Sunday, February 21, 2010

எம்.ஜேயின் மிச்ச சொச்சங்கள் - 20/02/2010சென்ற வாரம் நம் இந்திய கிரிக்கெட் அணிக்கு பொன்னான வாரம். முதல் டெஸ்ட் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த பின்னர், இந்த போட்டியில் வென்றால் மட்டுமே முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் களம் கண்டது நம் அணி. டாசில் வென்ற தென்னாப்பிரிக்க அணியினர் முதலில் மட்டை ஆட முடிவு செய்து நம் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து கொண்டுருந்தனர். ஆம்லாவும், பீட்டர்சனும் சேர்ந்து அதிரடியாக ஆடினாலும், தேநீர் இடைவேளைக்கு பிறகு இந்திய அணி விக்கெட்டுகளை வீழ்த்தியது. 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த இந்தியா 4 பேர் விளாசிய சதத்தில் 347 ரன்கள் முன்னிலை பெற்று அட்டத்தை முடித்து கொண்டதாக அறிவித்துக் கொண்டது. 2 நாட்கள் 10 விக்கெட்டுகள் என்ற நிலையில் மழைக்கு ஒரு நாளை பலி கொடுத்து, சாகீரின் பந்து வீச்சையும் பறிகொடுத்த நிலையிலும், வெற்றி பெற்றது நம் அணி. வாழ்த்துக்கள். ஹர்பஜன், மிஷ்ரா என்று எல்லோரும் கலக்கினார்கள். அந்த முதலிடத்திற்கு தகுதி உண்டா இல்லையா என்பதைப் பிறகு பார்ப்போம். இப்பொதைக்கு முதலிடம் பெற்றதில் மகிழ்ச்சி தான். ஆம்லா உண்மையில் இங்கே எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அற்புதமான ஆட்டம்.

நம் நாட்டின் தேசிய சின்னங்களுக்கு என்னவாயிற்று என்றே தெரியவில்லை. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் 40000 என்ற எண்ணிக்கையிலிருந்த நம் தேசிய விலங்கு இன்று 1411ஆக குறைந்து போயிருக்கிறது. அதை பாதுகாக்க உண்மையில் அந்த இயக்கத்தில் சேர்வதை தவிர உருப்படியான வழி ஏதெனும் உள்ளதா என்பதை ஆராய்ந்து வருகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது அந்த விளம்பரத்தை பார்க்கும் போதெல்லாம் தோன்றுகிறது... அடுத்து நம் தேசிய விளையாட்டு ஹாக்கி. இந்த விளையாட்டு தான் நம் தேசிய விளையாட்டு என்பது இந்த தலைமுறை குழந்தைகளுக்கு தெரியுமா என்பது கூட தெரியவில்லை. நானும் கூட முதலில் கிரிக்கெட்டை பற்றி ஒரு தகவலுடன் ஆரம்பித்ததில் என் முதுகுப்புற அழுக்கு சேர்ந்தே தெரிகிறது. அந்த வீரர்களுக்கு ஊதியப் பிரச்சனை முடிந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய பூதம் கிளம்பியுள்ளது. அவர்கள் ஒரு நிதி திரட்டும் போட்டியில் விளையாட 5 கோடி கேட்டார்கள் என்பது குற்றச்சாட்டு. மறுக்கிறார் அணி தலைவர் ராஜ்பால். இதையெல்லாம் கலைந்தெறிந்து காட்டுங்கள் இந்த உலகிற்கு நாம் யார் என்று வரும் உலக கோப்பை போட்டிகளில். வாழ்த்துக்கள்...

