Saturday, February 20, 2010

காதல் கவிதைகள்!!!

பரீட்சை
என்னப் பேசுவதென்று பல முறை
சொல்லிப் பார்த்து விட்டுதானே
வந்தேன், உன்னைப் பார்த்ததும்
அனைத்துமே மறந்து போனது,
காதலெனும் தேர்வில்
வினாவாய் நீ, விடை தேடும்
மாணவனாய் நான் !!!


இயற்பெயர்
இயற்பெயர்கள் அதிகமாய் மாறிப்
போவது காதலில் தானாம் ஒரு
கணக்கெடுப்பு சொல்கிறது,
அம்முவாய் நீ, தங்கமாய் நான்!

நான்கெழுத்து கவிதை
மூன்றெழுத்து கவிதை சொல்
பார்க்கலாம் என்றேன்,
"சீ போடா" என்றாய்
பரவாயில்லையே உனக்கும் கவிதை
வருகிறதே என்றேன்,
மெல்ல ரௌத்ரம் பழகினாய்
சட்டென்று இதழ் பிரதேசத்தை
நான்கெழுத்து கவிதை பாடி நாடு
கடத்தினாய், முடிந்து விட்டது

இனி கவிதையும் இல்லை, கட்டுரையும் இல்லை!!!

வேடங்கள்
கடனட்டை வினியோகஸ்தனாய்
வீட்டு எரிபொருள் விற்பனையாளனாய்
எனக்கு தான் எத்தனை வேடங்கள்,
உன் வீட்டாரை ஏமாற்றவும்
உன்னை சமாதானப்படுத்தவும்!


கடவுளின் கோபம்
கடவுள் என் மீது ஏகக் கோபத்தில்
இருக்கிறார்,
எப்பொழுது என் கோவிலுக்கு வந்தாலும்
என்னை நீ கவனிப்பதே இல்லை என்று,
அதே கோவிலுக்குதான் என் தேவதையும்
வருகிறாள்,
தேவதையா கடவுளா போட்டியில்
எப்போதுமே என் தேவதை தான் ஜெயிக்கிறாள்!

- காவிரிக்கரையோன் MJV

அது மட்டும் வேண்டாம்...

காதலை கல்லறையில் புதைத்து
வைத்து பறந்து போனாய்
ஒரு புதிய காலையில் என் உலகத்து
சூரியனை அஸ்தமனம் செய்து விட்டு,

வந்திருந்தது அழைப்பா,
நம் காதல் பிழை கொண்ட
படைப்பா?, அச்சில் ஏறாது என்று
அறிவிக்க வந்தது நம் காதலுக்கு இழப்பா?

இத்தனை நாட்களாய் உதிக்கும் எண்ணங்களில்
நான்தான் முழுதும் தேங்கியிருப்பதாய்
பகர்ந்து மகிழ்வாய், தேங்கிய எண்ணங்களில்
கூடவா பாசி பிடிக்கும் நீ வெறுப்பதற்கு,

தூரத்து நிலவு நம் வாசஸ்தலம் அதில்
நாம் இருப்போம், நம் சந்ததிகள் இருப்பார்கள்
உவமை உருவகம் என்ற இலக்கணம் படைத்த
நாட்கள், இப்படி இலக்கணப் பிழையாய் போகதானா?

வார்த்தைகள் கூட விரக்தியாய் போய்
விட்ட நிலையில் உன்னை வாழ்த்த
மட்டும் முடியவில்லை என்னால்,
பின்னொரு நாளில் என் பெயர் தாங்கிய
உன் குழந்தை மட்டும் வேண்டவே வேண்டாம்,

அந்த குழந்தைக்கு தெரிதல் வேண்டாம்
நம் கோழைத்தனம்,மறைவில் கிடக்கட்டும்
நம் காதல் எப்போதாவது தூசு தட்டி சுவாசிக்கிறேன் நான்...

- காவிரிக்கரையோன் MJV

கரையான் அரித்த மனிதர்கள்...

பெரியண்ணன் வேகமாய் நுழைந்து
எண்பது குழி நிலம், அப்பா விட்டுட்டுப்
போன நகையில் பத்து பவுன்
என்றார்,

வானம் பார்த்து வெறித்திருந்த
தம்பி பெரிய வீடு, கடலைக்
கொல்லை, நகையில ஒரு அஞ்சு
பவுனும் வந்திடனும்னார்,

நிலம் நோக்கியிருந்த அக்காள்
ஒருத்தி, விளைச்சல் நிலம்,
அம்மாவோட பட்டு புடவ
வாய்க்கா பாத்த வீடும்னா,

பக்கவாட்டில் கேட்டுக் கொண்டிருந்த
இன்னொரு அக்காள், "சவுக்கத் தோப்பு
எனக்கும் எண்பது குழி நிலம், ஆறு
பவுன் நகை வரல பாத்துக்கிடுங்க",

"ஆத்தா படமும் அய்யா படமும்
இருந்தா எனக்கொன்னு கொடுத்துடுங்க"
கனத்த மனதின் கடைசி சொட்டு நீருடன்
கடைக்குட்டி தம்பி கேட்க,

கரையான் அரித்த சட்டத்தில்
சுமங்கலியாய் போன இவங்க ஆத்தாவும்
கூடவே போன இவங்க அய்யாவும்
இன்னமும் புன்னகைத்தபடியே
இருந்தனர்...

- காவிரிக்கரையோன் MJV