Sunday, March 21, 2010

பேசிக்கலி பல்ராம், ஆக்சுவலி ஆறுமுகம் மற்றும் நான்...

ஆறுமுகம் பேசிக்கலி நான் என்ன சொல்ல வரேன்னா, இந்த உலகத்தில் இருக்கின்ற அனைத்து பனிப்பாறைகளும் உருகும் விடயம் தான் கோள வெதும்பலின் முக்கியமான பின்விளைவாக தெரிகிறதாம். இன்னும் 40 ஆண்டுகளில் எரிபொருள் கிடைப்பது அரிதாகி விடுமாம். அப்புறம் எப்படிப்பா வண்டியெல்லாம் ஓடும். பேசிக்கலி இதுக்கெல்லாம் நாமதான் காரணம் என்ற எண்ணம், என்னை சுற்றி சுற்றி வருது. என்ன பண்ணலாம்னு சொல்லுப்பா? இப்படியாக பேசிக்கலி பல்ராம் தனது அன்றைய உரையாடலை துவக்கி வைக்கிறார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆக்சுவலி ஆறுமுகம் அனைத்தையும் ஒப்புக் கொண்டதை போல் தலை ஆட்டினாலும், பல்ராம் சொன்னதை அப்படியே எடுத்துக்க முடியாதே என்று நினைத்துக் கொண்டே ஆரம்பிக்கிறார்.

ஆக்சுவலி பல்ராம் நீங்க சொன்ன விடயங்கள் எல்லாமே சரிதான். நாமலும் இதற்கெல்லாம் காரணமாய் இருக்கிறோம். ஆனால் யோசிக்க யோசிக்க, இந்த வளர்ந்த நாடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கரியமில வாயுவும், அவர்களின் கழிவுமே ஆக்சுவலி இது போன்ற விடயங்களுக்கு இன்னும் வழி வகுக்கின்றனவாம். நீங்க இப்போ பாத்தீங்கன்னா, உலக மக்கள் தொகையும், அறிவியல் முன்னேற்றமும் வெகுவாக குறைந்திருந்த 1800 களிலும், பிந்தைய 1900 ஆம் ஆண்டுகளிலும், ஆக்சுவலி இந்த பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லையாம். ஆக்சுவலி அவர் ப்லானட் வாஸ் நோ வேர் நியர் டூ டேஞ்சர். மக்கள் தொகை பெருகவும், அறிவியல் முன்னேற்றம் அதிகம் நடந்த பொழுதுகளில் தான் இந்த பூமி மாசுப்பட்டு விட்டதாக அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

பேசிக்கலி நீங்க என்ன சொல்றீங்கன்னா, இந்த உலக நாடுகள் வைத்திருக்கும் அணு உளைகளும், உருக்காலைகளும், மேலும் வைத்திருக்கும் அல்லது பெருகிக் கொண்டிருக்கும் வாகனங்களும் கூட இந்த மாசு படுத்தும் நிகழ்வை மிகச் சாதாரணமாக நடத்துகிறது என்பதைதானே? இன்னும் கூட நாம அதிகமா கூர்ந்து கவனிச்சீங்கன்னா பேசிக்கலி நம்மோட பழக்க வழக்கங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும் ஆறுமுகம். முடிந்த வரை பிளாஸ்டிக் உபயோகிப்பதை தவிர்த்துப் பார்ப்போம்.

ஆக்சுவலி பல்ராம், நீங்க சொல்றதும் சரிதான். முடிஞ்ச அளவுக்கு மரம் நட்டு வைக்கப் பார்ப்போம். இருக்கிற மரங்களை வெட்டாமல் வைத்திருக்கப் பார்ப்போம். தேவையான அளவுக்கே மின்சாரத்தையும், எரிபொருளையும், தண்ணீரையும் பயன்படுத்துவோம். வாரம் ஒரு நாள் இதற்காக செலவிட்டுப் பார்ப்போம். எல்லாருக்குமே இப்பொழுது இருக்கின்ற அந்த பயம் அடுத்த தலைமுறைக்கு கொடுத்து செல்ல ஏதாவது வைத்திருக்கிறோமா என்பது தான். ஈரோடு கதிர் அவர்கள் கூட இதை பற்றி மனம் குமுறி எழுதியிருக்கார்.