எழுத்தாளர்களுக்கு இருக்கும் பொறுப்பும், சமூகம் சார்ந்த சிந்தனைகளும், அவர்களின் எழுத்துக்கள் பிரதிபலிக்கும் கருத்துக்கள் மக்களிடம் சேரும் என்பதை நினைவில் வைத்து எழுதும் பாங்கும் ஒவ்வொரு பதிவருக்கும் இருக்க வேண்டும் என்று சமீபத்தில் ஓர் இடுகையில் வாசித்தேன். இந்த பதிவுலகத்தின் இன்றைய சூழலுக்கு பதிவுலக சுதந்திரமும் ஒரு காரணம். அதை நாமும் புரிந்து கொண்டு முரண்பாட்டையே முனைப்போடு காண்பித்தால் நன்றாக தானே இருக்கும். முரண்பாடு என்பது எப்போதும் இருக்கின்ற ஒன்று. அதற்கென எழுத்தும், வசவுகளும் வெளிப்பட்டால் நாம் வேறு இடம் பார்க்க வேண்டியது தான். பல வகையில் இந்த பதிவுலகம் ஓர் தகுதியான இடம் பெற்று இருப்பதற்கு காரணமாய் இருக்கும் பதிவர்களுடன் கை கோர்த்து, பதிவுலகம் இன்னும் மேம்பட உறுதிமொழி எடுப்போம். எல்லாவற்றுக்கும் ஓர் நாள் சொல்லி கொண்டாடுகிறோம். பதிவுலக நாள் என்று ஏதாவது இருக்கிறதா? இதைப்பற்றித் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்....

பதிவர் மாதவராஜ் அவர்கள் வாடாத பக்கங்கள் என்ற வலைப்பூவை இன்னும் சில பதிவர்களோடு சேர்ந்து தொடங்கியுள்ளார். உங்களுக்கு பிடித்த, உங்களைக் கவர்ந்த இடுகைகளை இதில் நீங்கள் அறிமுகம் செய்யலாம். ஆனால் இது ஒரு திரட்டி அல்ல என்பது புரிகிறது. நீங்கள் தொடர்பவர்களின் இடுகையை மட்டும் பார்க்க முடியும் அவரவருடைய வலைப்பூவில். இந்த இடத்தில் இன்னும் எண்ணற்ற பதிவர்களோடு சேர்ந்து நாமும் நமக்கு பிடித்த இடுகைகளை பகிர்ந்து கொண்டால் நன்றாகவே இருக்கும். விரைவில் அதையும் அட்டவணையில் சேர்க்க வேண்டும். வாழ்த்துக்கள் மாதவராஜ் அவர்களுக்கு, முதலில், "பூக்களிருந்து புத்தகம்", இப்பொழுது, "வாடாத பக்கங்கள்". அற்புதம்!!!

சென்ற வாரம் காதலர்கள் தினத்தோடு 6 மாதங்கள் முடிவடைந்து விட்டது புகைப்பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்தி! இதற்கு ஊக்கமாக இருந்த என் மனைவி, மகள் (இவங்களுக்கு 18 மாதங்கள் ஆகிறது!!! - ஆனால் முற்றிலுமாக விட்டொழித்தது இவர்களுக்காகதான் என்று எப்பொழுது சொன்னாலும் என் மனைவி கோபப்படுவதில்லை!!!), என் நண்பர்கள் வினோத் மற்றும் விமலுக்கும் என் நன்றிகள். என்னைப் பார்த்து இந்த பழக்கத்தை விட்டொழித்த நண்பர்கள் செந்தில், ராகவ் மற்றும் ரமணா ஆகியோருக்கும் என் நன்றிகள் (என்னை பார்த்துதான் இந்த பழக்கத்தை விட்டார்களா என்பது தெரியவில்லை. நான் இவர்களிடம் சொன்ன பொழுது, விடணும் மச்சான் என்று சொல்ல வைத்து சின்ன விதையை விதைத்தது நான் என்று பெருமை பொங்க சொல்ல முடியும்!!!)...

- காவிரிக்கரையோன் MJV

பி.கு: இந்த இடுகையை யூத்புல் விகடன் குட் ப்ளாக்ஸ் பகுதியில் வெளியிட்டு இன்னும் பல பேருக்கு கொண்டு சென்றதற்கு மிக்க நன்றி...