீட் காடுகளுக்கு திரும்பி வாருங்கள்.

- காவிரிக்கரையோன் MJV