பேசிக்கலி ஆறுமுகம் நானும் அந்த பதிவை பார்த்தேன். ரொம்ப ஆதங்கப்பட்டு எழுதியிருந்தார். ஏதாவது நாம செஞ்சிட்டு போனாதான் அடுத்த தலைமுறை நல்லா இருக்கும். பல மரம் நடும் தொடர் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது நம் நாட்டில். அதை பார்த்து நம்மால் முடிந்த அளவுக்கு மரங்களை நட்டு அதை நாம் பாதுகாக்க வேண்டும். அப்படி செய்தால் ஒரு வழியில் நாம் அடுத்த சந்ததியினரின் நல் வாழ்வுக்கு வழி செய்யலாம். கடல் எழும் நகரங்கள் அழும் என்று சொல்கிறார்கள். நாம் நடும் மரத்தால் ஒரு வேலை அவைகள் தள்ளிப் போடப்பட்டால் நல்லதுதானே.

தன்னை புதிப்பித்துக் கொள்ளட்டும் பூமி. ஆனால் கொஞ்ச நாள் அதைத் தள்ளிப் போட எத்தனிக்கும் விதமாய் பேசிக்கலி பல்ராம் சொன்ன விடயங்களை மௌனமாய் அசைப் போட்டபடி அமர்ந்திருந்தார் ஆக்சுவலி ஆறுமுகம். ஆக்சுவலி எல்லா மிருகங்களையும், பறவைகளையும் பாதுகாக்கும் நேரம் நெருங்கி விட்டது. மைனாக்களையும், புலிகளையும், பனிக்கரடிகளையும் பாதுகாக்கும் நேரம் வந்துவிட்டது. வெகு விரைவில் அந்த அட்டவணையில் மனிதனும் இணைக்கப்படுவான். அதை தடுப்பது இயலாத காரியம். அதை தள்ளிப்போட முடியும் நாம் முயன்று பார்த்தால் என்று ஆறுமுகம் சொல்வதை கேட்டு பல்ராம் ஆமோதிப்பதை போல் தலை அசைத்தார்.

இந்த இடுகையில் பல ஆச்சுவலிக்களும், பேசிக்கலிகளும் உபயோகப்படுத்தப் பட்டிருந்தாலும், நகைச்சுவையாய் எழுத எத்தனித்த இந்த இடுகை, சட்டென்று உலகத்தின் அடுத்த தலைமுறையின் நினைவாக அமைந்து விட்டது. பரவாயில்லை முயன்றுதான் பார்ப்போமே. ஆக்சுவலி நான் என்ன சொல்ல வரேன்னா, பேசிக்கலி நமக்குள்ளையும் இந்த உலகத்தை பற்றி எப்போதாவது நினைக்கின்ற அல்லது நினைக்கத் துடிக்கின்ற ஒருவன் இருக்கிறான், அவனை தட்டி எழுப்ப சொல்கிறேன். அவனை வைத்து காரியங்கள் சாதிப்போம்.

இப்பொழுது ஒரு புத்தகம் படித்துக் கொண்டு இருக்கிறேன். 'A Friend of Earth' என்பதே அது. இதை எழுதியவர் டி.சி.பாயில் என்பவர். 2025 ஆம் ஆண்டில் ஓர் பூமி ஆர்வலர் தன் முன்னே எப்படி உலகம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை விவரிக்கும் கதை. அது போன்ற விடயங்கள் நாம் இருக்கும் பொழுது நிகழாமல் இருக்க சற்றே விழித்துக் கொள்வோம்.

சில மரம் நாடும் நிகழ்ச்சிகள் குறித்த இணைப்புகள் கீழே உள்ளன. இதை பார்த்து நாம் எண்ண செய்யலாம் என்பதை யோசிக்கலாம்.
http://www.plant-trees.org/projects/india.htm?gclid=CMf7yZK6yaACFcFS6wod4S_UZw
http://www.cleanindia.org/resoucewatch/tree_plantgtips.htm
- காவிரிக்கரையோன் MJV

கெழக்கால நிக்கும் புளியமரம்!

