Tuesday, November 26, 2013

முரண்

அன்பின் வழியில் ஆயுதங்கள் முரண்
அறிவின் வழியில் இறைவன் முரண்
வாலிப வயதில் பெற்றோர்கள் முரண்
வயோதிக வயதில் வாலிபமே முரண்
காதலின் பொழுதில் காலம் முரண்
திருமணத்தின் பின் பொழுதில் வார்த்தைகள் முரண்
வல்லினம் பேசுகையில் மெல்லினம் முரண்
கோபமாய் பேசுகையில் நம்பிக்கை முரண்
உண்ணும் உணவில் உழைப்பு முரண்
உடுத்தும் உடையில் பணம் முரண்
சாலை வீடென சொல்லுகையில் நீ எனக்கு முரண்
என்னிடம் ஏதுமில்லை சொல்லுகையில் நானே தான் எனக்கு முரண்...

- காவிரிக்கரையோன் MJV

Friday, October 4, 2013

என் அம்மா அவள்

தட்டில் சோறு வைத்து ஊட்டுவாள்,
துண்டில் தலை துவட்டி சிரிப்பாள்,
ஏன் இவ்வளவு கோபம் என்று விம்முவாள்,
நான் உறங்க நீ எங்கே என்பாள் ,
தொலைக்காட்சி சண்டைகளில் என்னை
வெல்ல விடுவாள்,
வீட்டிற்கு வரவும் சாப்பிடுவதும் சரியாக
இல்லை என்பாள்
என் அம்மாவிடம்,
தலை ஆட்டி கேட்க வைப்பாள்,
என் அம்மா அவள்...

- காவிரிக்கரையோன் MJV

Tuesday, October 1, 2013

ஆரூடப்பூனை

அன்பைப் பகிர அட்டவணை,
ஆரூடம் சொல்லிடப் பூனை,
இன்பம் பெருக்கிய நட்சத்திரங்கள்,
ஈன்ற குழந்தைக்கும் சோதிட ஆவணங்கள்,
உண்மை உண்மை என்பவையான சொல்லாடல்கள்,
ஊமையாய் மாறிப் போன தன்னம்பிக்கை,
என்றும் கூடியிருக்கும் எண் கணிதம்,
ஏய்த்து பிழைக்கும் பல கூட்டம்,
ஐம்பதைக் கடந்தும் கட்டங்கள் கணக்குகள்,
ஒன்றோடொன்று பிணைந்து நிற்கும் கிரகங்கள்,
இன்றும் கூட குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து
திரிகிறது அந்த ஆரூடப்பூனை...

 
- காவிரிக்கரையோன் MJV

Wednesday, March 20, 2013

குறுங்கவிதைகள்!

என் கன்னத்து மீசை!
 
கால் நகங்கள் வெட்டப்பட்ட சுவடுகள்
தேடிக் கொண்டிருந்த மகளின் கன்னங்களிலிருந்து
ஒரு முத்தம் களவாட ஆயத்தங்கள்
செய்து கொண்டிருந்தேன்,
சட்டென நகர்ந்தவள் என் ஏமாற்றத்தை
புரிந்து மெலிதாய் என் கன்னத்தில் இதழ் பதித்து சொன்னாள்
" உன் மீசை குத்துதுப்பா ".
 
வேண்டும் இங்கே
கள்ளி பாலில் தொலைந்த கிழவியும் இல்லை,
அல்லி மலர் தொடுத்து அதை உடுத்தும் அழகியும் இன்று இல்லை ,
மெல்ல அடி எடுத்து வளரும் காதலின் அன்பு எங்கே,
வேகமாய் சண்டித்தனம் செய்யும் சிறுபிள்ளை கோபங்கள் எங்கே,
காதல் வர வேணும் இங்கே,
அதற்கு தான் கவிதை போல் ஒன்றை
தந்தேன் இங்கே,
வல்லினக்காதலாய் இருந்தாலும் சரி உன் போல் மெல்லினக்காதலாய்
இருந்தாலும் சரி....
இங்கே வேண்டும் இப்பொழுது தீண்ட!!!
- காவிரிக்கரையோன் MJV

காடுகள்

காதல் பிறந்த மேகமும் வானமும் தழுவிய பொழுதில்
விழுந்து பறக்கும் மரத்தின் இலைகள்,

ஆதலினால் மெல்ல வந்த மழை இறங்கிய பொழுதில்
கன்னம் பார்த்து இறங்கும் ஈரத்தின் அலைகள்,

துள்ளி எழுந்த நாய் வேகமாய் ஒதுங்கிய பொழுதில்
மௌனம் காத்து மிதக்கும் எண்ணத்தின் விதைகள்,

திக்கில்லாமல் தவிக்கும் மனதில் இந்த எண்ணங்கள் உதித்த பொழுதில்
உறக்கம் களைந்து எழுந்தது கான்க்ரீட் காட்டின் ஓர் அறையிலிருந்து!!!

- காவிரிக்கரையோன் MJV

பரதேசிகள்

இது பரதேசிகளின் உலகம்
இக்கரைக்கு அக்கரை பச்சை என்றே
பேசும் அறிவு சுரங்கங்களின் உலகம்

படிப்பது அறிவுக்கு இல்லை பகட்டுக்கு
என்றே குழந்தைகள் நினைக்கும்
கல்விக்கான புரிதல் போய்
பக்கங்கள் மட்டும் பழகிப்போகும்

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
சுற்றமே இல்லாத போது மானுடம்
எதைதான் பார்க்குமோ?

காடுகள் குறைந்த போதும்
கிழவியின் தோடுகள் குறைந்த போதும்
புத்தக மூட்டையில் காணாமல் போகும்
குழந்தைகள் எப்போதும் உண்டு

பேசி பேசி பழயதை கல்லறைக்கு
அனுப்பி விட்டோம்
இனி மறுபடி பேசுவோம்
மீண்டும் மேடைகள் மீண்டும் பேச்சுக்கள்...


இப்படிக்கு,
காவிரிக்கரையோன் MJV