ஆடிக்கு ஒரு முறை அம்மாவாசைக்கு
ஒரு முறை வரும் தொலைபேசி அழைப்பும்
நின்று போயிருந்தது,

தனிமையின் தடங்களும் முதுமையின்
தடங்களுமாய் மெல்ல மெல்ல வாழ்க்கை
எட்டிப் பிடிக்கும் இறக்கும் மணித்துளிகளை,

எடுக்க நினைத்து வைக்கிறேனா இல்லை வைக்க
நினைத்து எடுக்கிறேனா தெரியாமலேயே
கழிந்து விடுகிறது சில நாட்கள்,

வாலி நிறைய நீர் கொதிக்க வைத்து
சோடை போன காலுக்கு பாய்ச்சவே
தண்ணீர் பத்தவில்லை,

இதில் காய்ந்து போன நிலத்தில் ஓய்ந்து
போன என் கால்கள் எந்த முறை
விவசாயம் பார்க்கப் போகின்றன?

என் பெயரனுடன் மகனும் மருமகளும்
இந்த வாசக் காற்றில் சுவாசம்
தேடி வரணும்,

எலே பேராண்டி, அதோ கெழக்கால நிக்குது

பார் புளியமரம், அத ஒட்டி கெடக்கு பார்
நெலம், அதுல தான் நானுமொங்க அப்பத்தாவும்
எப்பவுமே கெடப்போம்,

போய் சேர்ந்த கெழவி கண்ணில் தெரியும்
சந்தோஷம், அது எனக்கும் என் பெயரனுக்கும்
மட்டுமே கிடைக்க காத்திருக்கும் அதிசயம்...

- காவிரிக்கரையோன் MJV

கை நாட்டு?

படித்து படித்து பத்துக்கும்
மேற்பட்ட பட்டங்கள் உண்டு என்
பெயருக்கு பின்னால்,

மெத்தப் படித்ததால் கர்வச்
சுவடுகள் எட்டிப் பார்ப்பதுண்டு
அவ்வப்போது,

வீட்டுப் பத்திரம் ஒன்றை பதிந்த போது,
கை நாட்டு வைங்க சார்
என்ற அதிகாரியைப் பார்க்காமல்

சிரித்துக் கொண்டே கையெழுத்து போடத்
தெரியும் சார் என்றபடி பேனா எடுக்க,
இருக்கட்டும் சார் இங்க கை நாட்டு மொதல்ல
அப்புறம் தான் பேனா என்றார்,

நேற்று தடுமாறி விளாசம் கேட்ட ஒருவரிடம்
கை நாட்டா நீங்க என்று கேட்டு விட்டு
பதில் சொன்னது ஏனோ நினைவுக்கு வந்து சென்றது!

- காவிரிக்கரையோன் MJV

உயிர்த்தெழுதல்!

நின்ற இடத்திலேயே ஓட பழகிக்
கொண்டோம் நிற்க இடமில்லை
என்பது தெரியாமலே,

பார்க்க நினைத்து பக்கத்து அறைகளில்
பதுங்கி கொள்கிறோம் ஆனால்
பார்வை மங்கியதை உணரவில்லை,

கோபங்கள் கோர்க்க நினைத்து முகங்களை
முறித்து கொள்கிறோம், இந்த முகங்கள்
நித்திய கண்டமெனில், பூரண
ஆயுட்காலத்தை பார்க்கவும் வேண்டுமா?

அமைதி தேடி அறையில் ஆசனமிட்டு
அமரத்தெரிந்தும் மன அறையின் உள்
இரைச்சலை ஒரு முறையேனும் மூலையில்
சிறை படுத்த முடியுமா?

கண்கள் காட்டிக் கொடுக்கும் சோகத்தை
வேடமிட்டு எவ்வளவு நாள் தான் மறைப்பது
வேடங்கள் கலைக்கப்படும்,

பரிமாணங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டு
உமிழ்நீர் உக்கிரமெடுத்து பாயும்,
அன்றாவது உயிர்த்தெழுமா மகிழ்வுக்கென
மனசாட்சி?


- காவிரிக்கரையோன் MJV